தமிழ் கண்ட புலவர்கள் ஆயிரமாயிரம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சிறப்பு!
தாம் மெய்யாக் கண்டவற்றுள் இவையே என உரைப்பது சில புலவர்களின் சிறப்பு!
அந்த வகையில் இன்ன புலவருக்கு இன்ன சிறப்பு என்று கூறும் பாடல்கள் நிறைய உண்டு.
அவற்றில் மூன்றை இங்கு பார்க்கலாம்.
வாக்கிற் கருணகிரி வாதவூ ரர்கனிவில்
தாக்கிற் றிருஞான சம்பந்தர் – நோக்கிற்கு
நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்
சொற்குறுதிக் கப்பரெனச் சொல்
இந்தப் பாடல் ஆறு பெரும் மகான்களைப் பற்றிப் பட்டியலிடுகிறது. இவர்கள் தேவார திருவாசகம் பாடியவர் நால்வர். சங்கப் புலவர் நக்கீரர் ஒருவர். திருப்புகழ் பாடியவர் அருணகிரி நாதர்.
வாக்கிற்கு – அருணகிரி
கனிவிற்கு – மாணிக்கவாசகர்
தாக்கிற்கு – திருஞானசம்பந்தர்
நோக்கிற்கு – நக்கீர தேவர்
நயத்துக்குச் – வன் தொண்டர் எனப்படும் சுந்தரனார்
சொல் உறுதிக்கு – அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர்
அடுத்த பாடல் இது
காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி
ஆசுக்குக் காளமுகி லாவனே – தேசுபெறும்
ஊழுக்குக் கூத்த னுவக்கப் புகழேந்தி
கூழுக்கிங் கௌவையெனக் கூறு
காசுக்கு – கவிச் சக்கரவர்த்தி கம்பன்
கருணைக்கு – அருணகிரிநாதர்
தேசுள்ள ஊழுக்கு – ஒட்டக்கூத்தர்
உவக்கப் பாடுபவர் – புகழேந்தி
கூழுக்கோ – ஔவையார்
மூன்றாம் பாடல் இது:-
வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
செயங்கொண்டான் விருத்தமென்னும்
ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
வந்தாதிக் கொட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
வசைபாடக் காளமேகம்
பண்பாக வுயர் சந்தம் படிக்காசு
லாதொருவர் பகரொ ணாதே
வெண்பா பாடுவதில் வல்லவர் – புகழேந்தி. நள வெண்பா பாடி வெண்பா வேந்தர் என்ற பெயரைப் பெற்றார் அவர்
பரணி பாடுவதில் வல்லவர் – ஜெயங்கொண்டான். அற்புதமான கலிங்கத்துப் பரணியை அழகுறப் பாடியுள்ளார்.
விருத்தமென்னும் ஒண்பா பாட வல்லவர் – கம்பர். நூறு வண்ணங்களைக் கொண்டுள்ள பத்தாயிரம் பாடல்களில் ராமாயணைத்தை இயற்றி உலகை வியக்க வைத்து கவிச்சக்கரவர்த்தி என்று பெரும் புகழ் பெற்று கவிச் சிகரத்தில் ஏறியவர் கம்பர்.
கோவை, உலா, அந்தாதி போன்ற பிரபந்தங்கள் பாட வல்லவர் – ஒட்டக்கூத்தர்
கண்பாய கலம்பம் பாட வல்லவர் – இரட்டையர்கள்
வசை பாடக் காளமேகம் – உடனடியாக வசை பாடுவதில் வல்லவர் காளமேகப் புலவர்
பண்பாக உயர் சந்தம் பாட வல்லவர் – படிக்காசுப் புலவர்.
இந்தக் கண்ணோட்டத்தில் இவர்களின் பாடல்களை ஒரு நோக்கு நோக்கினால் புலவர்களின் இந்தப் பார்வையை நாமும் ஆமோதிப்போம்!
குருமகாசந்நிதானம் அவர்களின் பொற்பாத கமலங்களுக்கு நமஸ்காரம். ஞானாசிரியர்களின் பாத கமலங்களுக்கு நமஸ்காரம்.
அன்பார்ந்த பெரியோர்களே, தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
இன்று ஆடிக் ருத்திகை நன்னாள். இந்த நன்னாளிலே உலகளாவிய விதத்தில் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களின் அரும் முயற்சியால் நாம் இணைய தள வாயிலாக் ஒன்று கூடி குன்று தோறாடும் குமர வடிவேலனைத் துதிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இன்று தான் சூரனை அழிக்க முருகப்பிரான் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக அவதரித்தார். அக் குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர்.
இந்த கார்த்திகைப் பெண்களும் அவர்கள் வளர்த்த முருகனும் நம் கண் முன்னே தினமும் தோன்றுகின்றனர். அவர்கள் எப்போதும் ஊழி கடந்து இருக்கின்றனர். வானவியலில் வல்லவர்களான முனிவர்கள், அருளாளர்கள், யோகிகள், மகான்கள் இதை நன்கு உணர்ந்தவர்கள்.
இந்த ரகசியத்தை அறிவது சுலபம். சற்று வானத்தை அண்ணாந்து பார்க்க வேண்டியது தான், அது போதும். மாத்ரி மண்டலம் என்னும் நக்ஷத்திர மண்டலத்தை நாம் நோக்கினால் அதில் நானூறு நக்ஷத்திரங்கள் தெரியும். அதில் தீ ஜுவாலை போன்ற தோற்றத்தை உருவாக்கும் அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி ஆகியவை மிக முக்கியமானவை. இவையே கார்த்திகை மாந்தர், கந்தனை வளர்த்தவர்கள் ஆவர்.
மாத்ரி மண்டலம் என்ற பெயரே மாதர்கள் கொண்ட கூட்டத் தொகுதி என்று குறிப்பிடப்படுவது வியப்பிற்குரியது. சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்த முருகனை கார்த்திகை மாந்தர் அறுவரும் தனித் தனியே ஆறு உருவங்களில் சீராட்டி மகிழ்வித்ததால் அவன் கார்த்திகேயன் என்ற பெயரைப் பெற்றான். ரிஷப ராசியில் கார்த்திகை நம் தலைக்கு மேலே தோன்றும் போது சந்திரன் தோன்றும். ஆகவே தான் கார்த்திகைக்கு கார்த்திகை மாதம் என்று நம் முன்னோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
Pleiades என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கார்த்திகை நக்ஷத்திரத்தைப் பற்றிய ஏராளமான அதியசங்கள் உண்டு. 250 ஒளி ஆண்டு அதாவது கற்பனைக்கும் அப்பாற்பட்ட தூரத்தில் உள்ளது இது. ஒரு ஒளி ஆண்டு என்றால் 6 ட்ரில்லியன் மைல்கள் என்று பொருள். ஒன்றுக்கு பக்கத்தில் 12 பூஜ்யங்களைப் போட்டால் வரும் எண் ஒரு ட்ரில்லியன். இது போல 250 ஐ 6ஆல் பெருக்கினால் வருவது 1500. 1500 ட்ரில்லியன் மைல் தூரத்தில் உள்ளது கார்த்திகை. (One light-year is about 6 trillion miles (9 trillion km). That is a 6 with 12 zeros behind it!)
ஒரு வருடத்தின் 365 நாட்களில் கார்த்திகை நக்ஷத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனமாகும் நாட்களே மிகவும் உஷ்ணமான நாட்கள் என அறிவியல் கூறுகிறது. சதபதபிராஹ்மணம் பல நக்ஷத்திரங்களைக் கார்த்திகைக் கூட்டம் கொண்டிருப்பதால் அதற்கு பகுலா – பல நக்ஷத்திரம் கொண்டது – என்ற பெயரையும் சூட்டுகிறது. கார்த்திகை நக்ஷத்திரத்தின் அதி தேவதை அக்னி. க்ருத்திகா நக்ஷத்திரம் அக்னிர் தேவதா: என்று தைத்திரீய சம்ஹிதை நான்காம் காண்டம் கூறும். அக்னியே ஸ்வாஹா: க்ருத்தியாம்யஹ ஸ்வாஹா என தைத்தீரிய ப்ராஹ்மணம் (||| 1.4.2) கார்த்திகை நக்ஷத்திரத்தைப் புகழும். 18 புராணங்களிலேயே மிகப் பெரியதான சுமார் 81000 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்காந்த புராணம் கார்த்திகை நக்ஷத்திரத்தின் பெருமையைக் கூறுகிறது. முருகனின் ரகசியங்களை விளக்குகிறது.
