பனை மர வழிபாடு: மகாவம்ச, சங்க இலக்கியச் சான்றுகள்

palmyra with 8 branches
Rare type of Palmyra with 8 branches in Sri Lanka

தொகுத்து வழங்குபவர்- கட்டுரை மன்னன் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.. 1309; தேதி- 25 செப்டம்பர் 2014

மஹாவம்ச ஆய்வுக் கட்டுரை வரிசையில் இது பதினோராவது கட்டுரை.

2014 ஜனவரி 27ல் — “பனமரங்கள் வாழ்க” — என்று ஒருகட்டுரை (எண் 804) வெளியிட்டேன். மஹாவம்ச நூல் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது சங்க இலக்கியத்தில் உள்ள பனைமர வழிபாடு இலங்கையில் பௌத்த சமயத்திலும் இருப்பதைக் கண்டு வியந்தேன். அதன் விளைவாகப் பிறந்து இக்கட்டுரை.

மரங்களிலும் ஏரி, குளங்களிலும், காடுகளிலும் கடலிலும் அணங்குகள் (தேவதைகள்) வசிப்பதாக சங்க காலத் தமிழர்கள் நம்பினர். இவர்கள் பற்றியும் பேய்கள், பூதங்கள் பற்றியும் நூற்றுக் கணக்கான குறிப்புகள் சங்க இலக்கியத்தில் உண்டு.

மரங்கள் பற்றி மகாவம்சத்தில் 25–க்கும் மேலான குறிப்புகள் இருக்கின்றன. பட்டப் படிப்பில் தாவர இயலைக் கற்ற எனக்கு இவை எல்லாம் தேன் போன்று இனிக்கும் தகவல்கள். பனைமரம் பற்றிய குறிப்பு இதோ:

அத்தியாயம் 10– பாண்டுஅபயன் காலத்தில் நடந்தது இது.
“பொது கல்லறை, கொலைக் களம், மேற்றிசை ராணிகளின் ஆலயம், வேசவனத்து ஆலமரம், வேட்டை பூதத்துக்குரிய பனை மரம், யோனர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம், மகா யக்ஞ சாலை – ஆகிய இவைகளை அவன் மேற்கு வாயிலுக்கு அருகில் அமைத்தான்”.

இந்த மகாவம்ச தகவலுக்கு விளக்கம் எழுதியோர் இதை வேட்டைக் காரர்களின் கடவுள் என்று எழுதி இருக்கின்றனர்.

battocaola branched palmyra
Branched Palmyras in Mattakilappu (Batticaloa) of Sri Lanka

இதே போல சங்க இலக்கியத்திலும் பேசப்படும்.ஆனால் அது நெய்தல் என்னும் கடலும் கடற்சார்ந்த நிலமும் பற்றிய குறிப்பு. நற்றிணைப் பாடல் 303-ல் மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் பாடிய பாடலில்

“தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்
துணை புணர் அன்றில் உய்வுக்குரல் கேட்டொறும்
………………………………

என்ற வரிகளுக்கு உரை எழுதிய பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யர் கூறுவது யாதெனில்: “ பண்டுதொட்டு உறைகின்ற கடவுள் தங்கப் பெற்ற பருத்த அடியையுடைய ஊர்ப்பொதுவிலுள்ள பனையின் வளைந்த மடலிடத்துச் செய்த குடம்பையின் கண் இருந்து தன் பெடையைப் புணர்கின்ற மகன்றிலின் வருத்தம் தரும் குரலைக் கேட்கும்தோறும்”

இதில் நமக்குத் தேவையானது பருத்த பனைமரத்தில் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையாகும். இதே நம்பிக்கை 2000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை அரசாண்ட பாண்டு அபயனுக்கும் இருந்தது ஒப்பிடற்பாலது.

பனைமரக் கொடியை கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணன் பலராமன் வைத்திருந்ததை ஒல்காப் புகழ் தொல்காப்பியனும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கிரனாரும் (புறம் 56) விதந்து ஓதுவதும் வியப்புக்குரியது. எத்தனையோ மரங்கள் இருக்க பலராமன் பனை மரத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்? என்று நான் வியப்பதுண்டு. ஆனால் விக்கிபீடியா பொன்ற கலைக்களஞ்சியங்கள் பனைமரம் 800 வகைகளில் பயன்படுத்தப்படுவதாக எழுதியதைப் படித்தவுடன் வியப்பு போய்விட்டது. பலராமன், கண்ணன் விளையாடிய ராஜ தந்திர ஆட்டங்களில் சிக்காமல், நாடு முழுதும் விவசாயத்தைப் பிரசாரம் செய்வதையே தனது அரும்பணியாகக் கொண்டவர். தோளில் கலப்பயுடன் காட்சிதருவார்!

palmyra 7
Rama piercing seven Palmyra Trees with a single arrow in Amriteshwar Temple, Karnataka

பனை மரம் பற்றிய மற்றொரு புதிரை பனைமரங்கள் வாழ்க என்ற கட்டுரையில் வெளியிட்டு ஒருவேளை இப்படி இருக்கலாம் என்று ஒரு ஊகச் செய்தி வெளியிட்டேன். இப்போது அதுவும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இலங்கை மன்னனாக விபீஷணனை அம்ர்த்திவிட்டுப் புறப்பட்ட இராம பிரானுக்கு விபீஷணன் ஒரு பரிசுப்பொருள் தருகிறான். இது தங்கத்தினால் ஆன ஏழு பனை மரங்கள் என்று இராமாயணம் பகரும். ஒருவேளை இரமன் ஒரே அம்பில் ஏழு மராமரங்களைத் துளைபோட்டு (கின்னஸ்) சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதால் இப்படி இருக்குமோ என்று ஊகச் செய்தி வெளியிட்டேன்.

