தமிழ்த் தாய் வாழ்த்தை மாற்றுக!

by S Swaminathan

தமிழ் நாட்டில் இப்பொழுது பயன்படுத்தப்படும் தமிழ்த் தாய் வாழ்த்து உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்குப் பொருத்தமானதல்ல. ஏற்கனவே இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இதைப் பயபடுத்தாமல் வேறு பாடல்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இது காலப் போக்கில் தமிழர்களிடையே ஒற்றுமைக் குறைவை ஏற்படுத்தும். ஆகவே தமிழ் நாடு அரசு உடனடியாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றவேண்டும். இந்தப் பாடல் பரதக் கண்டம் பற்றிப் பாடுகிறது. ஆனால் இன்றோ தமிழர்கள் உலகம் முழுதும் வாழ்கிறார்கள்.

 

“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில் ஒழுகும்” என்று துவங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடல் பல வகைகளிலும் குறையுடையது. முதலாவது அது உருக்குலைந்த பாடல். பாரத நாட்டின் மாபெரும் செல்வமான சம்ஸ்கிருதத்தைப் பழித்துக் கூறிய வரியை வெட்டிவிட்டுப் பாடுகிறோம். இது எப்படி இருக்கிறதென்றால் கோவிலில் வைக்க அழகான சிலையைச் செய்துவிட்டு அதன் மூக்கை மட்டும் உடைத்துவிட்டுப் பூஜைக்கு வைத்தது போல இருக்கிறது. மேலும் சம்ஸ்கிருத வெறுப்பில் பிறந்த பாடல்.

சுந்தரனார் சம்ஸ்கிருதம் பற்றிக் கூறிய வரியை அறிஞர் உலகம் ஏற்காததால்தான் அந்த வரியை வெட்டிவிட்டு சிதைந்த பாடலை தமிழ் வாழ்த்தாக்கி இருக்கிறார்கள். சுந்தரம் பிள்ளையோவெனில் அந்த வாழ்த்திலும் சரி, அவரது மனோன்மணீய நாடகத்திலும் சரி பக்கத்துக்கு பக்கம், வரிக்கு வரி சம்ஸ்கிருதச் சொற்களைக் கையாண்டிருக்கிறார். சுருங்கச் சொன்னால் சொன்னது ஒன்று, செய்தது வேறு.

 

பாரதியார் எழுதிய “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி” பாடல் அற்புதமான பாடல். அந்தக் கவிஞனுக்கு உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகி வாக்கினிலும் ஒளி உண்டானதால் அவன் வேண்டியபடியே பராசக்தி அவனுக்கு மந்திரம் போல் சொல்லின்பம் கொடுத்துவிட்டாள்.

 

பாரதி பெரிய கவியானாலும் தமிழ் வாழ்த்து என்று பார்க்கையில் கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் இன்னும் அற்புதமாக அமைந்துவிட்டது. அதில் தமிழ் அன்னையை அலங்கரிக்கும் ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் திருக்குறள், நால்வர், சேக்கிழார், ஆழ்வார் பாடல்கள் ஆகிய அனைத்தும் போற்றப்படுகின்றன. இதோ பாடலை நீங்களே படித்துப் பாருங்கள். எவ்வளவு பொருள் பொதிந்த பாடல். யாராவது ஒருவர் இதற்கு கவர்ச்சிகரமான இசை அமைத்துவிட்டால் மற்ற பாடல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இது மேடை ஏறும். முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் துணிகர உத்தரவுகளுக்குப் பெயர்போனவர். அவர் நினைத்தால் இதை ஓரிரவில் செய்யலாம். அதுவே நமது வேண்டுகோளும் கூட.

 

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை

-யாபதியும்,கருணை மார்பின்

மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்

மேகலையும், சிலம்பார் இன்பப்

போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ

ளாமணியும் பொலியச் சூடி,

நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்

தாங்கு தமிழ் நீடு வாழ்க !


நால்வரிசை அமுதிருக்க,
 நம்மாழ்வார்

மொழியிருக்கச் சேக்கி ழாரின்

பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்

திரமிருக்கப் பகலே போன்று

ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்

குறளிருக்க, நமது நற்றாய்,

காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்

கனிபெருகக் கண்டி லோமோ !

      –சுத்தானந்த பாரதியார்

 

இந்தப் பாடலுக்கு நல்ல இசை அமைப்பவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். பரிசு காத்திருக்கிறது !

swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

நட்சத்திர அதிசயங்கள்! கார்த்திகை

Pleiades Constellation (Karthikai Nakshathram)

கார்த்திகை மைந்தா கந்தா சரணம்!

By ச.நாகராஜன்

 

மாத்ரி மண்டல நட்சத்திரம்

 

நானூறு நட்சத்திரங்கள் கொண்ட மாத்ரி மண்டலத்தில் தீ ஜுவாலை போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஆறு நட்சத்திரங்களான அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி,மேகயந்தி,வர்ஷயந்தி ஆகியவை மிக முக்கியமானவை. இவையே கார்த்திகை மாந்தர். கந்தனை வளர்த்தவர்கள்!

 

மாத்ரி மண்டலம் என்ற பெயரே மாதர்கள் கொண்ட கூட்டத் தொகுதி என்று குறிப்பிடப்படுவது வியப்பிற்குரியது! சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்த முருகனை கார்த்திகை மாந்தர் அறுவரும் தனித் தனியே ஆறு உருவங்களில் சீராட்டி மகிழ்வித்ததால் அவன் கார்த்திகேயன் என்ற பெயர் பெற்றான் என்று புராணம் கூறுவதை அனைவரும் அறிவோம்!

 

ரிஷப ராசியில் கார்த்திகை நம் தலைக்கு மேலே தோன்றும் போது சந்திரன் தோன்றும். ஆகவே தான் கார்த்திகைக்குத் தமிழர் கார்த்திகை மாதம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.தமிழரின் தெய்வம் முருகன் என்பதாலும் கார்த்திகை தமிழர் மனதில் தனி ஒரு இடத்தைப் பிடிக்கிறது!

 

கத்தி போல உள்ளதால் கார்த்திகை என்ற பெயரை இந்த நட்சத்திரம் பெற்றது. ப்ளையாடீஸ் என்று மேலை நாடுகளில் புகழ் பெற்றுள்ள இந்த கார்த்திகை நட்சத்திரம் அக்னி,தீபம் என  ஒளி சம்பந்தமான எல்லாவற்றுடனும் புராணத்திலும் விஞ்ஞானத்திலும் தொடர்பு படுத்தப்படும் ஒரு அபூர்வ நட்சத்திரம்!

 

அறிவியல் வியக்கும் அதி உஷ்ண பகுலா

ஒரு வருடத்தின் 365 நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனமாகும் நாட்களே மிகவும் உஷ்ணமான நாட்களாக உள்ளன என அறிவியல் அறிவிக்கிறது. இந்த அதிக பட்ச உஷ்ணம் பூமி வாழ் மக்களின் ‘மித்ரன்’ என்று வர்ணிக்கப்படும்  சூரியனுக்கு எப்படிக் கிடைக்கிறது என்ற காரணத்தை நோக்கினால் அது கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்வதால் தான் என்று தெரிய வருகிறது.

 

வெறும் கூட்டணியிலேயே சூரியனுக்கே இந்த உஷ்ணத்தைக் கொடுக்கிறது என்றால் கார்த்திகையின் உஷ்ணம் எப்படிப்பட்ட அதி பயங்கரமானதாக இருக்க வேண்டும்? நினைத்து நினைத்து பிரமிக்க வேண்டியது தான்!. சதபத பிராமணம் ஒன்றல்ல, இரண்டல்ல,மூன்றல்ல, நான்கல்ல, கார்த்திகை பல நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது என்று வியக்கிறது. ஆகவே  இதற்கு பகுலா (பல நட்சத்திரம் கொண்டது )என்ற பெயரையும் சூட்டுகிறது.

 

கார்த்திகையின் அதி தேவதை  அக்னி!

 

இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி (க்ருத்திகா நட்சத்திரம் அக்னிர் தேவதா) என்று தைத்திரீய சம்ஹிதா (நான்காம் காண்டம்) கூறும். அக்னியே ஸ்வாஹா; க்ருத்திகாம்யஹ ஸ்வாஹா என தைத்தீரிய ப்ராஹ்மணம் (III 1.4.2) கார்த்திகை நட்சத்திரத்தைப் புகழும்!:

81000 சுலோகங்கள் கொண்ட ஸ்கந்த புராணம் தான் 18 புராணங்களிலேயே மிகப் பெரிய புராணம்.

 

இதில் ஸ்கந்தனின் பெருமை விவரிக்கப்படும் போது கார்த்திகை நட்சத்திரத்தின் பெருமையும் விவரிக்கப்படுகிறது. அதன் மர்மமும் விளக்கப்படுகிறது.

இதைப் பற்றி வேதத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் ஏராளமான குறிப்புகளைக் காணலாம்.வால்மீகி “அந்த ஸ்கந்த கடவுளின் மீது நம்பிக்கை கொண்டோர் அவனுடன் சேர்ந்து இருப்பதை அனுபவிக்க முடியும்” என்று உறுதியாகக் கூறி கார்த்திகேயனின் மகிமையை வியக்கிறார்!

 

மஹாபாரதம் வன பர்வத்தில் மார்க்கண்டேயர் அக்னியின் தோற்றம் மற்றும் மகிமையை விளக்குவதாக ஆரம்பித்து சுப்ரமண்யருடைய உற்பத்தி, வீர அணிவகுப்பு ஆகியவற்றை விளக்கமாகக் கூறுகிறார். மார்க்கண்டேய ஸமாஸ்யா பர்வத்தில் இருநூற்றிருப்பத்தோராவது அத்தியாயம் தொடங்கி இருநூற்றுமுப்பத்து மூன்றாவது அத்தியாயம் வரை ஸ்கந்த சரித்திரம் இடம் பெறுகிறது.

