கா…கா…கா…!!! கா..கா..கா..!!!

என் பெயர் புலவர் நக்கீரன். கா ..கா…கா…… என்ற தலைப்பில் பேச வந்திருக்கும் உங்கள் அனைவர்க்கும் முதல் கண் நன்றி கலந்த வணக்கங்கள். சென்ற 4 வாரங்களில் ‘மன்னிக்க வேண்டுகிறேன்”, “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை”, ‘’கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” “சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை, அதைச் சொன்னாலும் கேட்பவர்க்கு புரியவில்லை’’ என்ற தலைப்புகளில் பேசினீர்கள். இன்று காகம் பற்றிய பாடல்கள், பழமொழிகளைக் காண்போம்.அடுத்த வாரத் தலைப்பையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்: ‘’இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு, அது எங்கிருந்த போதிலும் அதை நாடி ஓடு’’

 

நான் முதலில் பேசுகிறேன். என் பெயர் வள்ளுவன். காகத்தின் அருமையான குணங்களில் உன்று பகுத்துண்டு உண்ணுதல். அதை நான் தான் அழகாக இரண்டே வரிகளில் சொல்லிவிட்டேன்:

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்ன நீரார்க்கே உள (குறள் 527)

 

அது மட்டுமா? பஞ்ச தந்திரக் கதையில் வரும் காகம் ஆந்தை மோதலையும் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டேன்:

பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481).

 

என் பெயர் ஓதல் ஆந்தையார். நான் சங்க காலத்திலேயே இதைச் சொல்லிவிட்டேனே:

மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை

அன்புடை மரபின் கிளையோடாரப்

பச்சூன் பெய்த பைந்நிண வல்சி

பொலம்புனை கலத்தில் தருகுவன் மாதோ

வெஞ்சின விறல் வேற் காளையோ

டஞ்சி லோதியை வரக்கரைந்தீமே (ஐங்குறுநூறு 391)

(காக்கை கரைவதை விருந்தினர் வருவதற்கு நிமித்தமாகக்கொள்ளுவர்).

என் பெயர் பெருவாயின் முள்ளியார். என் ஆசாரக்கோவையில் கூட எறும்பு, தூக்கணம் குருவி, காகம் ஆகிய மூன்றின் அரிய குணங்களைப் பாடி இருக்கிறேன். எறும்பு திட்டமிட்டு மழைக் காலத்துக்கு உணவைச் சேமிக்கிறது. குருவி எந்தக் காலத்திலும் சேதமடையாத அழகான கூட்டைக் கட்டுகிறது. காகம் எல்லோரையும் அழைத்து பகிர்ந்து சாப்பிடுகிறது.

நந்து எறும்பு தூக்கணம் புள் காக்கை என்றிவை போல்

தங்கரு நல்ல கடைப் பிடித்து……….. (ஆசாரக்கோவை)

 

என் பெயர் முன்றுரை அரையனார். காகத்தின் சொல்லை எள்ளி நகையாடக்கூடாது என்று பாடி இருக்கிறேன்:

கள்ளி அகிலும் கருங் காக்கைச் சொல்லும்போல

எள்ளற்க யார் வாயின் நல்லுரையை—பழமொழி

பாரதி

பாரதி: நான் பல பாடல்களில் காகத்தின் பெருமைதனைப் பேசி இருக்கிறேன். காகத்தை மனித ஜாதியுடன் இணைத்துப் பாடிவிட்டேன். சிறுவர் பாட்டில்கூட காகத்துக்கு இரக்கம் காட்டச் சொன்னேன்:

காக்கை குருவி எங்கள் ஜாதி—நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்.

!!!

ஓடி விளையாடு பாப்பா……….

எத்தித் திருடும் அந்த காக்கை—அதற்கு

இரக்கப் படவேணும் பாப்பா

!!!

காக்கைச் சிறகினிலே நந்தலாலா—நின்றன்

கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா

!!!

பாரசக்தி திரைப்படம்

என் பெயர் உடுமலை நாராயண கவி.நான் பாரசக்தி திரைப்படப் படத்தி பாடிய பாடல் 60 ஆண்டுகாலமாகப் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கிறது:

கா கா கா
கா கா கா

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடி ஓடி வாங்க

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடி ஓடி வாங்க

என்ற அனுபவப் பொருள் விளங்க

அந்த அனுபவப் பொருள் விளங்க

காக்கை அண்ணாவே நீங்கள்

அழகான வாயால் பண்ணாக பாடுவீங்க

காக்கை அண்ணாவே நீங்கள்

அழகான வாயால் பண்ணாக பாடுவீங்க

கா கா கா என்று தினம் ஒன்னாக கூடுவீங்க

வாங்க.. கா கா கா

சாப்பாடில்லாம தவிக்கிதுங்க ஜனம்

கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
சாப்பாடில்லாம தவிக்கிதுங்க ஜனம்

கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க

உயிர் காப்பாத்த கஞ்சி தண்ணீ ஊத்துங்க—என்றால்

தாழ்ப்பாள போடுறாங்க பாருங்க

அந்த சண்டாளர் ஏங்கவே தன் நலமும் நீங்கவே

தாரணி மீதிலே பாடுங்க

ராகம்…. கா கா கா

எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு

பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே

பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே

இளைத்தவன் வலுத்தவன் இனச் சண்டை பணச் சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச் சண்டை பணச் சண்டை
எத்தனையோ இந்த நாட்டிலே

எத்தனையோ இந்த நாட்டிலே

படிக்காத நீங்க எங்க பக்த்தறிவாளர பாக்காதீங்க

படிக்காத நீங்க எங்க பக்த்தறிவாளர பாக்காதீங்க

பாசமாய் இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க

பாசமாய் இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க

பழக்கத்தை மாத்தாதீங்க

எங்க பாடுங்க… கா கா கா (பாராசக்தி திரைப்படப் பாடல்)

!!!!!!

காகம் பற்றிய பழமொழிகள்:

நாங்கள் பட்டிக்காட்டு ஜனங்கள்தான் .எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆனால் நாங்கள் புழக்கத்தில் விடும் பழமொழிகள் நிறைய விஷயங்கள் உடைய பொக்கிஷம்.ஈதோ பாருங்கள்:

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் கொஞ்சு

காக்கா கறுப்பு

காகத்திலே வெள்ளை உண்டா?

காகம் இருக்க பழம் விழுந்தது போல

காகம் இல்லாத ஊர் சோணகன் இல்லாத ஊர்

காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்

காகம் ஏறி பனம் காய் உதிருமா?

காகம் கழுத்து கறுத்து என்ன?வெளுத்து என்ன?

காகம் கர் என்றால் கணவனை அப்பா என்று கட்டிக் கொள்வாளாம்

காகம் கொக்கு கன கிளி யனுமான் குடியர் குணம்

காகம் வலமானால் ஆயுசு விருத்தியாகும்

காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தனையோ புன்னை,

கண்ணாளன் வருந்தனையும் பொறுக்கலையோ புன்னை?

காக்காயினும் கன சிவப்பு

காக்காயின் கண்ணுக்கு பீர்க்கம் பூ பொன்னிறம்

காக்காய் கூட்டம் போல கட்டுக் கோப்பு

காக்காய் (கால் கை) பிடிக்கிறவனுக்கு காலம்

காக்கை இருந்த கொம்பு அசையாது

காக்கை ஏறினதும் பனம்பழம் விழுந்தது

காக்கை கரிச் சட்டியைப் பழித்ததாம்

காக்கை குருவி மூக்காலே கொறிக்கிறது போல

கக்கைக்கு அஞ்சு குணம்

காக்கையிற் கரிது களாம் பழம்

காக்கையின் கழுத்தில் பனங்காயைக் கட்டினதுபோல

காக்காயும் கத்திப் போகிறது, கருவாடும் உலர்ந்து போகிறது

காக்கையும் காற்றும் போகு உண்டானால் வரும்

காக்கையும் குயிற்குஞ்சை தன் குஞ்சு போல வளர்க்கும்

காக்கையைக் கண்டு அஞ்சுவாள், கரடியைப் பிடித்துக் கட்டுவாளாம்

 

காக்கைபாடினியார்:

காக்கைபாடினியார்: என்பெயர் காக்கை பாடினியார். நான் சங்க காலத்திலேயே காக்கை பற்றிப் பாடியவள். காக்கையின் பெயரை உடைய ஒரே புலவன். என் பெயரில் காக்கைபாடினீயம் என்ற நூலும் உள்ளது.

நாங்கள் சங்கப் புலவர்கள். பாருங்கள் எத்தனை பாடல்களில் காகம் பலிச் சோற்றை உண்ணுவது பற்றிப் பாடீருக்கிறோம். பெண்களின் கரிய விழிகளைக் காகத்தின் கரிய நிறத்துக்கு ஒப்பிட்டுள்ளோம்:

பொருநராற்றுப்படை (முடத்தாமக்கண்ணியார்)

செஞ்சோற்ற பலி மாந்திய

கருங்காக்கை கலவு முனையின்

விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே (குறுந்210) 246 ,313, 334;

நற்றிணை 31, 231, 258, 272, 281, 343, 345, 358. 367; புறம் 238, 342, 362

 

படிக்கவேண்டிய எனது பழைய கட்டுரைகள்:1.இந்துமதம் பற்றி 200 பழமொழிகள் 2.இருபதாயிரம் தமிழ் பழமொழிகள் 3.யானை பற்றிய நூறு பழமொழிகள் 4.பெண்கள் பற்றி 300 பழமொழிகள் 5.பாரதி பாட்டில் பழமொழிகள் 6.பழமொழியில் இந்துமதம்7.Indian Crow by Mark Twain