டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை 2

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

தமிழ் இலக்கியத்தில் மருத்துவ நூல்களில் நோய்களின் பட்டியலைப் பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் பக்தி இலக்கியத்தில் ஏராளமான நோய்களை பல (திருப்புகழ்) பாடல்களில் பட்டியலிட்ட ஒரே பக்தர் அருணகிரிநாதராகத் தான் இருப்பார்! இதற்கு என்ன காரணம்?

அருணகிரிநாதர் எல்லோருக்கும் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் நோய்களுக்கு ஒரே டாக்டர் முருகப் பெருமான்தான் என்று உணர்ந்ததே ஆகும். கடவுளை டாக்டராகப் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ‘ருத்ரம்-சமகம்’ என்ற யஜூர் வேதப் பகுதியில் கடவுளை டாக்டர் என்று துதி பாடுகின்றனர்.

‘அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக்’ என்பதில் பிஷக் என்பது டாக்டர் என்று பொருள்.

இந்த ருத்ரத்தில்தான் முதல் முதலாக நமச்சிவாய என்ற அரிய பெரிய மந்திரம் வெளியானது.

பிறவிப் பிணிக்கு மட்டும் இன்றி வாழும் போது உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் முருகனே அருமருந்து என்பது அருணகிரிநாதர் முடிவு.

அருணகிரிநாதர் அவர்தம் திருப்புகழ் பாடல்களில் நோய்களை வரிசைபடுத்தி பாடும் அழகே தனி அழகுதான். அந்தக் காலத்தில் பொதுவாக கவலை தந்த நோய்கள் என்ன என்னும் சமூகவியல் ஆய்வுக்கும் இவை துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. இதோ சில பாடல்கள்:

 

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்

விழிவலி வறட்சூலை காயாசுவாசம்வெகு

சலமிகு விஷப்பாக மாயாவி கார பிணி—-யணுகாதே

 

பொருள்: தலைவலி, வசிய மருந்தால் வரும் நோய், மஞ்சள்காமாலை ரத்தசோகை, சுரம், கண்வலி, வறள் என்ற வயிற்று வலி, காச நோய் (டி.பி.), மூச்சுப் பிடிப்பு, நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், மாயையால் வரும் விகாரமான நோய்கள் என்னை அணுகாதவாறு காப்பாயாக

டயாபடீஸ் என்னும் சர்க்கரை வியாதி மிக நீண்ட காலமாக இந்திய மக்களை வாட்டிவருவதால பல பாடல்களில் நீரிழிவு, வெகு சலம் என்று குறிப்பிடுகிறார். கண் வலிக்கு தூய தமிழில் விழி வலி என்று கூறுவதும் படித்து இன்புறத்தக்கது.

இன்னும் ஒரு பாடலில்

 

இருமலு ரோக முயலகன் வாத

மெரிகுண நாசி—விடமே நீ

ரிழிவுவிடாத தலைவலி சோகை

யெழுகளமாலை—யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை

பெருவலி வேறுமுள நோய்கள்

பிறவிகள் தோறு மெனை நலியாத

படியுன தாள்கள்—அருள்வாயே

 

இருமல், முயலகன் என்னும் வலிப்பு நோய், வாதம், மூக்கு எரிச்சல், விஷ நோய்கள், நீரிழிவு (டயபடீஸ்), நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றிவரும் கழலை, மகோதர நோய், நுரை ஈரலில் ஏற்படும் கோழை, நெஞ்சு எரிச்சல், தீராத வயிற்றுவலி, மிகவும் வலி தரக் கூடிய பிற நோய்கள் எந்தப் பிறவியிலும் என்னை அணுகாதபடி அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

தீராத தலை வலி என்பது மைக்ரைன் என்னும் ஒற்றைத் தலைவலி ஆகும்.நெஞ்சு எரிச்சல் என்பது அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நோயாக இருக்கலாம். இதோ இன்னும் ஒரு வியாதிப் பாடல்:

 

வாதம் பித்தமிடா வயிறீளைகள்

சீதம் பற்சனி சூலை மகோதர

மாசங்கட் பெரு மூல வியாதிகள்— குளிர் காசம்

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி

யோடுந் தத்துவ காரர் தொணூற்று

வாறுஞ் சுற்றினில் வாழ் சதிகாரர்கள்—-வெகுமோகர்

 

இதில் வாத, பித்த, கப நோய்கள், பானை வயிறு, சீதபேதி, ஜன்னி, வயிற்றுவலி, மகோதரம், கண் நோய்கள், மூல வியாதி, குளீர் ஜுரம்,காச நோய், தொடர்ந்து வரும் வாந்தி என பெரிய பட்டியலிட்டுவிட்டார்.

