Written by London Swaminathan
Date: 15 MARCH 2018
Time uploaded in London – 16-22
Post No. 4819
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
என்று தமிழ்ப் பெரும் சித்தர் சிவவாக்கியர் பாடினார். இது 2300 ஆண்டுகளாகப் பாரதத்தின் தென் குமரி முதல் வட இமயம் வரை நிலவிய கருத்து என்பது சாணக்கிய நீதியைப் படித்தோருக்கு விளங்கும்.
சாணக்கியன் சொல்கிறான்,
படந்தி சதுரோ வேதான் தர்மசாஸ்த்ராண்யனேகசஹ
ஆத்மானம் நைவ ஜானதி தர்வீ பாகரஸம் யதா
மக்கள் நான்கு வேதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் மீண்டும் மீண்டும் படித்தும் தன்னை அறியும் அறிவில்லாவிடில் என்ன பயன்? சுவையான உணவைப் பரிமாறும் கரண்டிக்கு அந்த உணவின் சுவை தெரியுமா?
–சாணக்கிய நீதி 16-12
சாணக்கியன் சொல்லும் மரபியல் விஞ்ஞானம்
சாணக்கியன் உலக மஹா அறிவாளி; அலெக்ஸாண்டர் காலத்தில் வாழ்ந்தவன்; 2300 ஆண்டுகளுக்கு முன்னரே அவன் மரபியல் பற்றிப் பேசுகிறான்; கருவிலேயே திரு உற்றதாக நாயன்மார்கள் பாடினர்; மாணிக்க வாசகரோவெனில் திருவாசகத்தில் ஒரு கருவின் பத்து மாத வளர்ச்சியைப் பாடினார்.
சாணக்கியன் பகர்வதாவது,
கருவில் இருக்கும்போதே கீழ்க்கண்ட ஐந்து விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன– அவனது ஆயுள், வேலை, செல்வம், படிப்பு, மரணம்.
என்ன அதிசயம்!
இதைப் பார்க்கையில் ஜோதிடம் உண்மையே என்பது விளங்கும்.
இந்துக்கள் குழந்தை பிறந்த ஓராண்டுக்குப் பின்னர் குடும்ப ஜோதிடர் மூலம் ஜாதகத்தை எழுதி வாங்குவர்; அதில் அவர் அக்குழந்தையின் படிப்பு, ஆயுள், வேலை, செல்வ வளம் முதலியன குறித்து எழுதி விடுகிறார். இது 2300 ஆண்டுகளாக இருப்பது சாணக்கிய நீதி மூலம் தெரிகிறது:–
ஆயுஹு கர்ம ச வித்தம் ச வித்யா நிதனமேவ ச
பஞ்சைதானி ஹி ஸ்ருஜ்யதே கர்பஸ்தஸ்யைவ தேஹினஹ
4-1
ஒரு தாயின் கரு பத்து மாத வளர்ச்சியில் நோக்கும் ஆபத்துகளை போற்றித் திரு அகவல் என்னும் திருவாசகப் பகுதியில் மாணிக்க வாசகர் பாடுகிறார். அவர் தேவாரம் அருளிய மூவர்க்கும் முதல்வர்.
யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத்
தீனமில் கிருமிச் செலவினிற் பிழைத்தும்
- ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் - ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும் - துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்? பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)
–சுபம்–