கடல் பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.4115)

ஆகஸ்ட் 2017 காலண்டர்

 

Compiled by London Swaminathan
Date: 26 July 2017
Time uploaded in London-6-32 am
Post No. 4115
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

விழா நாட்கள்:- – ஆடிப் பெருக்கு -August 3; வரலெட்சுமி விரதம்—August 4; ரக்ஷாபந்தன்—7; காயத்ரி ஜபம்—8; ஜன்மாஷ்டமி/ கிருஷ்ணன் பிறப்பு—14 & 15;  சுதந்திர தினம்-15; விநாயக சதுர்த்தி—25

 

முகூர்த்த நாள்:- August 31

ஏகாதசி:-  3, 18

பௌர்ணமி- August 7

அமாவாசை- August 21

 

ஆகஸ்ட் 1 செவ்வாய்க்கிழமை

கடலிலே ஏற்றம் போட்ட கதை

 

ஆகஸ்ட் 2 புதன் கிழமை

கடலிலே துரும்பு கிடந்தாலும்,  மன திலே ஒரு சொல் கிடவாது

ஆகஸ்ட் 3 வியாழக் கிழமை

கடலிலே பிறக்கும் உப்புக்கும் மலையிலே விளைகிற நார்த்தங்காய்க்கும் தொந்தம்

 

ஆகஸ்ட் 4 வெள்ளிக் கிழமை

கடலிலே போட்டு சாக்கடையிலே தேடுகிறதா?

 

ஆகஸ்ட் 5 சனிக்கிழமை

கடலிலிட்ட புளி போல

ஆகஸ்ட் 6 ஞாயிற்றுக் கிழமை

கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

 

ஆகஸ்ட் 7  திங்கட் கிழமை

கடலை அடைக்க கரை போடலாமா?

 

ஆகஸ்ட் 8 செவ்வாய்க்கிழமை

கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற்போல

ஆகஸ்ட் 9 புதன் கிழமை

கடல் தண்ணீர் வற்றினாலும் பள்ளச்சி தாலி வற்றாது

ஆகஸ்ட் 10 வியாழக் கிழமை

கடல் திடலாகும், திடல் கடலாகும்

ஆகஸ்ட் 11 வெள்ளிக் கிழமை

கடல் நீர் நிறைந்து என்ன? காஞ்சிரை பழுத்து என்ன?

ஆகஸ்ட் 12 சனிக்கிழமை

கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

ஆகஸ்ட் 13 ஞாயிற்றுக் கிழமை

கடல் பெருகினால் கரையும் பெருகுமா?

ஆகஸ்ட் 14  திங்கட் கிழமை

கடல் மீனுக்கு நீச்சுப் பழக வேண்டுமா?

 

ஆகஸ்ட் 15 செவ்வாய்க்கிழமை

கடல் மீனுக்கு நுளையன் இட்டது சட்டம்

ஆகஸ்ட் 16 புதன் கிழமை

கடலில் கரைத்த பெருங்காயம் போல

ஆகஸ்ட் 17 வியாழக் கிழமை

கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

ஆகஸ்ட் 18 வெள்ளிக் கிழமை

கடலுக்கு கரை போடுவார் உண்டா?

ஆகஸ்ட் 19 சனிக்கிழமை

கடலை அடைக்க கரை போடலாமா?

ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக் கிழமை

கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை

 

ஆகஸ்ட் 21 திங்கட் கிழமை

கடல் வற்றில் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு

ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை

கடலைத் தூர்த்தாவது காரியத்தை முடிக்க வேண்டும்

ஆகஸ்ட் 23 புதன் கிழமை

கலக்கினும் தண்கடல் சேறு ஆகாதே—வெற்றிவேற்கை

ஆகஸ்ட் 24 வியாழக் கிழமை

கடலாற்றாக் காம நோய், குறள் 1175

 

ஆகஸ்ட் 25 வெள்ளிக் கிழமை

பிறவிப் பெருங்கடல், குறள் 10

ஆகஸ்ட் 26 சனிக்கிழமை

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் – குறள் 17

 

ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக் கிழமை

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடாநிலத்து –குறள் 496

 

ஆகஸ்ட் 28 திங்கட் கிழமை

கடலன்ன காமம் – குறள் 1137

ஆகஸ்ட் 29 செவ்வாய்க்கிழமை

கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல

ஆகஸ்ட் 30 புதன் கிழமை

கப்பல் அடிப்பாரத்துக்கு, கடற்கரை மண்ணுக்குத் தவுகெட்டாற்போல

 

ஆகஸ்ட் 31 வியாழக் கிழமை

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்

வெந்தலைப் புணரிக் குட கடற் குளிக்கும் (புறம்.2)

 

–Subham–

 

துன்முகனுக்கு உண்டோ சுகம்? (Post No.4112)

Written by London Swaminathan
Date: 25 July 2017
Time uploaded in London-17-21
Post No. 4112
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

‘இடும்பைக்கு  இடும்பை படுப்பர்’ — துன்பத்துக்கு துன்பம் செய்வர் என்று வள்ளுவனும் நெப்போலியனும் சொன்னார்கள். அதாவது அறிவில் சிறந்தவர்கள் துன்பத்தையே திணறடித்துவிடுவார்கள்; அது பயந்துகொண்டு ஓடிவிடும்!

 

நீதி வெண்பா என்னும் நூலில் ஒரு அழகான செய்யுள்:-

 

தூய அறிவினர் முன் சூழ்துன்ப மில்லையாம்

காயும் விடங்கருடற் கில்லையாம் — ஆயுங்காற்

பன்முகஞ்சேர் தீமுன் பயில் சீத மில்லையாம்

துன்முகனுக்  குண்டோ சுகம்

 

பொருள்:-

ஆயுங்கால் = ஆராய்ந்து பார்க்குமிடத்து

காயும் விடம் கருடற்கு இல்லை = கொல்லுகின்ற விஷம் கருடனுக்கு ஒன்றும் செய்வதில்லை

(அது போல)

தூய அறிவினர் முன் சூழ் துன்பம் இல்லை = நல்ல அறிவினர்க்கு வரும் துன்பம் அவருக்கு ஒரு தீங்கும் செய்யாது

பன் முகம் சேர் தீ முன் = நாலா பக்கங்களிலும் பற்றி எரியும் தீக்கு முன்னால்

பயில் சீதம் இல்லை = குளிர் என்பது நெருங்காது.

