கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1400; தேதி 9 நவம்பர், 2014.
சுமேரியா/ சுமேரு என்னும் நாகரீகம் தழைத்த இடம் இராக்
பாமீர்/ பாமேரு என்னும் பீடபூமி இருப்பது தாஜ்கிஸ்தான், கிர்கிஸ்தான் பகுதி
குமேரு என்பது தென் துருவம்; குமரி என்பது தென் கோடி மலை, க்மேர் என்பவர் கம்போடியர்
மேரு என்பது இந்துக்களின் புனித மலை.
இவை எல்லாவற்றிலும் மேரு இருப்பதன் மர்மம் என்ன?
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 12-10-1932ல் சென்னையில் நடத்திய சொற்பொழிவில் சொல்கிறார்:
“ வடக்கே உள்ளதற்கு ஸுமேரு என்று பெயர். தெற்கே உள்ளதற்கு குமேரு என்று பெயர். ஸூமேருவிலிருந்து குமேரு வரை ஏழு ஸமுத்ரங்களும் த்வீபங்களும் இருக்கின்றன என்று காணப்படுகிறது. இப்பொழுது உள்ளாற்றைப் பார்த்தால் அது பொய் என்று தோற்றுகிறது. ஏழு த்வீபங்களைக் காணோம், ஏழு ஸமுத்ரங்களும் இல்லை. இதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கலாம்.”
இப்படிச் சொல்லிவிட்டு பின்னர் பூமியின் அச்சு ஒரு காலத்தில் துருவ நட்சத்திரத்துக்கு நேராக இருந்ததும் பின்னர் அது சிறிது சிறிதாக நகர்ந்து இப்போழுது தள்ளி இருக்கிறது என்றும் அது நேராக இருந்த காலத்து இருந்த நிலையையே புராணங்கள் கூறுவதகாவும் விளக்குகிறார். ஆடிவிட்டு நிற்கப் போகும் பம்பரம் போல பூமி தலை சாய்ந்து சுற்றுவதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவ நட்சத்திரம் மாறுவதும் விஞ்ஞான உண்மை. நிற்க.
((காண்க: —ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற்பாகம், பக்கம்75, ஸ்ரீகாமகோடி கோசஸ்தானம், சென்னை, 1957, வில ரூ3.))
நாம் காண வந்த விஷயம் குமேரு. அதற்காகத்தான் காஞ்சிப் பெரியவரின் உரையை மேற்கோள் காட்டினேன். இதைத்தான் நாம் குமரிக் கோடு என்கிறாம். அதாவது ஒரு காலத்தில் குமரி மலை (கோடு) என்று ஒன்று இருந்ததும் அது சுனாமி தாக்குதலில் கடலுக்குள் சென்றதும் தமிழ் இலக்கியம் வாயிலாக நாம் அறிகிறோம். குமரி என்பது குமேருவில் இருந்து வந்திருக்கலாம். அல்லது தென் துருவம் குமேரு என்றும் அது போல உள்ள மலை குமரிக்கோடு என்றும் வந்திருக்கலாம்.
கலைக் களஞ்சியங்களைப் படிப்போருக்கு ஒரு விஷயம் தெரியும் — க்மேர் எனப்படும் கம்போடிய இனம், சுமேரிய இனம் ஆகியவற்றின் மூலமும் இதுவரை மர்மமாகவே இருக்கிறது. இதற்கு விளக்கமே கிடைக்கவில்லை. காஞ்சிப் பெரியவர் சொல்வதன் அடிப்படையில் நான் சொல்வது குமரி என்பதும் க்மேர் என்பதும் குமேருவில் பிறந்த சொற்கள் என்பதே!
க்மேர் என்னும் இனம் கம்போடியாவில் ஆட்சி புரிந்தது — இன்றும் இருக்கிறது. அவர்கள் காம்போஜர்கள். அதை இப்பொழுது கம்போடியா என்போம். இந்த இனம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு காலத்தில் இருந்ததை வடமொழி புராண, இதிஹாசங்கள் மூலம் அறிகிறோம். அவர்கள் 1500 ஆண்டுகளுக்கு தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் இந்துப் பண்பாட்டைப் பின்பற்றினர். அவர்கள் குமரி வழியாகப் போனதன் நினைவாக க்மேர் என்ற பெயர் நிலைத்திருக்கலாம் .அகத்தியர் கடல் கடந்து இவர்களைக்கொண்டு சென்றதாலோ அல்லது அவர்களுக்கு நாகரீகத்தைக் கற்பித்ததாலோ இன்றுவரை அகத்தியர் சிலைகள் அந்த நாடுகள் முழுதும் இருப்பதையும் நாம் அறிவோம்.
