‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை!

ellu urundai

By London swaminathan; Post No 755 dated 23rd December 2013

இந்துமத சடங்குகளில் பயன்படுத்தப்படும் எள், ரிக் வேதத்திலும், சிந்து சமவெளியிலும் காணப்படுகிறது. இதை வேத கால மக்கள் பயன்படுத்தி வந்ததால், சிந்து சமவெளி நாகரீகமும், வேதகால நாகரீகமும் வேறு வேறல்ல என்பதும் தெளிவாகின்றது.

இந்துமத நூல்கள், ‘எள்’ என்னும் தானியத்தை மஹா லெட்சுமியுடனும், மஹா விஷ்ணுவுடனும் தொடர்புபடுத்துகின்றன. தீபாவளி அன்று எண்ணை தேய்த்துக் குளிப்பத்தால் மஹாலெட்சுமி நம்மிடம் என்றும் வாசம் செய்வாள் (செல்வம் நிலையாகத் தங்கும்) என்ற நம்பிக்கையும் தென் இந்தியாவில் உண்டு.

போதாயன தர்மசூத்திரம், க்ருஹ்ய சூத்திரம், ஜைமினீய க்ருஹ்ய சூத்திரம் ஆகியவற்றில் எள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. தைலம் (எண்ணை) பற்றிய குறிப்புகள் அதர்வ வேதத்திலும், சாங்காயன ஆரண்யகத்திலும் காணப்படுகின்றன. ஜாடிகளில் எண்ணையைச் சேமித்து வைப்பது, எண்ணை தேய்த்துக் குளிப்பது ஆகியன பற்றி அவை பேசுகின்றன.(a few Grhyasutra references: Asva. GS1-9-6; Sanka. GS 1-28-6; Pa GS 1-15-4; there are many more in the same Grhyasutras; Panini in his Paniniyam V-2-4, V-i-7)

பிராமணர்கள் மாதந்தோறும் செய்யும் நீத்தார் கடன் ‘தில தர்ப்பணம்’ என்று அழைக்கப்படும். ‘திலம்’ என்றால் எள் என்று பொருள். இந்த சம்ஸ்கிருத சொல்லில் இருந்துதான் ‘தைலம்=எண்ணெய்’ என்ற சொல் வந்தது. இதேபோல தமிழிலும் எள்ளில் இருந்து எடுக்கப்படும் நெய் ‘எள்+நெய்’=எண்ணெய்=எண்ணை என்று ஆகியது. இந்த எள்ளை ஏன் இறந்து போனவர்களுக்குக் கொடுக்கிறோம்? எள்ளை ஏன் சனைஸ்வர பகவானுக்கு நைவேத்தியம் செய்கிறோம்? என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

(திலம் என்பதில் இருந்துதான் திலகம் (பொட்டு) என்பதும் வந்தது போலும்! ‘தில’த்தை பூதக்கண்ணாடியின் கீழே வைத்துப் பார்த்தால் திலகம் உருவத்தில் திகழும்!!)

எள் என்னும் எண்ணை வித்து வேதத்தில் இடம் பெறுகிறது. 3000 ஆண்டுகளுக்கு முன், சிந்து சமவெளியிலும் காணப்படுகிறது.. கறுப்பு, வெள்ளை, பழுப்பு நிறத்தில் இது கிடைக்கும். ஆப்பிரிக்காவிலும் மத்தியக் கிழக்கிலும் எள் காணப்படுகிறது. அசீரிய, எகிப்திய நாகரீகத்திலும் எள் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆயினும் இந்தியாவில் காணப்படும் எள் தனி ரகம். இதன் தாவர இயல் பெயர். சிசேமம் இண்டிகம் Sesamum indicum.

