Pandya Flags drawn by me.
தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!!
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1127; தேதி:- 24th June 2014.
N.B. If you want to reproduce this article, please email me for permission. Previously I gave blank cheque to some people. They have been uploading all the 1100 posts from my blogs which is not allowed from today. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com
அகத்திய முனிவருடன் அமர்ந்து பாண்டியர்கள் தமிழ் ஆராய்ந்த செய்தி பாண்டியர் செப்பேடுகளில் வருகிறது. மற்றொரு புதுமையான செய்தியும் பாண்டியர் செப்பேடுகளில் காணப்படுகிறது.
“அகத்தியனோடு தமிழாய்ந்தும் மிகத் திறனுடைய வேந்தழித்து
தசவதனன் சார்பாகச் சந்து செய்துந் தார்தராஷ்ட்ரன்
படை முழுதுங் களத்தவிய பாரதத்து பகடோட்டியும்
……………………………………………….. “
இது பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடுகள் (ஒன்பதாம் நூற்றாண்டு) கூறும் செய்தி.
Mighty Pandyan Empire praised by Kalidasa
பாண்டியர்களின் குல குரு அகத்தியன் என்றும் அவர் மூலமாகவே பாண்டியர்கள் முடி சூட்டப்பட்டதாகவும் வேறு சில பாண்டியர் கல்வெட்டுகளும் செப்புகின்றன.
ஆயினும் –தசவதனன் சார்பாகச் சந்து செய்வித்தும் — என்பதற்கு இதுவரை சரியான விளக்கம் கிடைக்கவில்லை என்றே அறிஞர்கள் எழுதி வந்துள்ளனர்.
“ஒரு பாண்டியன் இராவணனைச் சமாதானம் செய்துகொள்ளும்படிச் செய்தான் என்று சாசனம் கூறுகிறது. இந்தப் புராணக் கதையின் விவரம் சரியாகத் தெரியவில்லை” – என்று பாண்டியர் செப்பேடுகள் பத்து ( தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு, 1967 ) என்ற நூல் கூறும்.
‘உச்சி மேற் புலவர் கொள்’ நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் ஒரு சுவையான விஷயம் கூறுகிறார். இது உ.வே சாமிநாதைய்யர் பதிப்பித்த பத்துப் பாட்டு உரையில் சுருக்கமாக உள்ளது:–
“தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்திவந்த இராவணனை, அகத்தியர் பொதியின் மலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினரென்பது பண்டைய வரலாறு” – என்று சாமிநாதையர் குறித்துள்ளார்.
Statue of Agastya found all over South East Asia.
“தென்னவற் பெயரிய துன் அரு துப்பின்
தொன்முது கடவுள் பின்னர் மேய
வரைத் தாழ் அருவி பொருப்பின் பொருந
– என்ற மதுரைக் காஞ்சி பாடல் வரிகளுக்கு (வரி 40-42) எழுதப்பட்ட உரை இது.
இதற்குப் பின் வேறு சில நூல்களிலும் மிகவும் அறியப்படாத செய்திகள் வருகின்றன. திருவாசகத்தில் மண்டோதரிக்காக சிவன் கடலில் நடந்த வரலாறு ஒன்றும் வருகிறது. உத்தரகோச மங்கை தல புராணம் இதை விரித்துரைக்கிறது. ஆக பாண்டியர்—அகத்தியர் உறவும், தமிழ்நாடு—இலங்கை தொடர்பும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.
Ravana lifting Kailash, Ellora Cave sculpture.
காளிதாசன் என்னும் உலக மஹா கவிஞன், அவனது ரகுவம்ச காவியத்தில் தரும் தகவலைக் கொண்டு ஆராய்கையில் பாண்டியன் – ராவணன் புதிருக்கு விடை கிடைக்கிறது.
நான் ஏற்கனவே எழுதிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் காளிதாசன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் மாணிக்க வாசகரின் காலம், அப்பர்-சம்பந்தருக்குச் சற்று முந்தியது என்றும் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன்.
ராவணன் அவ்வப்போது தென் இந்தியாவுக்குள் புகுந்து அட்டூழியம் செய்தது வேறு பல இடங்களிலும் வருகிறது. ராவணனை வென்று அவனை மடியில் கட்டிக் கொண்டு நாற்கடலில் நீராடி, வாலி, சந்தியா வந்தனம் செய்த செய்தி வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.
இராமாயண முனிவர்கள் என்ற அரிய நூலில் முத்தமிழ் வித்தகர் தி.வே. கோபாலய்யர் சொல்லும் கதை இதோ:–
அகத்திய முனிவர், தமிழிலும் இசையிலும் வல்லவர் என்பது தமிழ் இலக்கியத்தில் எண்ணற்ற இடங்களில் காணக்கிடக்கிறது. “பொதிய மலையின் கண் இருந்து அவர் ராவணனை, ஆங்கு இயங்காதவாறு, கந்தருவத்தால் (இசையால்) பிணித்தார் என்று தொல்காப்பிய பாயிர உரையில் நச்சினார்க்கினியர் சொல்கிறார்.
“ராவணன் ஒரு கால் பொதியமலையில் ஒரு பாறையில் அமர்ந்த வண்ணம் நீண்ட சிந்தனையில் ஈடுபட்டிருந்தான். அவன் அங்கு வந்திருந்ததனை அறிந்த அகத்தியர் அவனால் முனிவர்களுக்குத் தீங்கு நேரலாம் என்ற நினைப்போடு யாழினை இனிமையாக வாசிக்கவே இராவணன் தங்கியிருந்த பாறை உருக, இராவணனுடைய கை, கால்கள் உருகிய பாறைத் திரவத்தில் அமிழ்ந்தன.