காம்போஜர்கள் கட்டிய உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் என்னும் இந்துக் கோவில் மேருமலை வடிவத்தில் அமைக்கப்படதையும் அதைத் தொடர்ந்து இந்தோநேசியாவில் போரொபுதூரில் மேருமலை வடிவத்தில் கோவில் கட்டப்பட்டதையும் உலக மக்கள் அறிவர். இத்தகையோர் க்மேர்– குமேர்—குமேரு – மேரு என்று பெயர் கொண்டதில் வியப்பதற்கு ஏதேனும் உண்டோ?
இனி சுமேரியாவைக் கண்போம். சு+மேரு என்பதன் பொருளும் யாருக்கும் தெரியவில்லை. அருகில் வசித்த அக்கடியர்கள் இவர்களை சுமேரம் என்று குறித்தனர். ஆனால் சுமேரியர்கள் யார்? அவர் மெசபொடோமியாவுக்கு வெளியே இருந்துவந்த வந்தேறு குடிமக்களா? என்று அறிஞர் உலகம் இன்றும் காரசாரமாக விவாதித்து வருவதாக லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட “அண்மைக் கிழக்கு நாட்டு அகராதி” கூறும். அந்த நூலைப் பன்முறை படித்த நான் கூறுவது, “ சுமேரியர்கள் இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து குடியேறியவர்களே என்பதாகும். அல்லது ஒரு பிரிவு மக்கள் இந்தியக் குடியேறிகளாக இருக்கலாம்.
சுமேரியர்களுக்கு சப்த ஸ்வரங்களைக் கற்பித்தவர்கள் அக்கடியர்கள் என்பதும் மற்ற எல்லா சங்கீத விஷயங்களையும் கற்பித்தவர்கள் ஹிட்டைட்ஸ் என்பதும், அந்த ஹிட்டைட்ஸ் என்பவர்கள் சம்ஸ்கிருத மொழியுடன் தொடர்புடைய மொழி பேசியோர் என்பதும் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி தரும் தகவல் ஆகும். ஆகவே, நான் செய்த சொல் ஆராய்ச்சியில் தெரிவதும் அவர்கள் இந்தியத் தொடர்புடைய ஒரு பழங்குடி என்பதேயாகும். இன்ன பிற காரணங்களால் சுமேரியா என்பது சு+மேரு என்று கொள்வதே சாலப் பொருத்தம்.
Sri Chakra and Meru: Hindu Goddess Worship
இனி பாமீர் மலைத் தொடரைக் காண்போம். பாமேரு என்பதன் சிதைந்த வடிவே பா மீர் என்பதாகும். அராபிய, உருது மொழிகளில் மீர் என்னும் அடைமொழி காட்டும் பொருள்: உயர்ந்தவன், சிறந்தவன், மதிப்பு மிக்கவன். இதனால் முஸ்லீம் பெயர்களில் மீர் காசிம், மீர் முகமது முதலிய பல பெயர்களைக் காண்கிறோம். இந்த “மீர்” பெயர்களுக்குப் பின் வருவதும் உண்டு. ஆக உலகின் கூரை என்றழைக்கப்படும் மிக உயர்ந்த சிகரத்தை பா+மேரு என்று அழைத்ததில் வியப்பில்லை. பா என்னும் முன் ஒட்டுடன் பல வடமொழிச் சொற்கள் பயிலப்படுகின்றன. எ.கா. பாமதி.
ஆகவே குமேரு, சுமேரு, பாமேரு, மேரு என்பனவெல்லாம் நாம் உலகிகு வழங்கிய கொடையே. இமய மலையை பிற்காலத்தில் நாம் மேரு என்று சொன்னதும் வடதுருவச் சிறப்பால் அன்றோ! இந்து சமய தேவி உபாசனையில் ஸ்ரீசக்ரமும் அதன் மத்தியில் உயர்ந்து நிற்கும் மேருவும் போற்றப்படுவதும் இதனால் அன்றோ.
Khmer people celebrating New Year
“திருநெல்வேலி ஐயரின் வடதுருவ யாத்திரை” — என்ற கட்டுரையில் வடதுருவச் சிறப்பை விளக்கி இருக்கிறார். மேருவில் ஆறுமாதம் பகல், ஆறுமாதம் இரவு என்ற புராணக் குறிப்புகள் பற்றி அவர் விளக்குகிறார்.
-சுபம்–
contact swami_48@yahoo.com