 

ஸ்கந்த ஜனனம்

 

ஒரு சமயம் அக்னி ஸப்த ரிஷிகளின் பத்தினிகளின் மீது ஆசைப்படுகிறான்.அந்த அக்னியின் மீது ஸ்வாஹா தேவி ஆசைப்படுகிறாள். அவள் அருந்ததியைத் தவிர ஏனைய ஆறு பேரின் திவ்ய உருவத்தை எடுத்துக் கொள்கிறாள்.அருந்ததியின் தவத்தினாலும் அவளது பதிபக்தியினாலும் அவள் உருவத்தை ஸ்வாஹா தேவியால் தரிக்க முடியவில்லை.அக்னியோடு சேர்கிறாள்.

 

கந்தனின் ஜனனத்தை மஹாபாரதம் “காமமுள்ள ஸ்வாஹா தேவியினால் அந்த ஸ்வர்ணகுண்டமென்னும் தடாகத்தில் பிரதமா திதியில் அக்னியினுடைய வீரியமானது ஆறு தடவை போடப்பட்டது. அந்தக் குண்டத்தில் நழுவி விழுந்த அந்த வீர்யமானது தேஜஸினால் சூழப்பட்ட ஒரு புத்திரனை உண்டுபண்ணியது.பிறகு ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட அந்த வீர்யமானது ஸ்கந்தனாயிற்று. அந்த வீர்யத்தில் ஆறுதலைகளுள்ளவரும் பன்னிரெண்டு காதுகளும் கண்களும் கைகளும் பாதங்களுமுள்ளவரும் ஒரு கழுத்தோடும் ஒரு தேகத்தோடும் கூடியவராக குமாரர் தோன்றினார்.” என்று விவரிக்கிறது.

 

 

விசுவாமித்திரர் பதிமூன்று மங்கள கர்மங்களைச் செய்வித்து ஸ்கந்தருக்கு நாமகரணம் செய்து வைக்கிறார். இந்திரன் தேவ ஸேனாபதியாக ஸ்கந்தனுக்கு முடி சூட்டி தேவசேனையை திருமணம் செய்விக்கிறார். சிவனின் கட்டளைக்கிணங்க தேவ ஸேனையை அணிவகுத்துத் தலைமை தாங்கிச் சென்ற கந்தன் மகிஷாஸ¤ரனைக் கொல்கிறார்.மாத்ரு கண மாதரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு எல்லா உலகங்களும் பூஜிக்கத் தக்க உயர் நிலையை அருளுகிறார்.

 

ஸ்வாஹா தேவி எப்போதும் அக்னியுடன் சாஸ்வதமாக சேர்ந்து வஸிக்க தன் விருப்பத்தைத் தெரிவிக்க  ஸ்கந்தர் ,”தேவியே! நன்னடையுள்ள அந்தணர்கள் மந்திரங்களால் நன்றாகத் துதிக்கப்பட்டிருக்கிற ஹவ்யமோ கவியமோ எதையும் எடுத்து இன்று முதல் ஸ்வாஹா என்கிற மந்திரத்தை அக்னியில் ஹோமம் செய்து கொடுப்பார்கள். அக்னி பகவான் இவ்வண்ணம் உன்னோடு கூட எப்போதும் வாஸம் செய்வான்” என்று அருளுகிறார்! இவை அனைத்தையும் விரிவாக மஹாபாரதம் விளக்குவதைப் படித்து விட்டு வானத்தை நோக்கினால் பிரமித்துப் போவோம்.

 

கம்பீரமான கார்த்திகை நட்சத்திரத் தொகுதியில் அக்னி, ஸ்வாஹா மற்றும் தேவசேனை உள்ளிட்ட நட்சத்திரங்களின் ஜொலி ஜொலிப்பு,ஸோமதாரை என்று புராணம் விவரிக்கும் காலக்ஸி, நானூறு நட்சத்திரங்களைக் கொண்ட மாத்ரு மண்டலம்,அதன் மேற்கில் ஸப்த ரிஷிகளில் ஆறு ரிஷிகளின் பத்னிகளான நட்சத்திரங்கள், சுரபி என்னும் தெய்வீகப் பசு, அதன் தென் கிழக்கில் விஸ்வாமித்திர நட்சத்திரம் ஆகியவற்றைப் பார்த்து பிரமிக்கலாம்.

 

அத்தோடு பிரம்மாண்டமான தேவ ஸேனை அணிவகுப்பை கந்தன் தலைமை தாங்கிச் சென்றார் என்பதை உறுதிப் படுத்தும் வகையில் ஜொலிக்கும் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் அணிவகுப்பாகக் கூட்டம் கூட்டமாக கார்த்திகைக்குப் பின்னால் இருப்பதையும் பார்த்து அதிசயிக்கலாம்.இவற்றின் பல்வேறு அதிசய உருவங்களையும் ஜொலிஜொலிப்பில் உள்ள பல்வேறு தரங்களையும் பார்த்து சுப்ரமண்ய சேனையின் மகிமையை முற்றிலுமாக உணரலாம்!

 

மயில்வாகனன் முருகன் 

முருகனின் வாகனமான மயிலையும் வானத்தில் கண்டு மகிழலாம். இதைப் பற்றி ஜே.பென்ட்லி என்ற ஆங்கிலேயர் வியந்து,                          “கார்த்திகேயன் மயிலின் மீது ஏறி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அவனே கார்த்திகை நட்சத்திரத்தில் தலைமையாக இருப்பதையும் அவன் பின்னால் அனைத்து கிரகங்களும் நட்சத்திரங்களும் தொடர் வரிசையாக அணிவகுப்பதையுமே இது குறிக்கிறது” என்று கூறுகிறார்!

புகழ், ஒளி, கீர்த்தி, காந்தி,ஆயுள் ஆகிய அனைத்தையும் முருகன் அருளுவான் என்ற வேத மற்றும் மஹாபாரத வாசகத்தை மனதில் இருத்தி கார்த்திகை மாந்தரையும் கார்த்திகேயனையும் வானத்தில் பார்த்துத் தொழுது மகிழலாம்!

****************

இந்தக் கட்டுரை ஸ்ரீஜோஸியம் வாரப் பத்திரிக்கையில் வெளியானது. இதை விரும்புவோர் இந்தக் கட்டுரை ஆசிரியர் S Nagarajan எழுதிய அஸ்வினி, ரோஹிணி, திருவாதிரை உள்ளிட்ட அனைத்து நட்சத்திர அதிசயங்களையும் படித்து மகிழலாம்.

ஸ்ரீ ருத்ர மஹிமை (நமகமும் சமகமும்)

Athi Rudra Maha Yagna organised by Sri Sathya Sai Baba

ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.

நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.

நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்

சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.

நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.

ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும், அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.

ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர். 11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே——–) வருகிறது.

ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.

பெரிய புதிர்

உலகிலேயே பெரிய கணித வல்லுநர்கள் இந்துக்கள்தான். இது பற்றி நான் பல கட்டுரைகளில் தந்திருக்கிறேன் (மீண்டும் இந்தியா உலக செஸ் சாம்பியன் என்ற கட்டுரையைக் காண்க). சின்னக் குழந்தை முதல் பெரியோர் வரை தினசரி துதிகளில் கூட “டெசிமல்” முறையை (தசாம்ச) பயன்படுத்தி சூர்ய கோடி சமப் ப்ரபா என்றெல்லாம் வேண்டுவதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

சமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன. இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்படி வெறும் எண்களை மட்டுமே மந்திரமாக்கிய இந்தியர்களின் கணிதப் புலமையையும் ஆர்வத்தையும் என்னவென்று புகழ்வது. உலகில் வேறு எந்த கலாசரத்திலும் இறைவனைத் துதிபாடும் மந்திரங்களில் இப்படி எண்கள் வருவதில்லை. ஒரு இடம் அல்ல, இரண்டு இடம் அல்ல. உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் பெரிய பெரிய எண்கள் வருகின்றன. வேதங்களின் முழு அர்த்தம் புரியாத வெளிநாட்டுக்காரர்கள் இதற்கு மனம் போன போக்கில் பொருள் செய்திருக்கிறார்கள்.

( இத்தனை கோட்டைகளை ஆரியர்கள் அழித்தார்கள், இத்தனை திராவிடர்களை ஆரியர்கள் கொன்றார்கள் என்றெல்லாம் ஒரே கதைதான்! அந்த எண்கள் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் சிரிப்புதான் வரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் திராவிட என்ற ஒரு இனத்தைக் கற்பித்து அதற்கு கோழைப் பட்டத்தையும் சூட்டிவிட்டார்கள்! காட்டுமிராண்டி ஆரியர்களிடம் செமை அடிவாங்கி, கோழைகள் போல தெற்கே ஓடிவந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள் திராவிடர்கள் என்று வெள்ளைக்கார அறிஞர்கள் எழுதிவைத்தனர். இது தவறு. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியமோ வேதங்களையும் வேள்விகளையும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறது!)

வேதங்களைப் பாடிய ரிஷி முனிவர்கள் தாங்கள் ரகசிய மொழியில், சங்கேத மொழியில் பாடுவதை விரும்புகிறோம் என்று பாடுகிறார்கள். சங்கத் தமிழ் புலவர்களும் இதை அறிந்து வேதத்துக்கு மறை (ரகசியம்) என்ற அழகிய தமிழ் சொல்லைச் சூட்டியுள்ளனர்.

*******************

போஜராஜன் செய்த தந்திரம் !

உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் அவனை ஆதரித்த மன்னன் போஜனும் இணைபிரியா நண்பர்கள். ஒரு நாள் சபைக்கு காளிதாசன் வரவில்லை. மன்னனுக்கு காளிதாசன், தன்னைப் பற்றி உண்மையாக என்ன நினைக்கிறான் என்று அறிய ஆவல். உடனே ஒரு தந்திரம் செய்தான். மந்திரியை அழைத்தான். காளிதாசன் இருக்கும் இடத்துக்குப் போய் நான் இறந்துவிட்டதாக அறிவியுங்கள். அவன் கட்டாயம் என்னைப் பற்றி ஏதாவது சொல்லுவான் அல்லது கவி பாடுவான். அதை வைத்தே காளிதாசனின் மனநிலையைக் கண்டு பிடித்துவிடலாம் என்றான்.