(அது போல)

துன்முகனுக்கு உண்டோ சுகம் = தீயோருக்கு சுகம் என்பது உண்டோ (கட்டாயம் இல்லை)

 

திருக்குறளில் இடுக்கண் அழியாமை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அழகான பத்து குறள்களை அமைத்து இருக்கிறார்.

இடுக்கண் வருங்கால் நகுக (621)

இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படா அதவர் (623)

இப்படி அடுக்கிக் கொண்டே போவார்.

சுருக்கமாகச் சொன்னால் அறிவுடையோர் துன்பத்துக்கே துன்பம் செய்வர்!

 

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் ஞானிகளை இன்பமும் துன்பமும் ஒன்றும் செய்யாது  என்பார். இதைப் பல இடங்களில் திரும்பத் திரும்ப உரைப்பார்.

 

 

ஆத்திச் சூடி பாடிய அவ்வையோ மனந்தடுமாறேல், “துன்பத்திற்கிடங்கொடேல் என்கிறார்.

 

கேட்டிலுறுதி கூட்டுமுடைமை — என்று கொன்றை வேந்தன் செப்பும்

 

கேட்டில் உறுதி = கைப்பொருளை இழந்த காலத்தில் மனம் தளராமல் இருப்பது

உடைமை கூட்டும் = இழந்த அப்பொருளை உண்டாக்கும் அல்லது ஈடு செய்யும். அதாவது அதை இழந்த உணர்வே இல்லாமற் செய்துவிடும்.

 

போனால் போகட்டும் போடா’— என்ற தத்துவ உணர்வு பிறந்து விடும்!

துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது என்று முதுமொழிக் காஞ்சி சொல்லும்

துன்பம் வெய்யோர்க்கு = துன்பத்தை விரும்பி பொறுத்துக் கொள்ளுவோருக்கு

இன்பம் எளிது = இன்பம் எளிதாகும்

 

ஒரு காரியத்தைச் செய்வோருக்கு அப்படிச் செய்யும்போது வரும் துன்பங்களை விரும்பி ஏற்கும் பக்குவம் வந்துவிட்டால் அந்தக் காரியம் எளிதில் முடியும்; சந்தோஷமும் ஏற்படும் என்பது பொருளாம்.

TAGS:–துன்பம், இடும்பை, குறள், அவ்வை, இன்பம்

 

–SUBHAM–

‘நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம்’ (Post No.4108)

Written by London Swaminathan


Date: 23 July 2017


Time uploaded in London- 19-58


Post No. 4108


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

நல்லவாம்  செல்வம் செயற்கு (குறள் 375)

பொருள்

செல்வத்தை ஈட்டும் பணியில் (பிஸினஸில்) , கெட்ட காலம் இருந்தால் நல்லன எல்லாம் தீயதாகவே முடியும். நல்ல காலம் இருந்தாலோ கெட்டதும் கூட நல்ல பலன்களைத் தரும்.

திருவள்ளுவரின் திருக்குறளில் ஊழ் என்னும் அதிகாரத்தில் பத்து பாடல்களில் தீவினையின் சக்தியை விதந்து ஓதுகிறார். மேலும் சில குறள்களிலும் நல்வினை தீவினை பற்றிச் செப்புகிறார்.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகாதம (குறள் 376)

 

இறைவனுடைய அருள் இல்லாவிடில் கோடிகோடியாய்ப் பொருள் வந்தாலும் அதைக் காப்பாற்ற முடியாது. எவ்வளவுதான் காப்பாற்ற முயன்றாலும் தனக்கு வினைப்படி உரியன அல்லாதவை நிற்காது. உரிய பொருளை வேண்டாமென்று தூக்கி எறிந்தாலும், அதே வினைப்படி, அது அவரிடமே திரும்பி வந்துவிடும்.

 

திருவள்ளுவரின் நெருங்கிய நண்பரான ஏலேல சிங்கன், திருவள்ளுவர் சொற்படி தான, தருமம் செய்துவிட்டு மிச்சத்தைத் தங்கக் கட்டிகளாக மாற்றி கடலில் எறிந்தபோதும், சுறாமீன் வயிற்றில் ஏலேல சிங்கன் முத்திரைகளுடன் அதைப் பார்த்த மீனவர்கள் அவரிடமே திருப்பிக் கொடுத்தனர்.

 

வித்யாரண்யர் தங்கம் வேண்டி தவம் செய்த போது லெட்சுமி அவர் முன்னால் தோன்றி இந்த ஜன்மத்தில் உனக்குச் செல்வம் வரும் நல்வினை இல்லை என்றவுடன் அவர் சந்யாசம் வாங்கினார். சந்யாசம் வாங்கினால் அது அடுத்த ஜன்மம் எடுத்ததாகிவிடும். அப் போதுதான் அவருக்குத் தெரிந்தது — உண்மையான சந்யாசி தங்கத்தைத் தொட முடியாது என்று. உடனே அதை ஆடு மேய்க்கும் இடையர்களிடம் கொடுத்து மாபெரும் விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தாபித்து முஸ்லீம்களை தென்னாட்டை விட்டு விரட்டினார்.

 

ஆகவே ஒருவரின் வினைப்படிதான் செல்வம் ‘’வரும்- போகும்’’ என்பது துணிபு. ஆனால் இந்த ஜன்ம நல்வினையால் மேலும் செல்வம் பெறலாம். அதிக தவம் செய்து வினையையும் வெல்லலாம்.

 

இதே கருத்தை விளக்கும் வேறு சில பாடல்களைக் காண்போம்

 

நீதிவெண்பாவில் ஒரு பாடல் உள்ளது:

தானே புரிவினையாற் சாரு மிருபயனுந்

தானே யனுபவித்தல் தப்பாது – தானூறு

கோடி கற்பஞ் சென்றாலுங் கோதையே செய்தவினை

நாடிநிற்கு மென்றார் நயந்து

பொருள்:

பெண்ணே! அளவற்ற கோடி கோடி கற்பங்கள் கடந்துவிட்டாலும், ஒருவனை அவன் செய்த வினைகள் எப்படியும் வந்து சேரும் என்று பெரியோர் சொல்லுவர்.  ஒருவன் தானே செய்த வினையினால் வந்து சேரக் கூடிய இரண்டு பயன்களும் (நல்லதும், தீயதும்), செய்தவன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது தப்பவே தப்பாது

 

கற்பம்= பிரம்மாவின் ஆயுட்காலம், ஒரு ஊழி

‘நல்வழி’யும் இதையே சொல்லும்:

 

தாந்தாமுன் செய்தவினை தாமே அனுபவிப்பார்

பூந்தாமரையோன் பொறிவழியே – வேந்தே

ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றாய்

வெறுத்தாலும் போமோ விதி

நல்வழி 60

 

நாலடியார் செய்யுளும் இதை உறுதி செய்யும்:

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தே தற்செய்த

கிழவனை நாடிக்கொளற்கு

 

ஒரே கருத்தைப் பல புலவர்கள் சொல்லுவது படித்து ரசிக்கத்தக்கது.

