
Tirumalai Nayak Mahal from 1956 TVS book

Written by London Swaminathan
Post No. 15,978
Date uploaded in London – 13 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
.jpg)
Old Picture of T N Mahal
திருமலை நாயக்கர் மஹால் என்று சொல்லப்படும் அரண்மனையில் உள்ள தூண்கள் மிகவும் பிரம்மாண்டமானவை; அதைக் கட்டிப்பிடிக்க பலர் கைகோர்த்து நிற்கவேண்டும் . மிகவும் உயரமானவையும் கூட. அதையெல்லாம் விடச் சிறப்பு அதன் வழ வழப்பும் வனப்பும்தான் . மார்பிள் MARBLE என்னும் பளிங்குக்க கற்களால் செய்யப்பட்டதோ என்று வியப்போம் . உண்மையில் தமிழர்கள் கண்டுபிடித்த ஒரு வினோதக் கலவை இதற்கு வலிமையும் வனப்பும் வழ வழப்பும் கொடுத்தது.
சுண்ணாம்பு, வெல்லச் சாறு, கடுக்காய், ஆமலகம் என்னும் நெல்லிக்காய், தான்றிக்காய், உளுந்து முதலியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து கடுஞ்சாறு எடுத்து தூண்களையும் சுவர்களையும் அமைத்தனர் ; எங்கிருந்தது அவர்கள் இந்த உத்தியைக் கண்டுபிடித்தனர் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம் ஆகும் .
( எங்கள் சொந்தக்காரக்ளும் தந்தையின் நண்பர்களும் மதுரைக்கு வரும்போதெல்லாம் அவர்களை மீனாட்சி கோவிலுக்கும் மஹாலுக்கும் கூட்டிக்கொண்டு செல்வது வழக்கம்; மஹாலுக்கு செல்லும்போதெல்லாம் அந்தப் பிரம்மாண்டமான வழவழப்பான தூண்களைக் கட்டிப்பிடிக்க முயற்சி செய்வோம் (தற்காலத்தில் அவைகளைத் தொடுவதற்கு அனுமதிப்பதில்லை என்று நினைக்கிறேன் )
***
மதுரைக்கு கோயில் திருப்பணிமாலையில் இதுபற்றிய பாடல் ஒன்றுள்ளது :
King Tirumalai Nayak With his wives.
உரக்க வெகு ரொக்கம் கொடுத்துப் படங்கு தூண்
உத்திரம் முதல் பழங்கல்
ஒடிந்தன பிடுங்கி நலமாய் அமைத்துக் காரை
யோடு சீரணம் அகற்றி
அரைத்த சுண்ணாம்பை வெல்லச் சாறு விட்டுநன்
றாய்க் குழைத்துச் செங்கலும்
அடுக்கா ப்பரப்பி க் கடுக்கா யொடு ஆமலகம்
அரிய தான்றிக்காய் உழுந்து
ஒருக்கால் இருக்கால் இடித்து நன்னீரினில்
ஊறிய கடுஞ்சாறும் வி ட்டு
ஊழிக்காலங்களிலும் அசையாத வச் சிரக்
காரை விட்டோங்கும் அம்மை
சிரக்காலம் வாழவே மீனாட்சி கோயிலும்
செப்பமிட்டுவித்து நன் றாய்ச்
செய்வித்த புண்ணியம் சதகோடி புண்ணியம்
திருமலை மகீபனுக்கே.
தற்கால பொறியியல் மாணவர்கள் இதில் சொன்ன பொருட்களைக் கலந்து கட்டிடம் கட்டிப் பார்க்க வேண்டும். சோதனை முறையில் என்ஜினீயரிங் கல்லூரிகள் இதை ஆராய வேண்டும்.
திருமலை நாயக்கருக்கு மூன்று மனைவிகள் ! அவர்களுடன் அவர் நிற்கும் சிலைகள் மதுரைக் கோவிலிலும் அவர் ஆண்ட இடங்களிலும் இன்றும் நிற்கின்றன .
அவர் மஹாலைக் காட்டும் போது இத்தாலியாக் கலைஞர் ஒருவரின் உதவியையும் நாட்டியததாகச் சொல்லப்படுகிறது.
