உலகத்திலேயே அதிசயமான திருமண வாழ்த்து!- Part 1 (Post No.15,658)

Written by London Swaminathan

Post No. 15,658

Date uploaded in London –26 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 ரிக் வேத திருமண மந்திரத்தில் 19 வேத கால கடவுள்கள்! மணப்பெண், வீட்டின் மஹாராணி ஆக வாழ்த்து!!

ரிக்வேத திருமண மந்திரத்துக்கு சூர்யா சூக்தம் என்று பெயர்;  பத்தாவது மண்டலத்தில் 85 ஆவது மந்த்ரம் இது .

ரிக்வேத கல்யாண மந்திரத்தை பிராமணர் வீட்டுக் கல்யாணங்களில் இன்றும் கேட்கலாம் ; அதில் 19 வேத காலக் கடவுள்களைத் துதித்துவிட்டு இறுதியில் “மணமகளே நீதான் புகுந்த வீட்டுக்கு அரசி! அங்குள்ள மச்சினி மச்சினன் (மைத்துனன், மைத்துனி ) மாமனார் மாமியார் எல்லோருக்கும் நீதான் ராணி!! என்று வாழ்த்திவிட்டு இறுதியில் அதி மதுரமான,  ரொம்ப சுவையான  ஒரு வாழ்த்தினையும் ஐயர்கள் மந்திரத்தில் ஓதுகிறார்கள் ;நீ பத்து குழந்தைகளைப்  பெற்றுக்கொள்வாயாக ; உனது கணவன் பதினோராவது குழந்தை ஆகட்டும் !”

இதை ஒரு ஜோக் போல எல்லோரும் சிரித்துக்கொண்டே கேட்பார்கள் ; உண்மையில் இது பெரிய மனோதத்துவ , உளவியல் கூற்று Psychological statement ஆகும்.

ஒரு மணப்பெண் குழந்தை பெறும் வரை, கணவனை நூறு சதவிகிதம் நேசிப்பான் ; குழந்தை பிறந்தவுடன், அது ஐம்பது சதமாகக் குறைந்து விடும்; சில ஆண்களைப் பெற்று , அவர்கள் கொஞ்சம் வளர்ந்து விட்டாலோ, அப்புறம் கணவனைப் பக்கத்தில் கூட விடமாட்டாள் ; இன்னும் சொல்லப்போனால் கணவனைக் கவனிப்பது சமையல் அறை  சாப்பாட்டுடன் நின்றுவிடும்; இதை அனுபவத்தில் உணர்ந்த  வேத கால  இந்துக்கள் பெண்ணே , நீ எத்தனை குழந்தை பெற்றாலும் அந்தக் குழந்தை வளரும்வரை எப்படிக் கண்ணும் கருத்துடன் கவனிப்பாயோ, வளர்ப்பாயோ அப்படி உன்னுடைய கணவனையும் கண்ணும் கருத்துடன் கவனிக்க வேண்டும் ; அது மட்டுமல்ல ; நீ பத்துக் குழந்தை பெற்றாலும் கூட இதுவே உனக்கு கட்டளை ! நீதான் புகுந்த வீட்டுக்கு அரசி என்றெல்லாம் புகழ்ந்து தலையில் டன் கணக்கில் ஐஸ் வைத்துவிட்டு இதையும் மந்திரத்தில் சேர்த்துவிட்டார்கள்! 

நிறைய அரைவேக்காடுகள் வெள்ளைக்காரன் எழுதியதை படித்துவிட்டு வேத காலக் கடவுளரை யாரும் வணங்குவதில்லை என்று பிதற்றுவார்கள் ; இப்படிச் சில பிராமணர்களும் கூட எழுதுவதைக் கவனித்திருக்கிறேன் ; அதுகள் எல்லாம் தினசரி சந்தியா வந்தனம் செய்யாத கேஸுகள்; அதுமட்டுமல்ல தர்ப்பணம், திதி, மற்றும்  சில அடிப்படை ஹோமங்களைக்கூட அறியாத அபத்தங்களாக இருக்கும் ; அதுகளை மறந்துவிட்டு சுவையான கல்யாண விஷயத்துக்கு வருவோம் .