TAGS: நல்வினை, தீவினை, குறள், நல்வழி, நீதிவெண்பா

—சுபம்—

 

கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

 

Written by London Swaminathan


Date: 21 July 2017


Time uploaded in London- 13-45


Post No. 4101


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இந்த நாட்டை வெள்ளைக்காரன்தான் ஒற்றுமைப் படுத்தினான், அதற்கு முன்பாக இந்தியர்களுக்கு  பரந்த இந்த பாரத நிலப்பரப்பு ஒரே நாடு என்பதே தெரியாது என்று பல திராவிடங்களும் மார்கஸீயங்களும் பிதற்றுவதைக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் சாலை போடாவிடில், ரயில்வே லைன் போடாவிடில் நாடே ஒற்றுமை அடைந்திருக்காது என்று அதுகளும் இதுகளும் திண்ணையில் உட்கார்ந்து அங்கலாய்ப்பதையும் பார்த்திருப்பீர்கள் இதெல்லாம் உண்மையில்லை என்பதற்குச் சான்று சங்கத் தமிழ் நூல்கள் முதல் பாரதி பாடல் வரை உள்ளது.

ஒரு சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்-

கங்கை- காவிரி இணைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறோம். ‘கங்கையை விட புனிதமான காவிரி’ என்று ஒரு ஆழ்வார் பாடுகிறார். இன்னும் ஒரு இடத்தில் ‘கங்கை ஆடிலென், காவிரி ஆடிலென்’ என்று புண்ய தீர்த்தத்தில் குளிப்பது பற்றிப் பாடுகிறார்.

இதோ அப்பர் வாக்கு:-

கங்கை யாடிலென் காவிடி யாடிலென்

கொங்கு தண்குமரித்துறை யாடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்

எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே

–ஐந்தாம் திருமுறை

 

 

 

நமது தந்தையர்  காலத்தில் வாழ்ந்த பாரதியோ ‘கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்கிறான்.

 

கம்ப வர்மனின் திருவாமூர்க் கல்வெட்டில் ‘கங்கையிடை குமரி இடை எழுநூற்றுக் காதமும்’ – என்ற வரி உள்ளது.


கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு

 

ஸ்ரீ கம்ப பருமற்கு

யாண்டு இருபதாவது

பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க

தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று

படாரிக்கு நவகண்டங் குடுத்து

குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு

திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது

எமூர்ப் பறைகொட்டக்

கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்

பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்

குடுத்தார்கள்

இது அன்றென்றார்

கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்

செய்தான் செய்த பாவத்துப் படுவார்

அன்றென்றார் அன்றாள் கோவுக்கு

காற்ப்பொன் றண்டப்படுவார்

 

கங்கை நதி உலகின் மிகப் பழமையான, உலகின் முதல் கவிதைத் தொகுப்பான ரிக் வேதத்திலும் உள்ளது. எதற்காக இப்படி கங்கையையும் காவிரியையும் இணைத்துப் பேசுகின்றனர்?

 

இந்த நாடு ஒன்றே!

இந்தப் பண்பாடு ஒன்றே!!

 

என்பதை எடுத்துரைக்கத்தான்  காரிகிழார் முதல் (புறநானூறு பாடல் 6) பாரதி வரை இமயம்-குமரி பற்றிப் பாடுகின்றனர்.

சேரன் செங்குட்டுவனும், கரிகால் சோழனும் இமயம் வரை சென்று சின்னங்களைப் பொறித்தது  ஏன்?

கண்ணகி சிலைக்காக, இமயத்தில் கல் எடுத்து, கங்கையில் அதைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்தது ஏன்?

 

காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் ஈரான் முதல் பாண்டியநாடு வரை ரகுவின் திக்விஜயம் செல்கிறது. இந்துமதி சுயம்வரத்துக்கு வந்த அரசர்களும் பாண்டியநாடு முதல் ஆப்கனிஸ்தான் வரை பல நாடுகளிலிருந்து வந்துள்ளனர். ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் ஒரு நாடு, நாம் ஒரே பண்பாடு என்ற கொள்கை மனதில் ஆழ வேரூன்றிவிட்டது.

 

திருமூலர் இமயத்தையும் சிதம்பரத்தையும் இலங்கையையும் இணைத்துப் பாடியது ஏன்?

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூரும் இவ்வானில் இலங்கைக் குறியுறுஞ்

சாருந்திலை வனத் தன் மாமலயத்து

ஏறுஞ் சுழுனை இவை சிவபூமியே”. (திருமந்திரம் – 2747)

 

 

(திருமூலரும் தீர்க்கரேகையும் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இப்பாடல் பற்றி மேல்விவரம் காண்க)

கல்வெட்டிலும் கூட கங்கை காவிரி பற்றி இருக்கிறது! ஆக நமது நாட்டில் அப்பர் காலத்துக்கு முன்னரே, காளிதாசன் காலத்துக்கு முன்னரே, சங்க காலத்துக்கு முன்னரே இமயம் முதல் குமரி வரை ஒன்று என்ற கொள்கை இருந்திருக்கிறது.

 

வெள்ளைக்காரன் ரோடு போட்டதும், ரயில் பாதை போட்டதும் அவனுடைய படைகளையும் விற்பனைப் பொருட்களையும் கொண்டு வந்து நம்மை அடக்கி வைக்கவும், கோஹினூர் போன்ற பொக்கிஷங்களைக் கடத்தவும்தான் என்பதை அறிக.

 

தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை இமய மலையிலிருந்து சிவபெருமான் அனுப்பியதும் வரலாற்று உண்மை. தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

நமது வரலாற்றுப் புத்தககங்களை மாற்றி எழுதி நம் பிள்ளைகளுக்கு சரியான வரலாற்றைக் கற்பிக்க வேண்டும்.

இது நமது தலையாய கடமை!

