பாரதி தரிசனம் – Part 2

bharati new

ச.நாகராஜன்
Post No 743 dated 12th December 2013

வினா: புண்ணியன் யார்?
விடை: பக்கத்திலிருப்பவர் துன்பம் – தன்னைப்
பார்க்கப் பெறாதவன் புண்ணியமூர்த்தி
வினா: எது சுகம்?
விடை: வேலைப் பணிந்தால் விடுதலையாம்; வேல்முருகன்
காலைப் பணிந்தால் கவலை போம் – மேலறிவு
தன்னாலே தான் பெற்று, சக்தி சக்தி சக்தியென்று
சொன்னால் அதுவே சுகம்

வினா: பூமியில் மனிதனின் கடமைகள் என்ன?
விடை: தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல்
பிறர் நலம் வேண்டுதல்
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,
நாராயணனாய், நதிச்சடை முடியனாய்
பிறநாட்டிருப்போர் பெயர் பலக் கூறி
அல்லா! யெஹோவா! எனத் தொழுதன்புறும்
தேவரும்தானாய், திருமகள், பாரதி,
உமை எனுந் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும் கடமை எனப்படும்

வினா: இதனால் விளையும் பயன்கள்?
விடை பயன் இதில் நான்காம்!
அறம், பொருள், இன்பம், வீடெனும் முறையே
வினா: (குழந்தையின் குரல்) வாழும் முறை எது?
விடை: உயிர்களிடத்தில் அன்பு வேணும்;
உண்மை என்றுதானறிதல் வேணும்
வயிரமுடைய நெஞ்சு வேணும்
இது வாழும் முறைமையடி பாப்பா.

வினா: தெய்வம் என்பது…?
விடை: உண்மையின் பேர் தெய்வம் என்போம்
வினா: தெய்வம் எப்போது எல்லோரையும் வாழ்த்தும்?
விடை: அறிவை வளர்த்திட வேண்டும் – மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் – பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்
வினா: பாரை உயர்த்திட வழி சொல்லுங்களேன்.
விடை: வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து — இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்!

வினா: கண்ணனைத் தாயாக, தந்தையாக, தோழனாக, அரசனாக, சேவகனாக்க் கண்டீர்களே, அவனைப் பற்றி ஒரு வரி சொல்லுங்களேன்!
விடை: மழைக்குக் குடை; பசி நேரத்து உணவு;
என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்
வினா: கண்ணன் அருளிய கீதையின் சாரத்தை இரு வரிகளில் கூறுங்களேன்!
விடை: பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்
பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்

வினா: ஆணும் பெண்ணும் நிகர் தானா?
விடை: ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்
தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே!

வினா: நீங்கள் வேண்டுவது என்ன?
விடை: எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்

வினா: நீங்கள் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகள் என்னென்ன?
விடை: இயன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன், சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன். எப்போதும் பராசக்தி – முழு உலகின் முதற்பொருள் – அதனையே தியானம் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.
பொழுது வீணே கழிய இடம் கொடேன்.
லௌகிக கார்யங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.
உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பதாலும் தூய்மையுறச் செய்வேன்.
மறந்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.
மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றி பொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.
சர்வசக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகழச் செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில்போல் இயலுமாறு சூழ்வேன்.
பொய்மைம் இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, ந்டிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.
இடையறாத் தொழில் புரிந்து இவ்வுலகப் பெருமைகள் பெற முயல்வேன்.இல்லாவிடின் விதிவசமென்று மகிழ்ச்சியோடிருப்பேன்.
எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம் இவற்றோடிருப்பேன்.

bharathy and Chelamma
Bharati with his beloved wife Chellamma

வினா: இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லுங்களேன்.
விடை: அறமொன்றே தரும் மெய்யின்பம் என்ற
நல்லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்.
பிற விரும்பி உலகினில் யான் பட்ட
பீழை எத்தனை கோடி! நினைக்கவும்
திறனழிந்தென் மனம் உடைவெய்துமால்
தேசத்துள்ள இளைஞர் அறிமினோ!
அறமொன்றே தரும் மெய்யின்பம்; ஆதலால்
அறனையே துணை என்று கொண்டு உய்திரால்

வினா: மஹாத்மா காந்தியைப் பற்றி….?
விடை: வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!!
வினா: உங்களுக்குப் பிடித்த உங்கள் பாட்டு ஒன்று கேட்க ஆசைப்படுகிறோம்.
விடை: வந்தேமாதரம் என்போம்… எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்!

வினா: உங்கள் தரிசனம் கிடைக்கும் பேறு பெற்றோம்; மகிழ்ச்சி; ஒரு தீர்க்க தரிசனம் சொல்லுங்களேன்!
விடை: எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ணபெருமான்
எல்லாரும் அமர நிலையை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் – வாழ்க!
வந்தே மாதரம்; வந்தே மாதரம்; வந்தே மாதரம்!

முடிவுரை:
பாரதி தரிசனம் கேட்டீர்கள். மஹாகவி பாரதியாரின் கவிதை, கட்டுரைகளிலிருந்து எடுத்து இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பு.

contact swami_48@yahoo.com
*******************************