***

19 கடவுளர்கள்! யார் அவர்கள்?

அக்னி, இந்திரன், பகன் , வாயு , அஸ்வினி தேவர்கள், வருணன், கந்தர்வன், விசுவாவசு, பூஷன், புரந்தி, சோமன் / சந்திரன், சூர்யா, அர்யமான், மாதரிஸ்வான், தாத்ரு, த்வஸ்த்ரீ , ரைபி, நாராசம்சி, ஸவித்ரு.

***

47 மந்திரங்கள்

இந்த கல்யாண மந்திரத்தில் 47 மந்திரங்கள் உள்ளன.

ஒரு காலத்தில் எல்லா ஜாதியினரும் இதை பின்பற்றியிருக்க வேண்டும் ; ஏனெனில் பூணுல் போடுவது பற்றி ஜாதி வாரியாகக் குறிப்பிடும் மனு ஸ்ம்ருதி, திருமணம் பற்றி ஜாதிவாரியாகக் குறிப்பிடவில்லை ; மேலும் மனு ஸ்ம்ருதி சொல்லும் எட்டு வகைத் திருமணங்களைக் குறிப்பிடும் தொல்காப்பியமும் ஜாதிவாரித் திருமணம் பற்றிச் சொல்லவில்லை .

ஸ்வயம்வரம், காதல் முதலியானவற்றுக்கும் இறுதியில், எல்லோரும் இப்படிச் சடங்குப்படி திருமணம் செய்திருக்கலாம் .

தீயை வலம் வந்து திருமணம் செய்தல் பெண்கள் அணிந்த தாலி ஆகியன பற்றி சங்கத் தமிழ் நூல்களிலும் பாடல்கள் உள்ளன .

***

சங்க காலத்தில் தாலியும் தீ வலமும்

தீ வலம்- குறுந்தொகைப் பாடல் 106; சிலப்பதிகாரம்

தாலி- புறநானுறு 127;  நெடுநல்வாடை 136, 137

திருமண விருந்து வானோர் அமுதம் போல இருந்தது என்று தொ ல்காப்பியமும் சம்ஸ்க்ருத அமிர்தம் பற்றிச் சொல்வதால் (தொல். கற்பு 5)  வேத கால வழக்குகள் தமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்தில் இருந்ததை அறிகிறோம் ; மேலும் தொல்காப்பியர் மனு ஸ்ம்ரிதி சொல்லும் எட்டு வகைத் திருமணத்தை அப்படியே சொல்வதையும் நினைவிற் கொள்ளவேண்டும் .

***

வேத கால மணப்பெண்  ரதம்

இப்போதெல்லாம் மாப்பிள்ளை ஊர்வலம் நடக்கிறது ; ஆனால் வேத காலத்தில் பெண், ஊர்வலமாக மணமகன் வீட்டுக்குச் சென்ற செய்தி மட்டுமே உள்ளது ; அது மட்டுமல்ல தாவரவியல் பிரியர்களான  வேத கால மக்கள் அந்த ரதம் எந்த மரங்களினால் செய்யப்பட்டன என்று செய்தியையும் கூறுகிறது! கிம்சுக மரத்தினாலும் சால்மலி மரத்தினாலும் அந்த ரதம் செய்யப்பட்டது; மேலும் அந்த ரதத்தினை இரண்டு மாடுகள்தான் இழுத்துச் சென்றன ;  அந்தக் காலத்தில் எல்லோருக்கும் Botany பாட்டனி பாடத்தில் புலமை இருந்தது வேறு பல மரங்கள் பற்றிய வேதப் பாடல்களிலும் தெரிகிறது.

