கண்ணதாசனுடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்-கவியரசு கண்ணதாசன் பாடல்களிலிருந்து)

மீசை இல்லாத பாரதி, தாடி இல்லாத தாகூர் என்று கவிஞர் வாலி உம்மை வருணிக்கிறார். உமது வாழ்வு பற்றி……….

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

ஒரு கோல மயில் என் துணையிருப்பு

இசை பாடலிலே என் உயிர் துடிப்பு

நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு

கவிஞரே, மூன்று பெண்களை மணந்தீர், 15 குழந்தைகளுக்குத் தந்தையானீர். இன்னும் ஒன்று பெற்றிருந்தால் 16-ம் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க என்பது உண்மையாயிருக்குமே?

போட்ட கணக்கில் ஒரு புள்ளி தவறாமல்

கூட்டிக் கழித்துக் குறையாப்பொருள் வளர்க்கும்

நாட்டுக்கோட்டைச் செட்டி மரபில் நானும் பிறந்தவன் தான்

ஆனாலும் என் கணக்கோ அத்தனையும் தவறாகும்

கூட்டுகின்ற நேரத்தில் கழிப்பேன்; குறையென்று

கழிக்கின்ற நண்பர்களைக் கூட்டுவேன், கற்பனை பெருக்குவேன்

அத்தனையும் பிழையென்று துடைப்பத்தால பெருக்குவேன்; ஏதேதோ

பெரும்பெரிய திட்டங்கள் வகுப்பேன்; வகுத்தது எல்லாம் வடிகட்டிப்

பார்த்தபின் சிரிப்பேன் அடடா நான் தெய்வத்தின் கைப் பொம்மை.

4000க்கும் மேலாகக் கவிதைகள் எழுதினீர். 5000க்கும் மேலான சினிமா பாட்டுகள் எழுதினீர். இதன் நோக்கம்தான் என்ன?

மானிட இனத்தை ஆட்டிவைப்பேன் அவர்

மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்

நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த

நிலையிலும் எனக்கு மரணமில்லை

நிவீர் படிக்காத மேதை. ஆதி சங்கரர் முதல் பாரதி வரை 2000 ஆண்டுகளாகத் தோன்றிய பெரும் மேதைகளின் கருத்தை எல்லாம் எளிய பாடல்களாக்கிக் கொடுத்தீர்களாமே?

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமென யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

உலக மகாகவி காளிதாசன் “சொல்லும் அதன் பொருளும் போல” பார்வதியும் பரமேஸ்வரனும் வாழ்வதாக கடவுள் வாழ்த்துப் பாடினான். நீவீர் கணவன் மனைவி பற்றி என்ன சொல்கிறீர்?

சத்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்

தர்மத்தில் இணைந்து வாழ்வோம்

கத்திவழி நேர்மையாய் பண்புவழி மேன்மையாய்ப்

பாரெல்லாம் வணங்க வாழ்வோம்

பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்

பக்கத்தில் பங்கு கொள்வோம்.

பட்டினத்தார் கருத்துக்களைப் பாடியிருக்கிறீராமே?

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி

காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ?

நல்ல தத்துவப் பாடல்தான்., உமது ஆசை என்ன?

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

நேருபோன்ற தலைவர்கள் இறந்தபோது உருக்கமான கவிதைகள்

எழுதினீர்கள். மரணம் பற்றி ஒன்றுமே பாடவில்லையா?

போனால் போகட்டும் போடா-

இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா

வந்தது தெரியும் போவது எங்கே, வாசல் நமக்கே தெரியாது

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால், இந்த மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும்

அதில் மரணம் என்பது செலவாகும்

வரவு செலவு எழுதும் குலத்தில் உதித்த மாமேதையே.. ஜனன,மரணம் பற்றிய உமது வரவு செலவுக் கண்க்கிலும் பிழை இல்லை. இளமையில் வறுமை கொடிது என்று அவ்வைப் பாட்டி சொல்கிறாளே?

“ஏன் பிறந்தாய் மகனே – ஏன் பிறந்தாயோ
இல்லையொரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே”

Where there is a will, there is a away என்று ஆங்கிலத்திலும் மனம் இருந்தால் வழி உண்டு என்று தமிழிலும் சொல்வது உண்மைதானா?

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழ்கடலும் சோலையாகும்  ஆசையிருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி  கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் , கவலை தீர்ந்தால் வாழலாம்…..

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் கண்ணனுடன் வாழ்வேன் என்கிறாரே ஆண்டாள் திருப்பாவையில்.  உமது கருத்து என்னவோ?

நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் – நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!

லாட்டரி பரிசு விழுந்தால் பாதியைக் கோவிலுக்கு எழுதி வைப்பேன் என்று நூறு முறை சொன்னாலும் இந்த பாழாய்ப் போன கடவுள் செவிசாய்ப்பதில்லையே?
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை ,இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று எங்கள் புறநானூற்றுப் புலவன் கனியன் பூங்குன்றன் கூறுகிறான். இப்படி ஏதேனும் உயரிய எண்ணம் உண்டா?

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…

துரியோதணனையும் அர்ஜுனனையும் அனுப்பி நல்லது கெட்டது பற்றி ரிப்போர்ட் கொடுக்கச் சொன்னான் கண்ணன். துரியோதணன் எல்லாரும் கெட்டவர்கள் என்றும் அர்ஜுனன் எல்லாரும் நல்லவர்கள் என்றும் சொன்னார்களாம். இவர்களில் யார் நல்லவர்?

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
இன்பம் துன்பம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதனின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான் 

கண்ணதாசரே, 9000 க்கும் மேலாக கவிதை மழை பொழிந்துவிட்டீர்கள். உம்மை தினமும் பேட்டிக்கு அழைத்தாலும் எனது பேட்டி முடியவே முடியாது. நன்றி.

ஸ்ரீ கிருஷ்ணனுடன் 60 வினாடி பேட்டி

( கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை; பதில்கள்-பகவத் கீதையிலிருந்து )

கிருஷ்ணா உனக்கு ஒரு சவால். ஒரே நிமிடத்தில் பகவத் கீதையின் சாரத்தைப் போதிக்க வேண்டும். கீதையின் சாரம் என்ன?

கர்மன் ஏவ அதிகாரஸ்தே மா பலேஷூ கதாசன (2-47): கருமத்திலேயே உனக்கு அதிகாரம், ஒருபோதும் பலனில் இல்லை

புரிகிறது, கண்ணா, பலனில் பற்று வைத்து எதையும் எதிர்பார்த்துச் செய்யாதே என்கிறாய். யோகம் என்றால் என்ன?