***
வரலாற்று அறிஞர் டாக்டர் இரா. நாகசாமி எழுதிய பிரசுரத்தில் காணப்படும் விவரங்கள்

திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலம் 1627- 1659 CE.
அரண்மனை – மஹால்- கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு 1639.
75 வயது வரை தன்னுடைய மனைவியருடன் வசித்தார்.
இப்போது நாம் காணும் மஹாலைப்போல நான்கு மடங்கு பெரிதாக யிருந்தது .
இதம் முக்கியப்பகுதிகள் – சொர்க்க விலாசம், ரங்க விலாசம்.
இவைதவிர 18 வகையான இசைக்கருவிகள் வாசிக்கும் இடம், பூஜை செய்யும் இடம் , அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடக சாலை, பல்லக்கு படைக்கலங்களை வைக்கும் மண்டபங்கள் , உறவினர் மாறும் வேலை செய்வோர் வசிக்கும் இடங்கள், வசந்த வாவி, மலர் வானம், மதில் சுவர் முதலியனவும் இருந்தன .
இப்போது எஞ்சியுள்ள பகுதி சொர்க்க விலாசம் மட்டுமே .
அக்காலத்தில் வேறு நுழைவாயில் இருந்தது அங்கிருந்த இரண்டு சிகரங்களில் தங்கம் வேயப்பட்டிருந்தது .
சொர்க்க விலாச சிறப்புகள்
உயரமான தூண்களும் எழிலார்ந்த சுதை வேலைப்பாடுகளும் நிறைந்தது . ஒரு காலத்தில் தங்கத்தாலும் யானைத் தந்தத் தாலும் செய்த வேலைப்பாடுகள் இருந்தன . அதன் நடுவில் இருந்த இரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து மீனாட்சி அம்மனிடம் பெற்ற செங்கோலை வைத்து திருமலை ஆட்சி செய்தார் .
செங்கோல் விழா
ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவின் எட்டாவது நாளன்று மன்னர் , மீனாட்சி கோவிலுக்குச் சென்று , அங்கயற்கண்ணி அம்மனுக்கு முடிசூட்டு விழா நடந்த பின்னர் செங்கோலை மன்னர் பெற்றுக்கொள்வார் . செங்கோலைக் கோவிலிருந்து அலங்கார யானை அணிவகுப்பில் எடுத்துவந்து மன்னரின் சிம்மாசனத்தில் வைத்து பூஜை செய்துவிட்டு செங்கோலை மீனாட்சியிடம் மன்னர் ஒப்படைப்பார். இந்த விழாவின் போது புலவர்களுக்கும் அறிஞர்களுக்கும் , அரண்மணை சேவகர்களுக்கும் மன்னர் விருதுகளையும் பரிசுகளையும் வாரி வழங்குவார் .இப்போதும் இந்த விழா நடைபெறுகிறது. செங்கோல் திருவிழாவை ராணி மங்கம்மாள் உள்பட பிற்கால மன்னர்களும் பின்பற்றினர் ; திருவாங்க்கூர் மஹாராஜாக்களும் திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமி சார்பில் ஆண்டதால், மன்னர் வெளியூருக்குப் பயணம் செய்கையில் உடைவாளை பெருமாளிடம் ஒப்படைத்துச் சென்றார் .
நவராத்திரி விழா
ஆண்டுதோறும் நடக்கும் ஒன்பது நாள் நவராத்திரி விழாக்காலத்தில் மன்னர் தன்னை அலங்கரித்துக்கொண்டு அரியணையில் – சிம்மாசனத்தில் – கொலு வீற்றிருப்பார் ; குறுநில மன்னர்கள் வந்து அவரை வணங்கி திறை செலுத்துவார்கள்.
அந்தப்புரம்
இங்கு அரச மாதேவியரும் பிற பெண்டிரும் காலை நிலக்கச்சிகளைக் கண்டு மகிழ்வர்.