–SUBHAM–

TAGS:– கங்கை, காவிரி, குமரி, ஒற்றுமை, வெள்ளைக்காரன்

கம்பவர்மன் கல்வெட்டில் பாவ புண்ணியம் பற்றிய சுவையான செய்தி (Post No.4098)

கம்பவர்மன் கல்வெட்டில் பாவ புண்ணியம் பற்றிய சுவையான செய்தி (Post No.4098)


Written by London Swaminathan


Date: 20 July 2017


Time uploaded in London- 13-50


Post No. 4098


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பவர்மன் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பல்லவ மன்னன். கி.பி.900 வாக்கில் ஆட்சி செய்தவன். அவனது பல கல்வெட்டுகள், நடுகல் கல்வெட்டுகளாகும். உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நடுகல் நட்டு அதற்கு ஊர் மக்களும் அந்தப் பக்கம் போய்வரும் யாத்ரீகர்களும் வழிபாடு செய்வதை சங்க இலக்கிய நூல்கள் செப்புகின்றன.

 

போர்க்காலங்களில் தாமாக முன்வந்து களபலி கொடுக்கும் வழக்கம் மஹாபாரத காலம் முதல் இருந்து வருகிறது. இதை நவகண்டம் பற்றிய எனது கட்டுரையில் காண்க. அப்படிப்பட்ட நவகண்டம் ஒன்று நடந்த பின்னர் நட்ட கம்பவர்மன் நடுகல்லில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன:-

 

  1. இந்த நாடு கங்கை தோன்றும் கங்கோத்ரி இருக்கும் இமயம் முதல் குமரி வரை ஒன்று!

2.போருக்கு முன், ஒருவன் உயிர்ப்பலி கொடுத்து நாட்டைக் காக்க மக்களுக்கு வீரம் ஊட்டும் வழக்கம் மகாபராத காலம் முதல் — அஸ்தினாபுரம் முதல் — குமரி வரை – இருந்துள்ளது!

 

  1. கல்வெட்டுகளுக்கு தீங்கிழைப்போருக்கு பாவம் வரும்; அவைகளைக் காப்போருக்கு புண்ணியம் கிடைக்கும்.

 

கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு

ஸ்ரீ கம்ப பருமற்கு

யாண்டு இருபதாவது

பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க

தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று

படாரிக்கு நவகண்டங் குடுத்து

குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு

திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது

எமூர்ப் பறைகொட்டக்

கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்

பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்

குடுத்தார்கள்

இது அன்றென்றார்

கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்

செய்தான் செய்த பாவத்துப் படுவார்

அன்றென்றார் அன்றாள் கோவுக்கு

காற்ப்பொன் றண்டப்படுவார்

 

உதவிய நூல்; கல்வெட்டு ஓர் அறிமுகம், தமிழ்நாடு தொல்பொருள்துறை ஆய்வுத்துறை வெளியீடு, 1976

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் பாவ புண்ணியங்களுக்குப் பயந்ததால்தான் நமக்குப் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இன்றோ கோவில் சிலைகளையே திருடி விடுகின்றனர்.

 

மேலும் கங்கையையும் குமரியையும் குறிப்பிட்டதன் காரணம் இவ்விரண்டும் புனித நீர்த்துறைகளாகும். இதன் பொருள் என்ன வென்றால் சாதாரண இடத்தில் பாவம் செய்வதைவிட புனித இடத்தில் பாவம் செய்வது பல மடங்கு கொடியது என்பது தமிழரின் நம்பிக்கை.

 

கல்வெட்டின் பொருள்:-

பல்லவ மன்னன் கம்ப வர்மனின் 20-ஆவது ஆட்சி ஆண்டில் இது பொறிக்கப்பட்டது. பட்டை பொத்தன் என்பவனின் வெற்றிக்காக ஒக்கொண்டநாகன் ஒக்கதித்தன் என்பவன் தன்னுடைய தலையை அறுத்து பிடாரியின் பீடத்தில் வைத்தான். அவனுக்கு திருவான்மூர் மக்கள் பறைகொட்டி , கல் நட்டு சிறப்பு செய்தார்கள். நிலமும் கொடையாக அளிக்கப்பட்டது.

 

இக்கொடைக்கு ஊறு செய்வோர் கங்கைக்கரை முதல் குமரி வரையுள்ள மக்கள் செய்த அனைத்து பாவங்களையும் பெறுவார்கள். மேலும் மன்னனுக்கு கால் பொன் அபராதமும் கட்ட வேண்டும்.

 

நாகர்கள் பெயர்கள் சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் இருபது பேர் வரை உள்ளனர். குபதர் கால கல்வெட்டுகளிலும் பலர் நாகன் என்ற பெயர் உடையவர்கள் ஆவர்.

TAGS: கம்பவர்மன், நவகண்டம்,  கங்கை குமரி, பாவம்

–subham–

அரச்சலூர் இசைக் கல்வெட்டில் ஒரு அற்புதம்! (Post No.4095)

Written by London Swaminathan


Date: 19 July 2017


Time uploaded in London-8-50 am


Post No. 4095


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

என்ன அற்புதம்?

முதல் இரண்டு கல்வெட்டுகளையும் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் (Palindrome) காணலாம். இவை இசைத் துறையிலும், கூத்துத் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன.

 

சங்க இலக்கியத்திலும் வண்ணக்கன், தேவன் , சாத்தன் முதலிய பெயர்கள் வருகின்றன.

 

தேவன், சாத்தன் (சாஸ்தா) முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் புழங்கின. வால்மீகி, கண்ணதாசன், காமாக்ஷி, விஷ்ணுதாசன் (கண்ணந்தாயன், காமக்கண்ணி, விண்ணந்தாயன்) என்ற பெயர்கள் புறநானூற்றில் இருப்பதால் இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இசைத் துறையிலும் நாடகத் துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

 

எங்கே உள்ளது?

ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் பாதையில் 12 மைல் தொலைவில் அரச்சலூர் இருக்கிறது.

ஊரின் எல்லை ஓரமாகவுள் ள நாக மலையில் ஆண்டிப்பாறையில் பாண்டியர் குழியில் (குகை) உள்ளது. அங்கேதான் இக் கல்வெட்டுகள் உள. சில வரிகள் சிதைந்து உள்ளன.

 

சிதைந்த எழுத்துக்களை அடைப்புக்குறிக்குள் காணலாம். எளிதில் ஊகிக்க முடியும்.

எந்தக்காலம்?