கோவில் சிற்பங்களில் உள்ள மரங்கள் பற்றி வெளியான ஆரய்ச்சிப் புத்தகத்தில்(See page 200 of Plants in Indian Temple Art by Shakti M Gupta) ராமபிரான் ஏழுபனை மரங்களைத் துளைத்த காட்சி கர்நாடக மாநில அமிர்தேஸ்வரர் கோவிலில் இருப்பதாக அவர் எழுதி இருந்தார். ஆக ராமன் பனைமரம் ஏழையும் துளை போட்டதற்காகவே விபீஷணன் ஒரு நினைவுப் பரிசு கொடுத்தான் என்பது பொருத்தமாகவே இருக்கிறது. ராமாயன மரா மரம் அந்தச் சிற்பத்தில் பனை மரமானதும் ஆய்வுக்குரியது.

அடிமுதல் முடி (நுனி) வரை நமக்குப் பயன்படும் பனை மரம் வடமொழியில் தாட என்றும் தால என்றும் எழுதப்படும். இதை ஓலைச் சுவடிகளாகப் பயன்படுத்தியதே இதன் புனிததன்மைக்குக் காரணம் என்று வேறு ஒரு புத்தகத்தில் படித்தேன். அவருக்கு மஹாவம்ச, சங்கத் தமிழ் இலக்கிய அறிவின்மையே அத்தகைய முடிபுக்குக் காரணம்.

இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் இறங்குவோருக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் தெரிந்திருக்கவேண்டும். இல்லாவிடில் நிறைய தவறான முடிவுக்கு வருவார்கள்.

OLYMPUS DIGITAL CAMERA
Tasty Palmyra fruits (fleshy parts inside is eaten)

கம்போடியா நாட்டு தேசிய மரமாகத் திகழும் பனை மரம், தமிழ்நாட்டில் திருப்பனந்தாள், திருப்பனங்காடு, திருப்பனையூர், திருமழல்பாடி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் தல மரங்களாக வழிபடப்படுவதும் குறிப்பிடத் தக்கது.

அனுராதா நட்சத்திரத்தை தமிழர்கள் முடைப் பனை என்று அழைப்பது, ஞான சம்பந்தப் பெருமான் ஆண் பனை மரங்கள் அனைத்தையும் பூத்துக் குலுங்கும் பெண் மரங்களாக மாற்றி அற்புதம் செய்தது, ஆதிசங்கரர் தாடங்கப் பிரதிஷ்டை செய்தது ( தால/தாட அங்கம் = தோடு), தாயத்துக்கும் பனைமரத்துக்கும் உள்ள தொடர்பு முதலிய விஷயங்களை முந்திய கட்டுரையில் கண்டு கொள்க.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் காதலில் தோவியுற்ற தமிழ் இளைஞர்கள் ஊர் அறிய பனைமர மடலான குதிரை மீது பவனி வருவர். இது தமிழர்களுக்கே உரித்தான வழக்கம். ஆயினும் இதிலும் வடக்கில் இருந்தோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ இறக்குமதி செய்யப்பட்ட குதிரையின் தொடர்பு இருப்பது ஏன் என்று விளங்கவில்லை. ஆனால் தமிழர்கள் பற்றிய செய்தி எல்லாம் குதிரைகள் நன்கு பயன்படுத்தப்பட்ட காலத்துக்குப் பிற்பட்டவையே. இதைத் தனியாக ஆராய்வோம்.

122 Amruteshwara temple Rama Sita Lakshmana Golden Deer
Ramayana is depicted in sculptures in Karnataka

My earlier Ramayana and Tree related posts:
1.Where is Rama Setu (Rama’s Bridge) ? 2. Did Sita Devi Die in Earth Quake? 3. Ramayana Wonders Part1 (4) . Ramayana Wonders Part2 :How many miles did Rama walk? (5) Ramayana Wonders Part 3: Rama and Sanskrit G’ramma’r (6) Part 4: Who can read all 300 Ramayanas? (7) Ramayana Wonders part 5: Indus Valley Cities in Ramayana (6) Indian wonder: The Banyan Tree (7) Ramyana Wonders Part 6 (8) Where there is Rama, No Kama and many more 9) இந்திய அதிசயம்: ஆலமரம் 10) பனை மரங்கள் வாழ்க 11)தமிழ் பக்தர்களின் அபார தாவரவியல் அறிவு 12)அருகம்புல் ரகசியம் 12)சிந்து சமவெளியில் அரச மரம் 13)மரத் தமிழன் வாழ்க 14) வேதத்தில் 107 மூலிகைகள் 15) சிவனுக்கும் தமிழர்களுக்கும் மரங்கள் சுவீகார புத்திரர்கள் 16)ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே 17) தமிழ்நாட்டைப் பற்றி 100 அதிசய செய்திகள் 18) Magic of Trees 19)இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும் 20) வாழைப்பழம் வாழ்க 21) தக்காளி ரசத்தின் மகிமை.

Contact swami_48@yahoo.com