Jain Saint Bahaubali, 60 feet tall monolith,Sravanabelagola
மஹா வீரன் யார்? இந்தியாவில் இருவருக்குத்தான் மஹாவீர் என்று பெயர். ஒருவன் அநுமன். மற்றொருவர் சமண தீர்தங்கரர் மஹாவீரர்.
யார் வீரன்? என்று மேலை நாட்டில் கேள்வி கேட்டால் ஏகே 47 துப்பாக்கியால் நூற்றுக் கணக்கான பெயர்களைச் சுட்டுத் தள்ளியோரின் பெயரைக் கூறுவார்கள். திரைப்படம் பார்க்கும் படிப்பறிவு இல்லாதவர்கள் தமிழ் இந்தி திரைப்பட கதாநாயகன் ,வில்லன்கள் பெயர்களைக் கூறுவார்கள். படித்திருந்து ஆங்கிலப் படம் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இண்டியானா ஜோன்ஸ் நினைவுக்கு வரலாம். பயங்கரவாதிகள் என்று ஒரு நாடு முத்திரை குத்துவோரையும் அவருடைய கொள்கையில் நம்பிக்கை கொண்டோர் மாவீரன் என்று கொண்டாடுவார்கள். ஆனால் வியப்பிலும் வியப்பான கொள்கை– இந்தியக் கொள்கை புலன்களை வென்றவனே மஹாவீரன்.
ஒன்றாகக் காண்பதே காட்சி, புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்
என்பது ஆன்றோர் வாக்கு. வள்ளுவனும்” பிறன் மனை நோக்காத பேராண்மை” என்று பெரும் வீரத்தைப் புகழ்கிறான்.
எப்படி துளசிதாசரின் ஹனுமான் சாலீஸா இந்தியர்களைத் தட்டி எழுப்புகிறதோ அதே போல மஹவீரரின் சிலையும் கொள்கைகளும் சிரவணபெளஹோலாவில் உள்ள பாஹுபலியின் சிலையும் நம்மை எல்லாம் புத்துணர்ச்சி பெற வைக்கிறது.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு” ஆகியவற்றை அந்தச் சிலைகளில் காண முடிகிறது. புலன்களை வென்றதாலேயே மஹாவீரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். இது பாரத நாட்டுக்கே உரிய ஒரு கொள்கை. உலகில் வேறு எங்கும் காணமுடியாதது.
“கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், உரும் உடன்று எரியினும், ஊறு பல தோன்றினும், பெரு நிலம் கிளறினும், திரு நல உருவின் மாயா இயற்கைப் பாவை என்று கொல்லிப் பாவையை நற்றிணைப் புலவர் பரணர் வருணித்தது மஹாவீரர், பாஹுபலி போன்ற புனிதர்களுக்கும் பொருந்தும்.
அனுமன் ஜயந்தியும் மஹாவீர் ஜயந்தியும் அருகருகே ஏப்ரல் மாதத்தில் வருவதால் இரண்டையும் இணைத்தேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
You must be logged in to post a comment.