Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-27; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,754)

Written by London Swaminathan

Post No. 15,754

Date uploaded in London –18 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part 27

திருப்பரமேஸ்வர  விண்ணகரம்

மூலவர் – பரமபத நாதன், வைகுந்தநாதன், வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் – வைகுந்தவல்லி. (தனிக்கோயில் நாச்சியார்) .

தீர்த்தம் – ஐரம்மத தீர்த்தம்.

விமானம் – முகுந்த விமானம்.

ப்ரத்யக்ஷம் – பல்லவராஜன்.

விசேஷங்கள் – விமானம் மூன்று அடுக்காக அஷ்டாங்க விமானமாக உள்ளது. கீழ் அடுக்கில் (அடியில்) பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், மத்தியில் (இரண்டாவது அடுக்கில்) ஸ்ரீ தேவி பூதேவியுடன் ரங்கநாதன் சயனத்திருக்கோலத்திலும், மேல் அடுக்கில் நின்ற திருக்கோலத்திலும் உள்ளனர். ஆனால், இவர்களுக்குப் பூஜை இல்லை.

விதர்ப்ப தேசத்தை அரசாண்ட விரோசனனுக்கு புத்திர ஸந்ததி இல்லாமல் காஞ்சீபுரத்திலுள்ள கைலாஸ நாதரை பூஜை செய்ய, அவருடைய அருளால், விஷ்ணுவின் த்வாரபாலகர்கள் இரண்டு

புத்திரர்களாக பல்லவன், வில்லவன் என்பவர்கள் விஷ்ணு பக்தர்களாகப்பிறக்க, புத்திரர்கள் புண்யகோடி விமானத்துக்கு வாயு மூலையில் அச்வமேத யாகம் செய்ய, ஸ்ரீமந் நாராயணன் அவர்களுக்கு ஸ்ரீ வைகுண்ட நாதனாக ஸேவை ஸாதித்தபடி வீற்றிருந்த திருக்கோலத்துடன் இன்றும் பக்தர்களுக்கு ஸேவை ஸாதிப்பதாக ஐதீஹம். விரஜையும் அங்கே புஷ்கரிணியாக அமைந்திருக்கிறது.

மங்களாசாஸனம் –

திருமங்கையாழ்வார் – 1128 -1137

மொத்தம் – 10 பாசுரங்கள்.

திருப்பரமேஸ்வர விண்ணகரம் (தற்போது வைகுண்ட பெருமாள் கோவில் என அழைக்கப்படுகிறது) காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனால் 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில், மூன்று தளங்களைக் கொண்ட அற்புதமான கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பெரிய காஞ்சீபுரத்தில், காஞ்சீபுரம் ரயிலடியிலிருந்து 1/4 மைல் தூரத்தில் உள்ளது. பஸ் ஸ்டாண்டிற்கு பின்புறமுள்ள கிழக்கு ராஜவீதியில் வலது புறம் செல்லும் சாலையில் உள்ளது.

:இது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் (ASI) நிர்வகிக்கப்படும் பாரம்பரியமிக்க கோயிலாகும்.மூன்று அடுக்குகள் கொண்ட இக்கோவிலின் பிரகாரத்தில் பல்லவ மன்னர்களின் வரலாற்றைக் கூறும் அழகிய சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

புராண காலத்தில் இத்தலம் சர்ப்பச் சேத்திரம் என அழைக்கப்பட்டதாகவும், இறைவன் பரமபதநாதன் என்று ஆராதிக்கப்பட்டதாகவும் தல வரலாற்றின் மூலம் அறியமுடிகிறது ஒரு காலத்தில் இக்கோயில் காசி யாத்திரை செல்வோர் தங்கிச் செல்லும் மடமாக இருந்தது. மிகச் சிறிய அளவினதாக இருந்த இத்தலம் பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669) காலத்தில்தான் இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாக கட்டப்பட்டது.