 

மந்திரியும் மன்னனும் காளியின் வீட்டுக்குப் போனார்கள். மன்னன் ஒரு சுவருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். மந்திரி அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாக முகத்தை வைத்துக் கொண்டு போஜ ராஜன் காலமாகி விட்டான் என்று சொன்னான். அவ்வளவுதான். அடிபட்ட இரண்டு கிரவுஞ்சப் பறவைகளில் ஒன்று விழுந்தவுடன் வேடன் வால்மீகிக்கு ராமாயணம் என்னும் கவிதை வெள்ளம் கரை புரண்டு வந்தது போல காளிதாசன் வாக்கிலும் கவிதை வெடித்தது. (தாரா என்பது அவர்கள் வாழ்ந்த நகரின் பெயர்).

 

அத்ய தாரா நிராதாரா நிராலம்பா சரஸ்வதீ

பண்டிதா: கண்டிதா: சர்வே போஜராஜே திவம் கதே

என்று பாடினான்

இதன் பொருள்: தாரா நகரம் ஆதரவு இழந்து தவிக்கிறது, சரஸ்வதி தேவியும் ஆதரவு இழந்து தவிக்கிறாள். போஜ ராஜன் போய்விட்டதால் கவிஞர்களும் அறிஞர்களும் துக்கத்தில் மூழ்கிவிட்டார்கள்.

போஜராஜனுக்கு இதை கேட்டவுடன் மகிழ்ச்சி தாங்கவில்லை. சுவருக்குப் பின்னால் இருந்து ஓடிவந்து காளிதாசனைக் கட்டிக்கொண்டான். அடுத்த நிமிடமே பொங்கி எழுந்தது இன்னும் ஒரு கவிதை.

அத்ய தாரா சதா தாரா சதாலம்பா சரஸ்வதீ

பண்டிதா: கண்டிதா: சர்வே போஜராஜே புவம் கதே என்று பாடினான்.

 

இதன் பொருள்: தாரா நகரம் ஆதரவு பெற்று திகழ்கிறது, சரஸ்வதி தேவியும் இழந்த ஆதரவை மீண்டும் பெற்றாள். போஜ ராஜன் பூமிக்குத் திரும்பிவிட்டதால் கவிஞர்களும் அறிஞர்களும் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள்.

சம்ஸ்கிருதம் ஒரு அற்புதமான மொழி. உலகிலேயே கணித முறைப்படி அமைந்த ஒரே மொழி ! இன்றுள்ள மொழிகளை ஆராய்ந்த அறிஞர்கள் கம்ப்யூட்டரில் கொடுக்கக்கூடிய எல்லா தகுதிகளும் பெற்ற மொழி இதுதான் என்று கூறுவதற்கும் இதுவே காரணம். மேற்கண்ட இரண்டு கவிதைகளையும் சம்ஸ்கிருதம் அறியாதவர்கள் படித்தாலும் பொருள் விளங்கும். ஒரு சில எழுத்துக்களை மாற்றினாலேயே அர்த்தம் முழுவதையும் மாற்ற முடியும்.

 

சம்ஸ்கிருதம் பற்றி சுவாமிநாதன் எழுதிய மற்ற கட்டுரைகள்:

1.சம்ஸ்கிருதம் ஒரு சமுத்திரம்

2.பொம்பளை சிரிச்சா, உதைச்சா, பார்த்தா போச்சு

3. Ancient Sanskrit Inscriptions in strange places

4. Old Sanskrit Inscriptions in Mosques and Coins

5. Sanskrit inscription and Magic Square on Tortoise

Please read all the above five articles in my blogs.

contact: swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

******************

 

 

நட்சத்திர அதிசயங்கள் -Part 3

நட்சத்திர அதிசயங்கள் -Part 3

அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை அருளி உபமன்யுவை மஹரிஷி ஆக்கிய அற்புத சரிதத்தை சென்ற வாரம் பார்த்தோம். அஸ்வினியின் அதிசய ஆற்றல்களை மேலும் பார்ப்போம்
அஸ்வினி ரஹஸ்யம்! தொடர்ச்சி…….

எழுதியவர்: ச.நாகராஜன்

ஆயுர்வேதம் அருளும் தேவர்கள்

அஸ்வினி தேவர்களே யோகம் மற்றும் ஆயுர்வேதத்திற்கு சக்தியைத் தரும் தேவர்கள். ‘எங்களுக்கு வலிமையை அருள்க’, என அஸ்வினி தேவர்களை நோக்கி செய்யப்படும் துதி ரிக் வேதத்தில் காணப்படுகிறது. அஸ்வின் எனப்படும் ஐப்பசி மாதத்தின் பெயர் இந்த நட்சத்திரத்தில் நிறைமதி (பௌர்ணமி) சேர்வதை ஒட்டி அமைந்திருக்கிறது.

எந்த வியாதியையும் குணப்படுத்தும் இவர்களுக்கும் சூரியனுக்கும் உள்ள சம்பந்தத்தை ரிக் வேதத்தில் காணலாம். சூரிய தேவதையான உஷையிடமிருந்து வரும் சூர்ய ரஸ்மியால் ஏற்படும் நல்ல விளைவுகளையும் அஸ்வினி தேவர்களே செய்கின்றனர்!

முதுமையை இளமையாக்கும் சியவன ப்ராசம் என்னும் லேகியம் சியவன மஹரிஷி கண்டுபிடித்த ஒரு ஆயுர் வேதத் தயாரிப்பு. நெல்லிக்கனியிலிருந்து இது தயாரிக்கப்படும் விதத்தை அஸ்வினி தேவர்களே சியவனருக்குக் கற்றுத் தந்தனர். அவரும் அதை உண்டு இளமையை அடைந்தார்.
இரசாயனங்களையும் மூலிகைகளையும் இவற்றால் தயாரிக்கப்படும் மருந்துகளையும் பற்றி ரிக் வேதம் கூறுகிறது. வேதம் கூறும் சோமரஸம், சஞ்சீவனி மந்திரம் போன்ற அனைத்திற்கும் தேவ வைத்தியர்களான அஸ்வினி தேவர்களே மூலவர்கள் என்பதும் இவர்களின் எல்லையற்ற ஆற்றலைச் சுட்டிக் காட்டுகிறது!

குதிரை முகத்தால் சித்தரிக்கப்படும் அஸ்வினி தேவர்கள் அளப்பரிய ஆற்றலையும் வாகனங்களின் அதிபதியாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.காலை,மாலை, மூச்சை உள்ளிழுத்தல் வெளியிடுதல் ஆகிய இரண்டிரண்டு விஷயங்களாக உள்ளவற்றை இவர்கள் குறிப்பிடுகின்றனர்.மதுவுக்கு இவர்களே அதிபதி என்பதால் இனிமைக்கும் இவர்களே அதிபதி என்பது தானாக விளங்கும்! அஸ்வதி, அஸ்வத்தா,அஸ்விஜா,வஜபா,ஷ்ரோணா, என்று பற்பல காரணப் பெயர்களால் இவர்கள் அழைக்கப்படுவதால் ஒவ்வொரு பெயரும் ஒரு வித ஆற்றலை இரகசியமாகக் குறிப்பதை உணரலாம்!

வாக்கிற்கும் ரத்ன சிகிச்சைக்கும் அஸ்வினி

இவர்களுடன் வாக் தேவியான சரஸ்வதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சரஸ்வதியைத் துதிக்கும் போது இவர்களையும் சேர்த்து வேதங்கள் புகழ்கின்றன. சரஸ்வதி தேவிக்கு ‘சோமர்’ வாக் சித்தியைத் தந்ததாக ரிக் வேதம் கூறுகிறது. அத்தோடு ரத்னக்கற்களையும் அதன் ரகசிய ஆற்றல்களையும் சரஸ்வதிக்கு சோமரே தந்ததாக அது தெரிவிக்கிறது. ஆகவே இந்த ரத்ன சிகிச்சை ஆயுர் வேத சிகிச்சை ஆகிய அனைத்தும் அஸ்வினி தேவர்கள் உலகிற்குத் தந்து அருளியவையாகும்!

அஸ்வினி தேவர்கள் மூன்று சக்கரங்கள் உள்ள தங்க ரதத்தில் பயணம் செய்வதாகவும் அவர்களின் ரதத்தை மனமே கட்டுப்படுத்துகிறது என்று வேத கவிதைகள் தெரிவிக்கின்றன. எல்லையற்ற ஆற்றலையும் சித்திகளையும் அவர்கள் கொண்டுள்ளதை இந்தப் பாடல்கள் அழகுறத் தெளிவாக விளக்குகின்றன.

இழந்த அங்கங்களை மீண்டும் தருவர்

இழந்த அங்கங்களை மீண்டும் பெறவும் இவர்களையே துதிக்க வேண்டும். விஷ்பலா என்ற ராணிக்கு உலோக கால்கள் அஸ்வினி தேவர்களால் அருளப்பட்டது.கால்களை இழந்தவர்கள் அஸ்வினி அருளால் மீண்டும் நடக்க ஆரம்பித்தனர் (ரிக் வேதம் I-117-19). மூன்று பாகங்களாக வெட்டுண்டு கிடந்த ‘ச்யவ’ என்ற ரிஷிக்கு இவர்களே ஆயுளை அளித்து உயிர்ப்பித்தனர்.
இப்படி ஜெம் தெராபி, அகுபங்சர், ஆயுர்வேதம், ப்ராணிக் ஹீலிங் என்று இன்று நவீன பெயர்களில் அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கும் இவர்களே மூலம் என்பதை ரிக் வேதத்தின் பல கதைகளாலும் துதிகளாலும் நன்கு அறியலாம்.

இவ்வளவு விஷயங்களையும் தெரிந்த கொண்ட பின்னர் இவர்களின் ஆற்றலுக்கும் அருளுக்கும் ஒரு எல்லையே இல்லை என்பது சுலபமாகப் புரிந்து விடும்!உதவத் துடிக்கும் இந்த தேவதைகளை தினமும் துதித்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும்!

*****************************
(இந்தக் கட்டுரை ஸ்ரீ ஜோஸியம் வார இதழில் வெளி வந்தது. இதை விரும்பியோர் ச.நாகராஜன் எழுதிய இதர நட்சத்திரக் கட்டுரைகளையும் படிக்கலாம்.)