இக்கல்வெட்டு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த (பிராமி) தமிழி எழுத்துக்களில் எழுதப் பட்டுள்ளது

 

முதல் கல்வெட்டு

 

த தை தா தை த

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த

 

இரண்டாம் கல்வெட்டு

தை த தை த தை

த தை (த) தை த

தை த தை த தை

த தை (த) தை த

(தை த தை த தை)

மூன்றாம் கல்வெட்டு

எழுத்துப் புணருத்தான் மணிய்

வண்ணக்கன் தேவன் சாத்தன்

xxxx

 

புணருத்தான் = தொகுத்தான்

 

தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களில் இசையில் எப்படி எழுத்துக்கள் நீட்டித்தும், தனித்தும் உச்சரிக்கப்படும் என்பது உரை ஆசிரியர்களால் விளக்கப்பட்டுள்ளது. இன்றும் சங்கீதக் கச்சேரிகளில் இப்படிச் சொற்கள் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.

 

கன்யாகுமரியில் என்பதை , கன்னியாக்கு…………… மரியிலே………. என்று முழங்கும் பாடல் என் நினைவுக்கு வருகிறது!

 

உதவிய நூல்

கல்வெட்டு – ஓர் அறிமுகம்

தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு 1976

TAGS:– அரச்சலூர், இசை, கல்வெட்டு, அற்புதம்

–Subham–

தமிழ்க் கல்வெட்டுகளில் விநோதப் பெயர்கள் (Post No.4092)

Written by London Swaminathan


Date: 18 July 2017


Time uploaded in London-14-06


Post No. 4092


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மனிதர்களுடைய பெயர்கள் காலத்துக்கு காலம் மாறுபடும்; சங்கத் தமிழ் நூல்களில் வழங்கும் பல பெயர்கள் இப்பொழுது புழக்கத்தில் இல்லை; இதே போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல பெயர்களை நாம் இப்பொழுது நமது குழந்தைகளுக்கு சூட்டுவதில்லை. உலகில் மாறாத பொருட்கள் இல்லை. மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது (Change is inevitable) . உடை, உணவு, மொழி எல்லாமே மாறுபடும் என்பது அனுபவத்தில் கண்ட விஷயம்!

சுமார் ஐந்தாம் நூற்றாண்டிலேயே புனிதவதி, திலகவதி, பரம தத்தன் போன்ற சம்ஸ்கிருதப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டதை காரைக்கால் அம்மையார் சரித்திரம் அதற்குப்  பின்னர் வந்த அப்பர் சரித்திரம் ஆகியன காட்டும். ஆனால் நப்பசலை, நச்செள்ளை போன்ற பெண்களின் பெயர்களை நாம் இப்போது பயன்படுத்துவதில்லை. ஆயினும் சங்க காலத்தில் கேசவன், தாமோதரன், வால்மீகி, பிரம்மா, கபிலர், பரணர் போன்ற சம்ஸ்கிருதப் பெயர்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினர்.

சங்கத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களில் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள் இருக்கின்றன. இன்னும் சிலர் சம்ஸ்கிருதப் பெயர்களை தமிழில்  மொழி பெயர்த்து வைத்துக் கொண்டனர். காமக்கண்ணி என்ற சங்கப் புலவரின் பெயர் காமாக்ஷி என்ற தெய்வத்தின் பெயராகும். வேத கால இந்திரனின் பெயரை காஷ்மீர் முதல், இலங்கையின் கண்டி வரையுள்ள எல்லோரும் பயன்படுத்துகிறோம். ஜாதி வித்தியாசமின்றி எல்லோரும் ராஜேந்திரன், மஹேந்திரன், உபேந்திரன் என்றெல்லாம் இந்திரன் பெயரை வைத்துக் கொள்கிறோம். இதே போல ஊர் என்பது சங்க காலத்திலேயே உள்ளது. இது புரம், பூர் (Jaipur, Nagpur, Jodhpur) என்ற சம்ஸ்கிருதச் சொல்லுடன் தொடர்புடையது. சங்க காலத்துக்கு முன்னமே சம்ஸ்கிருத நூல்களில் உள்ளது.

 

(என்னுடைய கொள்கைப்படி தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திலிருந்து பிறந்ததால் இப்படி நூற்றுக்கணக்கான ஒற்றுமைகளைக் காணலாம். இவை எல்லாம் ஐரோப்பிய மொழிகளில் இல்லாததால் மாக்ஸ்முல்லர், வில்லியம் ஜோன்ஸ் போன்றவர்கள் சொன்னதெல்லாம் வெறும் ஊகமே — தவறான ஊகங்களே — என்பது உறுதியாகின்றது)

 

இதோ சில சுவையான கல்வெட்டுப் பெயர்கள்:

கல்வெட்டுகள் அனைத்தும் இந்து முறைப்படிதான் திசைகளைக் குறிக்கும்— பூர்வ, தக்ஷிண, பஸ்சிம, உத்தர = கீழ் பாலெல்லை, தென்பாலெல்லை, மேல் பாலெல்லை, வட பாலெல்லை). இது இந்துக்களின் கண்டுபிடிப்பு. கோவிலை வலம் வருதல், கடிகராத்தில் முள் வலமாகச் சுற்றல் எல்லாம் , உலகிற்கு இந்துக்கள் கற்பித்த நாகரீகம்!

 

கி.பி. 550

சிம்மவர்மன் (சிம்ஹவர்மர்), வஜ்ர நந்தி, நரபயன் (ஆணத்தி)

 

கி.பி.675

பரமேச்சுரன், அநந்தசிவ ஆசாரியர்

 

ஒன்பதாம் நூற்றாண்டு

சதுர்புஜன், சதுர்வக்த்ரன்,, அத்ரி, புரூரன், நஹுஷன், தசவதனன், தார்தராஷ்டிரன், வானரத்வஜன், ஹரிச்சந்திரன், சிரிவல்லன், வரகுணன், சிரிகண்டராசன், வீரநாரணன், ஸ்ரீ பராந்தக மஹாராஜன், பரமேஸ்வரன், காடக ஸோமயாஜி, மாயா நாராயண பட்டர், நாராயணங் கேசவன், கண சுவாமி பட்டர், யோகேசுவர பட்டர், மாதவன், சிரீவல்லன், நக்கன்

11ஆம் நூற்றாண்டு

வீர கேரளன், வீர பாண்ட்யன், வினைய கஞ்சுகன், விசால சீலன், கோவிந்த சுவாமி பட்டச் சோமாசி, வாசுதேவ பீதம்பரப் பட்டன்,

ப்ரஹ்ம ஸ்ரீதுங்க ராஜ, ராஜ சிம்ஹ, மாங்குடிச் சோலைக் கிழவன், இளவளம்புல்லன், அரையன், வேற்சாத்தன், சாத்தன்.