நாடகசாலை
மன்னரும் பிறரும் தீப்பந்தவெளிச்சத்தில் நாட்டிய மகளிர் ஆடும் கூத்து நிகழச்சிகளைக் கண்டு மகிழ்வர் . நாடக சாலையின் மேற்பகு திகளிலும் தூண்களிலும் அழகிய சுதை உருவங்கள் இருக்கின்றன .
வசந்த வாவி என்னுமிடத்தில் குளமும் வடக்கில் மல்யுத்தம், ஆட்டுக்கிடாய் சண்டை நடைபெறும் இடங்களும் இருந்தன .
பூஜை அறையில் ராஜ ராஜேஸ்வரி சிலை இருந்தது ; தினமும் மன்னர் அங்கு வந்து வணங்குவார்.
இப்போது பத்து தூண்கள் நிற்கும் இடத்துக்குப் பின்னால், ரங்க விலாசம் என்ற அரண்மனை இருந்தது அதில் மன்னரின் தம்பி முத்தியாலு நாயக்கர் வாசித்தார் . அதுவும் சொர்க்கவிலாசம் போலவே இருந்திருக்க வேண்டும் .
இப்போது நவபத்கானா தெரு என்னுமிடத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கூட பழுதடைந்த கட்டிடம் இருந்தது. அது நீடிக்கவில்லை.
சுற்று மதில்
T N Mahal, Madurai; picture by Dr A Narayanan, Sydney.
அரண்மனையைச் சுற்றி நீண்ட மதில் இருந்தது அதன் நீளம் 900 அடி, அகலம் 660 அடி உயரம் 40 அடி. சென்ற நூற்றாற் ண்டில் இத்தை இடித்துத் தள்ளினார்கள் . அரண்மனையில் ன் சிலப்பகுதிகளை திருமலை நாயக்கரின் பேரன் சொக்கநாத நாயக்கன் இடித்து திருச்சிக்கு கொண்டு சென்றான். மதுரையிலிருந்து கலைநகரை அவன் திருச்சிக்கு மாற்றி அங்கு ஒரு அரண்மனையைக் கர்த்தா கட்டுவதற்கு முயற்சி செய்தான் .
வாஸ்த்து சாஸ்திரம் கற்போர், இந்த அரண்மனையின் எந்தப் பகுதியில் என்னென்ன இருந்தது என்பதைக் கற்று அறிவது பயன்தரும் .
கவனிப்பாரற்று பாழடைந்து கொண்டிருந்த அரண்மனையின் எஞ்சிய பகுதிகளை சென்னை கவர்னராக இருந்த லார்ட் நேப்பியர் 1872ல் செப்பனிட்டார் . இப்போது தமிழ்நாடு தொல் பொருட் துறை இதை பராமரித்து வருகிறது .
***
T N Mahal, Madurai; picture by Dr A Narayanan, Sydney.
அழகர்மலைக் கள்வன் என்னும் படா போக்கிரி திருமலை நாயக்கர் அரண்மனைக்குள் சங்கிலி வழியாக இறங்கி கருவூலத்திலிருந்த நகைகளைத் திருடிச் சென்றான் ; அவனைக் கண்டுபிடிக்க மன்னர் ஒரு தந்திரம் செய்தார். நகைகளைமீட்டு வரும் வீரனுக்கு ஒரு ஜாகிர் (நிலப்பகுதி) தருவதாக அறிவித்தார்; கள்ளனே வந்து நகைகளை ஒப்படைத்தான் . உடனே மன்னர் , வாக்களித்த படி பெரும் நிலப்பகுதியை அளித்தார்; பின்னர் சிரச்சேதம் செய்து அவனைக்கொன்றார் (ஆதாரம் – டாக்டர் இரா நாகசாமி வெளியிட்ட ஆங்கிலப் பிரசுரம் )
***
திருமலை நாயக்கர் வரலாறு
தந்தையின் பெயர்- முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர்
திருமலை நாயக்கர் பிறந்த நாள் – தைப் பூசம் (பொ .ஆ 1584)
ஆட்சிக்காலம் – 1627 – 1659
மன்னரின் பெயர் – திருமலை சவுரி நாயுனு அய்யுலு காரு
ஆண்ட பகுதிகள் – திருச்சி முதல் திருவனந்த புரம் வரை
தமிழ் நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் பெரும்பகுதி
