கலியுகம் முடிந்து துவாபர யுகம் நடக்கிறது (Post.8576)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8576

Date uploaded in London – 26 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கலியுகம் முடிந்து துவாபர யுகம் நடக்கிறது

இப்போது நடப்பது கலியுகம் அல்ல; இது துவாபர யுகம் – என்ற வியப்பான செய்தியை நடிகர் ரஜினி  காந்த்தின் குரு கூறுகிறார். அவர் பெயர் யோகி யுக்தேஸ்வர் . அவர் பரம ஹம்ச யோகானந்தாவின் குரு;  பரம ஹம்ச யோகானந்தா எழுதிய ‘ஒரு யோகியின் சுயசரிதை ‘(An Auto Biography of a Yogi by Paramahamsa Yogananda)  என்பது தமிழ் உள்பட பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. யுக்தேஸ்வரின் குரு லாஹிரி மஹா சயர் . அவருடைய குரு பாபா மஹாவதார் என்று சொல்லுவர் . சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ் ந்தவர் .

நாம் இப்போது காணப்போகும் யுக்தேஸ்வர் கிரி என்பவர் வங்காளத்தில் பிறந்து பூரி நகரில் 1936ல் சமாதி அடைந்தார் . இவர்கள் அனைவரும் கிரியா யோகம் என்னும் முறையைப் பிரபலப்படுத்தினர்.

யுக்தேஸ்வர் கிரி என்ன சொல்கிறார்?

துவாபர யுகம் 1699-ல் துவங்கிவிட்டது கி.பி. 4099ல் முடிவடையும் . ஊர் பேர் தெரியாத ஒரு ஜோதிடர் இதையே சொல்லி இருந்தால் ஏதோ ‘பப்ளிசிட்டி’க்காக நம்மூர் அரசியல்வாதிகளும் நடிகர்களும் அவ்வப்போது சர்ச்சசைக்குரிய (Tweet) ட்வீட் செய்வது போல இதுவும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட்  (Publicity stunt) என்று நினைக்கலாம். ஆனால் சொன்னவரோ அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் போற்றும் குரு .

இனி அவர் சொல்லுவதை விளக்கமாகக் காண்போம்.

க்ருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்னும் சதுர் யுகங்களும் — அதாவது 4 யுகங்களும் 12,000 ஆண்டுகளில் முடிவடையும் இதைப்போல் இருமுறை நடப்பது ஒரு முழு வட்டம் அதாவது ‘முழு யுகச் சுழற்சி’ (One Full Cycle of Yugas) என்கிறார்.

இதற்கு ஆதாரம் என்ன ?

மிகவும் பழைய ஸ்ம்ருதியான – அதாவது சட்டப்புத்தகமான– மனு ஸ்ம்ருதியில் முதல் அத்தியாயத்தில் க்ருத யுகம் முதல் கலியுகம் வரை 4000, 3000, 2000, 1000 ஆண்டுகள் என்ற கணக்கில் நடக்கும் . ஒவ்வொரு யுகத்துக்கு இடையே ‘யுக சந்தி’ என்னும் இடைவெளி பத்து +பத்து = 20 சதவிகிதம் இருக்கும் என்கிறார். ஆக மொத்தம் 12000 ஆண்டுகள்தான் மொத்தம் 4 யுகங்களுக்கும்.

அது சரி, யுக சந்தி என்னும் இடைவெளி பற்றிச் சொல்லுகையில் ஏன் பத்து + பத்து என்று சொல்கிறீர்கள்? என்று சிலர் நினைக்கலாம். அதாவது உதயமும் சந்தியாகால வெளிச்சமும் 10, 10 சதவிகிதம். இங்கே விளக்கத்தை நிறுத்திவிட்டு சிறிது சிந்தித்துப் பார்ப்போம். முதலில் 4000, 3000, 2000 , 1000 ஆண்டுகள் என்று 4,3,2,1 என்ற இறங்கு வரிசையில் பார்க்கிறோம். பின்னர் 10+10 இடைவெளிக் காலம் என்று பார்த்தோம். எவ்வளவு கண்ணக்குப்போட்டு இதைச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

இப்படிக் கணக்குப் போட்டதற்கு என்ன காரணம் ?

