Cheran Senguttuvan in procession with Kannaki statue
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1391; தேதி 5 நவம்பர், 2014.
சங்க இலக்கியத்தில் 18 மேல் கணக்கு நூல்கள் உள்ளன. இதற்குப் பின்னர் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த திருக்குறள் உள்ளிட்ட 18 கீழ்க் கணக்கு நூல்கள் உள்ளன. இந்த 36 நூல்களைத் தவிர ஐம்பெருங் காப்பியங்கள் உள்ளன. இவற்றைப் படித்து முடிக்கவே பல ஆண்டுகள் ஆகும். இது தவிர தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், கம்பராமாயணம் என்பன கடல் போல் பெருகும்.
இவைகளை எல்லாம் படிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றால் நிங்கள் அதமர். இவைகளை எல்லாம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்தால் நீங்கள் மத்யமர். இவைகளைப் படிக்கத் துவங்கி விட்டாலோ நீங்கள் உத்தமர்.
இவைகளோடு சம்ஸ்கிருதம் என்னும் பெருங் கடல் – மஹா சமுத்திரம் – மொழியில் உள்ள நூல்களைப் படிக்கத் துவங்கி விட்டாலோ மஹா அறிவாளி— பேரறிஞர் –ஞானி ஆகிவிடுவீர்கள். நிற்க.
இவற்றில் மேல் கணக்கு நூல்களில் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்ற இரண்டு தொகுப்புகளில் உள்ள 18 நூல்களும் பழம் தமிழகத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. எட்டுத் தொகையில் ஒரு நூல்தான் பதிற்றுப்பத்து.— பதிற்றுப்பத்தில் நூறு பாடல்கள் இருக்கவேண்டும் ஆனால் நமக்கு முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்காததால் 80 பாடல்களே உள்ளன. இவை அனைத்தும் சேர மன்னர்கள் பற்றியவை.
Location of Chera Nadu in South India
இனி பதிற்றுப்பத்தில் உள்ள சில அதிசயச் செய்திகளை மட்டும் காண்போம்:
1.புறநானூற்றில் பாடல் இரண்டில், அந்தாதி இலக்கியத்துக்கான அறிகுறி தென்படுகிறது. ஆயினும் தமிழில் முதல் அந்தாதிப் பாடல் பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தில்தான் இருக்கிறது. இதைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார். பிற்காலத்தில் காரைக்கால் அம்மையார், அபிராமி பட்டர் போன்றோர் இதை நூறு பாடல் வரை மேலும் விரிவாக்கினர்.
2.பிரான்சிலும், சுவீடனிலும், பிரிட்டனிலும் பல மியூசியங்களுக்குச் சென்றபோது நவரத்னக்கற்ளுடன் ஜ்வலிக்கும் கிரீடங்களைக் கண்டு வியந்தேன். அது போல நூறு மடங்கு மதிப்புள்ள கிரீடங்கள், மணி முடிகள் நமது நாட்டில் இருந்தன. இப்போது அவைகள் எங்கே? என்ற கேள்விக்குப் பதிற்றுப்பத்தில் விடை உள்ளது. இரண்டாம் பத்தில், சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், ஏழு மன்னர்களை வென்று அவர்களுடைய மணி முடிகளை உருக்கி தங்க மாலை செய்துகொண்டார் என்று பாடுகிறார் குமட்டூர் கண்ணனார். — இதே கதைதான் வடக்கிலும். காளிதாசனும் இப்படிச் சில செய்திகளைச் சொல்கிறான்! — கடைசியாக இருந்த கிரீடங்களை முஸ்லீம் படை எடுப்பாளர்கள் எடுத்துச் சென்று விட்டனர். அதற்கும் பின்னர் எஞ்சியிருந்ததை நம்மவரே செட்டியார் கடையில் போட்டு நகை செய்துகொண்டு விட்டனர்!!
3.பதிற்றுப்பத்தில் 2-ஆம் பத்தில் முதல் எழுவள்ளல்களில் ஒருவரான அக்குரன் என்பவரை சேர மன்னனுடன் ஒப்பிட்டுப் புகழ்கின்றனர். நமக்கு கடை எழுவள்ளல்கள் தெரியும். ஆயினும் இந்த முதல் ஏழு வள்ளல்களில் அக்குரன் யார் என்று உ.வே.சா. போன்ற மாமேதைகளுக்கும் தெரியவில்லை. நாம் அறிந்த மஹாபாரத அக்குரன் திறமைசாலி, ராஜ தந்திரி, கிருஷ்ணனின் நண்பன். ஆயினும் அவர் கொடை பற்றி எந்தச் செய்தியும் மஹா பாரதத்திலோ, பாகவதத்திலோ இல்லை. ஒருவேளை இது கர்ணனாக இருக்கலாமோ என்று ஐயுறுவோரும் உண்டு.
4.இமயவரம்பனைப் பற்றிய அதிசயச்செய்திகளில் ஒன்று அவன் 58 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகும். அவன் மேலைக் கடலில் வாலாட்டி வந்த யவனர்களைப் பிடித்து தலையை மொட்டை அடித்து, கைகளைப் பின்னே கட்டி, தலையில் எண்ணை ஊற்றினானாம்.