ஸமத்வம் யோகம் உச்யதே (2-48): சம நிலைமையே யோகம்.வெற்றி தோல்விகளில் சமமாக இருந்து கொண்டு பணிகளைச் செய்.

கண்ணா, ஆத்மா எப்படிப்பட்டது?

ந ஜாயதே ம்ரியதே வா கதா சிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:

(2-20) ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. இல்லாமல் இருந்து மறுபடியும் உண்டாவதும் இல்லை. என்றும் உள்ளது, அழியாதது.

புரிகிறது. கிட்டத்தட்ட நான் இயற்பியலில் படித்ததுதான் Energy can neither be creataed nor destroyed. சுவாமி விவேகானந்தர் கீதையின் முக்கிய செய்தி என்று எதோ சொல்கிறாரே, அது என்ன?

க்லைப்யம் மாஸ்ம கம: ந ஏதத் த்வயீ உபபத்யதே(2-3) : பேடித்தனத்தை அடையாதே.இது உன்னிடத்தில் சிறிதும் பொருந்தாது

நல்ல புத்திமதி. நீ எவ்வப்போது அவதாரம் எடுக்கிறாய்?

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி (4-7): எவ்வப்போது தர்மத்துக்குக் குறைவும், அதர்மத்துக்கு எழுச்சியும் உண்டாகிறதோ அப்போது நான் வருவேன்.

தேவை தானப்பா, வந்து என்ன செய்வாய்?

பரித்ராணாய சாதூணாம், விநாசாய துஷ்க்ருதாம் (4-8) : சாதுக்களைக் காத்தற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும் யுகம் தோறும் அவதரிப்பேன்.

கண்ணா, ரொம்ப கஷ்டம்பா, சொல்லிட்டேன். ஒன்றா, இரண்டா. நீ நிறைய பேரை அழிக்க வேண்டியிருக்கும்பா. மனிதன் கடவுள் ஆக முடியுமா? எங்கள் வள்ளுவர் சொல்றாரு, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று.

ஆசை, பயம் கோபம் இல்லாதவர்கள், என்னைச் சரண் அடைந்தவர்கள் என் தன்மையை அடைந்திருக்கிறார்கள்(4-10).

உண்மைதனப்பா, காஞ்சி மகா சுவாமிகள், ரமணர், ராமகிருஷ்ணர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போல பலரைப் பற்றி படித்திருக்கேன். “வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே” என்று தொல்காப்பியர் சொன்னதும் உன்னைப் பார்த்துதானோ?

யத் யத் ஆசரதி ஸ்ரேஷ்ட: தத் ததேவ இதர ஜன: (3-21): பெரியவன் ஒருவன் எதைச் செய்கிறானோ அதையே ஜனங்களும் பின்பற்றுவர்.

யார் அறிவாளி?
ஆசையும் அதற்குக் காரணமான சங்கல்பமும் இல்லாமல் வினைகளை ஞானத்தீயில் யார் ஒருவன் பொசுக்குகிறானோ அவனே பண்டிதன்(4-19)

யார் யோகி?

கருமம் செய்யும் நிலையில் கரமத்தை காணாதவனே யோகி.(4-18)

சந்தேகப் பேர்வழிகளுக்கு உன் அறிவுரை?

சம்யாத்மா விநஸ்யதி(4-40) : ஞானம் இல்லாதவன் சிரத்தை இல்லாதவன் சந்தேகம் உடையவன் அழிகிறான் அவர்களுக்கு இவ்வுலகும் இல்லை, அவ்வுலகும் இல்லை.

ஞானிகள் யார்?

பண்டிதா: சம தர்சின (5-18): பிராமணன்,பசு, யானை, நாய், புலையன் எல்லோரையும் சமமாகப் பார்ப்பவனே ஞானி

நல்லது செய்பவர்களுக்கு நீ என்ன உத்தரவாதம் தருவாய்?

ந ஹி கல்யாண க்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி (6-40) : நல்லதைச் செய்பவன் எவனும் நிச்சயமாக தீய நிலையை அடையவே மாட்டான்.

ந மே பக்த ப்ரணச்யதி (9-31): என் பக்தன் அழியவே மாட்டான்.

இது போதுமப்பா, 100 சதவிகித கியாரன்டி. உன்னை எப்படி பூஜிப்பது?

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் (9-26): எவன் எனக்கு பக்தியுடன் பச்சிலையோ, பூவோ, பழமோ, தீர்த்தமோ தூய்மையுடன் கொடுக்கிறானோ அதை நான் புசிக்கிறேன்.

யாருக்கு அமைதி இல்லை?

ஸ சாந்தி மாப்னோதி ந காம காமி (2-70) : ஆsaiயுள்ளவனுக்கு அமைதி இல்லை.

திருடன் யார்?

வேள்வி செய்தால் தேவர்கள் உங்களுக்கு இன்பம் தரும் பொருட்களைத் தருவார்கள். அவர்கள் கொடுத்ததை அவர்களுக்குக் கொடுக்காமல் உண்பவன் திருடனேயன்றோ?(10-12) தமக்காகவே சமைப்பவர்கள் பாவத்தையே உண்கிறார்கள் (12-4).

கிருஷ்ணா, இது கொஞ்சம் கொஞ்சம் கடு மொழி, சுடு மொழி அப்பா. எல்லோருக்கும் நீ விடுக்கும் அறைகூவல்?

உத்திஷ்ட, யசோ லபஸ்வ (11-33): எழுந்திரு, புகழ் அடை.

யார் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்?

உத்தரேத் ஆத்மநாத்மானம்: தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்.தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது.தனக்குத் தானே நண்பன், தனக்குத் தானே பகைவன்(6-5).

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று எங்கள் தாயுமானவர் கூறுகிறார். நீயும் எதோ சொன்னாயாமே?

சர்வ பூத ஹிதே ரதா(12-4, 11-55): தே மாம் ஏவ ப்ராப்னுவந்தி: எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பவர்கள் என்னையே வந்து அடைகிறார்கள்.

சாக்ரடீஸ் உன்னையே நீ அறிவாய் என்று சொன்னது உன்னைப் பார்த்துதானா?

ஆத்மவான் பவ: (2-45) : உன்னையே நீ அறிவாய்

சரியப்பா, எவ்வளவோ தப்புச் செய்துவிட்டோம். எங்களுக்கு பாவ மன்னிப்பு தருவாயா?

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (18-66): எல்லா தருமங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் அடை. நான் உன்னை எல்லா பாபங்களிலும் இருந்தும் விடுவிக்கிறேன்.