இப்போதுதான் மேலை நாட்டு  விஞ்ஞானம் இதை ஆராயவே துவங்கி இருக்கிறது; அதாவது பூமியின் காந்த மண்டலம் ‘பல்டி’ அடிக்கிறது ; வட துருவம், தென் துருவம் ஆகிறது; அப்போது பூமியில் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன என்று ஒப்புக் கொள்கின்றனர்.

இதுவரை அவர்கள் சொல்லும் ஆண்டுகளுக்கும் நாம் சொல்லும் ஆண்டுகளுக்கும் முழு ஒற்றுமை இல்லாவிடினும் அவர்களிடையேயும் கருத்து வேறுபாடு இருக்கிறது ; ஒருவர் 2030ம் ஆண்டில் துருவங்கள் பல்டி அடிக்கும் என்கிறார். இதை முன்னரே சொல்லி இருக்கிறேன். அதுமட்டுமல்ல 4, 3, 2, 1 என்ற இறங்கு வரிசையில் க்ருத, த்ரேத , த்வாபர , கலி  என்று சொல்வதில் தர்மம் என்னும் வண்டி அல்லது பசு மாடு ஒவ்வொரு காலாக இழந்து கலி யுகத்தில் ஒற்றைக் காலில் தள்ளாடும் என்று மனு சொன்னதை முன்னரே கண்டோம்.

இப்போது மீண்டும் யுக்தேவர் கிரி என்னும் மஹான் சொல்லும் விஷயத்துக்கு வருவோம்.

அவர் சத்ய யுகம் என்னும் கிருத யுகம் என்பது கி.மு. 11,501-ல் துவங்கி 6701-ல் முடிந்துவிட்டது. பின்னர் த்ரேதா யுகம் கி.மு.3101-ல் துவங்கியது என்கிறார். ஆனால் நமது பஞ்சாங்கங்களோ அதை கலியுகத்தின் துவக்கமாகக் காட்டுகின்றன.

சுவாமி யுக்தேஸ்வர் கீரியும் யுக சந்தி கணக்கு முதலியவற்றை ஒப்புக்கொள்கிறார். ஆனால் கலியுகம் முடிந்து இப்போது துவாபர யுகம் நடப்பதாகவும் இதே போல ‘கார் ரிவர்ஸ் கியரி’ல் (Reverse Gear) போவது போல கலி, துவாபர, த்ரேதா, சதுர் என்று முடிக்கையில் ஒரு சுழற்சி முடியும் என்றும் சொல்கிறார். மொத்தம் 24,000 ஆண்டுகள்..

அதர்வ வேதத்தில் 4 யுகம் பற்றிய ஒரு குறிப்பில் ஒரு யுகம் என்பது 10,000 ஆண்டுகள் என்றும் சொல்லப்படுகிறது.

ஆக கலியுகம் என்பது 4,3,2000 ஆண்டு என்று நாம் சொல்லுவதை யுக்தேஸ்வர் மறுக்கிறார். அவரே மனு என்பவர் கி.மு 6701ல் வாழ்ந்தவர் என்றும் சொல்லுவதால் வேதகால நாகரீகம் அப்போது சரஸ்வதி நதிக்கரையில் இருந்தததை நாம் அறிய முடிகிறது

இதை முடிப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ளுவோம்.இந்து மதம் என்பது நீண்ட வரலாறு உடையது ; ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் (Herman Jacobi and B G Tilak)  முதலியோர் வான சாஸ்திரக் குறிப்புகளின் அடிப்படையில் ரிக் வேதத்துக்கு கி.மு. 6000 அதாவது இற்றைக்கு எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தேதி குறித்ததுள்ளனர் ; காலப்போக்கில் சொற்களும் வேறு வேறு பொருள் கொள்ளும்; ஆங்கில அகராதியைப் புரட்டினால் பில்லியன் (Billion)  என்பதற்கு 1000 கோடி என்ற பொருளையும் காணலாம். ஆனால் இப்போது நாம் 100 கோடி என்ற

எண்னைக் குறிக்கத்தான் பில்லியன் என்ற ஆங்கிலச் சொல்லை பயன்படுத்துகிறோம். இதே போல யுகக் கணக்கும் மாறி இருக்கலாம். அல்லது பெரிய யுகம், சின்ன யுகம் என்று இரண்டு கணக்கு இருக்கலாம்.

