பனை மரங்கள் வாழ்க!

palmyrah_palm_trees

nature's painting

பனைமரங்கள் வாழ்க!
—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 804 தேதி 27 ஜனவரி 14

மரத் தமிழன் வாழ்க- வாழை மரத் தமிழன் வாழ்க என்ற கட்டுரை வரிசையில் பனைமரத் தமிழர்களைக் காண்போம்.

மரங்கள் குறித்த தமிழன் அன்பு தனிப்பட்டது. கோவில் தோறும் தல மரங்களை வைத்தவன் தமிழன். அரசாட்சி தோறும் காவல் மரங்களை வைத்தவன் தமிழன். குறிஞ்சிப் பாட்டில் கபிலன் என்ற “புலனழுக்கற்ற அந்தணாளன்”, 99 மலர்களை அடுக்கிப் பாடினார். பனை மரத்தையும் தமிழன் விட்டு வைக்கவில்லை. பழமொழிகள் மற்றும் பாடல்கள் வாயிலாக நமக்கு அரிய பெரிய கருத்துகளைப் புகட்டுகின்றனர் தமிழ் கவிஞர்கள். இதோ சில சுவை மிகு கவிகள்:

உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே
மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே—முத்தலரும்
ஆம் கமுகு போல்வார் அதமரவர்களே
தேன் கதலியும் போல்வார் தேர்ந்து (நீதி வெண்பா)

பனை மரம் தண்ணீர் ஊற்றாமலேயே பழம் தருகிறது. அதே போல மேன் மக்கள் யாதொரு உதவியையும் பெறாமலேயே உதவி செய்வர். தென்னை மரம் இடையிடையே தண்ணீர் ஊற்றினால் காய்தருகிறது அதே போல மத்திமர் ஒருவர் உதவி செய்தால் பிரதி உபகாரமாக உதவி செய்வர். கமுகும் வாழையும் எப்போதும் நீர் பாய்ச்சினால்தான் பலன் தரும். இப்படி உதவி செய்பவர்கள் கீழ்மக்கள்.
இன்னொரு வகையிலும் பொருள் கொள்ளலாம். பனம் பழம் தானாகவே பழுத்து பலன் தரும் இத்தகையோர் மேல்மக்கள். தென்னையோ ஏறி காய்களைப் பறித்தால்தான் உதவும் இத்தகையோர் மத்திய மக்கள். கமுகையும் வாழையையும் வெட்டிப் புகைத்தால்தான் பழங்கள் பழுக்கும் இத்தகையோர் கீழ் மக்கள்.இதற்கு நேர்மாறாக, வேறு இரண்டு கவிஞர்கள் பனை மரத்தை கீழ்மக்களோடு உவமிக்கின்றனர்.

விரும்பியடைந்தார்க்கும் சுற்றத்தவர்க்கும்
வருந்தும் பசி களையார் வம்பர்க்குதவல்
இரும்பணை வில்வென்ற புருவத்தாய்! ஆற்றக்
கரும்பணை யன்ன துடைத்து (பழமொழி)
வளைத்த மூங்கில் வில்களை வெல்லும் புருவத்தை உடையவளே! தன்னை அண்டி வந்தவர்க்கும் சுற்றத்தார்க்கும் உதவாமல், அவர்களுடைய பசியைப் போக்காமல், அயலாருக்கு உதவும் மக்கள் கரிய பனை மரத்தை ஒப்பர். (பனை மரம் வித்தை ஊன்றியவர்க்கு உதவாமல் முப்பது ஆண்டுகளுக்குப் பின் தான் பலன் கொடுக்கும்.
தேம்படு பனையின் திரள் பழத்தொரு விதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கிருக்க நிழலாகாதே (வெற்றி வேர்க்கை)

பனை மரத்தின் இனிமையான திரண்ட ஒரு கொட்டையானது ஆகாயத்தை நோக்கி நெடிது வளர்ந்தாலும் ஒருவர் கீழே நிற்கக்கூட நிழல் கிடைக்காது. அது போல கீழ்மக்கள் கையில் எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் யாருக்கும் பயன்படாது. இது பிறிது மொழிதல் அணி.
ஊர்ப் பனையும் சுடுகாட்டுப் பனையும்
நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட்புக்க
படுபனை யன்னர் பலர் நச்ச வாழ்வார்
குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை (நாலடியார்)

பலரும் விரும்பும்படி வள்ளல் தன்மையுடன் வாழ்பவர் ஊர் நடுவில் மேடையால் சூழப்பட்ட பெண் பனை மரத்தைப் போன்றவர். செல்வம் இருந்தும் பிறருக்குக் கொடுக்காதவர் சுடுகாட்டில் இருக்கும் ஆண் பனை மரத்தைப் போன்றவர்.
கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றையராவார் பகர்வர் பனையின் மேல்
வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை ஒலி (நாலடியார்)

பொருள்: கற்றுத் தேர்ந்தவர்கள், பேசினால் பிழை வந்துவிடுமே என்று அஞ்சி கண்டபடி பேசமாட்டார்கள். நன்கு கல்லாதவர்கள் பனை மரத்தில் உலர்ந்த ஓலைகள் எப்போதும் சப்தம் உண்டாக்குவது போல பேசிக்கொண்டே இருப்பர் (நிறை குடம் தழும்பாது, குறைகுடம் கூத்தாடும் என்பது போல இது)

