பதவி உயர்வு பெற பெண்களுக்கு ஆசை இல்லையா? திடுக்கிடும் ஆய்வு முடிவு?!(Post.15,980)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,980

Date uploaded in London – 14 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 தினமணி கதிர் 28-6-26 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

பதவி உயர்வு பெற பெண்களுக்கு ஆசை இல்லையா? திடுக்கிடும் ஆய்வு முடிவு?!

ச நாகராஜன் 

பிரபல நிறுவனமான லீன் இன் மக்கென்ஸியின் புதிய ஆய்வு ஒன்று பதவி உயர்வு பெற பெண்களுக்கு ஆசை இல்லை என்றும் அவர்களிடையே ஒரு “ஆசை இல்லாத் தன்மை” – ஆம்பிஷன் கேப் – AMBITION GAP – இருப்பதாகவும் தெரிவிக்கிறது. இது உலகெங்கும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதோடு பெண்களிடையே ஒரு அதிர்ச்சி அலையையும் உருவாக்கி இருக்கிறது. 

எண்பது சதவிகித பெண்கள் தங்கள் பதவியில் அடுத்த இடத்திற்கு உயர்வு பெற விரும்புகின்றனர். இதுவே ஆண்களிடத்திலோ 86 சதவிகிதம் உயர்வு பெறத் துடிக்கின்றனர். இதுவே தலைமைப் பண்பிலோ பெண்களிடத்தில் 69 சதவிகிதமாகவும் ஆண்களிடத்தில் 80 சதவிகிதமாகவும் இருக்கிறது. 

ஆனால் ஆச்சரியப்படும்படி பெண்களிடத்தில் தான் பர்ன் அவுட் எனப்படும் அதிக மன அழுத்தத்தினால் ஏற்படும் சோர்வு, மன உளைச்சல் உள்ளிட்டவை ஆண்களை விட அதிகமாகக் காணப்படுகிறது. 

ஆனால் 2021ம் ஆண்டு யேல் ஆய்வு ஒன்று வட அமெரிக்காவில் 30000 பேர்களிடத்தில் எடுக்கப்பட்டது. அதில் பெண்களே வேலைத்திறனில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 

என்றாலும் கூட பதவி உயர்வு என்று வரும் போது பெண்களின் திறமையை அளக்கும் குழுக்கள் எதை வைத்து திறமையை அளக்கின்றனர் என்ற கேள்வி எழ ஆரம்பித்து விட்டது. மேலாளர்கள் தங்கள் கீழ் வேலை பார்க்கும் பெண்களைப் பற்றிய சரியான பின்னூட்டத்தைத் தருகிறார்களா என்ற கேள்வியை பெண்கள் எழுப்புகின்றனர். 

ஆணா, பெண்ணா என்ற பால் வேறுபாட்டை மறந்து விட்டு திறமை மட்டும் உரிய அளவுகோல்களால் ஆய்வு செய்யப்பட்டால் அதிக பெண்கள் பதவி உயர்வு பெறுவார்கள் என்பதே எம் ஐ டியில் பேராசிரியையாகப் பணி புரியும் டேனியல் லியின் கருத்து. அதிகப் பெண்களை வேலையில் அமர்த்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

திறமையை மேஜையில் அநியாயமாகத் தக்க வைத்து விடாதீர்கள் என்று அவர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அறிவுரை கூறுகிறார்.

ஆண் மேலாதிக்க மனப்பான்மையை பன்னாட்டு நிறுவனங்கள் விட வேண்டிய தருணம் வந்து விட்டது. ஒரு பெண் மிகத் திறமையுடன் வேலை செய்து வெற்றி பெற்றால் அதை ‘லக்’ (அதிர்ஷ்டம்) என்று பட்டம் சூட்டுவதும், அதுவே ஒரு ஆண் வேலை செய்து வெற்றி பெற்றால் அபாரமான கடின உழைப்பு என்று போற்றிப் பாராட்டுவதும் இன்றைய நிலைமையாக இருக்கிறது. பெண்களை நோட்ஸ் எடுக்கும் குறிப்புப் பதிவாளராகச் செயல்பட வைப்பதும் காப்பியை போட்டு அனைவருக்கும் தரச் சொல்வதுமான பழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்று பெண் தலைமை அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.

இந்த நிலைமையில் பெண்களுக்கு பதவி உயர்வு பெற ஆசையில்லை என்ற ஆய்வின் முடிவு சரியல்ல என்று பெண்கள் கொதித்து எழுகின்றனர்.

 எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி என்றும்

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் என்றும் பாடிய மகாகவி பாரதியின் வாக்கு மெய்ப்பிக்கப்பட வேண்டிய நாள் வந்துவிட்டது!

**

Leave a comment

Leave a comment