உலகம் கெட்டுப் போனதற்கு பிராமணர்களே காரணம்?

18TH_CLIMATE_CHANG_1656852f

Picture of Topsy-Turvy World

கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்…885 தேதி 4-3-14

பிராமணர்களுக்கு தமிழ் மன்னர்கள் வாரி வழங்கியது ஏன்?

சங்க இலக்கியத்திலுள்ள எட்டுத் தொகை, பத்துப் பாட்டு ஆகிய 18 நூல்களில் உள்ள 27,000+ வரிகளைக் கரைத்துக் குடித்தவர்களுக்கும் அதற்குப் பின் எழுந்த திருக்குறள் முதலான 18 கீழ்க்கணக்கு நூல்களைப் படித்துக் கரை கண்டவர்களுக்கும் ஒன்று தெள்ளிதின் புலனாகும். ஐயர்களுக்கு மன்னர்கள் வாரி வழங்கினர். அவர்களுக்கு தானம் செய்து வார்த்த நீர் ஆறு போல ஓடியதாம். கரிகால் பெருவளத்தான், பருந்து வடிவத்தில் யாக குண்டம் செய்து வேள்வி செய்ததையும். மகத்தான வல்லமை பொருந்திய பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, பாண்டிய நாடு முழுதும் யாகக் கம்பங்களை (யூப நெடுந்தூண்) நட்டதையும், சோழன் பெருநற்கிள்ளி மஹாபாரத தருமனுக்கு நிகராக ராஜசூய யக்ஞம் செய்ததையும் புறநானூறு போற்றிப் புகழ்வதை பல கட்டுரைகளில் தந்துவிட்டேன்.

80,000 தமிழ்க் கல்வெட்டுகளைப் படித்தோருக்கு இது இன்னும் நன்றாகவே விளங்கும். பெரும்பாலான கல்வெட்டுகள் பிரமதேயம் ( பிராமணர்களுக்கு நிலம் தானம்) அல்லது தேவதானம் ( கோவில்களுக்கு மான்யம் வழங்கல்) பற்றியே பேசுகின்றன.

இவ்வாறு எதற்காகப் பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கினார்கள்? பார்ப்பனர்கள் அவர்களை நன்றாக ஏமாற்றினார்களா? பாவ புண்யம் என்று சொல்லி மிரட்டினார்களா? இல்லை, இல்லவே என்றே சொல்லவேண்டும்.

ஏனெனில் சங்க இலக்கியத்தில் அதிகமாகப் பாடப்படவர், போற்றப்பட்டவர் ஒரே புலவர்தான். அவர் பெயர் கபிலர். அவரை புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று பாராட்டினர். அவர்தான் சங்க காலத்தில் அதிகப் பாடல்கள் பாடியவர். அதற்காக அவரைப் பாராட்டவில்லை. புலன் அழுக்கற்ற பிராமணன் என்பதற்காகப் பாராட்டினர். மூவேந்தர்களையும் எதிர்க்கும் ஆற்றல்பெற்ற ஒரே தைரியசாலி அவர் ஒருவரே. வேற்று ஜாதியைச் சேர்ந்த பாரி என்ற குறு நில மன்னனின் புதல்விகளை ஏற்றுக் கொண்டு , ஒவ்வொரு அரண்மனையாக ஏறி இவளை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கதறினார். ஒரு மன்னனுக்கும் துணிவு இல்லை!!!

இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அப்பர் பெருமான் பெயரை தன் பிள்ளைகளுக்கும் தண்ணீர் பந்தலுக்கும் சூட்டிய இன்னொரு புரட்சிப் பிராமணன் அப்பூதி அடிகள். அதற்குப் பின்னர் வந்தப் புரட்சிப் பார்ப்பான் பாரதியை உலகமே அறியும்.

ஆக தமிழ் மன்னர்களும், கற்றோரும் மற்றோரும் எதற்காகப் பிராமணர்களுக்கு வாரி வழங்கினர்?

1.அவர்களுடைய ஒழுக்கத்திற்காக; காதலிக்குத் தூது அனுப்பவும், மன்னர்களுக்குத் தூது செல்லவும், மந்திராலோசனை வழங்கவும் அவர்களே நம்பத் தகுந்தவர்கள்.

2.தனக்கென வாழா பிறர்குரியாளராகத் திகழ்ந்தனர். கபிலர் போல பலர் இருந்தனர். வேத மந்திரங்கள் மூலம் எப்போது பார்த்தாலும் ஆக்க பூர்வ எண்ணங்களைப் பரப்பி (positive thoughts பாஸிட்டிவ் தாட்ஸ்) மனித குல முன்னேற்றத்துக்கு உதவினர். ஆயிரம் Self Improvement ‘’செல்F இம்ப்ரூவ்மென் ட்’’ புத்தகங்களில் உள்ளதை சூத்திர வடிவில் சொல்லிக்கொண்டே இருந்தனர்.