bread with sesame
Bread with sesame

எள் பற்றி கருட புராணத்தில் வரும் குறிப்பை அபிதான சிந்தாமணியில் காண்கிறோம்: “ இது ஒரு சிறு செடி. இதன் வித்தில் எண்ணெய் எடுப்பர். விஷ்ணுவின் வியர்வையில் உண்டானது ( பாமர மக்களுக்குப் புரிவதற்காக இப்படிச் சொல்லுவதுண்டு. அதன் உருவம் வியர்வைத் துளி போல தோன்றும்) ஆகையால் மிகத் தூய்மையானது. இதனைக் கண்டால் அசுரரும் பூதப்பிரேத பைசாச முதலியோரும் வெகுண்டு ஓடுவர். இந்த எள் கருப்பும் வெண்மயுமென இரு வகைத்து. எந்த நிறமுள்ள எள்ளையேனும் தானங்களோடு சேர்த்துக் கொடுப்பின் அதிகப் பயனுள்ளதாகும் சிரார்த்தத்தில் கறுப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்தேவர்கள் அதிகக் களிப்படைவர்—(கருடபுராணம்)

எள்ளும், சனைஸ்வர பகவானும், சனியின் வாகனமான காகமும் கறுப்பு நிறத்தவை. மரணத்துக்கு அதிபதியான எமனும் அவனது வாகனமான எருமையும் கறுப்பு நிறத்தவை. ஆக மரணத்துக்கும் கறுப்பு நிறத்துக்கும் உள்ள தொடர்பு காரணமாக நீத்தார் கடன்களில் எள் பயன்படுத்தப்படுகிறது என்றும் கொள்ளலாம். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்ளுஞ் சாதம் படைக்கப்படுகிறது.

மனிதர்கள் நாகரீகம் அடைவதற்கு முன், இறந்தோருக்கு மாமிசத்தைப் படைத்து வந்தனர் என்றும் பிற்காலத்தில் மாமிசத்துக்குப் பதிலாக எள் கொடுக்கப்பட்டது என்று கூறுவாரும் உளர். உண்மையில் எள்ளில் தாவர வகை புரத்ச் சத்து அதிகம். எண்ணையில் கொழுப்பு சத்தும் அதிகம்.
காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் உபந்யாசம் (16-11-1932, சென்னை)
sesamepodsm

“ ஆவணி அவிட்டத்தன்று எள்ளு மாத்திரம் சாப்பிட்டு அன்று முழுதும் பட்டினி இருந்து மறுநாள் 1008 ஸமித்தால் ஹோமம் பண்ணவேண்டும். அந்த ஹோமம் ஸ்வர வர்ண லோபங்களுக்காகச் செய்ய வேண்டும் அதை ஒவ்வொரு வருஷமும் பண்ணவேண்டும்”.

ஷட் தில ஏகாதசி:

மாசி மாத கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ஆறு எள் (ஷட் தில= ஷடில) ஏகாதசி என்று அழைக்கப்படும். அன்ன தானம் செய்யாத ஒரு பெண் எள் மட்டும் கொடுத்து சுவர்க்கம் புகுந்த கதை இந்த ஏகாதசிக்கு அடிப்படையாக அமைந்தது. அவரைச் சோதிக்க விஷ்ணு, ஒரு பிச்சைக்காரர் வேஷத்தில் வந்தார் என்றும் அப்போது அவர் மண் உருண்டை ஒன்றை மட்டுமே கலயத்தில் போட்டார் என்றும் கதை. அவர் சொர்க்கம் புகுந்தபோதும் தானம் என்ற ஒன்றைச் செய்யாததால் பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் வறட்டி தட்டியதில் எள்ளும்கலந்ததாகவும் அது ஹோமத்தில் பயன்படுத்தப்பட்ட போது அந்தப் புண்ணியமே அவரைக் காப்பாற்றியது என்றும் கூறுவர்.

