டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் – தனித்துவ வழி கண்ட தலைவர்(Post.15714)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,714

Date uploaded in London – 9 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சப்தரிஷிகள் வரிசையில் முதல் ரிஷி!

பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் – தனித்துவ வழி கண்ட தலைவர் – சப்தரிஷிகளின் வரிசையில் முதல் ரிஷி!

ச. நாகராஜன்

இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!

அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.

ஶ்ரீ பலிராம் ஹெட்கேவாருக்கும் ரேவதி அம்மையாருக்கும் ஆறு குழந்தைகளில் ஐந்தாவது குழந்தையாக கேசவன் 1889ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று நாக்பூரில் பிறந்தார். அன்று யுகாதித் திருநாளாகும்.

இளம் வயதிலேயே அன்று நாட்டை ஆண்டு கொண்டிருந்த வெள்ளையரை எதிர்த்து சுதந்திரத்திற்கான தீவிர முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

எட்டு வயதே ஆன கேசவன் ராணியின் முடிசூட்டு விழாவை ஒட்டி வழங்கப்பட்ட இனிப்பை ஏற்க மறுத்தார். அதில் நான் அடிமைத்தனத்தைக் காண்கிறேன் என்றார் அவர்.

1902ம் ஆண்டு பரவிய ப்ளேக் நோயால் மாண்டோருக்கு ஈமச் சடங்கைச் செய்யும் பொறுப்பில் ஈடுபட்டார் கேசவனின் தந்தை. தந்தை தாய் இருவரும் ஒரே நாளில் இறந்தனர்.

திலகரின் தேச சேவை அவரை ஈர்த்தது. ஆங்கிலேயருக்கு எதிரான தொழில்முனைவோருக்கான நிதி சேகரிப்பில் அவர் ஈடுபட்டார். வந்தேமாதர கீதம் அவரை உற்சாகப்படுத்தியது. திலகரால் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட விநாயக சதுர்த்தி விழா தேசபக்தியின் வெளிப்பாட்டிற்கு ஒரு அடிகோலாகத் திகழ்ந்தது. விஜயதசமி அன்று ஆங்கிலேயரை எதிர்த்து வீர உரை ஆற்றிய கேசவரை ஆங்கிலேய அரசு கைது செய்தது.

1909 டிசம்பரில் கல்கத்தா சென்ற கேசவர் படிப்பில் தீவிரமாக ஈடுபட்டு டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.

அப்போதிலிருந்து அவர் டாக்டர்ஜி ஆனார்.

அங்கு நிலவியிருந்த புரட்சி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட கேசவர் ஆயுதங்களைச் சேகரிக்க்லானார்.

1915ம் ஆண்டு புரட்சி நடவடிக்கை தீவிரமானது. துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து நிறைந்த ஒரு ரயில் தினமும் கல்கத்தாவிலிருந்து நாக்பூருக்குச் செல்லும். அது மும்பை செல்லும் ரயிலில் இணைக்கப்பட்டு அனுப்பப்படும்.

இந்த ஆயுத வண்டி மாற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு ஆயுதங்களை பத்திரமாக புரட்சியாளர்களிடம் சேர்த்தார் டாக்டர்ஜி.

புரட்சிக்கான நரேந்திர மண்டல் என்ற ஒரு அமைப்பை நண்பர் ஒருவருடன் ஆரம்பித்தார் டாக்டர்ஜி. ஆனால் இந்த அமைப்பிற்கு திலகர் ஆதரவு தரவில்லை. இந்த அமைப்பு மூடப்பட்டது.

1915 முதல் 1924 முடிய நாட்டில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் கூர்ந்து கவனித்து வந்த டாக்டர்ஜி ஹிந்துக்களிடம் ஒரு பெரிய எழுச்சியை ஊட்ட வேண்டும் என்பதைக் கண்டார்.

1925ம் ஆண்டு விஜயதசமி நன்னாளில்  செப்டம்பர் 27ம் தேதி அன்று   ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் அவரால் தொடங்கப்பட்டது.

சங்கத்தின் ஷாகா எனப்படும் கிளைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஸ்வயம்சேவகர்கள் வர ஆரம்பித்தனர். உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும், தரப்பட்டதோடு அறிவு சார்ந்த உரைகள் ஷாகாவில் இடம் பெறலாயின.

சங்கத்தை வளர்க்க முழுநேரப் பிரசாரகர்கள் வரலாயினர். பரமபூஜனீய குருஜியும் சங்கத்தின் பால் ஈர்க்கப்பட்டார்.

தன் வாழ்நாள் முழுவதும் சிறுசிறு சம்பவங்கள் மூலம் ஒரு ஸ்வயம்சேவகன் எப்படி நடக்கவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டினார் டாக்டர்ஜீ.

.

தனது 51வது வயதில் 1940ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி டாக்டர்ஜீ மறைந்தார்

இந்த நூலில் அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு தரப்படுகிறது. அத்துடன் ஏராளமான சிறு சிறு சம்பவங்களும் சுவைபடத் தரப்பட்டுள்ளன

இந்த நூலைப் படிப்போர் டாக்டர்ஜியின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.

நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார்.

சப்தரிஷிகளில் முதல் ரிஷியின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த ஆறு ரிஷிகளைப் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை. 

விஜயபாரதம்  பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 40 பக்கங்களைக் கொண்டுள்ளது.

நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:

விஜயபாரதம் பிரஸ்

12. எம்.வி.நாயுடு தெரு

சேத்துப்பட்டு, சென்னை – 31

விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466

www.vijayabharathambooks.com

Leave a comment

Leave a comment