அப்பா, கண்ணா. இது ஒன்றே போதும் அப்பா. உன்னையே சரண் அடைந்தேன். என்னையும் உலகிலுள்ள அனைவரையும் காப்பற்றப்பா.

திரு ஞான சம்பந்தருடன் 60 வினாடி பேட்டி

 

Child Saint Sambandhar meets Appar the Great (Photo: The Hindu)

 

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை; பதில்கள்- சம்பந்தர் தேவாரத்திலிருந்து)

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தரரே, வணக்கம். தமிழிலும் மந்திரங்கள் உண்டு என்பது உம்மால் அன்றோ உலகுக்குத் தெரிந்தது. பாண்டிய மன்னன் நோய் தீர விபூதி பூசி என்ன சொன்னீர்கள்?

 

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாய் உமை பங்கன் திருவாலவாயான் திரு நீறே

 

ஐந்து வயதிலேயே தமிழ் கவிதை பாடி இந்துக்களின் ரிகார்ட் புத்தகத்தில் பதிவான குழந்தை மேதையே. உங்கள் திரு வாயால். மீண்டும்…..

 

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடிக்

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடு உடைய மலரான்  உனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

 

கணபதி பற்றி நீவீர் பாடிய பாடலைக் கேட்க ஆசை. அதை வேகமாகப் படித்தால் வாயில் போட்ட கடலை மிட்டாய் கூட தூள்தூள் ஆகிவிடுமோ?

 

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது

வடி கொடு தனதடி வழிபடும் அவர் இடர்

கடி கண பதிவர வருளினன் மிகு கொடை

வடிவினர் பயில் வலி வலமுறை இறையே

 

சம்பந்தன் தன்னைப் பாடினான், சுந்தரன் பெண்ணைப் பாடினான், அப்பர் என்னைப் பாடினான் என்று சிவனே சொன்னாராமே?

 

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞான சம்பந்தன் உரை செய்த

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

 

அற்புதம், உம்மை முருகனின் மறு அவதாரம் என்று அருணகிரியே திருப்புகழ் பாடியது உமது திரு நெறிய தமிழால் அன்றோ!  உமது பாடல் படிக்கப் படிக்க எதுகை மோனையுடன் வருமே, அது என்ன பாட்டு?

 

உண்ணா முலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்

பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித் திரள் மழலைம் முழவதிரும்

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே

 

வயதில் மூத்த அப்பர் பெருமான் எச்சரித்தும் தைரியமாக மதுரை சென்று ஆபத்துக்களைச் சந்திthதீரே, இது அசட்டுத் தைரியம் இல்லையா?

 

வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு கங்கை முடிமேல் அணிந்து என்  உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

 

காலம் கலி யுகம், இதில் நல்ல படியாக நேர்மையாக ஒருவன் வாழ முடியாதென்று எனக்குத் தோன்றுகிறது.

 

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு  யாதும் ஓர் குறைவு இல்லை

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

 

திருமணம் ஆனவுடன் பொதுமக்கள், புது மணப் பெண் புடைசூழ சோதியில் கலந்த போது என்ன பாடினீர்?

 

காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது

நாதன் நமம் நமச்சிவாயவே

 

சென்னை மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்த வணிகர் குலப் பெண் பூம்பாவையை பல ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பல், அஸ்தி நிறைந்த பானையிலிருந்து உயிருடன் கொணர்ந்தது எப்படி?

 

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை

கட்டிடங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திரப் பல் கணத்தார்க்கு

அட்டிட்டல் காணாதே பூம்பாவாய்

 

நோய் வந்தால் கடவுளை வழி பட முடியுமா?

“தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மை வினை அடர்த்தெய்தும் போழ்தினும்

அம்மையினும் துணை அஞ்செழுத்துமே”

 

“இடரினும் தளரினும் எனதுறு நோய்

தொடரினும் உன் கழல் தொழுது எழுவேன்”

 

நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தா, நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் என்று பாரதியார் பாடியது உம் பாடலைக் கேட்டுத் தானோ?

வாசி தீரவே காசு நல்குவீர்

மாசின் மிழலையர் ஏசலில்லையே

 

வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத் துறை விளங்க பூதலத்தில் வந்துதித்த ஞானச்சுடரே, ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாட்டில் ராவணனையும் பத்தாம் பாட்டில் சமணர்களையும் சாடுகிறீரே?

“ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன் தனோடு

இடரான வந்து நலியா”

“புத்தர் சமண் கழுக்கையர் பொய் கொளாச்

சித்தத்தவர்கள் தெளிந்து தேறின”

 

ஆளுடையப் பிள்ளையாரே, அப்படி என்ன சேக்கிழார் பெருமானை மயக்கினீர்? “பிள்ளை பாதி, புராணம் பாதி” என்று சொல்லும் அளவுக்கு 4000 செய்யுளில் 2000 செய்யுட்கள் எல்லாம் உமது கதையாக இருக்கிறதே?

 

“கண்காட்டு நுதலானும் கனல் காட்டும் கையானும்

பெண் காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்

பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்

வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே”

 

“நற்றமிழ் ஞான சம்பந்தன் நான் மறை

கற்றவன் காழியர் மன்னன் உன்னிய

அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து

உற்றன வல்லவர் உம்பர் ஆவரே”

 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று மனம் உருகினார் வள்ளலார். ஒரு ஏழையின் நிலை கண்டு இரங்கி கனகதாரா துதி பாடி தங்க மழை பொழிவித்தான் சங்கரன். நீரும் வறட்சி நீங்க பாடினீராமே

 

காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை

படர் தொடரி கள்ளி கவினிச்

சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த

சிவன் மேய சோலை நகர்தான்

தேரைகள் ஆரைசாய மிதி கொள்ள வாளை

குதிகொள்ள வள்ளை துவள

நாரைகளால் வாரி வயல் மேதி வைகு

நனிபள்ளி போலு நமர்காள்

 

நனி பள்ளியை பதிகம் பாடியே வளப் படுத்திய உமது தினசரி பிரார்த்தனை என்னவோ?

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக,

ஆழ்க தீயது எல்லாம், அரன் நாமமே

சூழ்க, வையகமும் துயர் தீர்கவே

 

நல்ல பிரார்த்தனை. அந்தணர் முதலாகவுள்ள எல்லா குலங்களும் பசு மாடு முதல் உள்ள எல்லா மிருகங்களும் வாழ்ந்து வையகத் துயர்கள் எல்லாம் மறைய வேண்டும். கேட்கவே ஆனந்தம், நன்றி.