எங்கள் மதுரை நகரில் பேச்சு வழக்கில் ‘சின்ன எட்டு’,’ பெரிய எட்டு’ என்று சொல்லுவார்கள். வீடு , மனை, நிலம், முதலியவற்றை விலை பேசுகையில் முதலில் ‘சின்ன எட்டு’ 80,000 ஆகவும் பெரிய எட்டு , 8 லட்சமாகவும் இருந்திருக்கும் . இப்போது விலைவாசி பத்து மடங்கு உயர்ந்து விட்டதால் பெரிய எட்டு என்பது  எட்டு மில்லியன் அல்லது எட்டு கோடியாகக் கூட இருக்கும்.

 அதாவது RELATIVE  TERMS டெர்ம்ஸ் .

நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் சொல்லிக் கொடுத்த காலத்தில் BIG HOUSE பிக் ஹவுஸ், SMALL HOUSE ஸ்மால் ஹவுஸ் என்பதை மொழி பெயர்க்கச் சொல்லுவேன். அவர்கள் பெரிய வீடு , சின்ன வீடு என்று மொழி பெயர்ப்பார்கள்  உடனே அவர்களைத் தமிழ் நாட்டுக்குப் போய் எனக்கு ஒரு சின்ன வீடு வேண்டும் என்று சொல்லிவிடாதீர்கள். அதற்கு வேறு ஒரு பொருளும் உண்டு. கள்ளக்காதலி வீட்டை ‘சின்னவீடு’ என்பர் என்று சொன்னவுடன் எல்லோரும் சிரிப்பார்கள். ஆகையால் ஒரு எண் அல்லது கணக்கு என்பது எந்த இடத்தில் எந்தக் கட்டத்தில், எந்தக் காலத்தில் சொல்லப்படுகிறது என்பதை நோக்க வேண்டும். ‘வெள்ளம்’ என்றால் மலையாளத்தில் ‘குடிப்பதற்கு நீர்’ என்று பொருள்; இன்றைய தமிழ்நாட்டில் வெள்ளப் பெருக்கு FLOODS ‘பிளட்ஸ்’ என்று பொருள். சங்க இலக்கியத்தில் அது ஒரு பெரிய எண் . ஆக இடம், காலம் என்பது முக்கியம்.

இந்துக்கள் 26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியின் தலை ஒரு சுற்றுச் சுற்றுவதைக் கூட அறிந்து இருந்தனர். இதனால் துருவ நட்சத்திரம் மாறுவதையும் அவர்கள் அறிந்து இருந்தனர். ஒரு பம்பரம் சுற்றி முடியும் தருவாயில் ஒரு சுற்று சுற்றிவிட்டு தரையில் படுக்கும். அப்படித் தரையில் படுப்பதற்கு முன்னர் அது ஆடும் ஆட்டத்தை பூமியின் அச்சு ஆடும் ஆட்டத்துக்கு (Precessional Cycle) ஒப்பிடுவர். பம்பரம் ஒரு நிமிடத்தில் தலை ஆட்டத்தை முடிக்கும். ஆனால் பூமியின் தலையோ 26,000 ஆண்டுகளுக்கு மெதுவாக தலையைச்  சுற்றும். இதையும் அவர்கள் யுகக் கணக்கில் கொண்டனர் . அவர்கள் கொண்ட அறிவியல் அணுகுமுறையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது!!

tags – கலியுகம், துவாபர யுகம்,யுக்தேஸ்வர் .

