Article No.1987
Compiled by London swaminathan
Date 11th July 2015
Time uploaded in London: 18-33
உலகில் பல அறிஞர்கள் பிராணிகளையும் தாவரங்களையும் வகை வகையாகப் பிரித்தனர். இதிலும் இந்துக்கள்தான் முதலில் நிற்கின் றனர். தொல்காப்பியத்திலும் உயிரினங்களை ஆறு வகை யாகத் தொல்காப்பியர் பிரித்தார். அதற்கு முன் வடமொழி நூல்களில் பல வகையாகப் பிரித்தனர். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூட ஆலமரம், அரசமரம், அத்திமரம் ஆகியன ஒரே வரியில் விஷ்ணுவின் பெயர்களாக வரும். இவை மூன்றும் ‘பைகஸ்’ என்னும் ஒரே ‘ஜீனஸ்’ என்று 17ஆம் நூற்றாண்டில்தான் தாவரவியல் அறிஞர்கள் பிரித்தனர். யாகத்துக்கு வேண்டிய சமித்துக் குச்சிகள், நவதான் யங்கள், பத்துவகைப் புற்கள் என்று எங்கு பர்த்தாலும் பிரித்து வைத்திருப்பதை சம்ஸ்கிருத நூல்களில் நாம் சர்வ சாதாரண மாகக் காணலாம்.
கலைக் களஞ்சியங்களில் பார்த்தால் ஐரோப்பியர்கள் பெயர்கள் மட்டுமே இருக்கும். ஐரோப்பியர்களுக்கு 17-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் சம்ஸ்கிருதம் தெரியாததால் நம் நூல்களில் இருப்பது தெரியவில்லை. அவர்கள் சொல்லும் அரிஸ்டாடில் போன்றோரும் அவருக்கு முந்தைய பிதகோரஸ் போன்றோரும் உபநிஷத உண்மைகளை அப்படியே ஒப்புவித்திருப்பதால் அவர்களுக்கு இந்திய புத்தகங்கள் கிடைத்ததும் புலப்படும்.
மேலும் வேதங்களில் மட்டும் யாரும் கை வைக்கக்கூடாது. அதில் இலக்கணப் பிழை இருந்தாலும் கூட திருத்தக்கூடாது என்ற மரபு இன்றுவரை இந்தியாவில் இருந்து வருகிறது. மற்ற எல்லா நூல்களையும் அவ்வப்போது திருத்தி, புதிய பகுதிகளைச் சேர்த்துப் புதுமைப் படுத்தியதால், வெள்ளைக்காரர்கள் அந்த கடைசியாகச் சேர்த்த பகுதியின் அடிப்படையில் நம் நூல்களுக்குப் புதுத் தேதியை முத்திரை குத்தினர்.
நம்முடைய பங்களிப்பை ஒத்துக் கொள்ளாவிடிலும் உலகில் புத்தக விஷயத்தில் நம்மை மறுதளிக்க எவரும் இல்லை. உலகில் எல்லா வகைப் புத்தகங்களும்—சமயம் முதல், இலக்கணம், அகராதி, இண்டெக்ஸ், நிகண்டு, செக்ஸ், பெண்களுக்கான சிலபஸ் (64 கலைகள்) வரை எல்லாம் சம்ஸ்கிருதத்தில்தான் முதல் முதலில் காணப்படுகின்றன. இது பற்றி முன்னரே எழுதிவிட்டேன். இப்போது புத்தகங்களை வகைப் படுத்திப் பிரித்திருப்பதை மட்டும் காண்போம்.