 

 

 

தாயுமானவருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்:தாயுமானவர் பாடல்களிலிருந்து)

 

நீவீர் தினமும் இறைவனிடம் வேண்டுவது யாதோ?

 

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்றும் அறியோம் பரபரமே

 

அருமையான வரிகள். இதை தினமும் ஒருவர் நினைத்தால் உலகம் முழுதும் அமைதி நிலவுமே. மந்திர தந்திரங்கள் செய்யத் தெரியுமா?

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்

கரடி வெம் புலி வாயையும்

கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்

கண் செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்

வேதித்து விற்று உண்ணலாம்

வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலா வரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்

சந்ததமும் இளமையொடு இருக்கலாம் மற்றும் ஒரு

சரீரத்தினும் புகுதலாம்

சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்

தன் நிகரில் சித்தி பெறாலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

திறம் அரிது  சத்தாகி என்

சித்தமிசை குடி கொண்ட

தேசோ மயானந்தமே

 

புரிகிறது, புரிகிறது, அஷ்டமா சித்திகள் கிடைத்தாலும் மனதை

அடக்குவதுதான் கடினம். “சும்மா இரு சொல் அற” என்றும் “பேசா அனுபூதி பிறந்ததுவே” என்றும் அருணகிரிநாதர் கூறுகிறாரே?

 

சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கே

அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே

 

மனதை சும்மா இருக்கவைப்பது எவ்வளவு கடினம் என்று அழகாகச்

சொல்லிவிட்டீர்கள். “இறைவன் சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச்

சத கூறு இட்ட கோணிலும் உளன்” என்று கம்பன் கூறுகிறானே?

 

மண்ணும் மறிகடலும்  மற்றுளவும் எல்லாம் உன்

கண்ணில் இருக்கவும் நான் கண்டேன் பராபரமே

 

ஓ! உமக்கும் அர்ஜுனனைப் போல விசுவ ரூப தரிசனம் கிடைத்ததா? புலால் சாப்பிடாதவர்களை “எல்லா உயிரும் கை கூப்பித் தொழும்” என்று எங்கள் வான் புகழ் வள்ளுவன் கூறுகிறானே?

 

“கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லார் மற்று

அல்லாதோர் யாரோ அறியேன் பராபரமே”

“கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க

எல்லோர்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே”

 

அட, நீங்களும் வள்ளுவர் கட்சிதானா? கடவுளை நம்பினால் கிரகங்கள்

ஒன்றும் செய்யாது என்று தேவாரம் கூறுகிறதே?

கன்மம் ஏது? கடு நரகு ஏது? மேல்

சென்மம் ஏது? எனைத் தீண்டக் கடவதோ!

 

சுகர், ஜனகர் போன்று தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்க்கை

நடத்தியவர்களை உங்களுக்குப் பிடிக்குமாமே.

“மதுவுண்ட வண்டு எனவும் சனகன் ஆதி

மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தார்”

“ஓதரிய சுகர் போல் ஏன் ஏன் என்ன

ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன்”

 

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று திருமூலர் சொல்லுகிறார். நீங்கள்……

“சைவ சமயமே சமயம் சமயாதீதப் பழம்பொருளைக்

கை வந்திடவே மன்றுல் வெளி காட்டும் இந்தக் கருத்தை விட்டுப்

பொய் வந்துழலும் சமய நெறி புகுத வேண்டா முக்தி தரும்

தெய்வ சபையை காண்பதற்கு சேரவாரும் சகத்தீரே”

“காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ

போகம் என்னும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பி பூரணமாய்

ஏக உருவாய்க் கிடக்குதையோ இன்புற்றிட நாம் இனி எடுத்த

தேகம் விழும் முன் புசிப்பதற்கு சேர வாரும் சகத்தீரே!”

 

நீர் எல்லா சமயங்களும் ஒன்று என்று அழகாகப் பாடியிருக்கிறீர்.

இதை எல்லோரும் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.

வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்

விளங்கு பரம் பொருளே! நின் விளையாட்டல்லால்

மாறுபடும் கருத்து இல்லை; முடிவில் மோன

வாரிதியில் நதித் திரள் போல் வயங்கிற்றம்மா

 

சாக்கிய நாயனார் கல்லால் அடித்தபோதும் அர்சுனன் வில்லால்

அடித்தபோதும் கூட சிவன் அருள் செய்தாராமே?

கல்லால் எறிந்தும் கை வில்லால்

அடித்தும் கனி மதுரச்

சொல்லால் துதித்தும் நற் பச்சிலை

தூவியும் தொண்டர் இனம்

எல்லாம் பிழைத்தனர் அன்பற்ற

நான் இனி ஏது செய்வேன்!

கொல்லா விரதியர் நேர் நின்ற

முக்கட் குரு மணியே!

 

நன்றி, தாயமானவரே.அருமையான செய்யுட்கள். “அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது”, “மனம் ஒரு குரங்கு” என்று பல பொன்மொழிகளைப் பாட்டில் வைத்துப் பாடியுள்ளீர்கள்.உமது புகழ் தமிழ் உள்ள வரை வாழும்.

 

பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி

 

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று நீங்கள் வளர்த்த பிள்ளையே எழுதி ஒரு ஊசியை வைத்துவிட்டுச் சென்றதாமே? 

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தை

போதுற்ற எப்போதும் புகலும் நெஞ்சே? இந்தப் பூதலத்தில்

தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியம் என்?

காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே

 

பெரிய பணக்காரரான நீவீர் இப்படி திடீரென்று வீட்டை விட்டுப் போனால் ரோட்டில் எப்படி வாழ முடியும்?

 

உடை கோவணம் உண்டு, உறங்கப் புறத் திண்ணை உண்டு உணவு இங்கு

அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந் துணைக்கே

விடை ஏறும் ஈசர் திரு நாமம் உண்டு இந்த மேதினியில்

வட கோடு உயர்ந்தென்ன, தென் கோடு சாய்ந்தென்ன வான் பிறைக்கே?

 

அப்படியானால் உங்கள் வீடு?

வீடு நமக்குத் திரு ஆலங்காடு, விமலர் தந்த

ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம்

உமது தமக்கை உமக்கு விஷ அப்பம் கொடுத்தவுடன் அதை எறிந்தவுடன் வீடே எரிந்து போயிற்றாமே?

தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

அட, இந்த சொற்களே வீட்டை எரித்து விட்டதா? ஆதி சங்கரர் போலவே நீரும் அம்மா இறந்தவுடன் 10 பாடல் பாடியே சிதைக்கு தீ மூட்டினீரா?