 

கி.பி.865

கருநந்தடக்கன், விஷ்ணு பட்டாரகன், குமாரசுவாமி பட்டன், இளையான் கண்டன், வெண்ணீர் வெள்ளாளன், சாத்த முருகன், சிங்கங்குன்றப் போழன்.

 

ராரஜராஜன் லெய்டன் செப்பேடு

கிருஷ்ணன் ராமன், பருத்திக் குடையான் வேளான், மூவேந்த வேளான், ஆரூரன்,  தத்தன் சேந்தன்,  பொற்காரி, , தாமோதர பட்டன், , கற்குடையான் பிசங்கன்,  சங்கர நாராயணரங்கன், , தம்மடி பட்டன், தியம்பக பட்டன், கொற்றன் பொற்காரி, சூற்றியன் தேவடி, தேவன் சாத்தன்,

தளிக்குளவன், குமரன் ரங்கன், சிங்கன் வெண்காடன்,   தம்மடிப் பட்டன், ஸ்ரீதரபட்டன், பற்பநாப பட்டன், வெண்ணைப் பட்டன்,  நந்தீஸ்வர பட்டன், அமுதன் தீர்த்தகரன், அரைசூர் மறியாடி, வேட்கோவன் மாதேவன், காஸ்யபன் ஸூர்யரங்கன், பாரத்வாஜி திரித்தி வைகுந்தன், சதுர்முகனரங்கன், கண்ணன், தேவன் குடையான், பூவத்தபட்டன், நள்ளாறன், கற்பகஞ் சோலை, கணவதி, முண்டனரங்கன், ராஜேந்திர சோழ பட்டன்.

TAGS: கல்வெட்டு, தமிழ்ப் பெயர்கள், லெய்டன், சங்கப்புலவர்

 

–சுபம்-

 

தமிழ்ச் சங்கத்தில் மோதல்! (Post No.4083)

Written by London Swaminathan


Date: 15 July 2017


Time uploaded in London-6-59 am


Post No. 4083


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மதுரையில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கடைத் தமிழ்ச் சங்கத்தில் புலவரிடையே காழ்ப்புணர்ச்சியும் பொய்யும்,புரட்டும் மிகுந்திருந்தது. இது பற்றி திருவிளையாடல் புராணத்தில் பல படலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

 

1931ஆம் ஆண்டில் வெளியான திருவள்ளுவர் சரித்திரத்தில் சில சுவையான பாடல்கள் உள்ளன:

 

சங்கத்தாரை வெல்ல வேண்டி அவ்வையார் ஞானக் குறிகளால் கை சைகைகள் பண்ணி இவை என்னென்று கேட்கச் சங்கத்தார் சொல்லியது:-

இவ்வளவு கண்ணினாள் இவ்வளவு சிற்றிடையாள்

இவ்வளவு போன்ற இளமுலையாள் – இவ்வளவாய்க்

காமத் தலைவனையும் காணாது கன்றினால்

நாமத்தை காட்டுகுறி நன்கு

 

இஃது தகுதியான உத்தரவன்றென்று அக்குறிகளுக்கு ஔவை சொல்லியது

 

ஐயமிடுமின் அறநெறியைக் கைப்பிடிமின்

இவ்வளவேனும் மனத்தை இட்டுண்மின் றெய்வம்

ஒருவனே யென்ன உணரவல்  லீரேல்

அருவினைகள் ஐந்தும் அறும்

 

 

இப்படியென்று ஔவை சொல்ல சங்கத்தார் நாணமுற்று இவளை வெல்லப் படாதென்று திருவள்ளுவரைப் பார்த்து நீர் எந்த வூரென்றதற்கு அவர் சொல்லியது

எந்தவூர் என்றீர் இருந்தவூர் நீர் கேளீர்

அந்தவூர்ச் செய்தி அறியீரோ – வந்தவூர்

முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்

அப்பாலும் பாழாயறும்

 

என்றிது முதலான ஞானார்த்தமான செய் யுட்களளாலவர் வினவியவைகளுகெல் யு லா முத்தரவு சொல்ல (உத்தரவு=பதில்)

சொல்ல, இவரையும் வெல்வ தரிதென்று இடைக்காடருடனே பேச, அவர் சொல்லியது

 

ஆற்றங்கரையின் அருகிருந்த மாமரத்தில்

காக்கை யிருந்து கஃகஃகென்னக் — காக்கைதனை

எய்யக்கோல் இல்லாமல் இச்சிச் செனவெய்தான்

வையக்கோ னார்தன் மகன்

 

இது போன்ற அனேகஞ் செய்யுட்களை அவர்களாலெழுதப் படாமலும்

கற்றுக்கொள்ளப்படாமலுஞ் சொல்ல நாணித் தோற்படைந்தார்கள்

 

திருவள்ளுவ நாயனார் திருவடி வாழ்க!

xxx

நாகலிங்க முதலியார் வெளியிட்ட திருக்குறள் மூலமும் பரிமேலழகர் இயற்றிய உரையும் என்ற நுலில் திருவள்ளுவர் சரித்திரம் என்ற பகுதியில் உள்ள விஷயம், ஆண்டு 1931.

 

(நான் முன்னர் வெளியிட்ட கட்டுரைகளில் திருவள்ளுவருடன் பிறந்த ஆறு பேர் கதைகளையும், தமிழ்ச் சங்கத்தில் ஏற்பட்ட மோதல்கள் பற்றிய திருவிளையாடல் புராணக் கதைகளையும் கொடுத்துள்ளேன்)

–சுபம்–

பெரியாரைப் பேணு: வள்ளுவர், மனு அறிவுரை (Post No.4078)

Written by London Swaminathan
Date: 13 July 2017
Time uploaded in London- 13-02
Post No. 4078

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

‘பெரியாரைப் பின்பற்று; உனக்கு ஒரு கேடும் வராது’ என்று மனுவும் திருவள்ளுவரும் உரைப்பர்.

 

பகவத் கீதையில் கண்ணனும் உலகமே பெரியாரைத்தான் பின்பற்றும் என்று சொல்கிறார். லாங்பெலோ (Longfellow) போன்ற ஆங்கிலக் கவிஞர்களும் இதே கருத்தை வலியுறுத்துகின்றனர்.

 

முதலில் யார் பெரியார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்; ஒழுக்கத்தில் உயர்ந்தோரே பெரியார். சத்தியத்தைக் கடைப்பிடிப்போரே பெரியார்.