வால்மீகி ராமாயணமோ, “அந்த ஸ்கந்த கடவுளின் மீது நம்பிக்கை கொண்டோர் அவனுடன் சேர்ந்து இருப்பதை அனுபவிக்க முடியும் “ என்று கூறுகிறது. மஹாபாரதத்தில் வியாஸ பகவான் வன பர்வத்தில் சுப்ரமண்யருடைய உற்பத்தி, வீர அணிவகுப்பு ஆகியவற்றை விஸ்தாரமாக விளக்குகிறார். காரண காரியத்தில் -CAUSE AND EFFECT இல் -ஒரு செயல் நடந்த பிறகே அதற்கான விளைவு ஏற்படுகிறது. ஒரு மணியை அடித்தால் அடித்த பின்னரே ஓசை ஏற்படுகிறது. ஆனால் முருகனின் விஷயத்திலோ இதற்கு மாறாக இருக்கிறது என்பதை வியாஸர் குறிப்பிடுகிறார். சூரனை சம்ஹாரம் செய்ய முருகன் கிளம்பும் போது ஜெய தேவதைகள் முருகனுக்கு முன்னே அணிவகுத்துப் போகின்றன. அதாவது போருக்கு முன்பேயே அதன் பயனான வெற்றி அவருக்கு உறுதிப்படுத்தப்படுகிறது. செயலுக்கு முன்னாலேயே அதன் நல்ல விளைவு! உஷ்ணமாக கார்த்திகை நக்ஷத்திரத்தில் தோன்றிய முருகனின் முன்னால் அசுர சக்திகள் அழியும்; தீமைகள் ஒழியும். வறுமை ஓடிப் போகும்; கவலைகள் கரையும்; நோய்கள் மாயும். அவனை வணங்குவதால், நினைப்பதால், அவன் திருப்புகழைப் பாடுவதால்,செல்வமும் ஆரோக்கியமும் நிம்மதியும் இறுதியாக அவனுடன் சேரும் முக்திப் பேறும் கிடைக்கும்.
இதைத் தான் அருணகிரிநாதர் அவன் அருளாலே உணர்ந்தார். பல்லாயிரம் பாடல்களை மடை திறந்த வெள்ளமென, பொங்கிப் பாயும் அருவி எனப் பொழிந்தார். வாக்கிற்கு அருணகிரி என்ற பெயரையும் பெற்றார்.அவர் பாடிய பாடல்கள் பதினாறாயிரம் என்பதை “எம் அருணகிரி நாதர் ஓது பதினாறாயிரம் திருப்புகழ் அமுதுமே” என்ற விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ் வாக்கியத்தாலும், ‘அருணகிரி நாதன் அறைந்த பதினாறாயிர கவிதை என்று உலகில் யாரும் – உரை புகலும் தெய்வத் திருப்புகழ்” என்ற தணிகையுலா வரிகளாலும் நாம் அறிய முடிகிறது. ஆனால் இன்று நமக்குக் கிடைத்தவை 1338 பாடல்கள் மட்டுமே. அருணகிரிநாதர் சுமார் 200 தலங்களுக்குச் சென்று திருப்புகழ் பாடல்களை இசைத்துள்ளார். அவர் வாழ்ந்த காலம் பிரபுடதேவ மகாராஜர் வாழ்ந்த கி.பி. 1450 ஆண்டை ஒட்டிய காலமாகும். திருப்புகழ் ஆய்வில் ஈடுபட்டுள்ளோர் நமக்குக் கிடைத்தவற்றில் உள்ள பாடல்களில் 1088 சந்தங்களும் அவற்றிலிருந்து 178க்கும் மேற்பட்ட தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன என்று கூறுகின்றனர். தமிழில் ஒரு புது வகைப் பாடலாக தொங்கலுடன் திருப்புகழ் அமைந்திருப்பது முருகப் பிரான் தமிழுக்குத் தந்த வரமே.
திருப்புகழில் இல்லாத அறிவியல் விஷயமோ ஆன்மீக விஷயமோ இல்லை.
‘இருவர் மயலோ’ எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலில், ‘அணுவில் அசைவாய்’ என்கிறார் அருணகிரிநாதர். அணுவில் எலக்ட்ரான், புரோடான் ஆகியவற்றின் அசைவுகளை விஞ்ஞானிகள் வெகு காலத்திற்குப் பின்னரேயே கண்டு பிடித்து உலகிற்கு அறிவித்துள்ளனர். வேல் விருத்தத்தில், ‘அண்டங்கள் ஒரு கோடி’ என்று பல அண்டங்களைப் பற்றி அன்றே அவர் குறிப்பிடுகிறார். அவர் அன்று கூறியதை, மல்டிவர்ஸ் MULTIVERSE என ஹ்யூ எவரெட், மாக்ஸ் டெக்மார்க் உள்ளிட்ட விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்து வியக்கின்றனர். இங்கு அண்டங்கள் பற்றிய ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.
சூரபன்மன் பல்வேறு அண்டங்களில் தனது ரிசர்வ் படைகளை ஒளித்து வைத்திருந்தான். முருகப்பிரான் முதலில் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ செய்து அந்தப் படைகளை அழித்தார். சர்ஜிகல் ஸ்டிரைக் என்பது குறிப்பிட்ட இடத்தை மட்டும் தாக்கி இதர் சுற்றுப்புறங்களுக்குக் கேடு விளைவிக்காமல் செய்யப்படும் அதிரடி நடவடிக்கை. இதனால் சூரபன்மன் நடுநடுங்கிப் போனான். ஆக முதலில் சர்ஜிகல் ஸ்டிரைக் செய்து அரக்கர்களை நடுங்க வைத்தவர் முருகனே என்பது பெறப்படுகிறது!
வார்த்தை என்பது என்ன? அது நன்கு பழக்கமான எல்லாச் சாத்திரங்களின் திரண்ட சாராம்சப் பொருளானது, ஆறு என்று விளங்கும் ஆதாரங்களில் பொருந்தி அடங்காதது அது. அரிய வேதங்களால் பெறுவதற்கு அரிதானது அது. இதயத்துக்கு எட்டாத அந்த உபதேச மொழியைப் பெறுகின்ற பாக்கியம் எனக்குக் கிட்டுமோ என்று அவர் கூறுகிறார்.
வாழ்வை வெறுத்து அருணைத் திருக் கோவில் கோபுரத்தின் மீது ஏறி தமது உயிரை மாய்க்கக் கருதிய அந்த நேரத்தில் அவருக்கு எந்தத் தீங்கும் வரா வண்ணம் அவரைத் தம் திருக்கரத்தால் தாங்கிப் பிடித்த கதிர்வேலன், அடியவர் கூட்டம் தம்மைச் சூழ்ந்திருக்க, வேத ஒலி முழங்க, மயில் மீது தமது திருநடனக் கோலத்தைக் காட்டி அருளினார். அருணகிரிநாத என்று நாமகரணம் செய்வித்து அவரை அழைத்தார்.சக்ஷு தீக்ஷை என்னும் கண்ணோக்கம் செய்து திருவடி தீக்ஷையும் செய்வித்து அவரது நாவில் சரவணபவ என்ற ஆறெழுத்தைப் பொறித்து அவருக்கு முத்தமிழ் ஊட்டி, ஜெபமாலை ஒன்றையும் தந்து அருளினார் முத்துக் குமரன். ‘சும்மா இரு சொல் அற’ என மௌன உபதேசமும் அருளினார். பின்னர் முருகன் அருணகிரிநாதரை நோக்கி, “நமது பாத மலரைப் பாடுக” என்றார்.
“நமது பாதமலரைப் பாடு நீ என்ன, அடியேனும் எப்படி பாட என்ற அளவில் பத்தித் தரு முத்தி நகை யத்தி இறைவா எனப் பாடென்று சொல்லி” என்று இப்படி முருகன் தாமே அருணகிரி நாதருக்கு அடி எடுத்துக் கொடுத்ததை விரிஞ்சை பிள்ளைத் தமிழ் கூறுகிறது. அவரே ‘பக்கரை விசித்ரமணி’ எனத் தொடங்கும் திருப்புகழில், “திக்கது மதிக்க வரு குக்குடமும் ரக்ஷை தரு சிற்றடியு முற்றிய பனிருதோளும் செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கருள்கை மறவேனே” என்று கூறி அதை உறுதிப்படுத்துகிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
(பல ஆண்டுகளுக்கு முன்னர் இதே பிளாக்கில் லண்டன் சுவாமிநாதன் எழுதிய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானது. அதில் திருப்புகழில் இருக்கும் மூன்று புதிர்களுக்கு விடை கிடைக்கவில்லை என்று எழுதி இருந்தார். அதற்கு பதில் தேடுமையில் மாதுளம் பழம் பற்றி நான்காவது புதிர் உதித்தது. . இவைகளுக்குப் பதி லளித்த டில்லி நகர தமிழ் அறிஞர் ப. கண்ணன் அவர்கள் ஞானமயம் ஒலி பரப்பில் பிப்ரவரி 21, 22 தேதிகளில் அரிய பல தகவல்களை அளித்தார் . இதோ அவரது விடைகளுடன் கூடிய கட்டுரை)
மூன்று புதிர் குட்டிப் போட்டு நான்கான கதை!!