இவ்வாறு வியாதிகளைப் பட்டியல் இட்டுவிட்டு இவைகள் வரக்கூடாதென்று அவர் வேண்டுவது அவருக்காக அல்ல என்பதை நாம் அறிய வேண்டும். முருக பக்தர்களை இந்த நோய்கள் அணுகாது என்பதோடு, அப்படியே முன்கூட்டியே நோய்வந்தவர்கள் இந்த திருப்புகழ் பாடல்களைப் படித்தால அந்த நோய்கள் பறந்தோடிவிடும் என்பதும் கண்கூடு.

கந்த சஷ்டிக் கவசம் உள்பட பெரும்பாலான கவசங்களில் நோய்களின் பெயர்கள் சுருக்கமாக மட்டுமே வரும். ஆனால் நம் மீது கருணைகொண்ட அருணகிரி அத்தனை நோய்களையும் பட்டியல் போட்டு முருகனிடம் வேண்டி நமக்கு அருள் பாலிக்கிறார்.

இதோ இன்னும் இரண்டு பாடல்களை மட்டும் தருகிறேன்:

 

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்தமூல

நீள்குளிர் வெதுப்புவேறு—முளநோய்கள்

நேருரு புழுக்கள் கூடு நான்முக நெடுத்த வீடு

நீடிய விரத்த மூளை— தசைதோல் சீ

பாரிய நவத்துவார நாறுமு மலத்திலாறு

பாய்பிணி யியற்று பாவை— நரி நாய் பேய்

 

இதில் முன்கூறியவாறு வியாதிகளை வரிசைப்படுத்திவிட்டு இந்த 9 துவாரங்கள் உள்ள உடல், புழுக்கள் உடையது. நரியும் நாயும் கோட்டானும் கழுகுகளும் உண்ணும் பாழான உடல் எடுத்து வீண்பொழுது போக்கமாட்டேன் என்கிறார். கடைசியாக சிவஞான சித்தி பெற நோயற்ற உடல் வேண்டும் என்று வேண்டுகிறார்.

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி

வறல் சூலை குட்டமொடு—குளிர்தாகம்

மலநீ ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை

வருநீர டைப்பினுடன் …….. வெகுகோடி

சிலை நோயடைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை

தெளியாவெ னக்குமினி—முடியாதே

சிவமார் திருப்புகழை எனு நாவினிற்புகழ

சிவஞான சித்திதனை—யருள்வாயே

 

இதிலும் வலிப்பு, பித்தம் கண்டமலை, சிலந்திப் புண், உடல் இளைப்பு, வயிற்று உளைவு, குஷ்டம், குளிர் தாகம் நீரிழிவு, மகோதரம், கபம், வாந்தி, மூத்திரக் கடுப்பு முதலான கோடிக்கணக்கான நோய்களை பெற்று உடல் எடுத்து இனியும் திரிய முடியாது. மங்கலம் நிறைந்த உன் திருப்புகழை நாவாரப் பாட சிவஞான சித்தி அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

மீண்டும் ஒருமுறை நினைவுகூறுவதில் தவறில்லை. இது அருணகிரி தனக்கு வந்த நோய்கள் அல்லது வரக்கூடிய நோய்கள் என்று நினைத்துப் பாடவில்லை. நம்மை எச்சரிக்கவும், நோய்வந்தாலும் திருப்புகழைப் பாடுவோரை அது ஒன்றும் பாதிக்காது என்று உணர்த்தவுமே இப்படி பல பாடல்களில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

நாமும் டாக்டர் முருகனை வணங்கிப் பிறவிப் பிணியிலுமிருந்தும் உடற்பிணியிலிருந்தும் விடுதலை பெறுவோமாக.

 

திரு கோபால சுந்தரம் கொடுத்த பொருள் விளக்க உரையை பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளேன். கௌமாரம்.காம்—க்கு நன்றி.

முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்:

1.தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: