ஆலயம் அறிவோம்!  பாண்டிக்கொடுமுடி (Post No.14,735)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 735

Date uploaded in London – 7 July  2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-7-25 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை!

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன் 

aalayam arivom

மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்

பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்

கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக்கொடுமுடி

நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

           – சுந்தரர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் அமைந்துள்ள கொங்கு நாட்டுத் தலமான கொடுமுடி திருத்தலமாகும். இந்தத் தலம் காவேரி நதிக் கரையில் திருச்சி- ஈரோடு சாலையில் ஈரோடிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இறைவர் :  கொடுமுடி நாதர், மருக்கொழுந்தீசர் 

இறைவியார் : சௌந்தராம்பிகை, பண்மொழிநாயகி 

தீர்த்தம் : காவிரி

ஸ்தல விருட்சம் : வன்னி மரம். இந்த மரத்தின் வயதைக் கணக்கிட முடியவில்லை. இதில் பூ பூக்கும், காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். இன்னொரு பக்கம் இருக்காது. பல அதிசயங்கள் கொண்ட மரம் இது. 

லிங்கம் ஸ்வயம்பு லிங்கம் 

இந்தத் தலம் வரையில் தெற்கு முகமாக வந்த காவேரி ஆறு இங்கு கிழக்கு முகமாகத் திரும்புகிறது.

இந்தத் தலத்திற்கு கரையூர் என்றும் பாண்டிக் கொடுமுடி என்றும் வேறு பெயர்கள் உண்டு.

இது மும்மூர்த்தித் தலம் ஆகும். பரமசிவன் ‘முகுடேஸ்வரர் என்றும், விஷ்ணு ரங்கசாமி என்றும் பிரம்மா ஒரு மாயாரூபியாகவும் இங்கு விளங்குகிறார்கள்.

காவேரிக்கு மத்தியில் ஒரு பாறையின் மேல் அகத்திய முனிவர் காவேரியை ஒரு குடத்தில் வைத்திருந்ததை ஒரு காகம் கவிழ்த்து விட்டதாக ஒரு கற்சித்திரம் இங்கு காணப்படுகிறது.  அதனால் தான் காவேரி இங்கு கிழக்கு முகமாகத் திரும்புகிறது என்று மக்கள் கூறுகின்றனர்.

பழனி திருமஞ்சன தீர்த்தம் இங்கிருந்து கொண்டு போவதுண்டு. 

மலயத்வஜ பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டான். ஏனெனில் பிறவியிலேயே அவனது மகனுக்கு விரல்கள் சரியாக வளராமலிருந்தன. கொடுமுடி இறைவனை வேண்டியவுடன் இந்தக் குறை தீர்ந்தது . ஆகவே அடிக்கடி இந்த ஆலயத்தைப் புதுப்பித்து வந்தான். ஆகவே இந்த ஊர் பாண்டிக் கொடுமுடி என்ற பெயரைப் பெற்றது. 

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் மேருமலையைக் கட்டிப் பாதுகாக்க வேண்டும் என்றும் வாயு தேவன் தன் பலத்தினால் மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் இந்திரனால் போட்டி நிர்ணயிக்கப்பட்டது.

ஆதிசேஷன் மேரு மலையை இறுகக் கட்டி அணைக்க வாயு பலமாக வீச, மேருவிலிருந்து ஐந்து சிகரங்கள் தென் திசையில் பறந்து வந்து விழுந்தன. அவைகள் ஐந்தும் ஐந்து மணிகளாக மாறின. சிவப்பு மணி விழுந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் விழுந்த இடம் திருவாட்போக்கி என்று இப்போது அறியப்படும் ரத்தினகிரியாகவும், மரகத மணி விழுந்த இடம் ஈங்கோய்மலையாகவும், நீலமணி விழுந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் விழுந்த இடம் கொடுமுடியாகவும் மாறி, பெரும் தலங்களாக ஆயின. 

மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் இவர் மகுடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். 

கிழக்குப் பார்த்து அமைந்துள்ள கோவில் 640 அடி நீளமும் 484 அடி அகலமும் கொண்டுள்ளது.

கர்பக்ருஹத்தின் இரு புறமும் சூரிய சந்திரர்கள் இருப்பதானது இறைவன் அவர்களைத் தனது இரு கண்களாகக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது என்றும் சிவபிரானின் நெற்றியிலுள்ள அக்னி சிவலிங்கமாகவே நடுவில் திகழ்கிறது என்றும் ஐதீகம் கூறுகிறது.

இங்கு வந்து இறைவனைத் தொழுத அகத்திய ரிஷி லிங்கத்தைக் கட்டிப் பிடித்துத் தொழவே அவரது விரல் ரேகைகள் இன்றும் லிங்கத்தின் மீது காணப்படுகிறது.

விநாயகர், உமா மகேஸ்வரர்,  அகத்தியரால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கம்,  வள்ளி தெய்வசேனாவுடன் சுப்ரமண்யர், 63 நாயன்மார்கள்,  ஆகியோரது சிற்பங்கள் வெளி பிரகாரத்தில் உள்ளன.

உள் பிரகாரத்தில் நடராஜர் சிவகாமியுடன் காட்சி தருகிறார்.

அம்பிகையின் சந்நிதி தெற்கில் உள்ளது. 

கோவிலின் பின்பக்கத்தில் அம்பிகைக்கும் சிவபிரானுக்கும் இடையில் ஆதிசேஷனின் மீது காட்சி அளிக்கும் வீரநாராயணரின் ஆலயம் உள்ளது. அருகில் ஹனுமான், விபீஷணர், பர வாசுதேவர், நாரதர்,  ஶ்ரீதேவி, பூதேவி, கருடர் ஆகியோர் காட்சி தருகின்றனர். வலதுபக்கத்தில் திருமங்கை நாச்சியார் இடம் கொண்டு அருள்கிறார்.

வலப்புறத்தில் ஸ்தல விருட்சமான வன்னி மரம் உள்ளது. 

சமீப காலத்தில் ஆலயத்தின் புனர்நிர்மாணத்தின் போது பல வெங்கலச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் திரிபுராந்தகர், திருஞானசம்பந்தர், திருசாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்டோரின் சிலைகள் இருந்தன.

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதமும் பங்குனி மாதமும்  சிவபிரான் மற்றும் அம்பிகையின் மீது நான்கு நாட்கள் காலை நேரத்தில் சூரிய கிரகணங்கள் விழுகின்றன. இது சூரிய பூஜை என

அறியப்படுவதாகும். 

இத்தலத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடல்களைப் பாடி அருளியுள்ளனர். இங்கு சுந்தரர் நமச்சிவாயப் பதிகத்தைப் பாடி அருளியுள்ளார். அருணகிரிநாதர் இங்கு திருப்புகழ் பாடல் பாடி அருளியுள்ளார்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பண்மொழி நாயகியும் கொடுமுடி நாதரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

**

Leave a comment

Leave a comment