பா.கண்ணன், புது தில்லி
திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகத் திருப்புகழில் அருணகிரிநாதர் பாடுகிறார் நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி) கோவில் இருக்கிறது.
அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இந்த விவாதத்துக்குள் போக வேண் டாம், புதிர் முடிச்சை அவிழ்க்கப் பார்ப்போம்.
கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்.
ஒருமுறை அன்னையிடம் கோபித்துக் கொண்டு கயிலையை விட்டு பாதாளத்தில் ஒளிந்துக்கொண்ட குழந்தை முருகன் குகை வழியே வேங்கடமலையின் உச்சியை அடைந்து நின்றான் என்கிறது கந்தபுராணம்.அம்பிகை கோபித்துக் கொண்டதனால் முருகன் தானும் கோபம் கொண்டு, ‘நான் இங்கே இருக்க மாட்டேன்; வேறு ஒரு மலைக்குப் போகிறேன்’ என்று பாதாளத்தின் வழியே வந்து வேங்கட மலையின் குகை வழியே வெளிப்பட்டானாம் …… அப்போது அவன் தங்கின இடம் திருவேங்கடம். ‘முன்பு தான் தங்கிய வேங்கட கிரியைப் பார்த்தான்’ என்று பின்பு வழிநடைப் படலத்திலும் அவர் சொல்கிறார்……
கந்த புராணத்தை ஒட்டி தி. சு. வேலுசாமிப் பிள்ளை இயற்றிய ‘கந்தபுராண வெண்பா‘ என் னும் நூலிலும் இச்செய்தி கூறப்பட்டுள்ளது. பாடல் வருமாறு:
என்பது பாடல். இச்செய்தியை அடியொற்றித்தான் அருணகிரி நாதர் ‘குகை வழி வரு வேங்கட கிரி’ என்கிறார், போலும்!
மேலும், கந்தபுராணம் உற்பத்தி காண்டம் – வழிநடைப் படலத்தில், கச்சியப்பர், முருகன் சூரனை அழிப்பதற்காக, வடக்கேயுள்ள தன் கந்தகிரியிலிருந்து புறப்பட்டுத் தெற்கு நோக்கி வரும் வழியில் உள்ள தெய்வப் பதிகளையெல்லாம் கண்டு சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. அப்பகுதிகளைப் பற்றிய செய்திகளைக் கூறும் பாடல்களாவன
“என்னையா ளுடையானிடம் சேர்வன்என் றிமையக்
கன்னி பூசனை செய்த கேதாரமும் கண்டான்” (3)
“மையல் மானிடர் உணர்ந்திட மறைமுனி எடுத்த
கையதே யுரைத்திட்டதோர் காசியைக் காண்டான்”
“அண்டம் மன்னுயிர் ஈன்றவளுடன் முனிவாகித்
தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
மண்டு பாதலத் தேகியே ஒர் குகை வழியே
பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்”
‘கறுத்த தலை’ என்று தொடங்கும் திருப்புகழில்
“மலர்க் கமல வடிவுள செங்கை
அயிற் குமர குகைவழி வந்த
மலைக் சிகர வடமலை நின்ற பெருமாளே”- என்றும்,
‘சரவண பவநிதி‘ என்னும் பாடலில்,
“திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய
குமர சமரபுரி தணிகையும் மிகுமுயர்
சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய வடிவேலா” என்றும் உரைக்கிறார்.
முதல் முடிச்சு அவிழ்ந்து விட்டதா?
2. சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம் என்று ஒரு இடம் இருப்பதாகவும் அங்கே முருகன் கோவில் இருப்பதாகவும் பாடுகிறார். சரஸ்வதி நதி வேத காலத்தில் ஓடி மகாபாரத காலத்தில் மறையத் துவங்கிவிட்டது. அருணகிரி காலத்தில் சரஸ்வதி நதி இல்லையே! நமக்குத் தெரிந்து வயிரவி வனம் என்று ஊரும் இல்லையே. வயிரவி வனம் எது? முருகன் கோவில் எங்கே? இது அவர் போடும் இரண்டாவது புதிர்.
வயிரவிவனம் எனும் திருத்தலம் வடநாட்டில் பஞ்சாபில் இருக்கிறது எனும் கருத்துக்கு மாறாக, அது இதோ இங்கேதான் இருக்கிறது என்று ஆதார பூர்வமாகத் தமது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் வலயப்பேட்டை திரு ரா. கிருஷ்ணன் அவர்கள். இக்கோவிலைக் குறித்து வரும் குறிப்புகள் அவரது “அருணகிரிநாதரின் அடிச்சுவட்டில்’ எனும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ளது வயிரவிவனம் எனும் திருத்தலம். அங்கு பிள்ளையார்பாளையம் பகுதியில் சோளீச்வரர்-வயிரவேச்வரர் கோயில் அமைந்துள்ளது. வயிரவர்= பெரும் ஆற்றல் மிக்கவன், வல்லமைப் பொருந்தியவன் என்பது பொருள்.
“ஸ்ரீமத் மாதவ சிவஞானயோகிகள் என்னும் மகான் இப்பகுதியில் உள்ள திருவாவடுதுறை ஆதின திருமடத்தில் இருந்து கொண்டு காஞ்சிபுராணத்தை எழுதினார் என்பர். அதில் காஞ்சியில் அமைந்துள்ள பல்வேறு சிவாலயங்களின் விவரங்கள் காணக்கிடைக்கின்றன. காஞ்சியில் நான்முகன் மிகப்பெரிய வேள்வி செய்ய முற்பட்டார். அதனை விரும்பாத சரஸ்வதி தன்னுடைய வடிவை மாற்றி நதியாகப் பெருக்கெடுத்தாள். இதனைக்கண்ட நாரதமுனிவர் பிரமதேவனை வணங்கி அதனைத் தடை செய்ய வேண்டினார். நான்முகன் சிவபிரானைத் துதிக்க, அவரோ திருமாலை அழைத்து பிரமனின் யாகத்தை அழிப்பதற்கு சரஸ்வதி நதியாக வருவதால் அவள் செருக்கொழிய விரைந்து காப்பாய் என்று கூறினார். அதன்படி திருமால் சரஸ்வதி நதியைத் தடுத்துக் கடல் நோக்கிச் செல்லவிட்டார். சிவபெருமான் சொன்னவண்ணம் செய்தமையால் திருமாலுக்குச் “சொன்ன வண்ணம் செய்த பெருமாள்” என்று அருள்பாலித்தார். மேலும் சரசுவதி நதி வலியவினை எவற்றையும் அழிக்கும் வேகவதி நதி என்ற பெயரில் இந்நிலத்தில் ஏற்றமுற்று அதில் மூழ்குவோருக்கு இன்பவாழ்வினை அளிக்கும் என்று வாழ்த்தினார். மேற்படி செய்திகள் அனைத்தும் காஞ்சிபுராணம் சிவாத்தானப் படலத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.சரசுவதி நதி உருவில் வந்து சிவபெருமான் அருளால் வேகவதி நதி எனப் பெயர் பெற்ற புராணப்பாடல்களை நோக்கும் போது அருணகிரியார் பாடிப்பரவிய சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவிவனம் என்ற தலம் காஞ்சிபுரத்திலுள்ள வயிரவேச்வரர் திருக்கோயில் என்றே அனுமானிக்கலாம். இது நாணயத் தின் ஒருபுறம், மற்றொன்று…………
இத்தலத்திற்கான திருப்புகழ் பாடல் : ஒன்று
அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு
மரனிட மிருக்கு மாயி …… யருள்வோனே
மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
வயல்புடை கிடக்கு நீல …… மலர்வாவி
வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
வயிரவி வனத்தில் மேவு …… பெருமாளே.
