
Article No.1983
Compiled by London swaminathan
Date 9th July 2015
Time uploaded in London: 8-44 am
இதுவரை ஆயிரத்துக்கும் மேலான சம்ஸ்கிருத பழமொழிகள், பொன் மொழிகளையும், ஆயிரத்துக்கும் மேலான தமிழ் பழமொழிகள், பொன் மொழிகளையும் இந்த பிளாக்-கில் கொடுத்திருக்கிறேன். கூடிய மட்டிலும் அதைத் தலைப்பு (சப்ஜெக்ட்) வாரியாக வகைப் படுத்தி இருக்கிறேன். மேலும், அது குறிப்பாக எந்த இடத்தில் இருக்கிறது என்றும் புத்தகம், அத்தியாயம், வரிசை எண் ஆகியவற் றையும் கொடுத்திருக்கிறேன். இதோ மேலும் 20 அழகான பழமொழிகள்:–
1.தண்டேன ச ப்ரஜா ரக்ஷ மா ச தண்டமகாரணே – ராமாயணம்
சட்டத்தால் குடிகளைக் காக்க வேண்டும்; காரணமில்லாமல் தண்டிக்காதே.
2.துஷ்டா பார்யா சடம் மித்ரம் ப்ருத்யசசோத்தரதாயக:சமர்பே ச க்ருஹே வாஸோ ம்ருத்யுரேவ ந சம்சய: — ஹிதோபதேசம், சாணக்ய நீதி தர்பணம்
பாம்புள்ள வீட்டில் இருப்பவனுக்கு மரணம் ஏற்படும்; அதே போல கெட்ட மனைவி, முட்டாள் நண்பன், கீழ்ப்படியாத வேலைக் காரன் ஆகியோருடன் இருப்பவனுக்கும் மரணமே மிஞ்சும். சந்தேகமே யில்லை.
3.ந கச்சேத் ப்ராம்மணத்ரயம்
மூன்று பிராமணர்கள் சேர்ந்து போகக்கூடாது
(சகுன சாஸ்திரப்படி ஒற்றைப் பிராமணன் – அபசகுனம்)
4.ந நக்னோ ஜலம் ப்ரவிசேத்
நிர்வாணமாக நீரில் இறங்கக்கூடாது
5.ந நிஷ்ப்ரயோஜனம் அதிகாரவந்த: ப்ரபுபிராஹூயந்தே- முத்ரா ராக்ஷசம்
அதிகார வர்கம், காரணமில்லாமல், பிரபுக்களை அணுகுவதில்லை.
6.ந யுக்தம் ப்ராக்ருதமபி ரிபுமவஞாதும் – முத்ரா ராக்ஷசம்
சாதாரண எதிரிகளையும் புறக்கணிக்காதே
(எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?)

7.நவாங்கானானாம் நவ ஏவ பந்தா: – சுபாஷிதரத்ன பாண்டாகாரம்
இளம் யுவதிகளின் நடை, உடை பாவனை எல்லாமே புதுமைதான்
8.ந வ்யாக்ரம் ம்ருகசிசவ: ப்ரதர்ஷயந்தி – ப்ரதிமா நாடகம்
மான் குட்டிகள், புலியை ஒன்றும் செய்ய முடியாது
9.நாங்கிக்ருதேஷு குணதோஷ விசாரணா ஸ்யாத்
ஏற்றுக் கொண்ட இடத்தில் குணமும் குற்றமும் காணக் கூடாது
10.நிகடஸ்தம் கரீயாம்சமபி லோகோ ந மன்யதே – ஹிதோபதேசம்
பெரியவர்கள் பக்கத்தில் இருந்தால் மதிக்கப்படுவதில்லை
(உள்ளூர் சரக்கு விலை போகாது)
11.நிஜமதனநிவிஷ்ட: ஸ்வா ந சிம்ஹாயதே கிம்
தன்னுடைய வீட்டில் நுழைந்த நாய் சிங்கம் போல இருக்காதா?
12.நிரஸ்தபாதபே தேசே ஏரண்டோபி தூமாயதே – ஹிதோபதேசம்
மரங்கள் இல்லாத இடத்தில் புதர்கள் கூட மரமாகக் கருதப்படும்
(ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை)

13.கதானுகதிகோ லோக:– ஹிதோபதேசம்
ஒருவன் சென்ற பாதையை பின்பற்றிச் செல்வதே உலகம்
(மக்கள் ஆட்டு மந்தை)
14.ஜலபிந்து நிபாதேன க்ரமச: பூர்யதே கட: — ஹிதோபதேசம், சாணக்ய நீதி தர்பணம்
ஒவ்வொரு சொட்டுச் சொட்டினாலும் பானையே நிரம்பிவிடும்.
(சிறு துளி பெரு வெள்ளம்)
15.தஸ்தபதி தர்மாம்சௌ கதமாவிர்பவிஷ்யதி – சாகுந்தலம்
சூரியன் பிரகாசிக்கையில் இருட்டு எங்கே வர முடியும்?
16.நிர்குண: ஸ்வஜன: ஸ்ரேயான், ய: பர: பர ஏவ ச: — ராமாயணம்
நமக்கு வேண்டியவர்கள் குணமில்லாதவரானாலும் சிறந்தவனே
17.நிர்வாணதீபே கிமு தைலதானம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
அணைந்து போன தீபத்துக்கு எண்ணை ஊற்றி என்ன பயன்?
(கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?)

18.நைகஸ்மின் காந்தாரே சிம்ஹயோர் வசதி: க்வசித்
ஒரு காட்டில் 2 சிங்கங்களின் வசிப்பிடம் இருப்பதில்லை
(ஒரே உறையில் இரண்டு வாட்கள் இருக்காது)
19.பங்கோ ஹி நபஹி க்ஷிப்த: க்ஷேப்து: பததி மூர்தனி – கதா சரித் சாகரம்
வானத்தைப் பார்த்து சேற்றை எறிந்தால் அது அவன் மீதே விழும்
(சேற்றில் கல்லை எறியாதே, உன் மீதுதான் தெறிக்கும்)
(யானை தன் தலையிலே மண்ணைப் போட்டுக் கொள்ளும்)
20.பயசா சிஞ்சிதம் நித்யம் ந நிம்போ மதுராயதே
எலுமிச்சை மீது தினமும் பால் வார்த்தாலும் அது தித்திக்காது.
(நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு — — — தின்னதான் போகும்)
படங்கள் என்னுடையவை அல்ல; பேஸ் புக் நண்பர்கள், பல வெப் சைட்டுகளில் இருந்து எடுத்தவை: பஹு தன்யவாத்! ரொம்ப ரொம்ப நன்றி!!
-சுபம்-
You must be logged in to post a comment.