–subham–

கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!! (Post No 2936)

yugas

Written by London swaminathan

 

Date: 2 July 2016

Post No. 2936

Time uploaded in London :–9-56 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கடைகளுக்குப் போனால் “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” என்று பல பொருள்கள் மீது எழுதியிருப்பதைக் காண்கிறோம்.

 

அதே போல “ஐந்து பொருள் வாங்கினால் இவ்வளவு தள்ளுபடி, பத்து வாங்கினால் இவ்வளவு தள்ளுபடி” என்றெல்லாம் விளம்பரங்களைப் படிக்கிறோம்.

 

இதுபோலக் கடவுளும் கூட பக்தர்களுக்கு தள்ளுபடி சலுகைகளை அறிவிக்கிறார். இது விஷ்ணு புராணத்திலுள்ள விஷயம். புராணங்களில் மிகவும் பழமையானதும், புகழ்பெற்றதும் ஆகும். ஆகையால் இந்த செய்திக்கு மதிப்பு அதிகம்.

 

வியாசரிடம் போய்  முனிவர்கள் சந்தேகம் கேட்ட போது அவர் கங்கையில் குளித்துவிட்டு இந்த தகவலைத் தந்தார்.

 

கிருதயுகத்தில் தவம், தானம், பிரம்மசர்யம் முதலிய சிறந்த குணங்களுடன் இருப்பவர்க்கு நீண்டகாலம் தவம் செய்து கிடைக்கக்கூடிய பலன் கலியுகத்தில் சுலபமாகக் கிடைத்துவிடும்.

 

கலியுகத்தில் சங்கமே சக்தி என்பர். ஆதாவது கூட்டாகச் செய்யும் காரியத்துக்குப் பலன் அதிகம். அது மட்டுமல்ல யாக யக்ஞாதிகள் செய்யாமல் வெறும் “சிவ சிவ” அல்லது “ராம ராம” என்று நாம ஜபம் செய்தாலேயே புண்ணியம் சம்பாதித்துவிடலாம்.

 

 

Yugas

 

யத்க்ருதே தசபி: வர்ஷை: த்ரேதாயாம் ஹாயனேன யத்

த்வாபரே யது ச  சமாசேன அஹோராத்ரேண தத்கலௌ

 

தபஸோ ப்ரஹ்மசர்யஸ்ய ஜபதிஸ்ச பலம் த்விஜா:

ப்ராப்னோதி புருஷஸ்தேன கலிகலிஸ்ஸாத்விதி பாஷிணம்

விஷ்ணு புராணம் அங்கம் 6, அத்தியாயம் 2

 

கிருத யுக பத்து வருஷ தவம் = திரேதா யுகத்தில் ஒரு வருஷம் = துவாபர யுகத்தில் ஒரு மாஸம் = கலியில் ஒரே நாளுக்கு ஸமமாகும்.

 

தவம், ஜப , பிரம்மசர்ய பலன்களை இந்த ரீதியில் அடைகின்றனர்.

அதாவது ஒர் ரிஷியோ முனிவரோ பத்து வருஷம் தவம் செய்து கிடைக்கும் பலனை, திரேதாயுகத்தில் பிறந்தவர் ஒரு வருஷம் செய்தாலேயே அடைந்து விடுவார்.

 

அதே முனிவர், த்வாபர யுகத்தில் பிறந்திருந்தால் ஒரு மாதம் யாக, யக்ஞங்களைச் செய்தால் போதும்

 

அவரே கலியுகத்தில் பிறந்தால் ஒரே நாள் தவம் செய்தால் போதும்.

எவ்வளவு சலுகை பாருங்கள்!!

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய புராணத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

உலகிலேயே மிகவும் அறிவியல் பூர்வமாக அமைந்தது இந்துமதம். முரட்டுத் தனமான, பிடிவாதமான கொள்கைகள் இதில் கிடையா. எல்லாம் செயல் முறைக்கு உகந்த மாதிரி, கால, தேச, வர்த்த மானங்களுக்கு அணுசரனையாக சொல்லப்பட்டிருக்கும்.