பரமேஸ்வரவர்மன் இத்தலத்தின் இறைவனருளால் பிறந்ததாகவும் இதை நினைவு படுத்தும் முகமாக பரமேஸ்வரன் இக்கோவிலுக்கு 18 யானைகளைக் கொடுத்திருந்ததாகவும் கூறுவர். பரமேஸ்வர வர்மனுக்கு இப்பெருமான் 18 கலைகளை போதித்ததாகவும், அவைகளைச் சொல்வதற்காக எழுந்த நிலையில் நின்ற திருக்கோலத்திலும், சீடனுக்கு உபதேசித்தருள குருவாக அமர்ந்த திருக்கோலத்திலும், அவனுக்கு சேவை சாதிக்க கிடந்த திருக்கோலத்திலும் இருந்ததாகக் கூறுவர். இதனால் தான் பரமேஸ்வரவர்மன் இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாகக் கட்டி முதல் அடுக்கில் (கீழ் அடுக்கில்) பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், இரண்டாவது தளத்தில் அரங்கநாதனாக சயன திருக்கோலத்திலும், மூன்றாவது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் இறைவனை எழுந்தருளச் செய்தார். மூன்றாவது அடுக்கில் நின்ற திருக்கோலத்தில் அமைக்கப்பட்ட சிலை ஒரு சமயம் மழையின் போது உண்டான பேரிடியின் காரணமாகச் சிதலமடைய பிறகு அவ்விடத்தில் சுதையால் செய்யப்பட்ட சிலை வைக்கப்பட்டது. இது தவிர மற்ற இரண்டு தளத்திலும் உள்ள சிலைகள் கற்களில் வடிக்கப்பட்டவையாகும்.

***

பாசுரங்கள்

1128.  

சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்*  சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்*

நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*

பல்லவன் வில்லவன் என்று உலகில்*  பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*

மல்லையர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)    

1129.  

கார் மன்னு நீள் விசும்பும்*  கடலும் சுடரும் நிலனும் மலையும்*

தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்*  தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

தேர் மன்னு தென்னவனை முனையில்*  செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்,*

பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.         

1130.  

உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்*  ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்*

வரம் தரு மா மணிவண்ணன் இடம்*  மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்*  நெடு வாயில் உக செருவில் முன நாள்*

பரந்தவன் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.  

1131.  

அண்டமும் எண் திசையும் நிலனும்*  அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன்*

எந்தை பிரானது இடம்*  ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

விண்டவர் இண்டைக் குழாமுடனே*  விரைந்தார் இரிய செருவில் முனிந்து*

பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.

1132.  

தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்*  துயர் தீர்த்து அரவம் வெருவ*

முனநாள் பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்*  திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற*

பாம்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுர விண்ணகரம்அதுவே.  

1133.  

திண் படைக் கோளரியின் உரு ஆய்*  திறலோன் அகலம் செருவில் முன நாள்*

புண் படப் போழ்ந்த பிரானது இடம்*  பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப*  விடை வெல் கொடி வேல்படை முன் உயர்த்த*

பண்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே. 

1134.  

இலகிய நீள் முடி மாவலி தன்பெரு வேள்வியில்*  மாண் உரு ஆய் முன நாள்*

சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

உலகு உடை மன்னவன் தென்னவனைக்*  கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ,

பல படை சாய வென்றான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.           

1135.  

குடைத் திறல் மன்னவன் ஆய்*  ஒருகால் குரங்கைப் படையா*

மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்*  அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்*  வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த*

படைத் திறல் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.    

1136.  

பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து*  முன்னே ஒருகால் செருவில் உருமின்*

மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

கறை உடை வாள் மற மன்னர் கெட*  கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்*

பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.

1137.  

பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகர்மேல்*

கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்*  கலிகன்றி குன்றாது உரைத்த*

சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்*  திரு மா மகள் தன் அருளால்*

உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்*  செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)      

–subham—

Tags– Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-27; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள்

Leave a comment

Leave a comment