(வாசனை மலர்கள் மணம் வீசும் நறுமணம் நிறைந்துள்ள மரங்கள் சூழ்ந்த வயல்கள் பக்கத்தில் உள்ள நீலோத்பல மலர்கள் மலர்ந்துள்ள நீர்நிலைகளின் செழிப்பு வாய்ந்த கரைகளோடு ஸரஸ்வதி என்னும் ஆற்றினிடத்தே விளங்குகின்ற வயிரவிவனம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே).
இது நாணயத் தின் ஒருபுறம், மற்றொன்று…………
அருணகிரியார் கூறும் வயிரவி வனம் வட இந்திய மாநிலம் ஹரியானா-பஞ்சாப் எல்லையில் நிச்சயமாக இருக்கிறது. அங்கு முருகன், கார்த்திகேயனாக அருள்பாலிக்கிறான். அதைப் பற்றிய ஒரு கட்டுரையை நான் எழுதியுள்ளேன். அதையும் இணைத்துள்ளேன். அதன் முக்கியச் சாராம் சம் இதோ…….
தமிழ்நாட்டில் அழகன் முருகன் பொதுவாகத் தனது தேவியர் வள்ளி-தேவசேனா சமேதராகக் காட்சியளிப்பவர், வட இந்திய மாநிலங்களில் ஸ்ரீகார்த்திகேயசுவாமி என்றப் பெயருடன் வீரம் செறிந்தப் பிரம்மச்சாரியாகத் தோற்றமளிக்கிறார். இப்பிரதேசப் பெண்மணிகள் இவரது சன்னிதி, கருவறை முன் நின்று வழிபடுவது கிடையாது. அதனால் அவருடையப் பிரம்மச்சரியத்துக்கு அபசாரம் செய்தவராகி, தங்களுக்குத் தீங்கு விளைந்துவிடும் என்றும் நம்புகின்றனர்
அப்படி அமைந்திருக்கும் பெஹோவா எனும் தலத்தில் தான் அருள்பாலித்துக் கொண்டிருக் கிறார் அழகன் முருகன். தில்லிக்கு அண்டை மாநிலம் ஹரியானாவின் குருக்ஷேத்திரம் மாவட் டத்தில் புராதன, போற்றத்தக்க, புண்ணியம்மிகுந்த, மகாபாரதச் சம்பவங்களுடன் தொடர்புடைய துமானப் பிரதேசம் பெஹோவா.அனைத்து நதிகளிலும் சிறந்ததும், ‘அம்பிதமே, நாதிதமே, தேவிதமே சரஸ்வதி‘ (சிறந்த தாய், சிறந்த நதி, சிறந்த பெண் தெய்வம்) என ரிக்வேதம் போற்றக் கூடியதும், இங்குப் பூமிக்கடியில் அந்தர்வாஹினியாகப் பிரவாகிப்பதாகக் கருதப் படும் வேதகாலத்து நதியான சரஸ்வதி ஆற்றின் தென் பகுதியில் இவ்விடம் அமைந்துள்ளது.
தில்லியிலிருந்து 197கி.மீ., ஸ்தானேசர்- குருக்ஷேத்திரத்திலிருந்து சுமார் 30கி.மீ. தொலைவில் பஞ்சாப், ஹரியாணா எல்லைக்கருகில் உள்ளது. பாரதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றிலிருந் துப் பெஹோவாவைப் பற்றிய விவரங்களை அறிய முடிகிறது.
பக்த துருவன் வம்சத்தில் வந்த மன்னன் பிருது. பின்னாளில் தற்போதையக் குருஷேத்திரத் துக்கு அருகிலிருந்த நீர்நிலைக் கரையில் தவமிருந்து, முன்னோர்களுக்கு எள்ளும், நீரும் அளித்துப் பித்ருகடன் செய்து முடிக்கிறான். ப்ருது + உதக்(தண்ணீர்)= ப்ருதுதக். அதனால் இக்குளம் ‘பிருதுதக்’, பிருதுதீர்த்தம் என அழைக்கப் படுகிறது. அதுவே காலப்போக்கில் ‘பெஹோவா’ என மருவிவிட்டது. காசி, கயாவுக்கு அடுத்து இவ்விடமும் நீத்தாருக்குத் திதி கொடுக்கும் புண்ணிய இடமாக விளங்குகிறது,
மகாபாரதம், வாமன, ஸ்கந்த, மார்க்கண்டேயப் புராணங்களில் பிருதுதக் நீர்நிலையைப் பற்றிச்.சொல்லப்பட்டுள்ளது. “புண்யமாஹு குருஷேத்ர, குருஷேத்ராத் சரஸ்வதி, சரஸ்வத்மாஸ்ச தீர்த்தாநி தீர்த்தப்யஸ்ச ப்ருதுதகம்”—குருஷேத்ர நகரம் புனிதமிக்கது. அதைவிட அதிகம் புண்ணியம் வாய்ந்தது இங்குப் பாயும் சரஸ்வதிநதி, இவற்றைவிட மிகவும் புனிதம் வாய்ந்தது ப்ருதுதக் தீர்த்தம்—என்று விவரிக்கிறது மகாபாரதம்.பாரதப்போர் ஆரம்பிப்பதற்கு முன், கிருஷ்ணனின் ஆலோசனைப்படி பாண்டவர்கள் இங்கு வந்து முன்னோர் களை வழிபட்டு, சரஸ்வதிநதியை ஆராதித்தனர் என்று அறிகிறோம். குப்தர்காலத்தில் வந்த ஃபாஹியான், மன்னன் ஹர்ஷர், பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் வந்த ஹ்வேன்சாங் போன்ற சீன யாத்ரீகர்கள் தங்கள் பயணக் கட்டுரைகளில் குருஷேத்திரத்தை வர்ணிக்கும் அளவுக்குப் பெஹோவாவைச் சிறப்பிக்கவில்லை. ஸ்தானேசரில் இருந்தத் துறவிமடம் கோவிந்தாவிகாரை என இவர்களால் அழைக்கப் பட்டுள்ளது ( பார்க்க ஹ்வேன்சாங் எழுதியப் புத்தகம் “சி-யூ-கி). இங்கிருந்து அவர்கள் திரும்பி நேராக மதுரா சென்று விடுகின்றனர். கஜனி முகமதுவுடன் வந்தப் பாரசீக யாத்ரீகர் அல்பரூனி மட்டுமே பிருதுதக் சென்றது பற்றிக் குறிப்பிடுகிறார். சரஸ்வதி , கார்த்திகேயன் கோவில்கள் மிக்கப் பிரசித்திப் பெற்றவையாகும். இங்குள்ளச் சுப்பிரமணியர் ஆலயம் சுமார் 4500 ஆண்டுகள் புராதனமானதும், மகாபாரதக் காலத்துக்கு முற்பட்டதாகவும் அறியப்படுகிறது.குப்தர், குஷாண் வம்சத்தினர், ஆந்திர இக்ஷ்வாகு மன்னர்கள், பஞ்சாப்பை ஆண்ட குறுநில அரசர்களான யௌதேயர் முதலானோருக்குக் கார்த்திகேயன் கண்கண்டத் தெய்வமாக விளங்கியுள்ளார். யௌதேய மன்னர்கள் மற்றும். குஷாண் வம்சத்தினர் கார்த்திகேயன் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர்…….
விரிவானக் கட்டுரை வேறு பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது புதிருக்கும் விடை கிடைத்து விட்டதல்லவா?
3. பிள்ளையார் கையில் ஒரு மாதுளம் கனியை பார்வதி தேவி கொடுத்ததாகப் பாடுகிறார். அது
என்ன புதிய கதை? நமக்குத் தெரிந்ததெல்லாம் பழனியில் மாங்கனி கொடுக்கப்பட்டது. முருகன் கோபித்துக் கொண்டு ஓடிப் போய் தண்டாயுதபாணியாக நின்றார். இந்த மாதுளம் பழக் கதை என்ன?
அந்தப் பாடலின் பகுதி….
சிவஞான புண்டரிக மலர்மாதுடன் … சிவஞானம் என்னும் தாமரை மலரில் வீற்றிருக்கும் சிவமாதுடனே…………
ஒளிர் ஆனையின்கரமில் … விளங்கும் யானைமுக விநாயகனுக்குக் கரத்தில்
மகிழ்மாதுளங்கனியை ஒருநாள் பகிர்ந்த …மகிழும்படியாக மாதுளங்கனியை முன்பொருநாள்
அளித்தவளும்
உமை யருள்பாலா … ஆகிய உமாதேவி, பார்வதி அருளிய பாலகனே,
மாதுளம் பழம் (அ) கொம்மட்டி மாதுளை என்பதற்கு பச்சை எலுமிச்சம் பழம் என்று சொல்லப்பட்டிருந்தது. ‘மாதுலுங்க பல’ (அ) மாதுலம் என்பதற்குப் பேரெலுமிச்சை, கொடி எலுமிச்சை, ஊமத்தை என்றும் ஜம்பீரம் என்று எலுமிச்சையைச் சம்ஸ்க்ருத அகராதியும் பொருள் சொல்கிறது. மேலும், தாடிம: என்று மாதுளையை சம்ஸ்க்ருதத்திலும்,, அனார் என்று ஹிந்தியிலும் குறிப்பிடுகிறார்கள்.