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்ட தீ தென் இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

 

இது ஒரு அற்புதமே!! என்ன என்ன பிழைகளுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்?

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்   கசிந்து உருகி

நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ் செழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொருத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.

 

அலை பாயும் மனதைக் கட்டுப் படுத்த ஒரு வழி சொல்லுங்களேன்?

ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு

உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு; பசித்தோர் முகம் பார்

நல் அறமும் நட்பும் நன்று என்று இரு; நடு நீங்காமலே நமக்கு இட்ட படி

என்றுன்றிரு; மனமே உனக்கு உபதேசம் இதே!

 

சிறுத்தொண்டர், திருநீலகண்ட நாயனார், கண்ணப்பர் போன்று தியாகங்களைச் செய்ய முடியுமா?

வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன்; மாது சொன்ன

சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்; தொண்டு செய்து

நாள் ஆறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன்; நான் இனிச் சென்று

ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே.

 

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவார் பற்றி உங்கள் கருத்து என்னவோ?

ஆரூரர் இங்கு இருக்க அவ்வூர் திருநாள் என்று ஊர்கள் தோறும்

உழலுவீர்;–நேரே உளக் குறிப்பை நாடாத ஊமர்காள்! நீவீர்

விளக்கு இருக்க தீ தேடுவீர்

 

விளக்கு இருக்கும்போது தீயைத் தேடுவார்கள்- அருமையான பழமொழி. அது சரி, அபு என்பவன் தேவதூதனைப் பார்த்து தன் பெயரை மக்களை நேசிப்பவர் பட்டியலில் எழுதச் சொன்னான். உங்கள் வரிகளைப் பார்த்துதான் Abu Ben Adam கவிதை வந்ததோ?

தமர் பெயர் எழுதிய  வரி நெடும் புத்தகத்து

என்னையும் எழுத வேண்டுவன் (கோயில் நான் மணி மாலை)

 

நியமம், நிஷ்டை இவைகள் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதி நெறி

ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செப மந்திர யோக நிலை

நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே

சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே

 

சிவவாக்கியர் “நட்ட கால்லைச் சுற்றி நாலு புஷ்பம் போடாதே”

என்கிறாரே. நீங்கள் அவர் சொல்வதை ஆதரிக்கிறீர்களா?

உளியிட்ட கல்லையும் ஒப்பற்ற சாந்தையும் ஊத்தை அறப்

புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன்

உங்கள் பாடல்களில் பெண்ணாசையை நிறைய கண்டிக்கிறீர்களே.

ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப்

பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே

குரு மார்க்கம் இல்லா குருடருடன் கூடிக்

கரு மார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே

ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல்

பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே

நன்றி. உமது பாடல்கள் எல்லாவற்றையும் படிக்க எனக்கு ஆசை

சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: எனது கற்பனை, பதில்கள்: சித்தர் பாடல்களிலிருந்து)

 

சாமி, குருட்டுத் தனமாக ,அர்த்தம் புரியாமல் செய்யும் சடங்குகளைச் சாடுகிறீர்களாமே?

நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

 

அம்மாடியோவ், பாட்டில் அனல் பறக்குதே! நீங்கள் எல்லோரும் எட்டு வகை சித்துக்களைச் செய்வீர்களாமே? இதனால் என்ன பயன் ?

யோகசாலை கட்டுவார் உயரவும் எழும்புவார்

வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார்

மோகம் கொண்டு மாதரின் மூத்திரப் பை சிக்கிப் பின்

பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே

 

அட, எட்டு சித்தி கிடைத்து அற்புதம் செய்தாலும் வழுக்கி விழ வாய்ப்பு உண்டு. அப்ப, புண்ய நதிகளில் குளித்தால் என்ன?

எத்திசை எங்கும் எங்குமோடி எண்ணிலாத நதிகளில்

சுற்றியும் தலை முழுக சுத்த ஞானி ஆவரோ?

 

அது சரி, இப்படி எதை எடுத்தாலும் எதிர்த்துப் பேசுவதை எங்கள் ஊர் எதிக் கட்சித் தலைவர்களும் செய்ய முடியும். ஏதேனும்  செய்ய வேண்டியதை சொல்லுங்களேன்.

 

தீர்த்தலிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே

உள்ளில் நின்ற சீவனைத் தெளியுமே

உம்முளே தெளிந்து காண வல்லீரேல்

தான் அதாய்ச் சிறந்ததே சிவாயமே

 

நல்ல யோசனை. சித்தர்கள் எல்லோருக்கும் ஜாதியே கிடையாதா?

சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்

பூத வாசல் ஒன்றலோ, பூத ஐந்தும் ஒன்றலோ?

காதில் வாளி , காரை, கம்பி, பாடகம் பொன் ஒன்றலோ?

சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?

 

யார் போட்டாலும் தங்க நகைகள் மாறாதாக்கும் சித்தர்கள் சாகாமல் இருப்பார்களா?

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா

உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;

விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;

இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே

 

எங்களை மாதிரித்தான் நீங்களும். அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.அது சரியா?

நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு  போல்

ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்த இடம்

ஏறில் ஆறு ஈசனும்  இயங்கு சக்ரதரனையும்

வேறு கூறு பேசுவோர் வீழ்வர் வீண் நரகிலே

 

நீரும் உப்பும் போல இருவரும் ஒருவரே, சரி, கடவுளை நாடுவோர் கல்யாணம் கட்டி குடும்பம் நடத்தலாமா?

மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகள்

வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்

மனத்தகத்து அழுக்கறுத்த மவுன ஞான யோகிகள்

முலைத்தடத்து இருக்கினும் பிற்ப்பறுத்திருப்பரே

 

ஆக அவர்கள் குடும்ப வாழ்க்கை நடத்தினாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருப்பார்கள். தெய்வத் தமிழில் நிறைய ஆகமங்கள் துதிகள் இருக்கின்றனவே. எதைப் படிப்பது?

“நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம்

நூறு கோடி நாள் இருந்தும் ஓதினாலும் அது என்ன பயன்?”

 

“சாம நாலு வேதமும் சகல சாஸ்திரங்களும்

சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்”

 

நீங்கள் 600 பாடல்களில் சொன்ன கருத்துக்கள்: மனதில் கடவுள் இருக்கிறான். சடங்குகளோ கோவிலோ தேவை இல்லை. தூய்மையாக இருந்தால் சாதி பேதம் இன்றி எல்லோரும் இறைவனை அடையலாம். நல்ல கருத்துக்கள் தாம், நன்றி.