வேதங்கள் நான்கு:
திருணதூமாக்கினி இயற்றிய தொல்காப்பியத்துக்கு முன்னுரை (பாயிரம்) எழுதிய பனம்பாரனார் கூட, அதங்கோட்டு ஆச்சார்யார் என்னும் நான் மறை முற்றிய வேதப் பிராமணன் தான் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நிலந்தரு திருவிற் பாண்டியனுக்கு சிபாரிசு செய்தார் என்று சொல்லியி ருக்கிறார். இந்த தொல்காப்பியத்துக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வேத வியாசர் என்பவர்தான் இப்படி வேதங்களை ருக், யஜூர், சாமம், அதர்வணம் என நான் மறையாக வகுத்தவர். ஆக உலகில் முதல் முதலில் புத்தகங்களை வகைப் படுத்தியவர் வியாசரே. அவரே புராணங்களை 18 ஆகவும் பிரித்து வைத்தார்.
தமிழர்களும் அதையே செய்தனர்:
வியாசர் என்னென்ன செய்தாரோ அதைத் தமிழர்கள் அப்படியே செய்தனர்; அவ்வளவு மதிப்பு அவர் மீது! அவர் 4 என்ற நம்பரில் வேதங்களைப் பிரித்ததைப் பார்த்து அவர்களும் 4, 40, 400 என்னும் “லக்கி நம்பரை” எல்லா நூல்களுக்கும் சூட்டினர். அது மட்டுமல்ல. வேத வியாசருக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேதங்கள் தோன்றியதால் அவருக்கே பல புலவர்கள் பெயர் தெரியவில்லை. ஆகவே அந்தப் புலவர் பயன்படுத்திய சொற்றொடரைவைத்து புதுப்பெயர் கொடுத்தார். இதையும் தமிழர்கள் தேய்புரிப்பழங்கயிறு, செம்புலப்பெயல்நீர் என்று புலவர்களின் பெயர்களாகச் சேர்த்தனர். தமிழர்களும் வேதவியாசர் புராணம், வேதம் முதலியவற்றைத் தொகுத்தது போலவே பல நூல்களைத் தொகுத்தனர்.
அதுமட்டுமல்ல புத்தகங்களுக்கு எண்களின் பெயர்களைக் கொடுத்தனர். உலகில் முதல் இலக்கணப் புத்தகம் எழுதிய பாணினி என்னும் புலவர் தனது நூலுக்கு அஷ்டாத்யாயி – (எட்டு அத்தியாயம்) என்று பெயர் உண்டாக்கியது போல தமிழர்களும் எல்லாப் புத்தகங்களின் பெயரிலும் எண்களைச் சேர்த்தனர் (பதிற்றுப் பத்து, ஐங்குறுநூறு). சம்ஸ்கிருதத்தில் அஷ்டகம் (8), சதகம் (100), சஹஸ்ரநாமம் (1000) முதலியன மிகவும் அதிகம்.
வேத வியாசரைப் பின்பற்றி தமிழர்களும் 18- என்ற எண்ணைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். வியாசர் செய்தது போலவே சங்க இலக்கியத்தை 18 மேல் கணக்கு நூல்கள் என்றும் சங்க இலக்கியத்துக்குப் பிற்காலத்தில் வந்த திருக்குறள் போன்ற 18 நூல்களைக் கீழ்க் கணக்கு நூல்கள் என்றும் பிரித்தனர். அது மட்டுமல்ல சம்ஸ்கிருதத்தில் பஞ்ச மஹா காவியங்களைப் பிரித்தது போல ஐம்பெருங் காப்பியங்களைப் பிரித்து அவைகளுக்கு காப்பியம் என்ற சம்ஸ்கிருதப் பெயரையும் சூட்டினர். சுருங்கச் சொன்னால் அவர்களுக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் இரு வேறு மொழிகள் அல்ல. ஒரே உடலின் இரண்டு கண்கள்!
பிரஸ்தானத்ரயம் (3)
இந்து மதத்தின் அஸ்திவாரமாக அமைந்துள்ள மூன்று புத்தகங்கள்:
உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை. இதை பிரஸ்தானத்ரயம் என்பர். அதில் மூன்று என்ற எண் உள்ளது.
தசோப(10)நிஷத்துகள்
150–க்கும் மேலான உபபநிஷதங்கள் இருந்தபோதிலும் பத்து உபநிஷத்துகளே முக்கியமானவை:பிருஹத் ஆரண்யக, ஈச, ஐதரேன கேன, கதோ, சாந்தோக்ய, முண்டக, மாண்டூக்ய, தைத்ரீய என்று பத்து நூல்களை ஒன்றாக வகைப்படுத்தினர். அதை தச (பத்து) உபநிஷத் என்ற எண்ணால் குறிப்பர்.
18 புராணங்கள்
வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, லிங்க, மார்க்கண்டேய, மத்ஸ்ய, நாரத, பத்ம, சிவ, ஸ்கந்த, வாமன, வராஹ, விஷ்ணு (வாயு=சிவ புராணம்) ஆகிய 18 புராணங்கள்
18 உபபுராணங்கள்
சிறிய, முக்கியமற்ற புராணங்களை 18 ஆகத் தொகுத்தனர்:-சநத்குமார, நரசிம்ம, பிருஹந்நாரதீய,சிவரஹஸ்ய, துர்வாச, கபில, வருண, காலிக, சம்பா, நந்தி, சௌர, பராசர, மஹேச்வர, பார்கவ, வசிட்ட, தேவிபாகவத, முத்கள, கணேச என்பன 18 உப புராணங்கள். சிலர் இதில் வேறு சில பெயர்களைச் சேர்த்து சிலவற்றை விடுப்பர்.
பஞ்ச (5) மஹா காவ்யங்கள்
காளிதாசனின் ரகுவம்சம், குமாரசம்பவம், மாகனின் சிசுபாலவாதம், பாரவியின் கிராதர்ஜுனீயம், ஹர்சனின் நைசத சரிதம்
தமிழர்கள் சாதனை
தமிழர்கள் சங்க இலக்கியத்தை 18 மேல் கணக்கு நூல்களாகப் பிரித்தனர்; அவையாவன:–
எட்டுத் தொகை (8)
புறநானூறு(400), அகநானூறு (400), நற்றிணை400, குறுந்தொகை400, ஐங்குறுநூறு (500), பதிற்றுப்பத்து (10×10=100), கலித்தொகை, பரிபாடல்
(தமிழர்களின் 4,40, 400 எண் மோஹம் குறித்து முன்னரே ஒரு கட்டுரை எழுதினேன்)
1995 ஆம் ஆண்டுத் தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் “சங்க இலக்கியத்தில் எண்கள்”, “சங்க இலக்கியத்தில் நிறங்கள்” என்ற இரண்டு ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்தேன்.
பத்துப்பாட்டு (10)
திருமுருகாற்றுப் படை , பொருநர் ஆற்றுப் படை, பெரும் பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பட்டினப்பாலை, முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம்
ஐம்பெருங் காப்பியங்கள்
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
18 கீழ்க் கணக்கு நூல்கள்
திருக்குறள், நாலடியார்400, பழமொழி400, நான் (4) மணிக்கடிகை, திரி(3) கடுகம், ஏலாதி, கார் நாற்பது40, களவழி நாற்பது 40, இன்னா நாற்பது40, இனியவை நாற்பது40, திணைமாலை நூற்றைம்பது 150, ஐந்திணை ஐம்பது 50, ஐந்திணை எழுபது70, திணைமொழி ஐம்பது 50, இன்னிலை, சிறுபஞ்ச (5)மூலம், முதுமொழிக்காஞ்சி,ஆசாரக் கோவை.
இவை எல்லாம் இந்துக்களின் மேதாவித்தனத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. ரிக்வேதத்திலேயே டெசிமல் சிஸ்டத்தை பயன்படுத்தி ஆயிரம், லட்சம் என தசமஸ்தானத்தில் எண்களை அடுக்கி தங்களுக்கு உள்ள எண் அன்பை, நியூமெராலஜி மோஹத்தைக் காட்டிவிட்டனர்.
swami_48@yahoo.com
படங்களுக்கு நன்றி
You must be logged in to post a comment.