ஏகம் ஆம்ரம் எனும் ஒற்றை மாமரத்தினடியில் காட்சியளித்து,ஏழவார்குழலி எனும் தன்னை மணந்து கொண்ட ஏகாம்பரரின் மனதுக்கு உகந்ததினால் தனக்கும் பிடித்தமான அம்மரத்தின் இனிப்புச் சுவை மிகுந்த மாம்பழத்தையே நாரதர் அளித்துள்ளாறோ என மனமகிழ்ந்து, யானை முகன் விநாயகன் கரத்தில் அந்த “மகிழ்மாது” உமையவள் தன் ” (உ)ளங்கவர் கனி”யை அளித் திருக்கலாம், அல்லவா? இங்கு பண்டிதர்களுக்கே உரித்தானPoetic Justice உத்தியைக் கையாண்டு “மகிழ்மாதுளங்கனியை” என்ற சொற்களைச் சிறிது மாற்றிப் பதம் பிரித்து, நாரத முனி அளித்த மாங்கனிக்கு இழுக்கு வரா வண்ணமும், காமாட்சி தேவியின் மனதைக் குளிர் விக்கும் விதமாகவும் அருணகிரியார் விவரித்திருக்கலாம்,அல்லவா?
மூன்றாவது புதிருக்கும் விடை கண்டாகி விட்டதா?
அதிகப்பிரசங்கித் தனமாய் இருக்குமானால் அறிவார்ந்த சபையோர் மன்னித்தருள வேண்டும்.
சரி,இப்போது சிவரஹஸ்யம் ஸ்லோகத்துக்கு வருவோம்…..
4. हेमाद्रिं किल मातुलुङ्गफलमित्यादाय मोदाधिको
मौढयान्नाकनिवासिनां भयपरैर्वाक्यैरिव प्रार्थितः ।
नीलीशम्बरनीलमम्बरतलं जम्बूफलं भावयन्
तं मुच्ञन् गिरिमम्बरं परिमृशन् लम्बोदरः पातु मा
சிவரஹஸ்ய கிரந்தத்தில் இருக்கும் இச் ஸ்லோகம் பரமேஸ்வரனால் பிரம்மாவின் குமாரர் ருபுவுக்கு உபதேசிக்கப் பட்டதாகும்.இதன்பொருள் : பரம்பொருள் தனது அதீத மாயா சக்தியால் அனைத்து இயற்கை வஸ்துக்களையும் சிறியது முதல் பெரியது வரை,தன்னுள் அடக்கிக் கொள்ளும் ஆற்றல் மிக்கது என்பதாம்.
ஹேமாத்ரி கில மாதுலுங்க பல மித்யாதாய மோதாதிகோ என்று துவங்கும் அந்த ஸ்லோகத் தில் முதல் வரியில் வரும் ‘மாதுலுங்க பல’ என்பதற்கு எலுமிச்சை என்றே சம்ஸ்க்ருத அகராதி பொருள் சொல்லும் என்கிறீர்கள் . இந்த வரியின் மொத்த பொருள்:–அப்படியானால்,
மேரு மலையையே எலுமிச்சம் பழம் போல கையில் தூக்கும் கணபதியே – என்றும் பின்னர் வரும் வரிகளில் ஜம்பு பழத்தையும் — அதாவது நாவல் பழத்தையும் குறிப்பிட்டு– அத்தகைய கணபதி என்னைக் காப்பாற்றுவாராக என்று முடிகிறது
மாதுலுங்க பல (அ) மாதுலம் என்பது ஊமத்தையும் குறிக்கும்,அல்லவா? அவை ஈசனுக்கு மிக வும் பிடித்த மலரும், காயுமல்லவோ? பிதாவை வணங்கும் விதமாக அதைத் தன் தும்பிக்கை யில் வைத்தவாறு, ஊமத்தைக் காய் போன்ற கரடு முரடான மேரு மலையை அனாயாசமாகத் தூக்கும் கணபதியே…. என்றும் சொல்லலாம், அல்லவா? எலுமிச்சைத் தோல் பாகம் வழவழப் பா யிருக்குமே? எனவே மேரு மலைக்கு ஊமத்தையே ஒத்து போகும் என்பது Poetic Justice! இதற்கும் என் பார்வை தவறென்றால் சிவாச்சாரியார் அவர்கள் க்ஷமிக்க வேண்டும்.
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
அனுபவத்தைப் போன்ற சிறந்த ஆசான் கிடையாது என்பது முதுமொழி.
நிறையப் படித்தவனை விட அனுபவத்தால் தன் அறிவைப் பகிர்ந்து கொள்பவனுக்கு சமுதாயத்தில் ஒரு தனி மதிப்பு உண்டு.
காஞ்சி பெரியவாள் கண்ணதாசனைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியதாக கவிஞரிடம் சொன்ன போது ஓடோடி வந்து அவரைத் தரிசித்தார்.
அவரிடம் பெரியவாள் பல விஷயங்களைப் பேசினார்.அப்போது அவர் கூறிய ஒரு முக்கிய விஷயம்: “என்னைப் போன்றவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்வதை விட உங்களைப் போன்றவர்கள் அனுபவத்துடன் அதைக் குழைத்துச் சொன்னால் அது பெரிதும் வரவேற்கப்பட்டு நலம் பயக்கும்” என்றார் பெரியவாள்.
கண்ணதாசனின் இந்தச் சந்திப்பு பற்றித் தனியே படித்தால் பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
கண்ணதாசன் தன் அனுபவத்தை அப்படியே உலக மக்களுடன் ‘சத்திய சோதனை’ வழியில் பகிர்ந்து கொண்டார்.
திராவிடப் பிசாசுகளின் கூட்டத்தில் தவறி விழுந்தவர் – பன்றிகளின் கூட்டத்தில் தவறி விழுந்த புள்ளி மான் போல விழுந்தவர் – பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மீண்டார்.
அர்த்தமுள்ள இந்து மதத்தைக் கண்டார்.
அவர் பிறந்த தேதி : 24-6-1927.
மறைந்த தேதி : 17-10-1981
ஆக, அவர் வாழ்ந்த காலம் ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே!
இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர்!
திராவிடப் பிசாசுகளின் ‘சங்காத்தம்’ அவர் ஆயுளின் மீது ‘கை வைத்து விட்டது’.
1976ஆம் ஆண்டு ஜூன் மாத ‘கண்ணதாசன்’ இலக்கிய மாத இதழில் அவர் தனது ஐம்பதாம் ஆண்டை இப்படி வரவேற்கிறார்:
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
திருப்புகழ் பெருமை
திருப்புகழ் ஓதல் : ஒரு வழிகாட்டி (திருப்புகழ் கைட்)!
ச.நாகராஜன்
1
அருணகிரிநாதர் அருளியுள்ள திருப்புகழின் மஹிமையை முற்றிலுமாக யாராலும் உரைத்திடல் இயலாது.
திருத்தணிகையில் அவர் அருளியுள்ள திருப்புகழ் “வீ ர ஜெயத் திருப்புகழ்” என்று கொண்டாடப்படுகிறது.
அந்தப் பாடல் வருமாறு:
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங்
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே
அற்புதமான இந்தத் திருப்புகழை எத்தனை தரம் படித்தாலும், பயின்றாலும் அதன் முழுப் பொருளையும் பெருமையையும் உணர்ந்ததாக ஆக முடியாது!
அத்துணை பொருள் செறிந்த புகழ்ப் பாட்டு.
திருப்புகழை ஓதினால் நினைத்ததும் அளிக்கும்.
மனத்தையும் உருக்கும்.
பிறவாமல் நிசிக் கருவறுக்கும்.
அடுத்து வரும் சொற்றொடர் அற்புதமான ஒரு சொற்றொடர்
எதையும் எரிக்கும்! நெருப்பையும் கூட எரிக்குமாம் திருப்புகழ்
மலையைக் கூடப் பொடிப் பொடி ஆக்கி விடும்.
அப்படிப்பட்ட பெருமையை உடைய அற்புதமான திருப்புகழை ஓதும் செயலை எனக்குத் தருவாயாக, திருத்தணி உறை பெருமாளே என்கிறார் அருணகிரிநாதர்.