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல் –443

 

பொருள்:-

 

அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த பெரியவர்களைப் போற்றி தமக்கு சுற்றமாக வைத்துக் கொள்வது சிறந்த செயல் ஆகும்; கிடைப்பதற்கு அரிய பேறாகும்.

 

இதை அரசியல் என்னும் பிரிவில் அரசனுக்குரிய செயலாகச் சொன்னாலும், அனைவருக்கும் பொருந்தக் கூடியதே.

வள்ளுவனுக்கும் முன்னால் மனு தனது மனு ஸ்ம்ருதியில் மிக அழகாகச் சொல்கிறார்:-

 

“ஒருவன் அவனுடைய தந்தையர்களும் பாட்டனார்களும் சென்ற வழியில் செல்ல வேண்டும்; அப்பேற்பட்ட நல்ல மனிதர்களின் காலடிச் சுவட்டைப் பின் தொடர்பவனுக்கு ஒருபோதூம் கெடுதல் வராது; தீங்கு நேரிடாது (மனு 4-178).

 

உலக மக்களும் நல்ல மனிதர்களையே தலைவர்களாகக் கொண்டு, அவர்களையே பின்பற்றுவர் என்ற கருத்தை முதலில் கிருஷ்ணன் பகவத் கீதையில் சொல்கிறான் (3-21) அதே கருத்தை பி ன் னர் புறநானூற்றில் அவ்வையாரும் சொல்கிறார். அமெரிக்க கவிஞர் ஹென்றி வாட்ஸ்நொர்த் லாங்பெலோவும் சொல்கிறார். இவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதால் அவை நம் அடி மனதில் ஆழப்பதிகிறது.

 

யத்ய- தாசரதி ச்ரேஷ்டஸ் – தத் ததேவேதரோ ஜன:

ஸ யத் ப்ரமாம் குருதே லோகஸ்- ததனுவர்த்ததே – 3-21

 

“ஒர் பெரியவன் எதை எதைப் பி ன் பற்றுகின்றானோ அதையே ஏனைய மக்களும் பின்பற்றுகின்றனர். அவன் எதை மதிப்புள்ளதாக செய்கிறானோ அதை உலகம் பின்பற்றுகிறது” – என்று கண்ணன் சொல்கிறான்.

 

தொல்காப்பியரும்

வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்டு ஆகலான (சூத்திரம் 1592)

 

பொருள்:-

ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்களின் ஆணையால் உலக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆதலால் உலக வழக்கு என்பது சான்றோரது நெறியாகும். இழிசினர் ஒழுக்கம் வழக்கு  எனக்கொள்ளப்படாது.

    

என்ன அதிசயம்! கிருஷ்ணனும் மனுவும் சொன்னதை அப்படியே தொல்காப்பியரும் சொல்கிறார்.

 

மனு இன்னும் ஒரு ஸ்லோகத்தில் தர்மம் என்பது கால, தேச, வர்த்தமானத்தைப் பொறுத்தது என்றும் எங்கேனும் சந்தேகமோ முரண்பாடோ தோன்றினால், அக்காலப் பெரியோர்கள் சொல்வதே பொருந்தும் என்றும் பகர்வார்.

 

எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை

 

புறநானூற்றில் அவ்வையார் சொல்வதைப் பாருங்கள்:

 

நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்.187)

 

பொருள்:

நிலமே! நீ நாடே ஆகுக அல்லது காடே ஆகுக. பள்ளமே ஆகுக; மேடே ஆகுக. அது எப்படிப்போனாலும் எவ்விடத்தில் மக்கள் நல்லவரோ, அந்த இடத்தில் உனக்கும் நல்ல பெயர்; உனக்கு என்று தனியாக  ஒரு நலமும் இல்லை; நீ வாழ்க.”

 

ஒரு நாட்டின் சிறப்பு அங்குள்ள நிலத்தா ல் விளைவதன்று;  நன் மக்களாலேயே பெயரும் புகழும் வரும் என்பது அவ்வைப் பாட்டியின் துணிபு.

 

இறுதியாக அமெரிக்க கவிஞர் லாங்பெலோவின் கவிதையைக் காண்போம்.


Lives of great men all remind us
We can make our lives sublime,
And, departing, leave behind us
Footprints on the sands of time ;

 

 

    Footprints, that perhaps another,
Sailing o’er life’s solemn main,
A forlorn and shipwrecked brother,
Seeing, shall take heart again.

 

 

Let us, then, be up and doing,
With a heart for any fate ;
Still achieving, still pursuing,
Learn to labor and to wait.

 

 

உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை

நமக்கு உணர்த்துவது  யாதெனில்–

நாமும் உயரலாம் என்பதே!

அவர்கள் விட்டுச் செல்வது

காலம் எனும் மணற்திட்டில்

வெறும் காலடிச் சுவடுகள் தாம்

 

அந்தக் காலடிச் சுவடுகளும்

கலம் உடைந்த கப்பல் மாக்கள்

கரையேறிக் கண்டவுடன் களி

நடம் புரிந்து ஆடச் செய்யும்.

–Subham–

 

 

நாட்டைக் காக்கும் நல்லோர்கள்- செட்டியார்கள் (POST No.4073)

Written by S NAGARAJAN

 

Date: 12 July 2017

 

Time uploaded in London:- 5-31 am

 

 

Post No.4073

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

நாட்டைக் காக்கும் நல்லோர்கள்

செட்டியார்கள் வாழ்க!

 

ச.நாகராஜன்

செட்டியார்கள் வாழ்க என்ற தலைப்பைப் பார்த்தவுடன் நீ ஒரு செட்டியாரா என்று கேட்டால் இல்லை என்ற பதிலைத் தான் நான் சொல்ல வேண்டி வரும்.

 

 

செட்டியார்களை செட்டியாராக நான் இல்லாத போதும அனைவரும் வாழ்த்த வேண்டும் என்றே சொல்வேன்.

ஒரு ஹிந்துவாக, ஒரு இந்தியனாக, ஒரு தமிழனாக செட்டியாரை வாழ்த்துவதில் பெருமையுறுகிறேன்.

 

 

ஒரு அழியாத பாரம்பரியத்தை அப்படியே மரபு வழுவாமல் பாதுகாத்து வந்ததில் வருவதில் செட்டியார்களின் ப்ங்கு குறிப்பிடத் தகுந்தது.

 

எனவே அவர்கள் பெருமைக்குரியவர்கள். வாழ்த்துதற்குரியவர்கள்.

காசி முதல் இராமேஸ்வரம் வரை யாத்ரீகர்கள் தங்குதற்கு சத்திரங்கள் கட்டியவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்.

