கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை-2 (Post No.12,386)

  

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,386

Date uploaded in London –  8 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மாலைமலர் 3-8-2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

–     

கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை

                     (இரண்டாம் பகுதி )

ச. நாகராஜன்

ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட தலம்

தசரத  மஹாராஜா புத்திரர்களை வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் நடத்த விழைந்தபோது அந்த யாகத்திற்கு தலைமை ஏற்று அதை நடத்தி வைத்தவர் ரிஷ்ய சிருங்கரே. கவிச் சக்கரவர்த்தி கம்பன் ரிஷ்யசிருங்கரை, ‘அருமறை வடிவு போன்று ஒளிர் விசிட்டன்’ (மறையே உருவெடுத்தது போன்று விளங்கும் சிறந்தவன்) என்று வர்ணிக்கிறான்.

அப்படிப்பட்ட அரும் முனிவரே ராமரின் ஜனனத்திற்கும் காரணமாக அமைகிறார். ஆக சிருங்கேரி ராமாயண காலத்துடன் தொடர்பு கொண்ட ஒரு பழம்பெரும் அரிய தவ பூமியாக மிளிர்கிறது.

இக்காலத்திலும் கூட தவம் புரிய விழைவோர் இந்த அழகிய மலைத் தொடரைத் தேர்ந்தெடுத்து தவம் புரிந்து வருகின்றனர்.

சாரதாம்பிகை

சிருங்கேரி பகுதியில் உள்ள வர்ஷா என்ற மலையிலிருந்து பாய்கின்ற நதியே துங்கா நதி. கிழைக்குத் திக்கில் துங்காவோடு கலக்கும் நதியே பத்ரா. அமைதி மிக்க அழகிய வனாந்தரப் பிரதேசத்தில் இந்த இரு நதிகளின் சங்கமத்தில் அமைந்த இடமே சிருங்கேரி.

இங்கு சாரதா தேவியை பிரதிஷ்டை செய்தார் ஆதி சங்கரர். முக்கிய தெய்வங்கள் சாரதாம்பிகை – சந்திர மௌலீஸ்வரர்.

தீர்த்தம் – துங்கபத்ரா தீர்த்தம்.

சாரதா என்றால் சரஸ்வதி அல்லது வாக்கிற்கு அதி தேவதை என்று பொருள்.

சரத் காலத்தில் ஆராதிக்கப்பட்டவள் சாரதை. சரத்காலம் என்பது இலையுதிர் காலம். இது ஐப்பசி கார்த்திகை மாதங்களைக் கொண்டது. இந்தக் காலத்தில் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி எனப்படும். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி எனப்படும். இந்த இரு நவராத்திரி காலங்களும் அம்பிக்கைக்கு மிகவும் உகந்த பூஜை காலமாகும். ஆகவே இந்தக் காலத்தில் சிறப்பு பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன. ஆயிரக் கணக்கில் பக்தர்கள் இங்கு திரண்டு விழாவில் கலந்து கொண்டு சாரதையை வழிபடுகின்றனர்.

‘சாரத’ என்ற சொல்லுக்குப் பண்டிதர்கள் என்ற பொருளும் உண்டு. இவர்களால் பூஜிக்கப்படுபவள் சாரதை.

நுண்ணறிவை அதிகம் கொண்டு மேதையாக ஆக சாரதா வழிபாடு மிகவும் அவசியம்.

லலிதாம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் 123 திருநாமமாக அமைவது சாரதாராத்யா என்னும் திருநாமம். மேற்கண்ட அர்த்தங்களுடன் சாரதா ஆராத்யா என்று இந்தச் சொல்லைப் பிரித்து விஷ்ணு, ப்ரம்மா ஆக்யோரால் ஆராதிக்கப்பட்டவள் சாரதை என்ற பொருளையும் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆகவே சாரதாம்பிகையை வழிபட்டோருக்கு அனைத்து தெய்வங்களின் அருளும் கிட்டுகிறது என்பது ஐதீகம்.

சாரதாம்பிகை ஆலயம்

சிருங்கேரி மடத்தின் உள்ளே இருக்கும் ஸ்ரீ சாரதை, சங்கர பகவத்பாதர், வித்யா சங்கரர், ஜனார்த்தனர், சக்தி கணபதி, வாகீஸ்வரி, ராமர் உள்ளிட்ட ஏராளமான கோவில்களை தரிசித்து அன்பர்கள் பக்திப் பரவசம் அடைகின்றனர்.

ஆதியில் பாறையில் செதுக்கப்பட்ட ஶ்ரீ சக்ரத்தின் மீது சந்தனத்தில் செதுக்கப்பட்ட சாரதா தேவியின் மூல விக்கிரகம் அமைக்கப்பட்டது.

அந்நியரின் படையெடுப்பால் சிதிலமடைந்திருந்த ஆலயத்தை சிருங்கேரி மடத்தின் 12வது மடாதிபதியாகத் திகழ்ந்த வித்யாரண்யர் புதுப்பித்தார். இப்போது காணப்படும் சாரதா தேவியின் சுவர்ண விக்கிரகத்தை அவரே சந்தன விக்கிரத்தின் மீது அமைத்தார்.

தினமும் இங்கு சாரதாம்பிகை- சந்திரமௌளீஸ்வர் பூஜை ஶ்ரீ சங்கராசாரியரால் நடைபெறுகிறது.  ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தம், சாரதா தேவியின் குங்கும பிரசாதம், ஆசாரியர் அருளித்தரும் மந்திர அட்சதை ஆகியவற்றைப் பெற்று பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.

சிருங்கேரி சாரதாம்பிகையை தரிசிப்பதன் மூலம் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

சாரதாம்பிகையே சரஸ்வதி என்பதால் கல்வியை ஆரம்பிக்கும் இளம் சிறார்கள் இங்கு வந்து அதைத் தொடங்குகின்றனர்.

இருக்கும் இடம்

சிருங்கேரி, கர்நாடகத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ளது. பங்களூரிலிருந்து சிருங்கேரி சுமார் 258 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  இதிலிருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்தலம் உடுப்பியாகும். சென்னையிலிருந்து சாலை வழியாகச் சென்றால் சுமார் 648 கிலோமீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

சாரதாம்பிகை தோத்திரம் சாரதையை வணங்குவோர் ‘பரம வித்யாவை’ அடைகின்றனர் என்று கூறி அருளுகிறது.

***

Leave a comment

Leave a comment