அவர் பாடிய திருப்புகழுக்கான பெருமையும் இதில் தான் உள்ளது; அது உரைக்கும் முருகனின் பெருமையும் இதில் தான் உள்ளது.
2
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான், ஜெர்மனி ஆகிய பகை நாடுகள் இந்தியா மீது குண்டுகள் வீசும் அபாயம் ஏற்பட்டதால் மக்கள் மிகவும் பீதியுற்றனர்.
அப்போது வள்ளிமலைத் திருப்புகழ் ஸ்வாமிகள் மக்களின் பீதியை அகற்ற திருப்புகழ் பாராயணக் குண்டு என்னும் நூலை 1942ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டார்.
அந்த நூலின் முகவுரையில், “இத்திருப்புகழ்ப் பாராயணக் குண்டு ஜெர்மனி, ஜப்பான் குண்டுகளை அடக்கவல்ல பேராற்றல் வாய்ந்த எதிர் குண்டு. சூர சம்ஹார காலத்தும் முருகன் திருப்புகழ் வெற்றியே போர்க்களத்தில் முழங்கிற்று என்பது,
“கஜரத பதாகிநி அரக்கர் துணி பட்டுவிழு
களமுழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன
கடிய குணத்த சினத்த ஸஹத்ர யோஜனை
நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய
காத நூறாயிர கோடி வளைந்தன
பூத வேதாளம அநேக விதங்களே”
என வரும் பூத வேதாள வகுப்பால் ஏற்படுவதால், போர்க்களத்தும், மற்றும் எல்லாவிடத்தும் இறைவன் திருப்புகழை ஓதி எளிதில் ஸுகம் பெறலாம். திட புத்தியுடன் நித்திய பாராயணம் செய்தால் இத்திருப்புகழ்க் குண்டின் ஆற்றலையும் ப்ரபாவத்தையும் அநுபவத்தில் காணலாம்” என்று இவ்வாறு ஸ்வாமிகள் அருளினார்.
அனைத்துத் துன்பங்களையும் விடுவிக்க வல்ல திருப்புகழ்த் தொகுப்பை ஸ்வாமிகள் அருளினார். அதைக் கீழே காண்போம்.
3
1.பாடும் பணி பெற – கந்தரனுபூதி – ஆடும் பரிவேல்
2.உயிர்க்கு ஆதரவு – திருப்புகழ் – உம்பர்தருத்தே
3.எழுந்தருள வேண்டுதல் – திருப்புகழ் – சென்றே இடங்கள்
4.கோள்கள் ஒடுங்க – கந்தரலங்காரம் – நாள் என் செயும்
குறிப்பு: சலங்காணும், மடங்கல் நடுங்கும், வேலன் வாய்த்த திருப்புகழ்,கருப்புகழாம்,ஏகாந்த வீரம் போற்றி ஆகிய பாடல்கள் மட்டும் இங்கு மேலே குறிப்பிடப்படவில்லை.
4
இந்தத் திருப்புகழ் பாராயணக் குண்டு யுத்த காலத்துக்கு மட்டுமானது அல்ல; தினசரி வாழ்க்கை என்னும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எந்தக் காலத்திற்கும் உகந்தது.
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
பிராத்தனை இரகசியம்
அருணகிரிநாதரும் மகாத்மா காந்திஜியும்!
ச.நாகராஜன்
பிரார்த்தனையில் மகான்களும் ரிஷிகளும் வேண்டுகின்ற பான்மையே தனி. ஆகவே தான் அவர்களுடைய பிரார்த்தனையையே நாம் சொல்லி உய்ய வழி தேடுகிறோம். புதிதாகச் சொற்களைக் கோர்த்து நாம் பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
அருணகிரிநாதரின் திருப்புகழ் இந்த வகையில் ஒரு தனித் தன்மை கொண்டதாக இலங்குகிறது.
எடுத்துக்காட்டாக இரு இடங்களில் வரும் இரண்டிரண்டான பிரார்த்தனை வேண்டுகோளை இங்கு பார்க்கலாம்.
“மதியால் வித்தகனாகி
மனதால் உத்தமனாகி” (கருவூரில் பாடியது – மதியால் வித்தகனாகி எனத் தொடங்கும் பாடல்)
இருக்க வரம் வேண்டுகிறார் அருணகிரிநாதர்.
மதியால் ஒருவன் வித்தகன். ஆனால் அவன் உத்தமன் இல்லை. மகா புத்திசாலித்தனத்தை ஊரை ஏய்ப்பதில் பயன்படுத்தி என்ன பிரயோஜனம்?
மனதால் ஒருவன் உத்தமன். ஆனால் சாமர்த்தியசாலி இல்லை. ஊரார் எல்லோரும் அவன் மேல் “குதிரை ஏற”த்தானே செய்வர்.
ஆகவே மனதால் உத்தமனாக இருக்கும் ஒருவன் மதியால் வித்தகனாக இருந்தால் தான் அவனும் செழிப்பான். ஊரும் செழிக்கும்.
அற்புதமான இந்த இரட்டை வேண்டுகோளை அருணகிரிநாதர் முன் வைக்கிறார்.
நானும் வாழ வேண்டும்; நான் சார்ந்திருக்கும்ச் சமுதாயமும் வாழ வேண்டும் என்ற அற்புதமான இந்தக் கொள்கையை என்ன ‘இஸம்’ என்று பிராண்ட் செய்வது.
கம்யூனிஸம். சோஷலிஸம் என்று பல இஸங்களைச் சொன்னாலும் அருணகிரிநாதரிஸம் முன்னால் எடுபடுமா, என்ன?
இன்னொரு இடத்தைப் பார்ப்போம்.
“அறிவால் அறிந்து உன்
இரு தாள் இறைஞ்சும்”
அடியார் இடைஞ்சல் களைவோனே
என இப்படி முருகனின் அருள் திறத்தைப் பாடுகிறார். (திருச்செந்தூரில் பாடியது – விறல்மாரனைந்து எனத் தொடங்கும் பாடல்)
அறிவால் அறிந்து முருகன் இருதாள் இறைஞ்சும் படியான வாழ்க்கை தர வரம் வேண்டுகிறார் அவர்.
ஒருவன் மிகப் பெரிய விஞ்ஞானி. அவன் அறிவால் ஆராயாத விஷயமே இல்லை. ஆனால் அவனுக்கு இறைவன் என்ற மஹாசக்தியின் மீது நம்பிக்கை இல்லை. அவன் இருந்து என்ன பிரயோஜனம். அவன் இருந்தும் இறந்தவனே!
இன்னொருவன் சதா இறைவனை வேண்டிக்கொண்டே இருக்கிறான். ஒரு நாள் நிச்சயம் அவன் இறைவன் அருளால் உய்வைப் பெறுவான். ஆனால் மஹாசக்தியின் உண்மையை அவன் அறிந்து கொண்டால், அந்த அறிவின் அடிப்படையில் தன் பிரார்த்தனையை அவன் புரிந்தால் அவனுக்கு ‘இன்ஸ்டண்ட் அருள்’ அல்லவா கிடைக்கும்?!
இதைத் தான் அருணகிரிநாதர் விரும்புகிறார்.
இறைவன் தந்த அறிவு அவனை அறிவதற்கே.
கற்றதனால் ஆய பயன் என்கொல்?
வாலறிவன் நற்றாள் தொழார் எனின் (வள்ளுவரின் குறள்)
இப்படி இரண்டிரண்டாக அவர் வேண்டுவதைத் திருப்புகழ் நெடுகக் காணலாம்.
ஆகவே தான் அந்த அருளாளரின் திருப்புகழைப் பாடினால் அனைத்தும் நமக்குச் சேரும் என்று பெரியோர்கள் சொன்னார்கள்.
மகாத்மா காந்திஜி கூட மிக மோசமான பாவங்களைப் பட்டியலிட்ட போது இப்படி இரு விஷயங்களை இணைத்தே பட்டியலிட்டார்.
அந்த ஏழு பாவங்கள்:
உழைக்காமல் வரும் ஊதியம்
Wealth without Work
மனசாட்சி இல்லாத இன்பம்
Pleasure without Conscience
ஒழுக்கம் இல்லாத அறிவு
Knowledge without Character
அறப்பண்பு இல்லாத வாணிபம்
Commerce without Morality
மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம் Science without Humanity
தியாகம் இல்லாத மதம்
Religion without Sacrifice
கொள்கை இல்லாத அரசியல்
Politics without Principle
இந்த ஏழு பாவங்களை விலக்கிய சமுதாயம் மேன்மையுறும்.