 

 

ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி

ஆண்டாள் அம்மாள், அனந்த கோடி வணக்கங்கள். திருமாலையே கணவனாக வரித்த தாயே, எங்கள் ஊர் பெண்கள் விரைவில் திருமணம் நடக்க ஒரு பாட்டு சொல்லுங்களேன்

 

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னை

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி!

 

ஓ, எனக்குத் தெரியும். வாரணம் ஆயிரம், எல்லா ஐயங்கார் கல்யாணங்

களிலும் கேட்டிருக்கிறேன். இதைப் பாடினால் ஏழேழ் பிறவிக்கும் அன்புடை கணவன் கிடைப்பானா?

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட் செய்வோம்;

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம் பாவாய்

 

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளையே. கண்ணனைக் கும்பிட்டால் கவலைகள் எல்லாம் சாம்பல் ஆய்விடுமாமே?

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனதினால் சிந்திக்க

போய பிழையும் புகு தருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஒர் எம்பாவாய்

 

இவ்வளவு சிறு வயதில் உங்களுக்கு எவ்வளவு விஷயம் தெரிந்திருக்கிறது. நீங்கள் வீனஸ், ஜூபிடர் கிரகங்கள் பற்றிப் பாடியதால் தான் உங்கள் காலத்தை அறியமுடிந்தது. தமிழ் பெண்கள் கெட்டிக்காரிகள்.

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை

கிள்ளிக் களைந்தானைக் கீர்ந்திமைப் பாடிப் போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண்

 

உங்களுக்கு பறவைகள், மிருகங்கள் பற்றிய அறிவு அதிகம் இருக்கிறதே. உயிரியல் பாடம் படித்தீர்களா? ஒரு பாட்டில் சிங்கத்தை நேரில் பார்த்தது போலவே பாடினீர்களே!

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே

 

பலே,பலே சர்கஸில் கூட சிங்கத்தை இப்படிப் பார்த்ததில்லை.

30 பாவைப் பாடல்களையும் பாடினால் என்ன கிடைக்கும்?

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

 

கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு என்று ஒருவர் பாடுகிறாரே.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.

 

திடீரென்று ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது, கருப்புரம் நாறுமோ…

கருப்புரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?

திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?

மருப்பு ஒசித்த மாதவன் தன் சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல், ஆழி வெண் சங்கே!

 

நன்றி, தாயே.

 

(Please read other 60 second interviews with Adi Shankara, Sathya Sai Baba, Swami Vivekananda, Bharathiyar, Kamban, Arunagirinathar, Maniikavasagar,Valluvar,Tirumular,Ilango and Pattinathar)

கம்பனுடன் 60 வினாடிப் பேட்டி

(கேள்விகள் ச. சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள் உண்மை)

கேள்வி: கம்பரே நீர் வணங்கும் கடவுள் யார்?

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,

நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா

அலகு இலா விளையாடு உடையார்- அவர்

தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

கேள்வி: எவ்வளவோ ராமாயணம் இருக்கும்போது தாங்களும் பாடிய காரணம்?

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!

கேள்வி: உமது ஆசை நியாயமான ஆசையே உம்மை விட இராமன் புகழ் பாட வேறு யாருக்கு அருகதை? அது சரி, முதலில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

ஒன்றே என்னின் ஒன்றே ஆம்:

பல என்று உரைக்கின் பலவே ஆம்:

அன்றே என்னின் அன்றே அம்:

ஆம் என்று உரைக்கின் ஆமே ஆம்:

இன்றே என்னின் இன்றே ஆம்

உளது என்று உரைக்கின் உளதே ஆம்

நன்றே நம்பி குடி வாழ்க்கை!

நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

(கடவுள் வாழ்த்து,யுத்தகாண்டம்)

கேள்வி: கோசலநாட்டில் உண்மை கூட இல்லையாமே!

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;

திண்மை இல்லை, நேர் செறுநர் இன்மையால்;

உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;

ஒண்மை இல்லை,பல் கேள்வி ஒங்கலால்.

கேள்வி: தாங்கள் ராமனைப் போற்றுவது ஏன்?

இனிய சொல்லினன்: ஈகையன்: எண்ணினன்:

வினையன்: தூயன்: விழுமியன்: வென்றியன்:

நினையும் நீதி கடவான் எனின்,

அனைய மன்னர்க்கு அழிவும் உண்டாம் கொலோ?

கேள்வி: ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான் என்ற பழமொழிக்குக் காரணம் என்னவோ?

“வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்

“இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்

சிந்தையாலும் தொடேன்” என்ற செவ்வரம்

தந்த வார்த்தை திருச் செவி சாற்றுவாய்

கேள்வி: அட, ராமன் ஏக பத்னி விரதன் என்று சீதையே சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டாளா? யாதும் ஊரே,யாவரும் கேளிர் என்பது ராமனின் கொள்கையாமே?

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு:பின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவர் ஆனேம்:எம்முறை அன்பின் வந்த

அகனமர்க் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்!

புகலருங் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை! (6-4-143)

கேள்வி: வீடணனை நீர் ஏழாவது தம்பியாக ஏற்றது உலகம் காணாத புதுமை.

சூர்ப்பணகை, சீதை பற்றி உங்கள் மதிப்பீடு?

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச்

செஞ்செவிய கஞ்ச நிமிர் சீறடியளாகி

அஞ்சொலின மஞ்சையென அன்னம் என மின்னும்

வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் (சூர்ப்பணகை)

அமிழ்தின் வந்த அமிழ்து (6-3935), அருந்ததி கற்பின் தேவி (5-468),அழ்கினுக்கு அழகு செய்தாள் (4-899) கருந்தடங் கண்ணீனாள்(4-417),

கரும்பு உண்ட சொல்(3-908), சிந்துரப் பவளச் செவ்வாயாள் (6-3938)

கற்பினுக்கு அணி (5-1269), தண்டமிழ் யாழினும் இனிய சொற்கிளி (2-774) (சீதை)

கேள்வி: அற்புதம்! கொடுமையான கைகேயியின் வார்த்தைகளைக் கூட மென்மையான அழகான சொற்களில் கவிதையாகப் புனைந்த பெரும் கவிஞர் அல்லவா நீவீர்?

“ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீ போய்,

தாழ் இருஞ் சடைகள் தாங்கி,, அருந்தவம் மேற்கொண்டு,

பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,

ஏழ் இரண்டு ஆண்டின் வா” என்று இயம்பினன் அரசன் என்றாள்.

