Written by S.NAGARAJAN
Date: 25 NOVEMBER 2017
Time uploaded in London- 6-26 am
Post No. 4430
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
மஹாபாரதம்
கடந்த நூறு ஆண்டுகளில் மஹாபாரதம் பற்றிய ஏராளமான, சுவாரஸியமான ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. 2013, டிசம்பரில் வந்த ஒரு செய்தி பற்றிய கட்டுரை இது.
மஹாபாரதம் தெரிவிக்கும் அஸ்திரங்களின் மர்மம்!
ச.நாகராஜன்
1
மஹாபாரதம் ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டது. பிரமிக்க வைக்கும் மர்மங்களைக் கொண்டது.
கதை ரீதியான மரமங்கள் மட்டுமல்ல, இதை இயற்றிய வியாஸ பகவான் மஹாபாரதத்தில் அடக்கி இருக்கின்ற மரமங்களும் ஏராளம்.
கூட ஸ்லோகங்கள் என்று கூறப்படும் சுமார் 8000 ஸ்லோகங்களின் பொருளை விநாயகரே யோசித்துத் தான் புரிந்து கொண்டார் என்றால் சாமானிய மனிதர்களால் மஹாபாரதத்தின் முழுப் பொருளையும் புரிந்து கொள்வது சுலபமில்லை.
ம்ஹாபாரதத்தை பல நூறு கோணங்களில் ஆராயலாம். ஒவ்வொரு ஆராய்ச்சியும் பிரமிக்க வைக்கும் உண்மைகளைத் தெரிவிக்கும்.
2
மஹாபாரதத்தில் கூறப்படும் அஸ்திரங்களைப் பற்றிய அபூர்வமான ஓலைச்சுவடி ஒன்று அஷ்டவைத்யன் வைத்யமடம் செரிய நாராயணன் நம்பூதிரி என்பவரிடம் இருந்தது. இவர் 2013ஆம் ஆண்டில் காலமானார்.
இவரது தொகுப்பில் உள்ள ஒரு மஹாபாரத நூலில் – பனை ஓலைச் சுவடி நூலில் – 63 பகுதிகளில் மஹாபாரதத்தில் கூறப்படும் அனைத்து அஸ்திரங்களும் எப்படி பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றிய விவரங்கள் உள்ளன.
இது சுமார் 120 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
இப்படி ஒரு ஓலைச் சுவடி இந்தியாவிலேயே இது ஒன்று தான்!
48 மந்திரங்கள் இதில் விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த மந்திரங்கள் மூலமாக அஅனைத்து அஸ்திரங்களையும் இயக்க முடியும்.
3
செரிய நாராயணன் நம்பூதிரியிடம் 1300 கட்டு ஓலைச் சுவடிகள் இருந்துள்ளன.இதை அவர் டிஜிடல் மயமாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். இதன் மூலம் எதிர்கால் ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் பயனடைவர் என்பது அவரது எண்ணம்.
சென்ட்ரல் கவுன்ஸில் ஃபார் ரிஸர்ச் இன் ஆயுர்வேதா (Central Council for Research in Ayurveda)-வின் டைரக்டர் திரு ஏ.ஆர். கிருஷ்ணகுமார், “ரெப்ரோகிராபி (reprography) என்ற நம்பகமான முறையில் நாங்கள் டிஜிடல் வடிவமாக இதை ஆக்கும் போது இந்த நூல் அருமையான ஒரு நூல் என்பதை அறிந்தோம் என்றார்.
இந்திராகாந்தி நேஷனல் சென்டர் ஃபார் தி ஆர்ட்ஸ், புது டில்லியிலிருந்து இந்தப் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் கிருஷ்ணகுமாரும் ஒருவர். இவர் ஐஜிஎன்சிஏ- ஐச் சேர்ந்த சீனியர் ரெப்ரோகிராபிக் அதிகாரி. (CCRASS ) Central Council for Research in Ayurdedic Sciences) – நிறுவனத்தின் ப்ராஜக்ட் மேனேஜர் கிருஷ்ணகுமார்.