காசி விசுவநாதர் கோவிலில் காலை 4 மணிக்கு திருவனந்தல், 11-30 மணிக்கு உச்சிக்காலம், இரவு 9 மணிக்கு சாயரட்சை ஆகிய பூஜைகளும் அபிஷேக அலங்காரங்களும் இவர்களுடைய செலவில் சிறப்பாக இன்றும் செய்யப்படுகின்றன. சிவபெருமான், அன்னபூரணித் தாயார், விசாலாட்சி அம்மன், மற்றும் வாரணாசியிலுள்ள ஏனைய கோவில்களிலும் இவர்கள் கட்டளைகள் உள்ளன

 

வாரணாசிக்குச் செல்லுபவர்கள் கட்டாயம் பார்த்து இன்புறத்தக்க காட்சி விசுவநாதர் கோவிலில் நிகழும் மாலை ஆரத்தி அல்லது படா பூஜை. இது விரிவான சடங்காகவும், ஆடம்பரமாயும், மிகக் கவர்ச்சியாயும், தமிழ்நாட்டு மரபுப்படியும் செய்யப்படுகின்றது. தொன்று தொட்ட பெருமை மிக்க புனித வாரணாசி நகரின் தெய்வீக வாழ்க்கையில் மிக முக்கியமான எழில் கூடிய காட்சி என்று இதைக் கூறலாம்.

 

இந்த நிகழ்ச்சிகள் என்றென்றும் குறைவின்றி இனிது நடைபெறுவதற்காக நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் கல்கத்தாவிலும், பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களின் நகரங்கள் சிலவற்றிலும் மூலதனம் வைத்துப் பெரிய கட்டளைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். வாராண்சியில் குடோலியா என்னும் பகுதியிலுள்ள நாட்டுக்கோட்டைச் சத்திரம் (ஹிந்தியில் ‘நாட்கோட் ச்த்ரம் பவன்’ என்பர்) வானுயர்ந்த கல் கட்டிடம்; அதை அறியாதவர் எவரும் இல்லை. இந்த மாளைகையிலிருந்து நாள்தோறும் இருமுறை காலை 11 மணிக்கும் இரவு 8 மணிக்கும் கவின் மிக்க ஊர்வலம் ஒன்று விசுவநாதர் கோவிலுக்குப் புறப்படுகிறது.இந்தை ‘சம்போ’ என்பர்.அபிஷேகத்திற்குத் தேவையான பால், தேன்,பன்னீர், அலங்காரப் பொருள்கள், மலர்கள் ஆகியவை தமிழ் நாட்டு மங்கல இசைக் கருவியான நாதசுரம் முழங்க எடுத்துச் செல்லபப்டுகின்றன. அபிஷேகத்தின் போது தேவார இசைத்தட்டு விசுவநாதர் கோவிலில் ஒலிக்கிறது.

இந்த ஊர்வலம் ஒரு நாள் கூட, ஒரு தடவை கூடத் த்டைபடாமல் நடைபெற்று வந்திருக்கிறது.

 

 

 

1942-ம் ஆண்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் இந்திய நாட்டைப் பெருங் க்லவரத்திற்குள்ளாக்கியது. வாரணாசி நகரம் அந்நாளில் அமைதி குன்றி கொந்தளிப்பாக இருந்தது. ஊர்வலங்கள் தடைப்பட்டன. பலவிதமான கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டிருந்தன. அப்போதுங்கூட சம்போ குறித்தபடி சென்ற வண்ணமாக இருந்தது, வாரணாசியின் வரலாற்றில் குறிப்பிடத் தக்கது.

 

(ஆதாரம்:- சோமலெ எழுதிய தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் என்ற நூலில் 42ஆம் பக்கத்திலிருந்து இந்த விவரம் இங்கு தரப்படுகிறது)

 

 

காசி விசுவநாதர் ஆலயம் மட்டுமல்ல, பல்வேறு ஆலயங்களின் கும்பாபிஷேகத்திற்குப் பெரிதும் காரணமாக அமைந்தவர்கள் செட்டியார்களே. தங்கள் வருவாயில் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஆலயத்திற்கென அர்ப்பணித்த சமூகம் செட்டியார் சமூகம்.

தங்குவதற்குச் சத்திரம், உண்பதற்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிய தயாளர்களின் குலம் செட்டியார் குலம்.

செட்டியார்களில் குறிப்பிடத் தகுந்தவர்களின் பட்டியலை எடுப்பது என்றால் அது பெரிய புத்தக் தொகுதியாக மாறும்.

என்றாலும் கூட நேதாஜியை முதன் முதலாகம் படம் எடுத்த ஏ.கே.செட்டியாரை மறக்க முடியுமா?

 

கம்பனில் மனதைப் பறிகொடுத்து முத்தையாவாக இருந்த கவிஞன் கண்ணதாசனாக மாறி தமிழை வளர்த்த கதையைத் தான் சொல்லாமல் விட முடியுமா?

 

கம்பனுக்காகத் தன் சொந்தப் பெயரான சா. கணேசன் என்பதை கம்பனடிப்பொடியாக மாற்றி கம்பனின் பெருமையைப் பரப்புவதே தன் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு சாதனை படைத்த சா. கணேசனை நினைக்காமல் இருக்க முடியுமா?

தமிழை வளர்த்த கதிரேசன் செட்டியார் உள்ளிட்ட ஏராளமானோரையும் அரசு பதவிகளிலும் வணிக நிறுவனங்களிலும், கல்வி நிலை தனி முத்திரை பதித்த ஏனையோரையும், பதிப்பகங்களில் மனதைச் செலுத்தி புத்தகங்களை ஆயிரக்கணக்கில் வெளியிடும் பலரையும், திரைப்படத் தயாரிப்பில் தன்னிகரற்று வலம் வரும் பலரையும் பட்டியலிட்டு மாளாது.

 

இன்று கணினியில் சாப்ட்வேர் துறையிலும் செட்டியார்கள் முன்னணியில் நிற்பதைப் பார்க்கலாம்.

 

தேசபக்தியும் தெய்வபக்தியும் நிறைந்த செட்டியார்கள் ஹிந்து மதத்தின் தவப் புதல்வர்கள்.

 

அவர்கள் சிறிதும் தடம் பிறழாமல் தங்கள் முன்னோர் வகுத்த வழியில் செல்ல மன உறுதி பூண வேண்டும்.

அதற்கு இறைவன் அருள் பாலிப்பானாக!