 சதஸ் ( அவை)  மண்டபத்தில் அத்தி (உடும்புரா) மரத்தை நடும் மந்திரம் விரிவாக உளது; விஸ்ணு ஸஹரநாமத்திலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆல், அத்தி அரச மரசம் ஆகிய மூன்றினையும் விஷ்ணுவின் பெயர்களாகச் சூட்டியதைக் காண்கிறோம்

ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் ஏனெனில் ஐரோப்பாவில் சில தடயங்கள் உள்ளன என்று புஸ்தகங்கள் எழுதிய வெள்ளைக்கா ரர்கள் திருமணச் சடங்கினையோ இறுதிச் சடங்கினையோ உதாரணம் காட்ட முடியவில்லை ; ரிக் வேதத்தில் உள்ள நூற்றுக் கணக்கான செய்திகளுக்கு இந்தியாவுக்கு வெளியே ஒரு எடுத்துக்காட்டினையும் அவர்களால் காட்ட முடியவில்லை ; ஈரான் என்னும் பாரசீகத்தில் கூட இந்தச் சடங்குகள் இல்லை ; இதிலிருந்து தெரிவது என்ன வென்றால் இங்கிருந்து பல திசைகளிலும் சென்ற இந்துக்கள் சில ஆயிரம் ஆண்டு இடைவெளியாலும் வாழும் இடத்திலுள்ள பருவ நிலையாலும் சில சடங்குகளை மட்டும் அங்கே செய்தனர் என்றே தோன்றுகிறது .

***

ரிக் வேத கால காதல் திருமணங்கள்

சங்க இலக்கியத்தில் பார்ப்பது போல காதல் திருமணங்கள் அதிகம் நடந்தது தெரிகிறது; சமன என்னும் பொது விழாக்களில் இளம் சிட்டுகள் சந்திப்பதும் காதல் வலையில் விழுவதும் பல மந்திரங்களில் வருகிறது. சங்க இலக்கியம் போலவே மணப்பெண்ணின் சகோதரனின் அனுமதியும் ஆதரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது பெற்றோர்களே பார்த்து மணமகனைத் தேர்நதெடுத்த செய்திகளும் உள்ளன . அசுரர் வகைத் திருமணங்களும் நடந்தன இது தொல்காப்பியர் சொல்லும் எட்டு வகைகளில் ஒன்று .

பீஷ்மர் , காசிராஜனின் மகள்களைக் கடத்தி வந்ததும் கிருஷ்ணர் ருக்மிணியைக் கடத்தி வந்ததும் , கிருஷ்ணனின் மகன் சம் பா, துரியோதனன் மகளைக் கடத்தி வந்ததும் இதிஹாச காலத்தில் நடந்தன .

இதே போல சுயம்வரம் என்னும் திருமணங்களையும் தமயந்தி திரவுபதி முதலிய திருமணங்களிலிருந்து அறிகிறோம்

***

பாணி கிரஹணம் / கைத்தலம் பற்றுதல்

இதை ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழி வரை காண்கிறோம். இன்றும் பிராமண கல்யாணப் பத்திரிகைகளில் இந்த ரிக்வேதச் சொல் வருகிறது; ஆகையால் கணவனும் மனைவியும் கை கோர்ப்பதுதான் திருமணத்தின் முக்கியச் சடங்கு என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது ; இதை ரிக் வேதம் ஹஸ்தக் கிராப – கைகளைப் பற்றுதல் – என்று சொல்கிறது.

மணப்பெண் என்பவள் மங்களத்தின் சின்னம்/ சுப அறிகுறி , அவள்தான் வீட்டுக்கு அரசி என்று அவளைப் புகழும் மந்திரங்கள் பல உள்ளன.

***

க்ர்த்யா என்னும் பேய் / அணங்கு

தீய சக்திகளை, அரக்கி போன்ற கிரத்யாவை அகற்றும் வழிகளையும் சில மந்திரங்கள் கூறுகின்றன .

தொடரும்……………………..

Tags- உலகத்திலேயே,  அதிசயமான, திருமண வாழ்த்து, கல்யாண மந்திரம், சூர்யா சூக்தம், 19 கடவுளர்கள்,சங்க காலத்தில், தாலியும் தீ வலமும் , மணப்பெண் ரதம்

Leave a comment

Leave a comment