கேள்வி: நன்றி, சதிகாரக் கைகேயி இந்த வார்த்தைகளை அரசன் தசரதன் மீது சுமத்தி விட்டாளா? பரதனை 1000 ராமனுக்கும் மேலானவன் என்று புகழ்ந்தீர்களா?

தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை

தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி

போயினை என்ற போழ்து, புகழினோய் தண்மை கண்டால்

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா

கேள்வி: அனுமன் பேசத்தெரிந்தவனாமே?

இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூறக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே-எனும் காட்சி

சொல்லாலே தோன்றிற்றன்றோ யார் கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ? விடை வலானோ?

கேள்வி: இராமனின் சஸ்பென்ஸைப் போக்க அனுமன் ஏதோ அழகாகப் பேசினாராமே?

கண்டெனென், கற்பினுக்கு அணியை, கண்களால்

தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;

அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்

பண்டு உள துயரும்’ என்று, அனுமன் பன்னுவான்

கேள்வி: எங்கள் கவிஞர் கண்ணதாசன் பயன்படுத்திய உமது பாட்டு என்னவோ?

மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்

கைவண்ணம் அங்கு கண்டேன்: கால் வண்ணம் இங்கு கண்டேன்

கேள்வி: தாடகை வதத்தையும் அகலியையின் சாப விமோசனத்தையும் வண்ணச் சொற்களால் அலங்கரித்துவிட்டீர். போகட்டும், அகத்தியனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?

உழக்கும் மறை நாலினும், உயர்ந்து உலகம் ஓதும்

வழக்கினும், மதிக் கவியினும், மரபின் நாடி

நிழல்பொலி கணிச்சி மணி எற்றி உமிழ் செங்கண்

தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்_தந்தவர் (2671)

நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தவர் (2666)

கேள்வி: கண்டதும் காதலில் உங்களுக்கு நம்பிக்கை உண்டு போலும்!

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,

கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,

அண்ணலும் நோக்கினான் ;அவளும் நோக்கினாள்

கேள்வி: போர்க்களத்தில் கூட ராமன் காட்டிய உயரிய பண்பு?

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு

நாளை வா’ என நல்கினந்-நாகு இளம் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்

கேள்வி: அது சரி,பெண்களை இப்படி மட்டம் தட்டலாமா?

தூமகேது புவிக்கெனத் தோன்றிய

வாம மேகலை மங்கையரால் வரும்

காமம் இல்லை எனின் கடுங்கேடு எனும்

நாமம் இல்லை:நரகமும் இல்லை

கேள்வி: புரிகிறது,புரிகிறது, கண்மூடித்தனமான காமம் கூடாது.

நன்றி மறக்காமல் சடையப்ப வள்ளலைப் போற்றிப் புகழ்ந்து தள்ளுகிறீர்களாமே?

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்தப்

பரதன் வெண் குடை கவிப்ப இருவரும் கவரி கற்ற

விரை செறி குழலி ஓங்க வெண்ணெய்மன் சடையன் வண்மை

மரபுளோன் கொடுப்ப வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி (10327)

நன்றி, கம்பரே உமக்கு 60 நொடிகள் என்ன, 60 நாட்கள் கொடுத்தாலும் எம் மக்கள் ரசிப்பார்கள்.அற்புதமான, அழகான கவிதைகள்!!!

அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

 

(கேள்விகள் கற்பனை, பதில்கள் திருப்புகழ் பாடல்களிலிருந்து; —ச. சுவாமிநாதன்)

அன்பரே, வணக்கம். நீர் ஒவ்வொரு திருப்புகழிலும் முருகப் பெருமானை வெவ்வேறு விதமாக வேண்டுவது என்ன?

 

“வாராய் மனக் கவலை தீராய் நினைத் தொழுது

வாரேன் எனக்கெதிர் முன் வரவேணும்”

“இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன்னோடி வரவேணும்”

“உன் புகழே பாடி நான் இனி

அன்புடன் ஆசார பூசை செய்து

உய்ந்திட வீணால் படாது அருள் புரிவாயே”

“அறிவாகமும் பெருக இடரானதும் தொலைய

அருள் ஞான இன்பமது புரிவாயே”

 

நீங்கள் இந்துஸ்தானி உருது மொழி சொற்களைக் கூட

பயன்படுத்த அஞ்சுவதில்லையாமே?

அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும்

அடியேனை அஞ்சல் என வரவேணும்”

நீங்கள் ஒரு மருத்துவரா?அழகாக எல்லா வியாதிகள் பெயர்களையும் பாடலில் அடுக்கி விட்டீர்களே?

“ இருமலும் ரோக முயலகன் வாத

எரிகுண நாசி        விடமே நீ

நீரிழிவு விடாத தலை வலி சோகை

எழு கள மாலை         இவையோடே

பெரு வயிறு ஈளை எரி குலை சூலை

பெரு வலி வேறு உள நோய்கள்

 

சரி தேனினும் இனிய தமிழ் பற்றி என்ன பாடினீர்கள்?

இரவு பகல் பல காலும் இயல் இசை முத்தமிழ் கூறித்

திரம் அதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே”

“அரு மறை தமிழ் நூல் அடைவே

தெரிந்துரைக்கும் புலவோனே”

“வளமொடு செந்தமிழ் உரை செய அன்பரும்

மகிழ வரங்களும் அருள்வாயே”

 

நான் காவி உடை அணிந்து ஒரு மடத்தில் சேரலாம் என்று யோசித்து வருகிறேன். உங்கள் அறிவுரை என்ன? –மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று வள்ளுவர் கூறுகிறாரே.

காவி உடுத்தும் தாழ் சடை வைத்தும்

காடுகள் புக்கும் தடுமாறிக்

காய் கனி துய்த்தும் காயம் ஒறுத்தும்

காசினி முற்றும் திரியாதே.

 

அதிசயம் அநேகமுற்ற பழனி மலை” என்று ஒரு அடை மொழி போட்டீர்கள். அங்கே என்ன அதிசயம் இருக்கிறது?

செபமாலை தந்த சற்குணநாதா

திரு ஆவினன் குடி பெருமாளே.

 

ஓஹோ, அங்குதான் முருகன் உங்கள் கையில் உமக்கு சபமாலை தந்தாரா? நீர் அதிர்ஷ்ட சாலிதான். திருப்புகழைப் பழித்தால்………..

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

 

ஒரு பாட்டில் நேர்மையில்லாதோர் யார் யார் என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்?