 

ஜெட் விமானத்தில் பறந்து, அலுவலக வேலைகளைச் செய்பவர்கள் கிருத யுகம் போல 12 ஆண்டு யாகம், 100 ஆண்டு யாகம் முதலியவற்றை செய்ய வேண்டியதில்லை. செய்யவும் முடியாது என்பதும் நம் முன்னோர்களுக்குத் தெரியும்.

 

ஆனால் கடையில் எவ்வளவுதான் சலுகைகளை அறிவித்தாலும், எத்தனை பொருட்களை வாங்குவது என்பது நம் கையில்தான் உள்ளது. அதாவது அந்த அளவுக்கு பர்ஸில் காசு வேண்டும் அல்லது கிரெடிட் கார்டில் உத்தரவாதம் வேண்டும். அது போல, இவ்வளவு சலுகைகளை கடவுள் அறிவித்தாலும் நல்ல குணமும் நல்ல எண்ணமும் தூய்மையும் வேண்டும். அப்போதுதான் கடவுள் அறிவித்த சலுகை, நமக்குக் கிடைக்கும்.

 

கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!!

 

–சுபம்–

 

 

கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா?

earth-temps

Research paper written by London Swaminathan
Research article No.1462; Dated 6th December 2014.

2030-ஆம் ஆண்டில் காந்த துருவங்கள் இடம் மாறும் என்று ஜே.எம்.ஹார்வுட் என்பவர் 1970 ஆம் ஆண்டிலேயே கூறிவிட்டார். இப்படி மாறுவதால் உலகில் பேரழிவுகள் ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். இதிலலென்ன உண்மை உளது என்று காண்போம்.

இந்துக்கள் உலகத்தின் வயதை நான்காகப் பிரித்துள்ளனர்: கிருத யுகம்(4), த்ரேதா யுக (3), த்வாபர யுகம் (2), கலியுகம் (1). ஏன் இப்படி தலைகீழ் வரிசையில் 4,3,2,1 என்று யுகத்திற்குப் பெயரிட்டார்கள்?

ஏன் என்றால் சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்டை இழந்துவீட்டது. அப்போது ராம பிரான் தோன்றினார். த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்களை – அதவது 50 விழுக்காட்டை இழந்து விட்டது. அப்போதுதான் கிருஷ்ணன் தோன்றினார். யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் க்ண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் போய் உலகமே அழியும். பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இப்படி மாறிமாறி வரும் யுகங்களுக்கு காலம் எவ்வளவு என்றும் இந்துக்கள் கணக்கிட்டனர். உலகில் மற்ற நாகரீகங்கள் எல்லாம் 20-ன் மடங்குகளிலும் (மாயா நாகரீகம்), 40-ன் மடங்குகளிலும் (செமிட்டிக் மதங்கள்) சிறிய எண்களுடன் நின்றுவிட்டன. இந்துக்களோவெனில் பல லட்சம் வருடங்களைச் சொன்னதோடு இதற்கு முடிவு என்பதே இல்லை. இந்து வட்டச் சுழல்—மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும் என்றும் மனித ஆண்டு, தேவ ஆண்டு, பிரம்மாவின் ஆண்டுகள் என்பன வெவ்வேறு என்றும் சொன்னார்கள். இது ஏதோ கற்பனையில் பிறந்த வருடங்கள் என்று 200 ஆண்டுகளுக்கு முன் வரை நினைத்தார்கள். இப்பொழுது பல்வேறு உலகங்கள் பல்வேறு வேகத்தில் சுற்றும்போது இவை எல்லாம் சாத்யம் என்று தெரிகிறது.