இந்நிலையில் அகத்தியனார் தம் யாழ் எழுவுதலை நிறுத்தவே, பாறை மீண்டும் கெட்டிப்படத் தொடங்கியது. சற்று நேரத்தில் பண்டுபோல (முன்னைப் போல) உறுதி உடையதாயிற்று. சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாறுதலை உணராது நினைப்பிலேயே நெடிதும் ஆழ்ந்திருந்த இராவணனுடைய கை, கால்கள் மீண்டும் வன்மையை அடைந்த பாறைக்குள் அகப்பட்டுக் கொள்ள அவனால் எழுந்திருக்க முடியவே இல்லை. அவன் அகத்தியரை வேண்ட, அவன் அவனிடம் அப்பொதிய மலைப் பகமே இனி அவன் வருவதில்லை என்ற உறுதி மொழியைப் பெற்ற பின்னரே, அகத்தியர் மீண்டும் யாழ் எழுவிப் பாறையை உருக்கி அவனை விடுதலை செய்தார் என்ற கதை ஒன்று வழங்கி வருகிறது” –
நச்சி. உரையின் பேரில் கோபாலய்யர் சொன்ன கதை இது. வீணைக் கொடியுடைய வேந்தன் ராவணனின் வீணையும் பாறையில் சிக்கியதாகவும், இருவருக்கும் நடந்த இசைப் போட்டியின்போது இச்சம்பவம் நடந்ததாக வேறு சிலரும் கூறுவர்.
இதற்கெல்லாம் ஆதாரம் வேண்டாமா?
காளிதாசன் தரும் அரிய தகவல்
புறநானூற்றின்மிகப் பழைய பாடலிலேயே (பாடல் 2, முரஞ்சியூர் முடிநாகராயர்= நாகபூஷணம்) பொதியம்- இமயம் ஒப்புமை வருவது அகத்தியர், வட இமயத்தில் இருந்து தென் பொதியத்துக்கு வந்ததைக் காட்டும்.
காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் இந்துமதி சுயம்வரத்தில் ஆறு ஸ்லோகங்களில் பாண்டியன் புகழ் பாடுகிறார். அதில் முக்கியமான செய்தி – அகத்தியர் – பாண்டியர் – இராவணன் தொடர்பு ஆகும். வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்தி காளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்) பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் சொல்கிறார். புற நானூற்றில் பெரிதும் போற்றப்படும் பலயாகசாலை முது குடுமிப் பெருவழுதி கி.மு. முதல் நூற்றாண்டு என்பது நிரூபணமானால் காளிதாசன் குறிப்பிடும் பாண்டியன் அவன் என்ற வரலாற்றுச் செய்தியும் கிடைக்கும்.
பாண்டியன் புகழ் பாடும் முக்கிய ஸ்லோகம்:–
அஸ்த்ரம் ஹராதாப்தவதா துராபம் யேன இந்த்ரலோகாவ ஜயாய த்ருப்த:
புரா ஜனஸ்தான விமர்த்தசங்கீ சந்த்யாய லங்காதிபதி: ப்ரதஸ்தே (ரகு.6-62)
இதன் பொருள்:– தான் இல்லாத போது ஜனஸ்தானம் என்னும் இடத்தைப் பாண்டியர் அழித்துவிடுவரோ என்று பயந்த ராவணன், பரம சிவனைத் துதிபாடி பிரம்ம சிரஸ் என்ற அஸ்திரத்தைப் பெற்றுள்ள பாண்டியரோடு சமாதானம் செய்துகொண்டு இந்திரலோகத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டான் (ரகுவம்சம் 6-62).
ராவணனும் பயப்படும் அளவுக்கு பாண்டியர்களின் பராக்ரமம் இருந்தது!!
Pandya coin found in Sri Lanka, First Century CE
ரகுவம்சம் நாலாவது சர்க்கத்திலும் பாண்டியர்-அகத்தியர் புகழ் அடுத்தடுத்து வருகிறது. தமிழுக்கும் வெளியே இப்படி ஒரு அரிய சான்று கொடுப்பது காளிதாசனின் வடமொழிக் காப்பியம் ஒன்றே ஆகும்.
ஆக நச்சினார்க்கினியர், காளிதாசன் ஆகியோர் மூலம் பாண்டிய வம்சம் மிகப் பழமை உடையது என்பதும் ராமாயண கலத்திலேயே ராவணனை நடுங்கச் செய்தது பாண்டியர்களின் படைபலம் என்பதும் தெளிவாகிறது.
இனவெறி பரப்பும் ஆரிய—திராவிடக் கொள்கைக்கு காளிதாசனும், நச்சினார்க்கினியரும் கொடுக்கும் அடி இது, என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. ராவணன், இலங்கையில் அரசும், தண்டகாரண்யப் பகுதியில் ஒரு ‘காலனி’யும் வைத்திருந்தான் என்பதும், அதைத் தளமாகக் கொண்டே இமயம் வரை சென்று சிவனின் கயிலாயத்தையும் அசைக்க முயற்சித்தான் என்பதும் இதனாற் பெறப்படும்!
–சுபம்–
You must be logged in to post a comment.