அன்றைய தினம் ஆறு விதத்தில் எள் பயன்படுத்தப்படுகிறது. ஆறு வகை உபயோகங்கள்: இறந்து போன உறவினருக்கு நீருடன் அளிப்பது, தானம் செய்வது, உணவில் சேர்ப்பது, எண்ணை தேய்த்து குளிப்பது, மசாஜ் செய்வது, யாகத்தில் பயன் படுத்துவது.

மகர சங்கராந்தி, சகட் சௌத் பண்டிகைகளில் எள் உருண்டை கொடுக்கும் பழக்கமும் மஹாராஷ்ட்ரம் முதலிய மாநிலங்களில் உண்டு. அவ்வாறு கொடுக்கும் போது “ இந்த எள் உருண்டையை ஏற்றுக் கொண்டு இனிய சொற்களைக் கூறுங்கள்” என்று சொல்லும் வழக்கமும் இருக்கிறது. அதாவது பழைய மோதல் சம்பவங்களை மறந்து நட்புடன் வாழத் துவங்குவோம் என்பது இதன் பொருள். இதனால் மகர சங்கராந்தியை தில (எள்) சங்கராந்தி என்றும் அழைப்பர்.

open sesame 1

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் “ஓப்பன் சிசேம்” என்று சொன்னவுடன் குகையின் வாயில் திறக்கும். இந்த சொற்றொடரை இப்போது ஆங்கிலத்தில் காணலாம். ஆனால் இதன் மூலமோ காரணமோ யாருக்கும் தெரியாது. ஒருவேளை இது இந்துமததில் இருந்து சென்றிருக்கலாம். ஏனெனில் சுவர்க்கத்தின் வாயில் திறக்கவும், இறந்தோர் வாழும் இடத்துக்கு நமது மதிப்பையும் மரியாதையையும் அனுப்பவும் எள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது (ஷடில ஏகாதசி கதையில் விவரம் காண்க).

தென் இந்தியாவில் எல்லா சமயச் சடங்குகளிலும் நல்லஎண்ணைதான் பயன்படுத்தப்படுகிறது எள்ளில் ஏராளமான வகைச் சத்துகள் இருக்கின்றன. எள் செடியின் எல்லா பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. (விக்கிபீடியா முதலிய கலைக் களஞ்சியங்களில் கண்டு கொள்க)

சங்க இலக்கியத்தில் எள்

தமிழில் சங்க காலம் முதலே எள் பற்றிய குறிப்புகள் உண்டு. எள் பற்றிய வினைச் சொற்கள், பெயர்ச் சொற்கள், பழமொழிகள் ஆகியவற்றைப் பார்க்கையில் தமிழர்களின் வாழ்வில் எள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டறக்கலந்த ஒரு பண்டம் என்பதும் புலனாகிறது. கீழே விவரங்களைக் காண்க:

எள்ளல்= கேலி செய்தல், மட்டம் தட்டுதல்
எள்ளி நகையாடுதல்= நகைப்புரியவனாக்குதல், அவமானப்படுத்தல்
எள் அளவும் சந்தேகம் இல்லை= ஒரு துளியும் சந்தேகம் இல்லை
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை= மிகவும் மலிவான பொருள்
கூட்டத்தில் எள் போட இடம் இல்லை= நெருக்கமான கூட்டம், கொஞ்சமும் இதம் இல்லை
அவ்வளவு கூட்டம்! எள்ளுப் போட்டால் எண்ணெய் ஆகிவிடும்!= எள் நசுக்கப்படு எண்ணை வெளியேறும்.

sesame pods

இப்படி எத்தனையோ சொற்களும் சொற்றொடர்களும் இருப்பதைக் காண்கையில் இந்த தானியம் பாரத நாட்டிலேயே தோன்றியிருக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. ‘தில’ என்ற சம்ஸ்கிருத சொல் மூலமோ ‘எள்’ என்ற சொல்லின் மூலமோ வேறு மொழிகளில் இல்லாததால் வெளி தேசத்தின் செல்வாக்கு நம் மீது இல்லை; எள் என்பது இறக்குமதியான பொருள் இல்லை என்பதும் விளங்கும்.