நட்சத்திர அதிசயங்கள் -Part 2


Written by S Nagarajan

ரிக் வேதத்தில் உள்ள உபமன்யுவின் அஸ்வினி தேவர்களைக் குறித்த துதி :-

வாசகர்களுக்குப் பயன்படும் வகையில் உபமன்யு அஸ்வினி தேவர்களை துதித்த ரகசியமான மறைந்த அர்த்தங்களுடன் கூடிய ரிக் வேதத்தில் உள்ள முழு துதியும் கீழே தரப்படுகிறது:
“நீங்கள் பிரபஞ்ச சிருஷ்டிக்கு முன்னே இருந்தவர்கள்.நீங்களே ஆதியில் பிறந்த ஜீவர்கள்.பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட இந்த அதிசயமான பிரபஞ்சத்தை நீங்கள் வியாபித்துக் கொண்டிருக்கிறீர்கள்.கேள்வியினாலும், சிந்தனையினாலும்,எனக்குக் கிடைத்திருக்கும் ஞானத்தில் உதவியினால், நான் உங்களை அடைய விரும்புகிறேன். ஆனால் நீங்களோ ஆதியும் அந்தமும் இல்லாதவர்கள்.இந்தப் பிரபஞ்ச இயற்கையும் அதை வியாபித்திருக்கும் பரமாத்மாவும் மரம் போல விளங்கும் இந்த தேகத்தில், அமர்ந்திருக்கும் அழகான இறகுகளுடன் கூடிய பக்ஷ¢கள் நீங்களே.ஒவ்வொரு ஆத்மாவுக்கும் உள்ள பொதுவான குணங்கள் உங்களுக்கு இல்லை.நீங்கள் ஒப்பற்றவர்கள்.நீங்கள் உலகத்திலுள்ள ஒவ்வொரு ஜீவன்களுடைய ஆத்மாவின் மூலமாய் இந்த உலகத்தை வியாபித்திருக்கிறீர்கள்.

தங்க நிறம் போன்ற கழுகுகள் நீங்களே.உலகத்திலுள்ள வஸ்துக்கள் யாவும் எதை அடைகின்றனவோ, அந்த சத்தும் நீங்களே.

நீங்கள் எந்த வித குற்றமும் இல்லாதவர்கள்.க்ஷ£ணித்தல் என்பது உங்களுக்குக் கிடையாது. நியாய விரோதமாய் ரணப்படுத்தாதனவும், அழகியவையுமான மூக்குகளை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.எந்த யுகத்திலும் ஜெயசீலர்கள் காலத்தின் அளவைக் கடந்தவர்கள். சூரியனை சிருஷ்டித்து, பகல் என்ற வெள்ளை நூலினாலும், இரவு என்ற கறுப்பு நூலினாலும், வருஷமாகிற அற்புத வஸ்திரம் உங்களால் நெய்யப்படுகிறது! அவ்விதமான வஸ்திரத்தால், தேவர்களுக்கும்,பிதுர்களுக்கும் உரிய இரண்டு விதமான பிரவர்த்திகளை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள். அளவிடமுடியாத பரமாத்மாவின் சக்தியைக் குறிக்கும் காலம் என்ற அளவால் பீடிக்கப்பட்டுள்ள, ஜீவாத்மாக்களாகிய பக்ஷ¢களை, நீங்கள் அவைகள் பேரானந்தம் அடையும் பொருட்டு சுயேச்சையாக விடுதலை செய்கிறீர்கள். அஞ்ஞானிகளாக இருப்பவர்கள், இந்திரியங்களுடைய மயக்கங்களுக்கு வசப்பட்டவர்களாய், பந்த சம்பந்தமில்லாமல் பரிசுத்தர்களாக இருக்கும் உங்களை ஏதோ ரூபத்துடன் இருப்பது போல மதிக்கிறார்கள்.

முன்னூற்றறுபது நாள்கள் ஆகிற முன்னூற்றறுபது பசுக்கள் ஒரு வருஷம் என்கிற கன்றை உண்டாக்குகின்றன.எல்லாவற்றையும் சிருஷ்டிப்பதும் அழிப்பதும் அக்கன்று தான். சத்தியமானதை அறிய விரும்புபவர்கள் அநேக வழிகளை அனுசரித்து அக்கன்றினுடைய உதவியால் உண்மை ஞானமாகிற பாலை அடைகிறார்கள்.ஹே! அஸ்வினி தேவர்களே!! அக்கன்றுக்கு சிருஷ்டிகர்த்தாக்கள் நீங்களே!

இரவுகளும் பகல்களும் .ஆகிய எழுநூற்றிருபது ஆரக்கால்கள், அமைந்த சக்கரத்திற்கு, வருஷமானது, ஒரு ஆதாரக்கட்டையாக இருக்கின்றது.பன்னிரண்டு மாதங்களாகிற இந்த சக்கரச்சுழல்களுக்கு முடிவு கிடையாது.இச்சக்கரம் மாய்கைகள் நிறைந்தது.அதற்கு அழிவு கிடையாது.இவ்வுலகத்திலும் மற்றெந்த உலகத்திலும் இருக்கும் எல்லா ஜீவன்களையும் அது பிரிக்கின்றது.ஹே! அஸ்வினி தேவர்களே!! இக்காலச்சக்கரத்தை சுழலச் செய்கிறவர்கள் நீங்களே!
வருஷமாகிற இந்த காலச்சக்கரத்துக்கு ஆறு ருதுக்களாகிய வட்டக் கைகள் ஏற்பட்டிருக்கின்றன.அந்த வட்டக் கைகளில் பொருந்தி இருக்கின்ற பன்னிரண்டு ஆரக்கால்களும் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கின்றன.இந்தக் காலச்சக்கரமானது எல்லா கர்மபலன்களைத் தெரிவிக்கிறது.காலத்துக்குக் கர்த்தாவாக இருக்கும் தெய்வங்கள் அச்சக்கரத்தில் உறைகின்றார்கள்.அந்தச் சக்கரத்தின் நிர்ப்பந்தத்துக்குள் கட்டுப்பட்டிருக்கிற என்னை அதிலிருந்து விடுவியுங்கள். ஹே! அஸ்வினி தேவர்களே!! நீங்களே பஞ்ச பூதங்கள் நிறைந்த இந்த பிரபஞ்சமாயிருக்கின்றீர்கள்.இம்மையிலும், மறுமையிலும் அனுபவிக்கப்படும் வஸ்துக்களும் நீங்களே. பஞ்சபூதங்களுக்கு வசப்படாமல் என்னைச் செய்யுங்கள். நீங்கள் பரப்பிரம்ம மூர்த்தியேயாகிலும் இந்திரியங்களால் அடையக் கூடிய, இன்பங்களை அனுபவிக்கும் ரூபங்களை எடுத்துக்கொண்டு , இவ்வுலகத்தில் சஞ்சரிக்கிறீர்கள்.

ஆதியில் இப்பிரபஞ்சத்தினுடைய பத்து திக்குகளையும் சிருஷ்டித்தீர்கள்.பிறகு சூரியனையும் ஆகாயத்தையும் உயர விளங்கும்படி அமைத்தீர்கள்.ரிஷிகளும் சூரியனுடைய மார்க்க முறையை அனுசரித்தே யாகாதிகளை செய்கிறார்கள்.தேவர்களும், மனிதர்களும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் விதிப் பிரகாரம் யாகங்களைச் செய்து அவைகளின் பலன்களை அனுபவிக்கின்றார்கள்.
மூன்று வித வர்ணங்களையும் கலந்து கண்ணுக்குத் தோன்றும் எல்லா வஸ்துக்களையும் நீங்கள் சிருஷ்டித்திருக்கிறீர்கள். அந்த வஸ்துக்களிலிருந்து தான், இந்தப் பிரபஞ்சமானது உற்பவித்திருக்கின்றது.அப்பிரபஞ்சத்தின் மீது தேவர்களும், மனிதர்களும், மற்றெல்லா ஜீவராசிகளும் அவரவர்களுக்கு ஏற்பட்ட கர்மங்களைச் செய்து வருகிறார்கள்.
ஓ! அஸ்வினி தேவர்களே!! நான் உங்களை வணங்குகிறேன். உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாயத்தையும் வணங்குகிறேன்.தேவர்களும் கூட தப்ப முடியாத எல்லாக் கர்மங்களுக்கும் பலன்களை நீங்களே விதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள்!ஆனால் உங்களின் செய்கைகளால் ஏற்படும் பலன்கள் உங்களைச் சார்வதில்லை.

நீங்களே எல்லோருக்கும் பெற்றோர்களாயிருக்கின்றீர்கள். நீங்களே ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னால் ரத்தமாகவும் ஜீவாதாரமான திரவியமாயும் ஆகிற அன்னத்தைப் புசிக்கிறீர்கள். புதிதாய் பிறந்த குழந்தை தாயின் பாலை உண்ணுகிறது. உண்மையில் குழந்தை ரூபமாக இருப்பவர்கள் நீங்களே! ஹே! அஸ்வினி தேவர்களே! என்னுடைய ஜீவனை ரக்ஷ¢ப்பதற்கு ஆதாரமாக உள்ள கண் பார்வையை எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்.”

(இந்தக் கட்டுரை ஸ்ரீ ஜோஸியம் வார இதழில் வெளி வந்தது. இதை விரும்பியோர் ச.நாகராஜன் எழுதிய இதர நட்சத்திரக் கட்டுரைகளையும் படிக்கலாம்.)

****************

நட்சத்திர அதிசயங்கள்- பகுதி 1

நட்சத்திர அதிசயங்கள்

வான மண்டலத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களில் முதலிடத்தைப் பெறுவது அஸ்வினி! இதன் அதி தேவதை அஸ்வினி தேவர்கள்! எத்தனை ரஹஸ்யங்கள் இதற்குள் உள்ளன தெரியுமா? அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை அருளி உபமன்யுவை மஹரிஷி ஆக்கிய அற்புத சரிதத்தை இந்த வாரம் பார்ப்போம்!
அஸ்வினி ரஹஸ்யம்! – 1

எழுதியவர்: ச.நாகராஜன்

அதி ரஹஸ்ய அஸ்வினி

இருபத்தியேழு நட்சத்திரங்களுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் அஸ்வினி நட்சத்திரத்தின் பெருமைகளும் மர்மங்களும் அதிசயங்களும் ரஹஸ்யங்களும் ஏராளம், ஏராளம்! மேஷ ராசியில் அமைந்துள்ள அஸ்வினி நட்சத்திரத்தின் அதி தேவதை அஸ்வினி தேவதைகள். மேலை நாட்டினரால் ஆல்பா,பீடா ஏரியஸ் என இது அழைக்கப்படுகிறது. பிறருக்கு உதவி செய்வதற்கென்றே ஒரு தேவதை இருக்குமானால் அது அஸ்வினி தான்! அஸ்வினி இரட்டையரைப் பற்றிய ஏராளமான கதைகள் ரிக் வேதத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல் மஹாபாரதம் மற்றும் 18 புராணங்கள் நம் மனதைக் குளிர வைக்கும் பல ரகசியங்களை அஸ்வினி பற்றிக் கூறுகின்றன.