இந்த மையம் பொது நிலையங்கள் மற்றும் தனியாரிடம் உள்ள அனைத்து ஓலைச்சுவடிகளையும் டிஜிடல் மயமாக்கும் பெரிய பொறுப்பை ஏற்றிருக்கிறது.
ஏன் இவை அனைத்து டிஜிடல்மயமாக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு கிருஷ்ணகுமார் பதில் அளிக்கையில், “ ஏனெனில் இது நமது பண்பாடு, வரலாறு, பழக்க வழக்கங்கள்,பழைய மதங்கள் ஆகியவை பற்றிய தகவல்களைத் தருவதோடு சுற்றுப்புறச் சூழல், உடல் நலம், புராதன கால விஞ்ஞானம் ஆகியவை பற்றித் தெரிவிக்கும்” என்கிறார்.
இது வரை ஆயுர்வேதம் பற்றிய சுவடிகளில் 15 % ஓலைச்சுவடிகள் மட்டுமே டிஜிடல்மயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேதம் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறையாக உலகில் இருக்கிறது. இப்போது சற்று கற்பனை செய்து பாருங்கள். ஐந்து லட்சம் ஓலைச் சுவடி நூல்களில் எவ்வளவு பிரம்மாண்டமான அறிவுச் செல்வம் புதைந்து கிடக்கும்!இது மக்களுக்குக் கிடைத்தால் ஆயுர்வேதம் இன்னும் எவ்வளவு திறனுடன் நன்மை தரும்” என்கிறார் கிருஷ்ணகுமார்.
“கேரளாவில் உள்ள நூலகங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இன்னும் இதர நிறுவனங்களில் உள்ள நூல்களில் ஒரு பகுதியை சில வருடங்களுக்கு முன்னர் டிஜிடலைஸ் செய்தோம்.
இப்போது இரண்டாவது கட்டப் பணியாக பாலக்காடு மாவட்டத்தில் மேழாத்தூரில் உள்ள வைத்யமடத்தில் உள்ளவற்றை டிஜிடலைஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். எங்களது அடுத்த இடம் தச்சு சாஸ்திரம் என்று கூறப்படும் கட்டிடக் கலைக்குப் பெயர் பெற்ற குன்னம் குளத்தின் அருகில் உள்ள கனிப்பையூர் மனா என்ற இடமாகும்.
இன்னும் பல மையங்களில் ஏராளமான சுவடிகள் உள்ளன” என்று கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.
“இதில் ஒரு பெரிய நல்ல விஷயம் என்னவெனில் அனைத்து தனியார் வசம் உள்ள நூல்களையும் டிஜிடலைஸ் ஆக்க அனைவரும் ஒத்துழைப்புத் தருவது தான்!” என்று மகிழ்ச்சி பொங்க அவர் மேலும் தெரிவித்தார். ஆயுர்வேதம் மட்டுமின்றி இயற்பியல் விஞ்ஞானம், இரசாயனம், ஜோதிடம் உள்ளிட்ட பல பொருள்களைப் பற்றிய நூல்கள் இந்த ஐந்து லட்சத்தில் அடக்கம்!
4
இது 2013 டிசம்பரில் வந்த செய்தி. நான்கு வருடங்கள் ஓடி விட்டன. பல நூல்கள் டிஜிடலைஸ் ஆகி இருக்கும்..
மஹாபாரத அஸ்திர விவரங்களை நமது நாட்டு ஆராய்ச்சியாளர்களிடம் தந்தால் மிகப் பெரும் வல்லரசாக நாம் மாறி விடுவோம்.
இதே போலப் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு பொருளில் மஹாபாரத மர்மங்களை அவிழ்த்து வருகின்றனர்.
அவை அனைத்தும் சுவையானவை!
இது கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடை பெற்று வருகிறது.
அப்படியானால் இது வரை மஹாபாரதம் பற்றிய் ஆராய்ச்சி முடிவுகள் எவ்வளவு இருக்க வேண்டும்.
மலைப்பாக இருக்கிறது.
அவை பற்றி அறிந்து கொள்வதே ஒரு ஆனந்தம் தான்!
***