மாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி

கேள்விகள் ச. சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள் உண்மை)

திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று உலகமே உம் புகழ் பாடுகிறது. நீவீர் வணங்கும் தெய்வம்?

“தென் நாட்டுடைய சிவனே போற்றி

எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

“நமச்சிவாய வாழ்க நாதந்தாள் வாழ்க

இமைப் பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க”

 

கேள்வி: அந்த இறைவன் எங்கே இருக்கிறான்?

வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி

ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோன் ஆகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு

வான் ஆகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே

 

கேள்வி: முதல் மூன்று ஆழ்வ்வாரை நினைவுபடுத்துமாறு

ஒரு பாடல் பாடினீர்களா?

பூ(த)த்தாரும் பொய்கைப் புனல் இதுவே யெனக் கருதிப்

பேய்த் தேர் முகக்குறும் பேதை குணமாகாமே.

 

கேள்வி: கடவுள் நம் பாவங்களை மன்னித்து மேலும் ஒரு வாய்ப்பு தருவாரா? நீங்கள் கூட அரசாங்க பணத்தை எடுத்து குதிரை வாங்காமல் கோவில் கட்டியதும் ஒரு குற்றம் தானே?

யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால்

வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்

மானே அருளாய்  அடியேன் உனை வந்துறுமாறே

 

கேள்வி: இறைவன் கருணைக் கடலா?

“கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை வெள்ளத்து

அழுத்தி வினை கடிந்த வேதியன்”

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து

பாவியேனுடைய ஊனினை உருக்கி உள் ஓளி பெருக்கி

உலப்பிலா ஆனந்தமாய்த் தேனினைச் சொறிந்து

 

கேள்வி: உங்கள் பாட்டில் மாபெரும் வெடிப்பு BIG BANG பற்றியும் பாடியிருப்பதாகக் கூறுகிறார்களே

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்

அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின்  மேற்பட விரிந்தன

 

கேள்வி: மதுரையில் உமக்காக சிவன் பிட்டுக்கு மண் சுமந்து அடிவாங்கினாராமே?

கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை

மண் சுமந்து கூலி கொண்டக் கோவான் மொத்துண்டு

புண் சுமந்த பொன் மேனி பாடுதுங் காண் அம்மானாய்

 

கேள்வி: பாரதியார் கூட உம்மைப் பார்த்துத்தான் பாரத மாதா பள்ளி எழுச்சி பாடினாரோ?

இன்னிசை வீணையர் யாழினர்  ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணை மலர்க் கயினர் ஒருபால்

 தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

என்னையும் ஆண்டு கொண்டு இன்னருள் புரியும்

எம் பெருமான் பள்ளி எழுந்தருளாயே

 

கேள்வி: ஒரு பாட்டில் இறைவனையே ஏமாளி என்று பாடிவிட்டீரே!

தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை;

சங்கரா! யார் கொலோ சதுரர்?

அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றது ஒன்று என்பால்?

கேள்வி: நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியதாக நாத்திகர்களைச் சாடிய உமக்காக நரிகளைக் கூட சிவ பெருமான் பரிகள் (குதிரை) ஆக்கினாராமே?

“நரியைக் குதிரையாக்கிய நன்மையும்

ஆண்டு கொண்டருள அழகுறு திருவடி

பாண்டியன் தனக்கு பரி மா விற்று”

 

கேள்வி: மனிதனாகப் பிறப்பது மிகவும் அரிதாமே?

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய் பாம்பாகிப்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்”

 

கேள்வி: கடவுளைப் போற்ற நீங்கள் அழகான சொற்களை பயன் படுத்துவதாக

கேள்விப்பட்டோம்:

ஏகன் ,அனேகன், பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன்,தேனார் அமுது, ஆரியன், போக்கும் வரவும் இல்லா புண்ணியன்,, சொல்லற்கரியான், பெம்மான், பெண் சுமந்த பாகத்தன்,ஒப்பிலாமணி,அன்பினில் விளைந்த ஆரமுது,காண்பரிய பேரொளி, நுண்ணர்வு,ஆற்றின்ப வெள்ளமே,சுடரொளி,மெய்யன்,விடைப் பாகன், ஐயன், பெருங்கருணைப் பேராறு, காவலன், தில்லை கூத்தன், தென் பாண்டி நாட்டான்.

“ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம்

திரு நாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ”

முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே”

 

கேள்வி: நன்றாகத்தான் இருக்கிறது.OLDER THAN THE OLDEST NEWER THAN THE NEWEST. “இயம் சீதா மம சுதா” போன்ற கல்யாண மந்திரங்களைக் கூட பாட்டில் பாடியிருக்கிறீர்களாமே?

“உன் கையில்  இப் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற

அங்கப் பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால்”

 

கேள்வி: கடைசியாக ஒரு பொன்மொழி?

“ஒன்றும் நீ அல்லை; அன்றி ஒன்று இல்லை”

அற்புதம்,அற்புதம். நன்றி