அயோதௌம்யரின் கட்டளை

அஸ்வினி பற்றிய முக்கியமான ஒரு சரிதத்தை இங்கு பார்ப்போம்.இந்தச் சம்பவம் நிகழ்ந்த காலம் த்வாபர யுகத்தின் இறுதிக் காலம். அயோதௌம்யர் என்ற மஹரிஷிக்கு உபமன்யு, ஆருணி,வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தனர்.தௌம்யருக்கு குருகுல வழக்கப்படி உபமன்யு உள்ளிட்டவர்கள் உரிய முறையில் சேவை செய்து கொண்டிருந்தனர். ஒரு நாள் தௌம்யர் உபமன்யுவை அழைத்து,” நீ என் பசுக்கூட்டத்தை ரக்ஷ¢த்துக் கொண்டு வா” எனக் கட்டளையிட்டார். அவ்வாறே உபமன்யு பசுக் கூட்டங்களை மேய்த்துக் கொண்டு போய் மாலையில் குருவிடம் வந்து சேர்ந்தார். குரு உபமன்யுவின் தேகம் வாடாமல் இருந்ததைக் கண்டு அவரை நோக்கி, “உபமன்யு, உன் தேகம் வாடாமல் பொலிவுடன் இருக்கிறதே, நீ என்ன ஆகாரம் உண்டாய்?” என்று கேட்டார்.உபமன்யு,” குருவே! நான் யாசகம் செய்து அதனால் ஆகாரம் உண்டேன்” என்றார், அதற்கு குரு, “யாசகத்தினால் உனக்குக் கிடைப்பதை என்னிடம் இனி கொண்டு வந்து கொடுத்து விடு. அதை எனக்குச் சேர்ப்பிக்காமல் நீ உண்பது முறையன்று” என்றார். உபமன்யு அந்தக் கட்டளையை சிரமேற் கொண்டார். மறுநாள் பிட்சையில் தமக்குக் கிடைத்த அனைத்தையும் குருவிடம் உபமன்யு சமர்ப்பித்தார். அதில் ஒரு கவளம் கூட உபமன்யுவுக்குத் தராமல் தௌம்யரே அனைத்தையும் எடுத்துக் கொண்டார். பிறகு மாடுகளை மேய்க்கச் சென்ற உபமன்யு மாலையில் வீடு வந்து சேர்ந்தார்.

அவர் உடல் வாடாமல் இருந்ததைக் கண்ட குரு, “உனக்கு நான் ஒரு கவளம் கூடக் கொடுக்கவில்லையே! என்றாலும் கூட நீ உடல் வாடாமல் வந்திருக்கிறாயே! எதை ஆகாரமாக உண்டாய்?” என்று கேட்டார்.அதற்கு உபமன்யு, “குருவே! முதலில் யாசகம் எடுத்ததைத் தங்களிடம் கொடுத்து விட்டேன். இன்னொரு முறை யாசகம் எடுத்து அதை நான் சாப்பிட்டேன்” என்றார்.தௌம்யர், “உபமன்யு, நீ செய்தது சரியல்ல. உன்னுடைய இந்த செய்கையினால் பி¨க்ஷ ஜீவனம் செய்யும் மற்றவர்களுக்கு நீ இடைஞ்சல் செய்கிறாய். இப்படி நீ ஜீவிப்பதால் நீ துராசை உள்ளவனென்பது நிச்சயமாகிறது” என்றார்.குரு கூறிய அனைத்தையும் மனதில் வாங்கிக் கொண்டு உபமன்யு மாடுகளை மேய்க்கச் சென்றார். அன்று மாலை வழக்கம் போல அவர் வந்ததும் அவரை நோக்கிய குரு “ என்ன உபமன்யு, நீ வாடாமல் கொழுத்துத் தான் இருக்கிறாய், என்ன உணவை உண்டாய்?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு,”ஐயனே, நான் இந்தப் பசுக்களின் பாலை அருந்தி ஜீவிக்கிறேன்” என்றார்.

உடனே தௌம்யர், “அடடா, என்னுடைய அனுமதியைப் பெறாமல் பாலை அருந்தலாமா? இனி அருந்தாதே!” என்றார். குருவின் வார்த்தைகளுக்குச் சரி என்று சொல்லி உபமன்யு திரும்பினார். மறு நாள் மாலை ஆயிற்று.உபமன்யு வந்தார். குரு அவர் சற்றும் சோர்வடையாமல் இருப்பதைக் கண்டு,”உபமன்யு, இன்று எதையாவது அருந்தினாயா, என்ன?பாலை அருந்தவில்லையே!” என்று கேட்டார். “ஐயனே! பாலை அருந்தவில்லை. ஆனால் பாலைக் கன்றுகள் குடித்தபின்னர் கீழே விழும் நுரைத் துளிகளை அருந்தினேன்” என்றார், உடனே தௌம்யர்,” இந்தக் கன்றுக்குட்டிகள் பாலை போதிய அளவு அருந்தாமல் விட்டு விடுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இனி நீ நுரைத் துளிகளையும் அருந்தாதே” என்று கட்டளையிட்டார். குருவின் கட்டளையை உபமன்யு சிரமேற் கொண்டார். நுரைத் துளிகளை இனி அருந்தமாட்டேன் என்று குருவிடம் உறுதி கூறினார். கன்றுகள் அருந்திய பின்னர் வந்த பாலின் நுரைத்துளிகளையும் அருந்தாமல் காட்டில் மாடுகளை மேய்த்தவாறு அலைந்த அவர் இறுதியில் பசி தாங்காமல் எருக்க இலைச் சாறை அருந்தினார்.காரம் நிறைந்த எருக்க இலைச் சாறின் விஷத்தினால் அவர் கண்கள் உடனே குருடாயின.

அஸ்வினி தேவர்களை நோக்கி துதி

கண் தெரியாததால் காலால் நடக்க முடியாமல் உபமன்யு ஊர்ந்து செல்லத் தொடங்கினார்.அப்போது வழியில் இருந்த ஆழமான கிணற்றுக் குழி ஒன்றில் விழுந்தார். மாலை நேரமாயிற்று. உபமன்யு வராததைக் கண்ட தௌம்யருக்குக் கவலை வந்தது. தனது இதர சீடர்களை அழைத்து உபமன்யு எங்கே என்றார். அவர்களுக்குப் பதில் தெரியவில்லை. ‘வாருங்கள், அவனைச் சென்று தேடுவோம்’ என்று கூறிய தௌம்யர் காட்டை நோக்கிச் சென்றார். ‘உபமன்யு, நீ எங்கே இருக்கிறாய்’ என்று கூவிய வாறே ஒவ்வொரு பகுதியாக அவர் தேட ஆரம்பித்தார். தன் குருவின் சப்தத்தைக் கேட்ட உபமன்யு, “ குருவே! நான் இதோ இந்தக் கிணற்றுக் குழியில் வீழ்ந்து கிடக்கிறேன்!” என்று பரிதாபமான குரலில் உரக்கக் கத்தினார்.”இதில் நீ எப்படி விழுந்தாய்?” என்று தௌம்யர் கேட்க உபமன்யு, தான் எருக்கஞ்சாறை அருந்தியதையும் கண்கள் குருடான விஷயத்தையும் கூறினார். உடனே தௌம்யர், “உபமன்யு! தேவர்களுக்கு வைத்தியர்களான அஸ்வினி தேவர்களை நீ ஸ்தோத்திரம் செய்! அவர்கள் உனக்கு கண்களை மீண்டும் அளிப்பார்கள்” என்று கூறி அருளினார். குருவால் கட்டளையிடப்பட்ட உபமன்யு மனமுருக அஸ்வினி தேவர்களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

ரிக் வேதத்தில் உள்ள மிக நீண்ட உபமன்யுவின் துதி மிக மிகச் சிறப்பானது. அதன் இறுதி வாக்கியங்களில் அவர், “ஓ! அஸ்வினி தேவர்களே!! நான் உங்களை வணங்குகிறேன். உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாயத்தையும் வணங்குகிறேன்.தேவர்களும் கூட தப்ப முடியாத எல்லாக் கர்மங்களுக்கும் பலன்களை நீங்களே விதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள்!ஆனால் உங்களின் செய்கைகளால் ஏற்படும் பலன்கள் உங்களைச் சார்வதில்லை. நீங்களே எல்லோருக்கும் பெற்றோர்களாயிருக்கின்றீர்கள். நீங்களே ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னால் ரத்தமாகவும் ஜீவாதாரமான திரவியமாயும் ஆகிற அன்னத்தைப் புசிக்கிறீர்கள். புதிதாய் பிறந்த குழந்தை தாயின் பாலை உண்ணுகிறது. உண்மையில் குழந்தை ரூபமாக இருப்பவர்கள் நீங்களே! ஹே! அஸ்வினி தேவர்களே! என்னுடைய ஜீவனை ரக்ஷ¢ப்பதற்கு ஆதாரமாக உள்ள கண் பார்வையை எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்.” என்று கூறி அஸ்வினி தேவர்களை மனமுருக பிரார்த்தனை செய்தார்.