Yugas

இதற்கு என்ன விஞ்ஞான விளக்கம் என்று எண்ணிப் பார்த்தால் விடை கிடைக்கவில்லை. இப்பொழுது விஞ்ஞானம் முன்னேற, முன்னேற புதுப்புது விளக்கங்கள் கிடைக்கின்றன. இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:–

கிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள்
த்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள்
த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்
கலியுகம் – 432, 000 ஆண்டுகள்

இந்த நாலு யுகங்களையும் சேர்த்து சதுர்யுகம் என்பார்கள். 8,640,000,000 ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். அதுதான் பிரம்மாவின் ஒரு நாள். அதுபோல அவர் நூறு ஆண்டுகள் வாழ்வார். அவருக்குப் பின்னால் வேறு ஒரு பிரம்மா வருவார். இந்தக் காலச் சுழற்சிக்கு முடிவே இல்லை.

கலியுகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் ஓரளவு விஞ்ஞான விளக்கம் சொல்லலாம். நம்முடைய பூமி ஒரு காந்த உருண்டை. எப்பொழுதும் காந்த மண்டலத்தை உருவாக்கிய வண்ணம் இருக்கும். ஏன் இப்படி நடக்கிறது. நாம் வாழும் பூமியின் மேல் ஓடு வெறும் எட்டு மைல்கள்தான். அதன்மீதுதான் நாம் வசிக்கிறோம். அதற்குக் கீழே அதள பாதாளத்துக்குப் போனால் பூமியின் வயிற்றில் அது நெருப்பைக் கட்டிக்கொண்டு தன்னைத் தானே சுற்றுகிறது. அது மட்டுமா? தான் தட்டாமாலை சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியானது சந்திரனையும் தன்னோடு இழுத்துக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனோவெனில் நவக் கிரஹங்களுடன் பால்வெளி மண்டலத்தைச் சுற்றிவருகிறது. இப்படி பூமி சுற்றுவதால், கடலைக் கடைந்தது போல பூமியின் வயிற்றைக் கடையும் போது பூமியே காந்த சக்தி உருவாக்கும் ‘டைனமோ’ ஆகிவிடும்.

இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல காந்தத்திலும் – அதாவது பூமி என்னும் கிரஹத்தைச் சுற்றி இருக்கும் – காந்த இரு துருவங்கள் உண்டு. வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரிகிறது. பூமியின் காந்த மண்டலம்தான் நம்மை சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களிl இருந்து காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும். உயிரினங்களே இரா.

geomagnetic-field-orig_full

மாக்னெட்டொகெட்டொன்
காந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும். அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம்.

இது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் கவலை அடந்துள்ளனர். 2030-ல் இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது. இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர். கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது.

துருவங்கள் மாறும் நாலு லட்சம் அண்டுகள் என்பது கிட்டத்தட்ட கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது. நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பர். தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பர். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர். கடந்த காலத்தில் இப்படி மாறிய போது உலகம் அழியவில்லை என்று கல் படிம அச்சுகள் காட்டுகின்றன.ஆனால் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பது அவர்கள் தரப்பு வாதம். மற்றவர்களோவெனில் டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் அழிந்தது இதனால்தான் என்பர்.

solar wind

ஒரு சுனாமி வந்த பின்னர்தான் அதன் பேரழிவுச் சக்தியை நாம் உணர்ந்தோம். அது போல ஒரு காந்த துருவ மாற்றம் ஏற்பட்ட பின்னர்தான் நமக்கு அது பற்றி விளங்கும் என்றும் அவர்கள் கூறுவர்.

காந்த துருவ மாற்றம் மெதுவாகத்தான் நடைபெறும்; அது நடக்க 1000 ஆண்டு ஆகும் என்பது போல நாமும் யுகங்களுக்கு இடையே துருவ சந்தி என்று இடைக்கால, இன்டர்வல் – வைத்திருக்கிறோம். இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் கலியுகம் என்பது காந்தப் புலன் மாற்றம் அடையும் காலம் என்று எண்ணத் தோன்றுகிறது. பெரிய இடைவெளி, சின்ன இடைவெளி என்று இருக்கும் என்றும் அதற்குப் பின்னரே யுகங்கள் முழுதும் மாறுபட்டிருக்கும் என்றும் புராணங்கள் பகரும். இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கையில் விஞ்ஞானம் வளர, வளர நமக்குப் புராணங்கள் சொன்னது உண்மையே என்ற உணர்வு பலப்படுகிறது.