திருச்சியில் இருந்த தலைநகர் 1634–ல் மதுரைக்கு மாற்றப்பட்டது
செய்த போர்கள் – மைசூர் போர், திருவாங்கூர் போர் , இராமநாதபுரம் போர், செஞ்சிப் போர்
தானைத் தலைவன் – தளவாய் இராமப்பையன்
துணைப் படைத் தளபதி – அரங்கண்ண நாயக்கர்
திருப்பணிகள் – மதுரை மீனாட்சி சுந்தரேசர் கோவிலின் வானளாவிய, உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள்; அதிசய சிற்பங்கள் நிறைந்த புது மண்டபம், 2 பெரிய தேர்கள், சிவா பெருமானுக்கும், அன்னை மீனாட்சி அம்மனுக்கும் விலை மதிக்கவொண்ணாத நகைகள்
ஏற்படுத்திய விழாக்கள் -சித்திரைத் திருவிஆ, வைகாசி வசந்த விழா, ஆவணித் திருவிழா, புரட்டாசி நவராத்ரி விழா. அவர் பிறந்த நாளான தைப்பூசத்தில் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் தெப்பத் திருவிழா
திருப்பணி செய்த வேறு கோவில்கள் – அழகர் கோவில், திருப்பரங்குன்றம், திருவரங்கம், திருவானைக்காவல், திருவில்லிப்புத்தூர், திருநெல்வேலி கோவில்கள்
அவர்காலத்தில் வாழ்ந்த மற்றும் அவரது சபையை அலங்கரித்த புலவர்கள் :-
குமர குருபரர் ( அவர் யாத்த நூல்கள் — மீனாட்சியம்மை பிள்ளை த் தமிழ், கந்தர் கலிவெண்பா);
பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (அஷ்டப் பிரபந்தங்கள்);
சுப்பிரதீபக் கவிராயர் (விறலி விடு தூது, கூளப்ப நாயக்கன் காதல் );
நீல கண்ட தீக்ஷிதர் ( நிறைய சம்ஸ்க்ருத நூ ல்கள் )
சபைக்கு வந்த வெளிநாட்டினர் – கிறிஸ்தவ பிரசாரகர் ராபர்ட் டி நோபிளி
நாயக்கர் இறந்த வருடம் – 1659
மைசூர் மூக்கு அறுப்புப் போர்
ஆர். சத்தியநாத அய்யர் எழுதிய ‘History of the Nayaks of Madura’ (மதுரை நாயக்கர்கள் வரலாறு) என்ற நூலில் விரிவான தகவல்கள் உள்ளன.
மூக்கறுப்புப் போர் (War of Noses) என்பது 17-ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களுக்கும் (திருமலை நாயக்கர்) மைசூர் மன்னர்களுக்கும் இடையே நடைபெற்ற மிகக் கொடூரமான யுத்தம் ஆகும். மதுரை மன்னர் திருமலை நாயக்கரை பழிவாங்க நினைத்த மைசூர் மன்னர் காந்திரவ நரசராஜ உடையார், தன் படைகளை மதுரைக்கு அனுப்பினார் . போரின்போது மைசூர் படையினர் மதுரையைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மூக்குகளை அறுத்து அவமானப்படுத்தினர் இதற்குப் பதிலடி கொடுக்க திருமலை நாயக்கர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் உதவியுடன் , மைசூர் படைவீரர்களைத் தோற்கடித்ததார் ; நாயக்கரின் படை வீரர்கள் அவர்களின்எதிரிகளின் மூக்குகளை அறுத்து மதுரைக்கு அனுப்பி வைத்தனர் . அவை சாக்குப்பைகளில் மதுரைக்கு வந்தன ; வரலாற்றில் மிக வினோதமான போர் இது
–subham—
TAGS- திருமலை நாயக்கர், மதுரை , மீனாட்சி கோவில், பத்துத் தூண், நவபத்கானா , இரா..நாகசாமி, அரண்மனை, மஹால், உரக்க வெகு ரொக்கம், திருப்பணி மாலை, மூக்கு அறுப்புப் போர், செங்கோல் விழா