மீண்டும் கண்பார்வை கிடைத்தது

எல்லோருக்கும் உடனே உதவத் துடிக்கும் அஸ்வினி தேவர்கள் தன்னை அண்டி வணங்கிய உபமன்யுவின் துதியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் உபமன்யுவின் முன் தோன்றி.”நாங்கள் திருப்தி அடைந்தோம். இதோ, இந்தத் தின்பண்டத்தை உடனே உட்கொள்” என்று கூறி அவர் உண்ண தின்பண்டம் ஒன்றைத் தந்தனர். உபமன்யு,”நீங்கள் கொடுப்பதை என் குருவுக்கு முதலில் கொடுக்காமல் நான் சாப்பிடத் துணியேன்” என்றார். உடனே அசுவனி தேவர்கள் பழைய சம்பவம் ஒன்றை உபமன்யுவிடம் கூற ஆரம்பித்தனர். “முன்னொரு காலத்தில் உன்னுடைய குருவானவர் எங்களைப் பிரார்த்தித்தார்.நாங்கள் அப்போது அவருக்கு இதே மாதிரி தின்பண்டம் ஒன்றை உண்ணுவதற்காகத் தந்தோம்.அதை அவர் தன் குருவுக்குக் கொடுக்காமலேயே சாப்பிட்டார். ஆகவே உன் குரு முன் செய்த பிரகாரமே நீயும் அவருக்குக் கொடுக்காமல் உடனே இதைச் சாப்பிடலாம்” என்று கூறினர்.

உபமன்யு, “ஓ! அஸ்வினி தேவர்களே! என்னை மன்னிப்பீர்களாக! இதை என் குருவுக்குக் கொடுக்காமல் நான் சாப்பிட மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினார். உடனே அஸ்வினி தேவர்கள், “ உன் குருவின் மீது உனக்கு இருக்கும் பக்தியை மெச்சினோம்.உன் குருவினுடைய பற்கள் காரிரிரும்பினால் ஆக்கப்பட்டுள்ளன. உன்னுடைய பற்கள் தங்கப் பற்களாகக் கடவது” என்று கூறி ஆசீர்வதித்தனர்.” இனி நீ உன் பார்வையை அடைவாய். உனக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்” என்று கூறி அஸ்வினிதேவர்கள் மறைந்தனர்.

குருவிடம் உபமன்யு நடந்த அனைத்தையும் கூறி வணங்கினார்.தௌம்யர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். உபமன்யுவை நோக்கி அவர்,”நீ இனி அஸ்வினி தேவர்கள் கூறியபடியே சகல §க்ஷமத்தையும் அடைவாய்! எல்லா வேதங்களும் எல்லா தர்ம சாஸ்திரங்களும் உன்னிடத்தில் விளங்கும்” என்று கூறி ஆசீர்வதித்தார். அதன்படியே உபமன்யு வேத சாஸ்திரங்களில் தேர்ந்து பெரும் தவம் புரிந்து பெரிய மஹரிஷியாக ஆனார்.
அஸ்வினி தேவர்கள் அனைவருக்கும் உதவி செய்த ஏராளமான சம்பவங்களுக்கு உபமன்யுவின் கதை ஒரு சிறந்த சான்று. மேலும் அஸ்வினியைப் பற்றிப் பார்ப்போம்
-தொடரும்

*****************

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- இறுதி பகுதி


வீட்டுக்கு அலங்காரம் மனையாள்

வீட்டுக்கு அலங்காரம் மனையாள்
வீட்டுக்கு இருந்தால் வெங்கலப் பெண்டாட்டி வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி
வீட்டுக்காரி என்று பெண்சாதிக்குப் பெயர்
வீதிரும் பெண்ணும் விலை போச்சுது, கை தப்பினால்
வெடவெட என்று தண்ணீர் குடிக்காதவளா உடன்கட்டை ஏறப்பொகிறாள்?
வெட்கத்தால் ஒல்காதவள் குலஸ்த்ரீக்குப் போகாது
வெடகப்படுகிற வேசியும், வெடகங் கெட்ட சமுசாரியும் உதவ மாட்டார்கள்
வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏதுக்கு?
வெட்கம் அற்ற பெண்பிள்ளை வீண்

வேசி பற்றி

வேசி காசு பறிப்பாள் (210)
வேசி அவல் ருசியை அறியாள்,வெள்ளாட்டி எள் ருசியை அறியாள்
வேசி ஆடினால் காசு, வெள்ளாட்டி ஆடினால் சவுக்கு
வேசி உறவு காசிலும் பணத்திலுந்தான்
வேசி உறவும் வெள்ளாட்டி அடிமையும் காசு பணத்தளவே காணலாம்
வேசி கூச்சப்பட்டால் வெண் காசு கிடைக்குமா?
வேசிக்கு ஆணையில்லை,வெள்ளாட்டிக்குச் சந்தோஷமில்லை
வேசிக்கு காசு மேல் ஆசை, விளையாடுப் பிள்ளைக்கு மண் மேலாசை
வேசி மேல் ஆசைபடறது வெள்ளெலும்பை நாய் கவ்வினதுக்கு ஒப்பாம்
வேசியும் நாயும் விதி நூல் வைத்தியரும் பாசம் அற்று நிற்பது காண்பார்
வேசியைப் பெண்டுக்கு வைத்துக் கொண்டால், வேறே வினை தேவையில்லை
வேசி வீடு போவதும் வெந்து சாம்பல் ஆவதும் ஒன்னுதான் (220)
வேடக்காரனுக்கும் ஆடக்காரனுக்கும் பகை, வேசிக்கும் தாசிக்கும் பகை
துக்குணிச் சிறுக்கிக்கு முக்கலக் கந்தை
துடைகாலி முண்டை எல்லாம் துடைத்துப் போட்டாள்
சும்மாக் கிடந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா?
சுவத்துக் கீரயை வழித்துப் போடடி சுரணை கெட்ட வெள்ளாட்டி
தையல் சொல் கேட்டால் எய்திடும் கேடு

தைரிய லெட்சுமி தன லெட்சுமி

தைரிய லெட்சுமி தன லெட்சுமி
தோசிப் பெண்ணுக்கேற்ற சொறியாங்கொள்ளி மாப்பிள்ளை
பெற்ற தாயானாலும் குற்றம் எத்தனை பொறுப்பாள்?
பெற்ற தாயிடத்திலேயா கற்ற வித்தையை காட்டறது? 230
பெற்ற தாயுடன் போகிறவனுக்கு பத்தம் ஏது?
வித்துவானை அடித்தவனும் இல்லை, பெற்ற தாயுடன் போனவனும் இல்லை
வித்தைக் கள்ளி மாமியார் விறகு ஒடிக்கப் போனாளாம், கத்தாழை முள்ளு கொத்தோடு தைத்ததாம்
வித்தைக் கள்ளி, விளையாடுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி
விட்தைக்காரப் பெண்பிள்ளை, செத்த பாம்பை ஆட்டுகிறாள்
வித்தையடி மாமி விற்கிறதடி பணிகாரம்
விலைமோரிலே வெண்ணை எடுத்துத் தலை மகனுக்கு கலியாணம் பண்ணுவாள்
வடுகச்சி காரியம் குடுகுச்சு, முடுகுச்சு

கிழவன் கிழவி பற்றி

கிழம் ஆனாலும் கேட்டானாலும் கட்டிக்கொண்டவள் பிழைப்பாள்
கிழவனுக்கு வாழ்க்கைப் படிகிறதிலும் கிணற்றில் விழலாம்
கிழவன் ஆனாலும் கட்டை ஆனாலும் கட்டிக்கொண்டவள் பிழைப்பாள்
கிழவி இருந்த வீடும் கிளி இருந்த காடும் ஈடேறமாட்டாது (241)
கிழவி பாட்டைக் கின்னரக் காரன் கேட்பானா?
கிழவி போனபோது சுவர் இடிந்து விழுந்ததாம்
கிழவியும் காதம் குதிரையும் காதம்
கிழவியை அடித்தால் வழியிலே பேலுவாள்
கிழவியை பாட்டி என்பதற்கு கேட்க வேண்டுமா?
குங்குமக் கோதைக்கும் அஞ்சு பணம், குருட்டுக் கண்ணிக்கும் அஞ்சு பணமா?
கெட்டது கெட்டாய் மகளே கிட்ட வந்து படுத்துக் கொள்
கெட்ட பயலுக்கேற்ற துட்ட சிறுக்கி
கூலிக்குக் குந்துவாள் பிள்ளைக்குத் தவிடு பஞ்சமா? (25)
கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெற வேண்டும்
கூனி வாயாற் கெட்டாற் போல
செத்த பாம்பு சுற்ற வருகிறதே, அத்தை நான் மாட்டேன் என்றாற் போல
செத்த பாம்பை ஆட்டுவாளாம் வித்தைகார பெண்பிள்ளை
அன்ன நடை நடக்கப் போய் தன் நடையும் கெட்டாற்போல
அன்னிய சம்பந்தமேயல்லாமல் அத்தை சம்பந்தம் இல்லை என்கிறான்
அன்னிய மாதர் அவதிக்குவுவாரா?
அன்னைக்குதவாதவன் ஆருக்குமாகான்
ஆக்கமாட்டாத பெண்ணுக்கு அடுப்புக் கட்டி பத்தாம்
ஆக்கமாட்டாத அழுகல் நாரிக்குத் தேடமாட்டாத திருட்டுக் கணவன் வாய்த்தானாம்
ஆக்கவேண்டாம் அரைக்கவேண்டாம் பெண்ணே, என் அருகில் இருந்தாலும் போதுமடி கண்ணே (260)
ஆக்கி அரைத்துப் போட்டவள் கெட்டவள், வழிக்கூட்டி அனுப்பினவள் நல்லவள்
ஆங்காரிகளுக்கு அதிகாரி
ஆங்காலம் எல்லாம் அவசாரி ஆடி,சாங்காலம் சங்கரா சங்கரா என்கிறாள்
ஆசையாய் மச்சான் என்றாளாம், அடிச் சிறுக்கி என்று அறைந்தானாம்
ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே
அண்ணனிடம் ஆறுமாதம் வாழ்ந்தாலுமண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா?
அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அயல்நாட்டாள்
அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்
அண்ணாங்கை அப்சரஸ்த்ரீ
அதமனுக்கு பெண்டாட்டியாய் இருப்பதைவிட பலவானுக்கு வேலைக்காரியாய் இருப்பதே மேல் (270)
அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை

அத்தை பற்றி

அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா
அத்தைக்கொழியப் பித்தைகில்லை ஔவையாரிட்ட சாபத்தீடு
அத்தை மகளானாலும் சும்மா வருமா?
அத்தை மகள் சொத்தை அவள் கேட்கிறாள் மெத்தை
அத்தை மகள் அம்மான் மகள் சொந்தம் போல
கள்ளப் புருடனை நம்பிக் கணவனைக் கை விடலாமா? (277)
மலடி அறிவாளோ பிள்ளை அருமை?
மலடிக்குத் தெரியுமா பிள்ளையைப் பெற்ற அருமை?
மலடிக்குத் தெரியுமோ மகப்பேறு வைத்தியம்? (280)
மலடி மகப் பெற்றாள்
மலடியைப் பிள்ளை பெறச் சொன்னால் பெறுவாளா?
மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்ல வேண்டாம், மாற்றானை ஒருநாளும் நம்பவேண்டாம்
மனைவியில்லாத புருடன் அரை மனிதன்
மனைவி இறந்தால் மணம், மகள் இறந்தால் பிணம்
முகம் சந்திர பிம்பம், அகம் பாம்பின் விடம்
முண்டைகண்ணி பிள்ளை இரண்டு கண்ணும் நொள்ளை
முண்டைச்சி சம்பந்தக்காரன் முன்னுக்கு வருவானா?
முண்டைச்சி பெற்றது மூன்றும் அப்படியே
முண்டையைப் பிடித்த கண்டமாலை முருங்கையையும் பிடித்தது
முப்பணியிட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை (290)
மூடு முக்காட்டுக்குள்ளே போகிறவள்தான் ஓடிஓடி மாப்பிள்ளை கொள்ளுகிறது

கல்லானாலும் கணவன்

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்
மூதேவி மூதேவி முகம் கழுவ வா மூதேவி
மூன்று முடிச்சு கழுத்தில் விழட்டும், முப்பது இலை குப்பையில் விழட்டும்
மேலான மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே
பயிரிட்டவன் கெட்டான்
கூத்திக்கு இட்டுக் குரங்கு ஆனான், வேசிக்கு இட்டு விறகு ஆனான்
கூத்தியார் பிள்ளைக்கு தகப்பன் யார்?
கூத்தியார் ஆத்தாள் செத்தால் கொட்டும் முழக்கும், கூத்தியார் செத்தால்
ஒன்றுமில்லை
கூத்தியார் செத்தால் பிணம், அவள் தாய் செத்தால் மணம்
குமரிக்கு ஒரு பிள்ளை கோடிக்கு ஒரு வெள்ளை
குமரி தனி வழியே போனாலும் கொட்டாவி தனி வழியே போகாது (300)
குமரியாய் இருக்கையில் கொண்டாட்டம் கிழவியாய் இருக்கையில் திண்டாட்டம்
கனவிலே கண்டவனுக்கு பெண் கொடுத்த கதை
தங்கப் பெண்ணே தாராவே, தட்டால் கண்டால் பொன் என்பான், த்கராசில் வைத்து நிறு என்பான், எங்கும் போகாமல் இங்கேயே இரு
தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆனால், தவத்துக்குப் போவான் ஏன்?
கலியாண சந்தடியில் தாலி கட்ட மறாந்தது போல
வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் ஆசை வண்ணாத்திக்கு கழுதை மேல் ஆசை
மயிருக்கு மிஞ்சின கருப்பும் இல்லை மதனிக்கு மிஞ்சின உறவும் இல்லை
ஆத்தங்கரையில் அம்மவைப் பார்த்தால் வீடில் பெண்ணைப் பார்க்கவேண்டாம் (310)
பொண்ணை போத்தி வள, ஆணை அதட்டி வள (ர்)
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
கல்யாணமே என்றாளாம், தூரமே என்றாளாம்
மாட்டுக்கு மூக்கணாம் கயிறு பெண்ணுக்கு தாலிக் கயிறு
பொட்டு வச்சுக்கோ மாமியாரே பூ வச்சுக்கோ மாமியாரே என்றாளாம்
கொண்டு வந்தால் மகராசி இல்லாவிட்டால் பரதேசி
அடி வயத்தை அம்மா பார்ப்பாள் அடி மடியை ஆத்துக்காரி பார்ப்பாள்

பெற்ற தாய்

பெற்ற தாய்க்கும் வளர்த்த தாய்க்கும் உதவாமல் பிரிந்த குயில் போல
பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சிற்றப்பன்
பெற்ற தாய் பசித்திருக்க பிராமண போஜனம் செய்வித்தது போல
பெற்ற தாய் மூதேவி,, புகுந்த தாரம் சீதேவி (320)
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
பெற்றவளுக்குத் தெரியாதா பெயரிட?
பெற்றவளுக்குத் தெரியும் பிள்ளை அருமை
பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள், பெண்சாதி மடியைப் பார்ப்பாள்
வலியப் பெண் கொடுக்கிறோம் என்றால் குலம் என்ன? கோத்திரம் என்ன என்பார்கள்
வலிய வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
வலிய வந்தால் கிரந்திக்காரி
வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி (328)

பாரதி பாட்டில் பழமொழிகள்

தமிழ் மொழியில் இருக்கும் இருபதாயிரம் பழமொழிகளை 150 ஆண்டுகளுக்கு முன் மூன்று வெள்ளைக்காரர்கள் தொகுத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டு அரிய பணியைச் செய்தனர். இன்னும் பத்தாயிரம் பழமொழிகள் பட்டியலிடப்படாமல் உள்ளன. மேலும் அவைகளை தலைப்பு வாரியாகத் தொகுக்க வேண்டும். பல சொற்களுக்கு இப்போதே பொருள் புரியவில்லை. இதே போக்கில் விட்டால் பிராமணர்களின் வேதங்களுக்கு எப்படி இன்று பொருள் சொல்ல முடியவில்லையோ அந்த கதி தமிழ்ப் பழமொழிகளுக்கும் எற்பட்டுவிடும். ராமர் கட்டிய பாலத்தில் அணிலும் சிறிது மண் போட்டு உதவியது போல நானும் ஏதோ சிறிய முயற்சிகளைச் செய்கிறேன்.
பழமொழிகளைப் பயன்படுத்தாத தமிழர்களைக் காண்பது அபூர்வம். வீட்டில் புரோகிதம் செய்துவைக்கும் புரோகிதர்கள் முதல் ரோட்டில் வடை சுட்டு விற்கும் கிழவிகள் வரை தமிழ்ப் பழமொழிகளைப் பயன் படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். சங்க இலக்கியமானாலும் சரி, கம்பன் பாடல் ஆனாலும் சரி பழமொழிகளைக் காணலாம். இந்தச் சிறிய கட்டுரையில் பாரதி பாடல்களில் கண்ட சில பழமொழிகளைக் காணலாம்.

1) எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தாரன்றே பூமி ஆள்வார்;

2) உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவள் என்று அறியீரோ- உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும்
பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ?

3) காற்றுள்ளபோதே நாம் தூற்றிக் கொள்வோம்
கனமான குருவை எதிர் கொண்டபோதே

4) கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காடும் மறாஇகள் எல்லாம்—நீவிர்
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு
அவங்கள் புரிவீரோ

5) சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ—நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?

6) பெண் என்று சொல்லிடிலோ—ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே நினது
என்னம் இரங்காதோ

7) பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

8) கை வைத்தது பசும்பொன் ஆகுமே—பின்பு
காலின் பயம் ஒழிந்து போகுமே

9) சுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும்
அரக்கர் தம் குலத்திடை வீடணனாகவும்
சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்

10) வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்
வெயிலுள்ள போதிலே உலர்த்திக் கொள்வோம்
11) நரி வகுத்த வலையினிலே சிங்கம் தெரிந்து
நழுவி விழும்;சிற்றெறும்பால் யானை சாகும்;
வரி வகுத்த உடற் புலியைப் புழுவும் கொல்லும்

12) சென்றதினி மீளாது, மூடரே
(போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்)

13) தாழ்வு பிறர்க்கென்னத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ (கெடுவான் கேடு நினைப்பான்)

பழமொழி ஆராய்ச்சி செய்பவர்கள் என்னுடைய பிளாக்—கில் பின்வரும் கட்டுரைகளைப் படிக்கலாம்:
பழமொழிகளில் இந்துமதம்
இந்துமதம் பற்றி 200 பழமொழிகள்
20000 தமிழ் பழமொழிகள்
ஒன்றுக்கும் உதவா உதிய மரமே !
உடம்பைக் கடம்பால் அடி!
Amazing collection of 20,000 Tamil Proverbs
******************

பொம்பளை சிரிச்சா, உதைச்சா, பார்த்தா போச்சு

பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது தமிழ் பழமொழி. ஆனால் பெண்கள் சிரித்தால் செண்பக மரம் பூக்கும் என்கிறது வடமொழி. பெண்களைப் போல் மரங்களுக்கும் மசக்கை (தோஹத) உண்டாம். பெண்களின் அன்புக்காக அவை ஏங்குமாம். தமிழர்களும் வேங்கை மரத்தை பெண்களின் திருமணத்தோடு இணைத்துப் பேசுவர். சங்க இலக்கிய நூல்கள் வேங்கை பரத்தின் அடியில் பெண்கள் புலி புலி என்று குரலிடுவதையும் அதனால் அது பூப்பதையும் குறிப்பால் உணர்த்தும்

சம்ஸ்கிருதத்தில் ஒரு செய்யுள் இருக்கிறது. அது பெண்களுக்கும் மரத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றிப் பேசுகிறது. அசோக மரத்தைப் பெண்கள் உதைத்தால் அது பூக்கும் என்று 2000 ஆண்டுகளாக வடமொழிப் புலவர்கள் பாடினர். இதோ அவர்கள் தரும் பட்டியல்:

பெண்கள் உதைத்தால் பூக்கும் அசோக மரம்
பெண்கள் சிரித்தால் பூக்கும் செண்பக மரம்
பெண்கள் பேசினால் பூக்கும் நமேரு மரம்
பெண்கள் தழுவினால் பூக்கும் குராபக மரம்
பெண்கள் பார்த்தால் பூக்கும் திலக மரம்

நாலிங்கிதக் குரபகஸ் திலகோ ந த்ருஷ்டோ
நோ தாடிதஸ்ச சரணை சுத்ரசாம் அசோக:
சிக்தோ ந வக்த்ரம் அதுனா பகுளாஸ் ச சைத்ரே
சித்ரம் ததாபி பவதி ப்ரஸவ அவகீர்ண என்பது சம்ஸ்கிருதப் பாடல்.