earth pressure

சந்திரனில், விண்கலம் இறங்கிவிட்டது, செவ்வாய்க்கு விண்கலம் போய்ச் சேர்ந்துவிட்டது, வாயேஜர் என்னும் விண்கலம் சூரிய மண்டலத்தையே தாண்டிப் போய்விட்டது என்றெல்லாம் பத்திரிக்கையில் வரும் செய்திகளைக் கேள்வியே கேட்காமல் நம்பும் நம்மவர், நமது முன்னோர்கள் —– நம்மிடம் தேர்தலில் வோட்டோ, கையில் பணமோ கேட்காமல்—— நமது நன்மைக்காக எழுதிவைத்ததை நாம் நம்ப வேண்டாமா? அதுதான் அறிவுடைமை அன்றோ!

contact swami_48@yahoo.com

கலியுக முடிவு பற்றி லிங்க புராணம்

முன்னர் வெளியான சந்தானம் சுவாமிநாதன் கட்டுரைகள்: (1) டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியுமா? (2) “உலக அழிவு” பற்றி மகா பாரதம். இவ் வரிசையில் இதோ மூன்றாவது கட்டுரை:

 

கலியுக முடிவு பற்றி லிங்க புராணம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்:

1.திருடர்கள் மன்னர்கள் ஆகிவிடுவர். மன்னர்கள் திருடர்கள் ஆகிவிடுவர்.

2.மக்களின் சொத்துக்களை ஆட்சியாளர்கள் பறிமுதல் செய்து அதைக் கெட்ட வழியில் செலவிடுவர்.

3.கொஞ்சம் படித்த அடிப்படை ஒழுக்கம் இல்லாதவர்கள் பெரிய சாமியார்களாகக் கருதப்படுவர்.

4.நிறைய நாடோடிகள் (அகதிகள்?) நாடு நாடாகச் செல்வர்.

5.தாய்மார்களின் கர்ப்பத்திலேயே கருக்கள் அழிக்கப்படும்

6. கோர மிருகங்களின் தொல்லைகள் அதிகரிக்கும்

7.மக்கள் தவறான முடிவுகளுக்கு ஜே போடுவார்கள்

8.ஒருவரை ஒருவர் நம்பமாட்டார்கள். பொறாமை அதிகரிக்கும்.

9.ஆயுட்காலம் குறையும். பலர் 16 வயதி இறப்பார்கள்.

10.பசி, பிணி இவற்றால் கஷ்டப்படுவோர் பூமிக்கடியில் வசிப்பார்கள்.

11.இளம் பெண்கள் கற்பை விலை பேசுவார்கள்

12. மழைக்கான அதிபதி கண்ட கண்ட இடங்களில் கண்ட கண்ட காலங்களில் மழையைக் கொட்டுவான்.

13.கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடிப்பர்.

14.கடுமையான, அசிங்கமான மொழி பயன்படுத்தப்படும்

15.பிச்சைக்காரர்கள், வேலை இல்லாதோர் அதிகரிப்பர்

16.ஆட்சியாலர்கள் மக்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் மக்களின் செல்வத்தை வரிகள் மூலம் பறிப்பதில் குறியாக இருப்பர்.

17.பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக இருக்கும். வேறு லட்சியம் அதுவும் இல்லாமல் பானக்காரர்களின் சொல் கேட்பர்.

18.தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

19.ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்கப்படும்.

லிங்க புராணம் எழுதப்பட்டு 1500 ஆண்டுகட்கு மேலாகிவிட்டது. அப்போதே இப்படி உலகம் தறிகெட்டுப் போகும் என்று எப்படிக் கண்டுபிடித்தனர்? ஞானிகளின் த்ரிகால ஞானம் (முக்காலப் பார்வை) என்றே சொல்ல வேண்டும்.

Contact swami_48@yahoo.com