“பஞ்ச பாதகன் பாவி மூடன் வெகு

வஞ்ச லோபியன் சூது கொலைகாரன்

பண்கொளாதவன் பாவ கடல் ஊடு நுழை பவுஷாசை

பங்கன் மோதியம் பாழ் நரகில் வீணின் விழ

பெண்டிர், வீடு பொன் தேடி நொடி மீதில் மறை

பஞ்ச மாமலம் பாசமொடு கூடி வெகு சதிகாரர்”

முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள்

முறை மசக்கிகள் திருடிகள் மத வேணூல்

மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை

முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ்

கலை நெகிழ்த்திகள் இளைஞர்கள் பொருள் பறித்த மளியின் மிசை

கனி இதழ்ச் சுருள் ஒரு பாதி”

 

அப்பப்பா, திருப்புகழில் இப்படி வசை மாரி இருக்கும் என்று யாரும் எண்ணிக் கூட பார்க்கமாட்டார்கள்.

முருகனைத் திட்டினாலும் தமிழில் திட்டினால் பலன் உண்டாமே?

தமிழால் வைதாரையும் வாழவைப்பவன் (கந்தர் அலங்காரம் 22)

 

திருஞான சம்பந்தரைப் பல பாடல்களில் புகழ்ந்துள்ளீர்களே?

கதிர்காம திருப்புகழில் அவரை முருகன் என்றும் கூறீனீர்களா?

“வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே”

 “புமியதனிற் ப்ரபுவான

புகலியில் வித்தகர் போல

அமிர்த கவித் தொடை பாட

அடிமைதனக்கு அருள்வாயே”

 

குழந்தைச் செல்வம் பெற ஒரு திருப்புகழ் இருக்கிறதாமே. முதல் சில அடிகளை மட்டும் சொல்லுங்களேன்

செகமாயை உற்றென் அகவாழ்வில் வைத்த

திரு மாது கெர்ப்பம் உடலூறித்

தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்

திரமாய் அளித்த பொருளாகி

 

கடைசியாக ஒரு கேள்வி. தேவியர் பெயர்களை எல்லாம் அடுக்கி ஒரு பாடல் பாடினீர்களா?

குமரி காளி வராகி மகேசுரி

கவுரி மோடி சுராரி நிராபரி

கொடிய சூலி சுடாரணி யாமளி      மகமாயி

குறளுரூப முராரி சகோதரி

உலகதாரி உதாரி பராபரி

குரு பராரி விகாரி நமோகரி         அபிராமி

சமர நீலி புராரி தனாயகி

மலை குமாரி கபாலின னாரணி

சலில மாரி  சிவாய மனோகரி    பரையோகி

சவுரி வீரி முநீர் விட போஜனி

திகிரி மேவுகை யாளி செயாளொரு

சகல வேதமுமாயினை தாய் உமை அருள் பாலா.

 

சந்தக் கவி புலவரே, நன்றி, நன்றி.

 

 

60 SECOND INTERVIEW WITH ADI SHANKARA

Adi Sankaracharya

(Questions are imaginary; Answers are true excerpts from BhajaGovindam aand Viveka Chudamani) –S Swaminathan

Q : Shankarji, Namasthe and Vanakkam.what is your philosophy?  Could you please tell us in one or two sentences?

A: Brahman alone is real, the universe is unreal, and the individual soul is no other than the universal Soul ( ”Brahma Sathyam -Jagan Mithya- Jeevo Brahma Eva , Na Aparaha” ).

Q. You have said it beautifully well. But laymen may not understand it.

A: Maya can be destroyed by the realisation of the pure Brahman, just as the mistaken idea of a snake is removed by the discrimination of the rope.

Q. Swami, This is high philosophy indeed. But is there any short cut for reaching God?

A: Through the company of the good, there arises non attachment:

Through non attachment there arises freedom from delusion:

When there is freedom from delusion, there is the Immutable Reality:

On experiencing immutable reality there comes the state of ‘liberated in life’(Jeevan Mukti).

Q: Oh, Swamiji, now I remember the Bhaja Govindam sloka ‘Satsangatve nissangatwam, Nissangatve Nirmohatvam——–‘.Ok,  A lot of people believe in simple things like holy dip in Ganges etc. Is it not good then?

A: To one who has studied the Bhagavad Gita even a little,

Who has sipped at least a drop of Ganges water,

Who has worshipped at least once Lord Murari,

To him there is no quarrel with Yama, the Lord of Death.

Q: Shankarji, only now you have come down to our level. We understand that you have gone round the Holy Bharat several times by foot when there was no vehicle, no bridges, no gun to protect you from wild animals .How did you do it. Aren’t you scared?

A: There is only Brahman, the one without a second, which is within all, homogenous, infinite, endless, and all pervading: there is no duality whatsoever in it (Eka mevadwayam Brahma neha nanasthi  kinchana)

Q. Yeah, we understand fear comes only when you think there is another thing.  Swami, we believe in Karma.  Is in it that even meeting you today destined already?

A: Through the realization of one’s identity with Brahman, all the accumulated actions of a hundred crore of cycles come to nought.

Q: That is a good news. That means no one needs to fear Karma. Now In India, we have got a lot of Babas and Swamijis with hundreds of thousands of followers. Aren’t we are going in the right direction?  I think Your Holiness must be happy about it.

A:One ascetic with matted-locks, one with shaven-head, one with hairs pulled out one by one, another parading in his ochre-robes- these are fools who, though seeing, do not see. Indeed these different disguises or apparels are only for their belly’s sake.

Q. Thanks for clarifying, Swamiji. Could you please give a simple message to our youths?

A: Childhood skips off on sport and play.

Youth flies off in pursuits of love making.

As one grows older one he is drowned in worry about the security and future of his wife and children.

One’s whole life gets spent in some kind of worry or other. And at no stage does man find time to lift his thoughts to God.  Seek God (Bhaja Govindam), Seek God, Seek God.

Q. You are a keen observer of Nature. You even escaped from the grip of a crocodile when you were young in Kaladi, Kerala. You tricked your mum by saying the crocodile will leave you alive if she permits you to enter Sanyas (ascetic life).Tell us what can nature teach us?

A: The deer, the elephant, the moth, the fish and the black bee-these five have died due to one or other of the five senses, viz. Sound etc. through their own attachment.

Whoever seeks to realise the self by devoting himself to the nourishment of the body, proceeds to cross a river by catching hold of a crocodile, mistaking it for a log.

Q : Shankar ji ,we would recommend you to be entered in the Guinness Book of records under three categories  : 1.The man who walked around the sub continent several times by foot-for longest Pada Yatra 2.The man who wrote highest number of commentaries on ancient texts and and 3. For strengthening the unity of India by establishing four centres (Mutts) in four corners of India :Sringeri, Dwaraka, Kashmir and Puri.

Namasthe. Thanks (Dhanyavad)