பெண்கள் எத்தனை வகை?

பெண்களை வடமொழி வித்தகர்கள் நாலு வகையாகவும், பரத சாஸ்திர அறிஞர் பரத ரிஷி எட்டு வகையாகவும் தமிழர்கள் வயதின் அடிப்படையில் ஏழு வகையாகவும், ஜப்பானியர்கள் ஒன்பது வகையாகவும், ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் டி.என்.ஏ. அடிப்படையில் ஏழு வகையாகவும் பிரித்தனர்.

பத்மினி, சங்கினி,ஹஸ்தினி, சித்ரினி

வடமொழி நூலர்கள் குணத்தின் அடிப்படையில் பெண்களை நாலு வகையாகப் பிரித்தனர். அவர்கள் பத்மினி, சங்கினி, ஹஸ்தினி, சித்ரினி எனப்படுவர்.

பத்மினி பெண்களைப் பார்ப்பது அபூர்வம். அவர்கள் மிகவும் அழகானவர்கள், மென்மையானவர்கள்,புனிதமானவர்கள். முகம் வட்ட வடிவம் உடையது. உடலும் உருண்டு திரண்டு இருக்கும். அவர்கள் சுஹாசினி (மலர்ந்த முகம்) சுபாஷினி ( இனிய சொல்), சாருஹாசினி (புன்சிரிப்புடையோர்) ஆவர். அழகிய கவர்ச்சிகரமான பார்வையால் எதிரிகளையும் தேவர்களையும் வசப்படுத்துவர்.

சங்கினி வகைப் பெண்கள் அழகானவர்கள், புத்திசாலிகள், சுறு சுறுப்பானவர்கள். சங்கு வடிவத்தில் சில உடல் அம்சங்கள் ஒல்லியாக இருக்கும். சுதந்திர சிந்தனை படைத்தவர்கள். அதிக சக்தி உடைய இவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவோர் கார்கி, வைதேகி, சுரவந்தியா ஆவர்.

ஹஸ்தினி வகைப் பெண்கள் பார்பதற்கு இனியவர்கள், ஆனால் பருமனானவர்கள். பின் தூங்கி பின் எழும் பத்தினிகள். கேளிக்கை விரும்பிகள். நீங்கள் முடிவு எடுத்தால் கோபிப்பார்கள். தானாகவும் முடிவு எடுக்க மாட்டார்கள். கேளிக்கையே வாழ்க்கையின் குறிக்கோள். பிரபுக்கள் வம்சம்.

சித்ரினி மிக மெல்லிய தேகம் உடையோர். மூங்கில் குச்சியோ எனலாம். அலங்காரத்திலும் கலைகளிலும் ஆர்வம் அதிகம். அலமாரி முழுதும் ஆயிரம் உடைகளைப் பார்க்கலாம். படுக்கப் போகும் போதும் படுத்து எழுந்திருக்கும் போதும் அலங்காரத்துடன் வருவர். அலங்காரி, சிங்காரி ஒய்யாரி-பேஷன் பேர்வழிகள்.

Tree Yakshi Kicking the Asoka Tree, 2200 year old statue

2000 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களை வகைப் படுத்தினர் ஆன்றோர்கள். இன்றும் இவ்வகையினரைக் காண்பது நம் முன்னோரின் மேதாவிலாசத்தைக் காட்டும்.
நாட்டிய சாத்திரம் எழுதிய வட மொழி அறிஞன் பரத முனி எட்டு வகை நாயகிகளைப் பற்றிப் பேசுகிறார். இவரகள் குணத்தால் பிரிக்கப்பட்டவர் இல்லை. திரைப்பட கதாநாயகிகள் போல நடிப்பதற்காக தோன்றுபவர்கள்.

அவர்கள் ;1.வாசக சஜ்ஜா நாயிகா:காதலனுடன்டன் குலவத் தயாரான உடையுடன் இருப்பாள் 2.விரஹோத் கண்டிதா நாயிகா: பிரிவால் வருந்தும் பெண் 3. ஸ்வாதீன பர்த்ருஹா நாயிகா: கணவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவள் 4. கலஹாந்த்ரிதா நாயிகா: சண்டை போட்டுப் பிரிந்தவள் 5.கண்டிதா நாயிகா: காதலுனிடம் கோபமாகச் சீறுபவள் 6.விப்ரலப்தா நாயிகா: காதலனால் ஏமாற்றப்பட்டவள் 7.ப்ரோஷித பர்த்ருகா நாயிகா: கணவனுடன் சுகமாக வசிப்பவள் 8.அபிசாரிகா நாயிகா: கணவணை காண ஆவலுடன் செல்லும் நாயகி.
இந்த எட்டு வகைகாயும் நாடகம் திரைப்படம் ஆகியவற்றில் காண்கிறோம்.

தமிழர்கள் செய்த 7 வகை

தமிழர்கள் 40 வயதுக்குக் குறைவான பெண்களை மட்டும் வயது அடிப்படையில் ஏழு பிரிவுகளாகப் பிரித்தனர். அதற்குப் பிறகு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. பேதை (5—7), பெதும்பை (8—11), மங்கை (12—13), மடந்தை (14—19), அரிவை (20—25), தெரிவை (25—31), பேரிளம் பெண் (32 முதல் 40 வயது).

இது தவிர சம்ஸ்கிருத நிகண்டு அமரகோஷம், தமிழ் நிகண்டு பிங்கலந்தை போன்றவற்றில் பல வடமொழிப்ப் பெயர்கள் உள்ளன. வாலை, தருணை, ப்ரவுடை, விருத்தை என்பன அந்தப் பிரிவாகும். இவைகளும் வயதின் அடிப்படையில் அமைந்தனவே.

காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாலியல் ரீதியில் ஆண்களையும் பெண்களையும் பலவகைகளாகப் பிரித்திருப்பதும் குறிப்பிடத்த்க்கது. நம் முன்னோர்கள் எந்த அளவுக்கு ஆராய்ச்சி மனப்பான்மையோடு இவ்விஷயங்களை அனுகினர் என்பதைப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.

பெண்ணின் குணங்கள்

தாயின் கருணை, அடியாள் போல தொண்டு,பூமாதேவி போல பொறுமை, படுக்கை அறையில் மகிழ்விக்கும் பெண், குடும்ப நிர்வாகத்தில் மந்திரி போல அற்புத மூளை—அத்தனையும் வாய்கப் பெற்றவள் தாய். இதோ நீதி வெண்பா பாடல்:

அன்னை தயையும் அடியாள் பணியும் மலர்ப்
பொன்னின் அழகும் புவிப் பொறையும் – வன்னமுலை
வேசி துயிலும் விறல் மந்திரி மதியும்
பேசில் இவையுடையாள் பெண்

மஹாபாரதம், லலிதா சஹஸ்ரநாமம் ஆகியவற்றிலும் பெண்கள் பல வகையில் பிரிக்கப் பட்டிருக்கின்றனர்..

மரபியல் ரீதியில் ஏழு வகை

மனித இனம் முழுதும் ஏழு ரிஷிகளின் (சப்த ரிஷி) வழித்தோன்றியதாக இந்து மத நூல்கள் கூறுகின்றன. அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரஸ ரிஷி என எழுவர். மேலை நாட்டில் ஆக்ஸ்பர்ட் பேராசிரியர் ப்ரையன் சைக்ஸ் (Bryan Sykes) ஆராய்ந்ததில் வேறு ஒரு உண்மையைக் கண்டார். அவர் ஐரோப்பாவிலிருக்கும் பெண் இனங்களின் உயிர் அணுவிலுள்ள மைடோகாண்ட்ரியாவை ஆராய்ந்து பார்த்து அவர்கள் அனைவரும் ஏழு தாய்மார்கள் இடமிருந்து தோன்றினர் என்றும் அவருக்கு மூலமான பெண்மணி ஆப்பிரிக்காவில் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்றும் கூறுகிறார். ஏவாளின் ஏழு சகோதரிகள் The Seven Sisters of Eve என்று அவர் ஒரு புத்தகமும் எழுதி தனது மரபியல் ஆய்வுகளை வெளியிட்டார்.

ஆண்கள், பெண்கள் ஆகிய இருவர் இடத்திலும் மைடோகாண்ட்ரியல் டி.என்.ஏ.(mitochondrial DNA) இருந்தாலும் அம்மாவிடமுள்ள மைடோகாண்ட்ரியல் டி.என்.ஏ. மட்டுமே குழந்தைகளுக்குப் போகும். ஆகவே இதை வைத்து மூதாதையாரான பெண்மணி யார் என்பதை ஆராயலாம். அவர் கண்டுபிடித்த ஏழு வகைப் பெண்களூக்கும் கற்பனைப் பெயர்கள் கொடுத்திருக்கிறார். அவையாவன: 1.ஊர்சுலா 2.சீனியா 3.ஹெலீனா 4.வெல்டா 5.தாரா 6.காத்ரீன் 7.ஜாஸ்மின்

இந்தப் பெயர்கள் கற்பனை என்றாலும் அவர்களின் முதல் எழுத்து அந்த டைப்பின் (வகையின்) எழுத்தாகும் எ.கா. ஊர்சுலா என்றால் யு, சீனியா என்றால் எக்ஸ்—இப்படி வரும்.
ஜப்பனியர்கள் ஒன்பது குலத்திலிருந்து வந்ததாகவும் அமெரிக்க பழங்குடியினர் 4 குலத்திலிருந்து வந்ததாகவும் இந்துக்கள் ஏழு ரிஷிகளிடமிருந்து வந்ததாகவும் கூறுகிறனர். இவைகளையும் மரபியல் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கமுடியும்.

இப்படியே ஆராய்ச்சி செய்துகொண்டே போனால் மனித குலம் ஒன்றே –எல்லோரும் ஒரு தாய் மக்கள்- நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற பரந்த மனப் பான்மை வளரும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் முழக்கமும் “ ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள், உலகு இன்பக் கேணி என்று நல் வேதம் கூறுவதாக பாரதி கூறும் வேத வாசகங்களும் உயிர்பெறும்.

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி என்றே—மிக
நன்று பல் வேதம் வரைந்தகை பாரத
நாயகி தன் திருக் கை (தேசிய கவி சுப்ரமண்ய பாரதி)
**************