3.இறந்துபோன அத்தனை முன்னோர்களுக்கும் (departed souls) நீர்க்கடன் (தர்ப்பணம்) செய்தனர். அவர்கள் தர்ப்பண முடிவில் உறவினர் இல்லாதோர், நண்பர்கள் எல்லோருக்கும் சேர்த்து எள் இரைக்கும் ஒரு மந்திரத்தைச் சொல்லியே முடிப்பர்.

4.எப்போது பார்த்தாலும் நாடு வாழவேண்டும், தீங்கின்றி மும்மாரி மழை பெய்ய வேண்டும், ஓங்கு செந்நெல் வளர வேண்டும், மன்னர்கள் நல்லாட்சி நடத்த வேண்டும். நோய் நொடியில்லாமல் இருக்க வேண்டும் மாதா, பிதா, குரு, தெய்வத்தை வணங்க வேண்டும் என்று சொல்லி எல்லோருக்கும் மஞ்சள் அட்சதை போட்டு மங்களம் பாடினர். (ஸ்வஸ்தி பிரஜாப்ய பரி பாலயந்தாம்………….). நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க என்ற சினிமாப் பாட்டு வேத மந்திரத்தின் மொழி பெயர்ப்பு என்பதை எல்லாம் முன்னரே காtடிவிட்டேன்.

இவ்வாறு இருந்த பிராமணர்கள் அவர்களுடைய அன்றாடக் கடமைகளைச் செய்யாததே உலக வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் விவேக சூடாமணி ஆசிரியர். வள்ளுவருக்கும் அக்கருத்து உடன்பாடானதே.

ஆசாரம் செய்வாராகில் அறிவொடு புகழும் உண்டாம்
ஆசாரம் நன்மையானால் அவனியில் தேவர் ஆவார்
ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்றுப்
பேசார்போற் பேச்சுமாகிப் பிணியொடு நரகில் வீழ்வார்
— விவேக சிந்தாமணி

பொருள்; ஆசாரங்களை அனுசரித்து ஒழுக்கத்தோடு வாழ்ந்தால்அறிவும் புகழும் உண்டாகும். ஒழுக்கம் இருந்தால் அவரை இந்தப் பூவுலகிலேயே தெய்வமாகக் கருதுவர். ஆசாரம் தவறினால் ஊமை போல நடிக்க நேரிடும்; நோய்கள் பெருகும்; இறுதியில் நரகத்தில் வீழ்வர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் ( திருக்குறள் 50)—என்றான் வள்ளுவன்.
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரஹம்சர் முதலிய பெரியோர்களை நாம் தெய்வமாகப் போற்றுவது வள்ளுவனின் மேற்கண்ட குறளைப் பின்பற்றியே.

இந்திரன் பதங்கள் குன்றும்
இறையவர் பதங்கள் மாறும்
மந்தரம் நிலைகள் பேற
மறுகு அயல் வறுமையாகும்
சந்திரன் கதிரோன் சாயும்
தரணியில் தேகம் மாளும்
அந்தணர் கருமம் குன்றில்
யாவரே வாழ்வர் மண்ணில்?
— விவேக சிந்தாமணி

பொருள்: வேதியர்கள் அவர்களுக்குரிய ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்றாவிடில்:
1.இந்திரனுடைய செல்வம் குறையும்
2.அரசாங்கம் ( மன்னர் ) நடக்கும் முறை தேயும்
3.மலைகளும் ( பூமி அதிர்ச்சி, சுனாமி ) இடம் பெயரும்
4.வறுமை அதிகரிக்கும்
5.சந்திரனும் சூரியனும் சரியாக (வறட்சி) ஒளி தராது
பிறகு யார்தான் நல்ல வாழ்க்கை வாழ முடியும்?

இந்த விவேக சிந்தாமணி நூல் யார் எழுதியது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இவருக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் திருக்குறளை எழுதிய வள்ளுவனும் இதே கருத்தை மொழிகிறான்:
மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் (134)

ஐயா, இந்த ஐயர்கள் வேதத்தை மறந்தால் கூடப் போனால் போகட்டும் என்று விட்டு விடலாம். காரணம்—திருப்பியும் படித்து மனப்பாடம் செய்து விடலாம். ஆனால் அவர்கள் பிறந்த காலத்திலேயே அவர்களிடம் சில ஒழுக்கங்கள் எதிர் பார்க்கபடுகின்றன. அது ஒரு முறை கெட்டுவிட்டாலும் ஆபத்து என்கிறார் வள்ளுவர்.

இந்தக் குறளையும் மேற்கண்ட விவேக சிந்தாமணி செய்யுளையும் காணும்போது உலகம் ஏன் கெட்டுப்போச்சு என்பது சொல்லாமலே விளங்கும். பிராமணர்/ அந்தணர் என்ற சொல்லை எல்லாம் மறந்துவிட்டு அவர்களைப் போல வேறு யாராவது சிலர் இருந்தாலும் போதும் உலகம் சிறக்கும்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பது தமிழர் கண்ட புதுமை அறிவியல்!!

contact swami_48@yahoo.com