வள்ளுவனுக்குப் பிடித்த பனங்கொட்டை
திருவள்ளுவருக்கு மிகவும் பிடித்த சொல் தினையும் பனையும். மூன்று குறள்களில் ( 104, 433, 1282) தினை அளவையும் பனை அளவையும் உவமையாக வைத்து பல விஷயங்கள் சொல்லுகிறார். இதோ ஒரு உதாரணம்:

தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார் (104)
பொருள்: ஒருவன் தினை அளவு நன்றி செய்தாலும் அதைச் சிறியது என்று எண்ணாமல் பனை அளவு பெரிதாகவே கருதுவர் உதவியின் பயனை அறிந்தவர்கள்.
இதே கருத்தை நாலடியாரிலும் காணலாம்:
தினை அனைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால்
பனை அனைத்தா உள்ளுவர் சான்றோர்………………

பலராமனின் பனைக்கொடி
கண்ணனின் சகோதரன் பலராமன். அவனுடைய கொடி பனைக்கொடி. இந்தக் கொடியை தொல்காப்பியம் (உயிர் மயங்கியல் சூத்திரம்: பனை முன் கொடிவரின்………..), சங்கத் தமிழ் நூல்கள் கலித்தொகை (104-7), பரிபாடல் (2-22), புறநானூறு 56-4,58-14), ஆகியன குறிப்பிடுகின்றன. ஆரிய-திராவிட வாதம் பேசிப் பிதற்றித் திரிவோருக்கு மேற்கூரிய சங்கப் பாடல்கள் செமை அடி கொடுப்பதையும் இங்கே குறிப்பிடுதல் பொருத்தம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை மாங்குடிக்கிழார் பாடிய புறப்பாட்டில் (புறம்.24) கடலோர பரதவர் மகளிர் இளநீர், பனை நுங்கின் நீர், கர்ப்பஞ்சாறும் கலந்து உண்டார்கள் என்பார்.

அதிசயப் பனை
விபீஷணன் ராம பிரானுக்கு ஏழு பொன்பனைகளைக் கொடுத்ததாக ராமாயணம் கூறுகிறது. இந்த ஏழு பொன் பனை மரங்கள் என்ன, ஏன் என்று விளக்கப்படவில்லை. இது ஒரு ஆராய்ச்சிக்குரிய விஷயம். ஒருவேளை ராமன் ஏழு மராமரங்களை ஒரே அம்பில் துளைத்ததால் இது கொடுக்கப்படதோ?

சம்பந்தரும் பனைமரமும்
காஞ்சிக்கு அருகில் இருக்கும் திரு ஓத்தூரில் (செய்யாறு) உள்ள பனை மரங்களை ஒரு சிவபக்தர் கோவிலுக்கு என்று எழுதிவைத்தார். அவைகள் எல்லாம் ஆண்பனைகளாக இருந்தமையால் காய்க்கவில்லை. நாத்திகர்கள் அவரைக் கிண்டல் செய்தனர். உன் கடவுளுக்கு சக்தி இருந்தால் அவைகளைக் காய்க்கச் செய்யலாமே என்று பகடி பேசினர் (நெற்) பதடிகள். அந்த நேரத்தில் திருஞான சம்பந்தர் திரு அண்ணாமலையானைத் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தார். பக்தர் தனது மன வருத்தத்தைச் சொன்னவுடன் சம்பந்தர் ஒரு பதிகம் பாடினார். பனை மரங்கள் எல்லாம் காய்த்துக் குலுங்கின.1300 ஆண்டுகளுக்கு முன்னர் இது நிகழ்ந்தாலும் அந்தப் பனை மரங்கள் இறவாப் புகழ் பெற்றுவிட்டன.

பனைமரப் பழமொழிகள்
பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
பனை மரத்துக்குக் கீழே நின்று பாலைக் குடித்தாலும் கள் என்றுதான் சொல்லுவார்கள்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
பட்டணத்து நரியை பனங்காட்டு நரி ஏய்த்துவிடும்
பனை ஏறி விழுந்தவனை கடா ஏறி மிதித்ததாம்
பனையிலிருந்து விழுந்தவனை பாம்பு கடித்தது போல
பனை ஏறியும் பாளை தொடாது இறங்கினாற் போல
பனை மட்டையில் மழை பெய்ததுபோல
பனை மரத்துக்கு நிழல் இல்லை, பறையனுக்கு முறை இல்லை
பனை மரம் ஏறுகிறவனை எத்தனை தூரம் தாங்கலாம்?
பனை வெட்டின இடத்திலே கழுதை வட்டம் போட்டது போல
பழமொழி நானூறு என்னும் பதினென்கீழ்க்கணக்கு நூலில் பல பனை மரப் பழமொழிகள் காணப்படுகின்றன:
குறைப்பர் தம்மேலே வீழப் பனை
பனைப் பதித்து உண்ணார் பழம்

மரம் பற்றிய எனது பழைய கட்டுரைகள்:
1.இந்திய அதிசயம்: ஆலமரம் 2.அருகம்புல் ரகசியங்கள்
3.சிந்துசமவெளியில் அரசமரம் 4.ஒன்றுக்கும் உதவாத உதியமரமே
5.நெல்லிக்காய் மகிமை: அவ்வையாரும் ஆல்பிரூனியும் அருணகிரிநாதரும் 6.இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும்
7.Indian Wonder: The Banyan Tree 8.Flowers in Tamil Culture
9.Power of Holy Durva Grass 10.Ancient Tamil Dress 11 மரத் தமிழன் வாழ்க- வாழை மரத் தமிழன் வாழ்க 12. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
தொடர்பு முகவரி swami_48@yahoo.com

nungu1

nungu

Pictures of Palmyra Tress and Fruits taken from other websites;thanks.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: