
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9667
Date uploaded in London – –30 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று May 30 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
ஆயுர்வேத மருந்தை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் உதவும்

ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருப்பதி- திருமலை தேவஸ்தானம் முன் வந்துள்ளது.
ஆந்திராவின் நெல்லுார் மாவட்டம், கிருஷ்ணபட்டணத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கி வந்தார்.
இந்த மருந்தின் மேல் மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை வந்துள்ளது. இந்நிலையில், இந்த மருந்து குறித்து அறிந்த, திருப்பதி திருமலை தேவஸ்தானம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுர்வேத பல்கலைகழக அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரை நேரடியாக கிருஷ்ணபட்டணம் அனுப்பி உள்ளது.
அவர்கள், ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவை சந்தித்து உரையாடி, மருந்து தயாரிக்கப் பயன்படும் வனமூலிகைகள், அதன் தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவற்றை நேரடியாக பார்வையிட்டனர்.
ஆயுஷ் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி கிடைத்ததும், இந்த ஆயுர்வேத மருந்தை அதிக அளவில் தயாரித்து மக்களுக்கு வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் மிக பெரிய ஆயுர்வேத பல்கலைக்கழகம் மற்றும் மருந்து தயாரிப்பு கூடம் திருப்பதியில் உள்ளது. எனவே, இந்த மருந்தை தயாரித்து தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகம் வாயிலாக மக்களுக்கு வினியோகிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது
Xxxx

பாபா ராம்தேவ் சவால்! அவங்க அப்பா வந்தாலும் என்னை கைது செய்ய முடியாது!!
அவங்க அப்பா வந்தாலும் என்னை கைது செய்ய முடியாது என பாபா ராம் தேவ் பேசியிருக்கும் வீடியோ மேலும் சர்ச்சையாகியுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்துக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அறிவுறுத்தலின் பேரில் அவர் தனது கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
சமீபத்தில் பாபா ராம்தேவ் பேசிய வீடியோவில், “அலோபதி மருத்துவத்தாலும், தடுப்பூசியாலும் 10 ஆயிரம் மருத்துவர்கள், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது என்றும், இந்த முறையை நீக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையெனில் ரூ.1,000 கோடி நஷ்டஈடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
.
பாபா ராம்தேவின் கருத்துக்களால் சர்ச்சை உருவானதைத் தொடர்ந்து அந்த வீடியோ பதிவிலிருந்து அக்கருத்துக்கள் நீக்கப்பட்டன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், “நாங்கள் என்றும் அலோபதி மருத்துவத்திற்க்கு எதிரானவர்கள் அல்ல. அந்நிகழ்வில் பாபா ராம்தேவ் அவர்கள் தனக்கு வாட்ஸ் ஆப்பில் பரவலாக பகிரப்பட்ட கருத்துகளையே மேடையில் படித்துக் காட்டினார். இதற்கும் அவருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறோம்” என்கிறது அந்த நிறுவனம்.
பதஞ்சலி நிறுவனம் குற்றச்சாட்டு
இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜே ஏ ஜெயபால் இந்தியாவை கிறிஸ்தவ மயமாக்க சதி செய்வதாகவும் அதனால்தான் ஆயுர்வேதம் மற்றும் யோகா முறைகளைக் குறை கூ றுவதாகவும் யோகா குரு பாபா ராமதேவின் உதவியாளர் ஆசார்ய பாலகிருஷ்ணா டிவிட்டரில் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பாபா ராம்தேவின் மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், “அவங்க அப்பனால் கூட என்னைக் கைது செய்ய முடியாது. அவர்கள் சும்மா கத்திக்கொண்டு இருக்கிறார்கள்” என்று ராம்தேவ் பேசுகிறார்.
xxxxx

கேரள தேவசம் போர்டின் வருவாய் ரூ.261 கோடியில் இருந்து ரூ.21 கோடியாக சரிவு
திருவாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்துள்ளது.
கேரள மாநிலத்தின் தென் மாவட்டங்களில் உள்ள சபரிமலை உட்பட அனைத்து கோவில்களும் திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்தக் கோவில்களிலிருந்து கிடைக்கும் வருவாய், தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு உதவுகிறது. ஊதியம், ஓய்வூதியம் என, ஆண்டுக்கு ரூ.40 கோடி அளவுக்கு செலவு செய்யப்படுகிறது.
கோவிட் காரணமாக கடந்த 2020ம் ஆண்டிலேயே சபரிமலையில் பக்தர்களின் அனுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கோயில் மூலம் கிடைக்கும் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்துள்ளது. இதனால், செலவுகளை மேற்கொள்ள மாநில அரசிடம் தேவசம்போர்ட் நிதி கோரியுள்ளது. தற்போது கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள கோவில்களின் வருவாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
xxxx
தமிழ்நாட்டு அமைச்சர்களின் பங்களாக்கள் வாஸ்துப்படி மாற்றி அமைப்பு!
புதிய அமைச்சர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பங்களாக்களை, வாஸ்துப்படி மாற்றி அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
சென்னை, கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்காக 70 அரசு பங்களாக்கள் உள்ளன. இவற்றை பொதுப்பணி துறையினர் பராமரித்து வருகின்றனர்.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில் 30 அமைச்சர்களுக்கு, பங்களாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
முதல்வர் ஸ்டாலின், தனக்கு பங்களா வேண்டாம் என்று கூறி விட்டார். மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், வேலு ஆகியோர் சென்னையில் வசிப்பதால், அவர்களுக்கும் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.., வேண்டுகோளை ஏற்று, அவர் தங்கியுள்ள பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்களாக்களை காலி செய்து வருகின்றனர். ஐந்து பேர் இன்னும் காலி செய்யவில்லை. இந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்களில் வாஸ்துப்படி சில பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் தி.மு.க., அமைச்சர்கள் பலர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களது வீட்டை வாஸ்துப்படி மாற்றி அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. அமைச்சர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, புதிதாக படுக்கை, சோபா, நாற்காலிகள், மின் விசிறி, ‘ஏசி’ மற்றும் மின் விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.
Xxxxx

அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது கடந்த May 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி புனிதநீர் அடங்கிய 108 கலசங்கள் வைத்து கடந்த 26-ந் தேதி மாலையில் இருந்து 4 கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து 27-ந் தேதி பகலிலும் கோவிலில் கலசங்கள் வைத்து மகா யாகம் நடந்தது.
ரமேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை கூறினர். தற்போது கொரோனா ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கலசங்களில் உள்ள புனித நீர் மூலம் அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.
Xxxx
திருப்பதியில் கருட வாரதி மேம்பாலத் திட்டம்

ஆந்திர நிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேசப் பெருமாளை பக்தர்கள் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கில் சென்று தரிசனம் செய்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பக்தர்கள் வரத்து பெரிதும் குறைந்துள்ளது. திருப்பதி நகரில் கருட வாரதி என்ற பெயரில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகளை கபிலதீர்த்தம் சர்க்கிள் வரை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கிலும் தொடர்ச்சியாக பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலத்தை விரைவாக கட்டி முடிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலம் கட்டுமானப் பணிகளை திருப்பதி நகராட்சி பூங்கா அருகே தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தேவஸ்தான தலைமை பொறியாளர் ரமேஷ் ரெட்டி உடனிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி, நான்கு வழி மேம்பாலமாக கட்டப்பட்டு வரும் கருட வாரதியை அலிபிரி டோல்கேட் வரை நீட்டிக்க வேண்டும்.
இதன்மூலம் திருமலைக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். பல்வேறு சிக்னல்களில் நின்று செல்வது தடுக்கப்பட்டு கால விரயத்தை தவிர்க்கலாம். திருமலைக்கு நடைபயணமாக செல்ல விரும்பும் பக்தர்களும் அலிபிரிக்கு விரைவாக சென்றடைய முடியும்.
இதற்கான கூடுதல் செலவு குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அதில் உரிய முடிவெடுத்த பின்னர் செலவை ஏற்பது இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
xxxxx
ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜர் கோவிலில் திருஞானசம்பந்தர்-தோத்திரப்பூர்ணாம்பிகைக்கு திருக்கல்யாணம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சிவலோக தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருஞானசம்பந்தருக்கும் அந்த பகுதியில் உள்ள திருநல்லூரை சேர்ந்த நம்பியாண்டார் நம்பி மகள் தோத்திரப்பூர்ணாம்பிகைக்கும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் திருமணம் நடைபெற்ற வரலாறு உள்ளது.
அந்த ஐதீகத்தின்படி ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் இரவு 10 மணிக்கு திருஞானசம்பந்தர்- தோத்திரப்பூர்ணாம்பிகைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதனையடுத்து மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் சாமி-அம்மன் வீதி உலா நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்றனர். பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
Xxxxx
கோவில்கள் மூடல்: இந்த ஆண்டும் களையிழந்த வைகாசி விசாகம்

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர்.
முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே செவ்வாய்க்கிழமை) அனைத்து முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா எளிமையாக நடைபெறறது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் . கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பூஜைகளில் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் அவதரித்ததும் நிருவாணமடைந்ததும் இதே திதியிற்தான் என்பர்.
Xxxx
கோவை ஈஷா அமைப்பின் கொரோனா தடுப்பு சேவை!
. கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பிபிஇ கிட்டுகள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன.
அத்துடன், கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை மயானத்திற்குக் கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன.
கோவை வந்திருந்த அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் கொரோனா தொற்று சிகிச்சை தொடர்பாக ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது அவர்களிடம் கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் கோவை அரசு மருத்துவமனைக்கு 500 பிபிஇ கிட்கள், 5 ஆயிரம் என்95 மாஸ்க்கள், 500 சிபிஏபி முக கவசங்கள் வழங்கப்பட்டன.
ஈஷா சார்பில் கோவையில் உள்ள கிராமங்களில் செய்யப்படும் சேவைகள் குறித்து நிருபர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பது, முன் களப் பணியாளர்களுக்கு முக கவசம் சானிடைசர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அதேபோல் தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பில் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா நோயாளிகளைத் தகனம் செய்யும் சேவையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
xxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
tags- tamilhindu, newsroundup, 30521