பெரியோர்கள், அருளாளர்கள், மகான்களின் வாக்குகளில் எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்திருக்கிறது என்பதை எண்ணும் போது மனம் உவகையுறுகிறது.
அவர்கள் கூறிய தேவார, திருவாசக, நாலாயிர திவ்யபிரபந்தங்களே, வேத மந்திரங்களே, உபநிடதங்களே நமக்குப் போதும். புதிதாக ஒன்றையும் புனைந்து பிரார்த்தனை செய்ய அவசியமில்லை என்று ஆகிறது.
ஆயிரக்கணக்கான நாமாவளிகள், பாடல்கள், தோத்திரங்கள், மந்திரங்கள் உள்ளன.
நமக்கு உகந்தவற்றைத் தேர்ந்தெடுத்தால் அறிவையும் பக்தியையும் இணைத்தவர்களாக ஆவோம்!
அவர்களின் பிரார்த்தனைகளை வாயால் ஓதி மனதால் இருத்தி முன்னேறுவோமாக!
‘ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’ (கற்பனைப் படைப்பு- ச.சுவாமிநாதன்)
புலவர்கள் மாநாட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம். என் பெயர் நக்கீரன். ‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சிவ பெருமானையே கண்டித்தவன் நான். ‘சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?’ என்று சிவனையே தட்டிக் கேட்டவன் நான். கவனமாக உண்மையை மட்டும் பேசுங்கள். இன்றைய தலைப்பு:
“ ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை ”:
1.சேக்கிழார்: என் பெயர் சேக்கிழார். நான் முதலில் பேசிவிடுகிறேன். நான் எழுதிய பெரிய புராணத்திலிருந்து ஒரு சில வரிகள்:
அளவு கூட உரைப்பரிதாயினும்
அளவிலாசை துரப்ப அறைகுவேன்
Though impossible to reach its limits
Insatiable love(desire) drives me to the task
2.கம்பன்: என் பெயர் கம்பன். நான் எழுதிய ராமாயணத்தில் சேக்கிழார் அய்யா சொன்னதையே சொல்லி இருக்கிறேன்:
ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!
3.அப்பர் பெருமான் எழுந்தார். கருவில் இருந்தபோதே எனக்கு ஒரு ஆசை:
“கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்றென் உள்ளமும்…………………….”
4.என் பெயர் அருணகிரிநாதன். சுமார் 550 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் தறுதலைக் காலியாகத் திரிந்தேன். வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்ய கோபுரத்தில் இருந்து குதித்தபோது முருகன் அருள் பெற்று திருப்புகழ் பாடினேன். இதோ ஆசை பற்றி:
புலையனான மாவீனன் வினையிலேகு மாபாதன்
பொறை இலாத கோபீகனந்———- முழு மூடன்
புகழிலாத தாமீகன் அறிவிலாத காபோதி
பொறிகளோடி போய்வீழு————- மதி சூதன்
நிலையிலாத கோமாளி கொடையிலாத ஊதாரி
நெறியிலாத வேமாளி—————- குலபாதன்
நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல்
நினயுமாறு நீமேவி—- யருள்வாயே
4444444
சீத தொங்கலழ காவணிந்து மணம்
வீச மங்கையர்கள் ஆட வெண்கரி
சீற கொம்பு குழல் ஊத தண்டிகயில் ——– அந்தமாகச்
சேர்கனம் பெரிய வாழ்வு கொண்டுழலும்
ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ
சேவை கண்டுனது பாத தொண்டன் என—— அன்புதாராய்.
5555555
5.என் பெயர் திருமூலர், ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தர் மட்டுமா சொன்னார். நானும்தான் பாடி இருக்கிறேன்:
‘ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனதம் ஆமே’ (திருமந்திரம் 2615)
6.என் பெயர் திருவள்ளுவர். இதே கருத்தை நான் இவருக்கும் முன்னரே சொல்லிவிட்டேன். ஆசை என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பதிலாக பற்று என்ற தூய தமிழ் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன்:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (திருக்குறள்)
7.என் பெயர் சுப்பிரமணிய பாரதி.இதோ பாருங்கள், நான் பாஞ்சாலி சபதத்துக்கு எழுதிய முன்னுரை: “ காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன், பிறர்க்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக”.
இது மட்டுமா: நான் பாடிய
“ஆசை முகம் மறந்து போச்சே—இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம்—எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?” என்ற பாடல் மிகவும் கீர்த்தி பெற்றுவிட்டது.
நன்று நன்று, வேறு யாராவது ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
8.என் பெயர் கண்ணதாசன். நான் ஒரு கவிஞன். திரைப் படங்களுக்கும் பாடல் எழுதுபவன். என் கருத்தையும் சொல்லிவிடுகிறேன்:
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே ஆடிடுவொமே வாழ் நாளிலே
பருவம் என்னும் காற்றிலே, பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர் , சுகம் பெறுவர் – அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?
English
With passions as waves
we dance like the boat
in our passage of life
With the wind of youth,
by flying in the chariot of love,
man and woman make merry, enjoy
and surprise themselves
but who can guess tomorrow’s path
today itself?
நன்று நன்று. இன்னும் ஒருவர் பேசலாம். அத்தோடு கூட்டம் முடிவடையும்.
9.என் பெயர் வைரமுத்து. என் பாட்டுகளும் தமிழ் கூறு நல்லுலகத்தில் பிரசித்தம். இதோ சாம்பிளுக்கு ஒன்று:
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவுதொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை.
இன்றைய கூட்டம் இத்தோடு நிறைவடைந்தது. அடுத்த வார தலைப்பு: “கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”.
எல்லா புலவர்களும் பலத்த கரகோஷம் செய்தனர். கூட்டம் இனிதே முடிந்தது.
(முந்தைய கட்டுரை மன்னிக்க வேண்டுகிறேன். அதனையும் படித்து மகிழ்க)
அருணகிரிநாதரின் திருப்புகழில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் தேவார செல்வாக்கையும் மாணிக்கவாசகரின் திருவாசகச் செல்வாக்கையும் நன்கு காணமுடியும். இருந்தபோதிலும் அவர் சம்பந்தருக்குதான் அடிமை என்பதை அவரே திருப்புகழ் பாடல்களில் கூறுகிறார். 1300க்கும் அதிகமான திருப்புகழ் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இதில் 149 பாடல்களில் அவர் திரு ஞான சம்பந்தப் பெருமானை நெஞ்சாரப் புகழ்கிறார், போற்றுகிறார். அவரைப் போல அமிர்த கவி இயற்ற அருள் புரியுமாறு முருகப் பெருமானிடம் இறைஞ்சுகிறார். இந்த 149 பாடல் மேற்கோள்களையும் இங்கே கொடுத்தால் இந்தக் கட்டுரை புத்தக அளவுக்குப் பெருத்துவிடும். இதோ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சில எடுத்துக் காட்டுகள்:
புமியதனில் ப்ரபுவான
புகலியில்வித் தகர்போல
அமிர்தகவித் தொடைபாட
அடிமைதனக் கருள்வாயே;
சமரிலெதிர்த் தசுர்மாளத்
தனியயில்விட் டருள்வோனே
நமசிவயப் பொருளானே
ரசதகிரிப் பெருமானே
சம்பந்தரைப் புகலி (சீர்காழி) வித்தகர் என்று புகழ்ந்து அவரது பாடல்களை அமிர்தம் போன்றவை என்றும் போற்றுகிறார்.
பொதுவாக அவர் நால்வரின் தெய்வத் தமிழ் பாடல்களை “ஆரண கீத கவிதை, உபநிடத மதுர கவிதை, ஞானத் தமிழ் நூல்தாளக் கவிதை, பக்திமிக இனிய பாடல்” எனப் பாராட்டுகிறார்.
ஞான சம்பந்தருடன் வாதம் செய்து தோற்றுப்போன சமணர்கள் கழுவில் ஏறிய மதுரை சம்பவத்தைப் பல பாடல்களில் குறிப்பிடுகிறர். எப்போதெல்லாம் சம்பந்தரைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம் தமிழைப் புகழ்வதையும் காண்கிறோம். அன்று ஞான சம்பந்தர் இல்லாவிடில் தமிழே அழிந்திருக்கும் என்பது அருணகிரியின் கணிப்பு.
செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானமூறு
செங்கனி வாயிலோர் சொல் அருள்வாயே
பஞ்சவனீடு கூனுமொன்றிடு தாபமோடு
பஞ்சவறாதுகூறு சமண்மூகர்
பண்பறுபீலியோடு வெங்கழுவேற வோது
பண்டித ஞான நீறு தருவோனே
இன்னொரு பாடலில்
அழுதுலகை வாழ்வித்த கவுணியகுலாதித்த
அரிய கதிகாமத்தில் உரிய அபிராமனே—என்பார்.
சம்பந்தரின் ஊராகிய சீர்காழியில் பாடிய திருப்புகழ்களில் மறவாமல் அவரைப் பாடுகிறார்.
சேனக்குரு கூடலில் அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச் சமணோர் கழுவின் கண்மிசையேறத்
தீரத் திருநீறு புரிந்து மீனக்கொடியோன் உடல் துன்று
தீமைப் பிணி தீர உவந்த குருநாதா
என்று அற்புதமாகப் பாடுகிறார்.
அதே சீர்காழியில் பாடிய வேறு ஒரு பாடலில்
சமயமும் ஒன்றிலை என்ற வரும்பறி
தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும்
என்று தமிழையும் ஞான சம்பந்தரையும் ஒருங்கே புகழ்கிறார்.
ஒரு பாடலில் பாண்டிய மன்னனை தெற்கு நரபதி என்றும் சம்பந்தரை கவுணியர் பெருமான் என்றும் துதிக்கிறார்:
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீறிடவே
புக்க அனல்வய மிகஏடுயவே உமையாள்தன்
புத்ரனென இசைபகர் நூல் மறநூ
கற்றதவமுனி பிரமாபுரம்வாழ்
பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் வருவானே.
சம்பந்தரை முருகப் பெருமானின் அவதாரம் என்று போற்றுவது சைவ மரபு. அதை இந்தப் பாடல் உறுதிசெய்துவிட்டது.
சம்பந்தப் பெருமான் ஞானப் பாலருந்தியதையும் பாட மறக்கவில்லை:
உமைமுலைத் தருபாற்கொடு
உரிய மெய்த் தவமாக்கி நலுபதேசத்
தமிழ்தனை கரைகாட்டிய திறலோனே
சமணரைக் கழுவில் ஏற்றிய பெருமாளே— என்பர்.
ஞானசம்பந்தரைப் பர சமயக் கோளரி என்றும் போற்றிப்பரவுகிறார். இருபது பாடலுக்கு ஒரு பாடல் வீதம் சம்பந்தரையும் அவர்தம் லீலைகளையும் துதிபாடுவதால் அருணகிரியை சம்பந்தரின் அடிமை என்பதில் தவறு ஒன்றுமிலை.
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தர் வாழ்க! புகலி வித்தகன் புகழ் பாடிய அருணகிரி வாழ்க!! தெய்வத் தமிழ் வாழ்க!!!
முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்:
1.தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்
2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி
3.டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்
Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.
அவ்வையாரிடம் இனியது எது என்று முருகப் பெருமான கேள்வி கேட்க அவர் கூறிய பதில் இது: ஏகாந்தமே இனிது என்று கூறிவிட்டு அதைவிட இனிது ‘சத் சங்கமே’ என்று கூறுகிறார். ஆதி சங்கரரும் பஜ கோவிந்தம் (சத் சங்கத்வே நிஸ் சங்கத்வம்…..) பாடலில் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறார்.
அருணகிரிநாதரும் திருப்புகழில் இதே கருத்தை ‘தனிமையில் இனிமை’ என்று வருணிக்கிறார்.
இனிமை தருமொரு தனிமையை மறைகளி
னிறுதி யறுதியி டவரிய பெறுதியை
இருமை யொருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே
என்று பாடுகிறார்.
இதன் பொருள்: இன்பத்தை தருகின்ற ஒப்பற்ற தனி நிலையை, வேதங்களின் முடிவான பொருள்களும் முடிவுசெய்ய முடியாத இருமையில் ஒருமை என்ற கருத்தை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும் (இருமையில் ஒருமை என்பது சக்தி, சிவம் என்ற பேதமற்ற தன்மை அல்லது அஹம் பிரம்மாஸ்மி= அவன் நானே என்ற அத்வைதப் பெரு நிலை)
இன்னொரு பாட்டிலும் ஏகாந்த மவுன நிலை பற்றிப் பாடுகிறார்:
பறவையான மெய்ஞ்ஞானிகள் மோனிகள்
அணுகொனா வகை நீடுமிராசிய
பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம்
இதில் பறவை மெய் ஞானிகள் என்பது பரமஹம்சர் என்பதன் மொழிபெயர்ப்பாகும். ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள் இகலோகத்தில் இருந்தும் மெய்ஞ் ஞானத்தை அடைந்தவர்களாவர். எப்படி ஹம்சம் (அன்னப் பறவை) தண்ணீரும் பாலும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளுமோ அது போல ஞானிகள் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெற்றவர்களாவர்.
மேலும் ஹம்சம் என்ற சொல் அஹம் ச: = அவன் நானே என்ற இருமையற்ற ஒருமை நிலையை (அத்வைத) உணர்த்துவதாகும். மூச்சு வெளியே போகும் போது ஹம் என்ற சப்தத்துடனும் உள்ளே வரும் போது ச என்ற சப்தத்துடனும் வருவதாக ஞானிகள் கூறுவர்.
வேறு ஒரு இடத்தில் உபநிஷதக் கருத்துக்களை அற்புதமாகப் பாடுகிறார்:
வாசித்துக் காணொ ணாதது
பூசித்துக் கூடொ ணாதது
வாய் விட்டுப் பேசொ ணாதது
மாசர்க்குத் தோணொ ணாதது
நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது
என்று பாடி மெய்ஞ் ஞானம் அருள வேண்டுகிறார்.
பொருள்: நூல்களால் அறியமுடியாதது, பூஜை புனஸ்காரத்தால் அடைய முடியாதது, வார்த்தைகளால் வருணிக்க முடியாதது, குற்றமுடையோரால் உணர முடியாதது, அன்புடையோரிடமிருந்து விலக முடியாதது, மாயையினால் சூழ முடியாதது.
சொற்கள் எங்கு செல்லாவோ அங்குதான் மெய்ஞ் ஞானம் பிறக்கிறது என்பது உபநிஷத முடிபு. கடவுளைக் கண்டவர் அவனைப் பற்றிப் பேசமுடியாது. அவனைப் பற்றிப் பேசுபவர்கள் அவனைக் காணவில்லை என்றே அர்த்தம். இதைத்தான் தமிழில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர்.
பேசா அநுபூதி
அருணகிரி நாதரே பேசா அநுபூதி பிறந்ததுவே என்றும் சும்மா இருசொல் அற என்றும் கந்தர் அநுபூதியில் பாடுகிறார்.:
ஆயினும் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். சிலர் மட்டும் பிரம்ம சாகரத்தில்= பேரானந்தக் கடலில் குதித்து முத்தெடுக்கப் போகும் முன், “அடடா, இப்பேற்பட்ட பேருண்மையை மக்களுக்கும் சொல்லிவிட்டு வருவோம்” என்று ஓடிவந்து விடுவார்களாம். அப்படிப்பட்ட ஞானிகளில் பரமஹம்சரும் ஒருவர். ஆகையால்தான் நமக்கு இந்த ரஹசியம் தெரிந்தது. ஞானசம்பந்தர், விவேகானந்தர், மாணிக்கவாசகர் எல்லோரும் இளம் வயதிலேயே இறைவனை அடைந்துவிடுவதன் ரகசியமும் இதுவே. சில ஞானிகள் தன்னுடன் மற்றவர்களையும் அழைத்துச் செல்வர். ஞான சம்பந்தர், ராம பிரான் ஆகியோர் இப்படி தன்னுடன் இருந்தவர்களையும் முக்தி நிலைக்கு அழைத்துச் சென்றனர்.
கீதையில்
கீதையில் கண்னபிரானும் ஏகாந்தம் பற்றிப் பேசுகிறார் (6-10)
யோகி யுஞ்சீத சததம் ஆத்மானம் ரஹசி ஸ்தித:
ஏகாகி யதசித்தாத்மா நிராசீ: அபரிக்ரஹ:
பொருள்: எப்போதும் ஏகாந்தத்தில் (ரஹசி) இருக்க வேண்டும் தன்னந்தனியனாய் உடலையும் உள்ளத்தையும் கட்டுப் படுத்த வேண்டும். ஆசை இருக்கக் கூடாது. உடமைகள் எதுவும் இருக்கக் கூடாது. யோகியானவுடன் இப்படி உறுதிபெற வேண்டும்.
You must be logged in to post a comment.