தமிழர்களின் காவல் மரங்கள்
5.வேறு எங்கும் காணப்படாத தமிழ் வழக்கம் —– ஒவ்வொருவரும் காவல் மரம் வைத்துக்கொண்டு அதைப் பாதுகாப்பதாகும்.— கடற் கொள்ளையர்கள் ஒரு தீவுக்கு நடுவில் காவல் மரமாக ஒரு கடம்ப மரம் வைத்திருந்த தாகவும் அதனை சேரலாதன் வெட்டி வீழ்த்தி அதில் வெற்றி முரசு செய்து கொண்டதாகவும் நூல் இயம்புகிறது. இதே போல தமிழ் முருகன், கடல் நடுவே இருந்த சூரபத்மனின் மாமரத்தை வெட்டியதையும் கந்தபுராணம் வாயிலாக அறிகிறோம். இங்கும் அதைச் சொல்லி முருகனுக்கு இணையானவன் சேரன் என்கிறார் புலவர். — நன்னன் என்பானுடைய காவல் மரம் வாகை. அதை களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் வெட்டி வீழ்த்தியதை ஒன்பதாம் பத்தில் காணலாம்—. பழையன் என்பானுடைய காவல் மரம் வேப்ப மரம். அதை சேரன் செங்குட்டுவன் வெட்டி வீழ்த்தியதை ஐந்தாம் பத்தில் காணலாம்.
6.ஐந்தாம் பத்தில் சரகர், சுஸ்ருதர் போன்றோர் வடமொழியில் எழுதிய மருத்துவ அறுவைச் சிகிச்சை போல ஒரு குறிப்பு வருகிறது. சேர மன்னனின் வீரர்கள் ஊசி கொண்டு தைக்கப்பட்ட மார்பை உடையவர்கள். அந்த ஊசி மீன்கொத்திப் பறவையின் கூரிய அலகு மாதிரி இருக்கும் என்று பரணர் பாடுகிறார்.
தமிழர் செய்த கொடிய செயல்
7.ஐந்தாம் பத்தில் சேரன் செங்குட்டுவன் செய்த ஒரு அடாத செயலையும் பரணர் போற்றிப் புகழ்கிறார். இந்தக் காலத்தில் இது நடந்திருந்தால் பத்திரிக்கை நிருபர்கள் பரணரையும், செங்குட்டுவனையும் சொற்களால் பிரட்டிப் பிரட்டி அடித்திருப்பர். அது என்ன அப்படிப்பட்ட கொடிய செயல்? செங்குட்டுவன் பல சிற்றரசர்களையும் பேரசர்களையும் வென்றான். கணவனை இழந்த பெண்மணிகளின் கரிய கூந்தலைக் களைந்தான். அம் மயிரால் திரிக்கப்பட்ட கயிற்றால் யானைகளை வண்டியில் பூட்டி, பழையன் என்பானுடைய காவல் மரத்தை தலை நகரத்துக்கு எடுத்துச் சென்றான்.
பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி
வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர்
பல்லிருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி வெந்திறல்
ஆராச் செருவின் ———————-
8.உழவர்கள் பகன்றைப் பூவை தலையில் சூடிக்கொண்டு நிலத்தை உழுததை அரிசில் கிழார் பாடிய எட்டாம் பத்தில் படிக்கலாம். அவர், பெரிய கப்பல்கள் பழுது பார்ப்பதை உவமையாகப் பயன்படுத்துவதால் அக்காலத்தில் கப்பல் பொறியியல் ( Marine Engineering) மரைன் எஞ்சினீயரிங் ) நன்கு முன்னேறி இருந்தது தெரிகிறது. புகார் நகர சதுக்க பூதங்களைச் சேரன் தனது வஞ்சிக்குக் கொண்டுவந்ததையும் அவர் பாடுகிறார்.
9.அவரே கட்டிப் புழுக்கு என்னும் ஒரு உணவுப் பண்டத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவரை முதலியவற்றின் விதையை இடித்துப் பொடியாக்கிச் சர்க்கரை கலந்து செய்வது கட்டிப் புழுக்கு ஆகும். இது கொங்கு நாட்டு உணவு.
Kodungallur Bhagavathy/Kannaki Temple
10.எட்டுத்தொகையில் மிகவும் கடினமான நூல் பதிற்றுப்பத்து தான். இதைக் கண்டுபிடித்து நமக்கு அளித்தவர் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். பதிற்றுப்பத்தில் மற்ற சங்க நூல்களைவிட கூடுதலாக மாமிச உணவு, குருதி கலந்த சோற்று பலி, வேள்வி, தேவலோகம், பூதம், துணக்கை ஆடல், இமயம் – குமரி சொற்றொடர், சிவன் – திருமால் முதலியவற்றைக் காண்கிறோம்.
பதிற்றுப்பத்தில் உள்ள வடவைத் தீ ( கடலில் தோன்றும் வடமுகாக்னி) சொர்க்க பூமியான உத்தரகுரு, பலவகை முரசுகள், வடநாடு போலவே எதிரி நாட்டில் கழுதை பூட்டி ஏர் உழுதல், தங்கக் காசு பரிசுகள், பாலைக் கவுதமனார் என்ற பிராமணர் வேள்வியில் மாயமாய் மறைந்தது, சதுக்க பூதங்கள், உன்ன மரம் ஜோதிடம் போன்ற அதிசயச் செய்திகளை ஏற்கனவே தனித்தனி கட்டுரைகளில் விரிவாக எழுதிவிட்டேன்.
பதிற்றுப் பத்தைப் படித்துப் பயன் பெறுக!
–சுபம்–
You must be logged in to post a comment.