பிராமணர் வீட்டு திதிகளிலும் எள்ளுருண்டை பயன்படுத்தப்படுகிறது மத்தியக் கிழக்கில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், யூதர்கள் ஆகியோர் எள்ளைக் கொண்டு செய்யப்படும் இனிப்பு முதலியவைகளைச் சாப்பிட்டாலும் இந்துமதம் ஒன்றில்தான் இது சமயச் சடங்குகளில் பயன்படுகிறது. பொதுவாக வேற்று நாட்டுச் சரக்குகள் சமயச் சடங்குகளில் இடம்பெறாது. பிராமணர்கள், திவசங்களில் மிளகாய் முதலிய இறக்குமதிப் பண்டங்களையோ, முட்டைக்கோசு, காலிபிளவர், முதலிய வெளிநாட்டுக் காய்கறிகளையோ இன்றுவரை திவசத்தில் சமைக்கமாட்டார்கள். ஆகவே எள் எனபதை இந்தியர்களுக்கு யாரும் அறிமுகப் படுத்தவில்லை. இந்தியர்கள்தான் மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தினார்கள் என்றால் மிகை இல்லை.

சங்க இலக்கியத்தில் எள் :– அகம்-71, கலி-35-23, குறுந்த்- 112, புற—174, 246, 313, 321, மலை-562.. இதுதவிர, எள்ள, எள்ளப்படு, எள்ளல், எள்ளலன், எள்ளலான், எள்ளார், எள்ளி, எள்ளிய, எள்ளினும், எள்ளீயும், எள்ளு, எள்ளுக, எள்ளுதல், எள்ளுநர், எள்ளுபு, எள்ளும், எள்ளுமார், எள்ளுவாய், எள்ளுற்று என்று பல வினை சொற்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் இருப்பதால் எள் என்பது இந்தியாவில் தோன்றி வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கவேண்டும் என்பது என் முடிவு. எள் என்பதில் இருந்தே எளிய, எளிமை முதலியன வந்ததா என்பதும் ஆய்வுக்குஇய விஷயங்கள்.
திருவள்ளுவரும் 281, 470, 1298 முதலிய குறள்களில் எள்ளைப் பயன்படுத்துகிறார்.

borwn-sesame-l

புறநானூற்றில் எள் துவையல்
பூதப் பாண்டியன் இறந்தவுடன் கணவனின் சிதைத் தீயில் பாய்ந்து உடன்கட்டை ஏறமுயன்ற கோப்பெருந்தேவியை (மஹா ராணியை) சான்றோர்கள் தடுத்து நிறுத்தமுயன்றனர். இதனால் மிகவும் கோபம் அடைந்த தேவியார் ஒரு அழகான பாட்டைப் பாடி அவர்களை நிந்தித்துவிட்டு தீயில் பாய்ந்தார். அந்தப் பாட்டில் “ என்னை நெய் இல்லாத தண்ணீரில் ஊறவைத்த சோறும், புளிச்ச கீரையும், எள்ளுத் துவையலும் சாப்பிடும் பெண் என்று நினத்துவிட்டீர்களா?” என்று சாடுகிறார். இதிலிருந்து அக்கால உணவுப் பழக்கங்களும் தெரியவருகிறது.

சூடாமணி நிகண்டு எள், நூ, எண் ஆகிய மூன்று பெயர்களை எள்ளுக்குத் தருகிறது. எள் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த எல்லா வினைச் சொற்களும் மட்டமான பொருளிலேயே (எ.கா. எள்ளி நகையாடுதல்) வரும். ஆனால் எள்ளின் மகிமை தெரிந்த பின்னர் இனிமேல் எள்ளை மதிப்புடன் நடத்துவோம்!!

Please read my earlier post The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty. Contact swami_48@yahoo.com