கங்கை நதிக்கடியில் தங்கம்: தமிழர் தகவல்!

gold-coins-

Written by London swaminathan
Posted in English as well
Post No 964 Dated 8th April

சில வாரங்களுக்கு முன் வட இந்தியாவில் ஒரே பரபரப்பு! உத்தரப் பிரதேசத்தில் ஒரு சாமியாருக்கு கனவு. அந்தக் கனவில் ஒரு ராஜா தோன்றி அவர் ‘டன்’ கணக்கில் தங்கம் புதைத்து வைத்த இடத்தைச் சொல்லிவிட்டார். இதை சாமியாரும் எல்லோருக்கும் அறிவிக்கவே அவருக்கு நெருக்கமான மந்திரி எல்லோரையும் அகழ்வாராய்ச்சிக்கு அனுப்பிவைத்தார். ஆயிரக் கணக்கான மக்கள் கையில் கோடாரி மண் வெட்டிகளுடன் 11 நாட்கள் தோண்டினர். அவருடைய சீடருக்கு இன்னொரு கனவு வரவே அவர் கங்கை நதிக்கரையில் உள்ள வேறு ஒரு இடத்தைச் சொல்லவே அங்கும் தோண்டும் பணி துவங்கியது. தொல்பொருட் துறை, பூகர்ப்பவியல் நிபுணர்கள் எல்லோரும் ‘ஆமாம்சாமி’ போட்டதால் எல்லோருக்கும் நம்பிக்கை வலுத்தது. இறுதில் ஒன்றும் கிடைக்காமல் தங்கம் தேடும் பணியைக் கைவிட்டனர்.

சங்கத் தமிழ் இலக்கியத்தில், தங்கத்தை எங்கே ஒளித்துவைத்து வைத்திருக்கிறார்கள் என்று எழுதிவைக்கப்பட்டுள்ளது.– ஒன்று பாடலிபுத்திரத்தில் கங்கைக்கு அடியில் ஒரு சுரங்கத்தில் பொக்கிஷம், புதையல் வைக்கப்பட்டு இருக்கிறது.– இரண்டு, வேளிரின் பாழியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிய சுவையான செய்தி அகநானூற்றில் இருக்கிறது. அதற்கு முன் காஞ்சி பரமாசார்யார் சொன்ன வேறு ஒரு தங்கப் புதையல் கதையைப் பார்ப்போம்:

barGold

வித்யாரண்யருக்கு கிடைத்த தங்கப் புதையல்

சென்னையில் 1957-59–ல் காஞ்சி பரமாசார்யாள் (1894-1994) நடத்திய சொற்பொழிவுகள்:

“வித்தியாரண்யர் ( கி.பி.1331-1386) நான்கு வேதத்துக்கும் சேர்த்து பாஷ்யம் (உரை) பண்ணியிருக்கிறார்……. இவரைப் பற்றி ஒரு கதை சொல்வர். சரித்திரத்தில் இதற்கு ஆதாரம் இருக்கிறதோ என்னவோ? இவர் பிரம்மச்சாரியாக இருந்த காலத்தில் மகாலெட்சுமியைக் குறித்து கடுமையான தபஸ் பண்ணினாராம். ஏகாக்கிர சித்தத்தோடு இவர் பண்ணுகிற தபஸைப் பார்த்து மகாலெட்சுமி பிரத்தியட்சமானாள். இவர் பரம ஏழையாக இருந்தவர். மகாலெட்சுமி, ‘’உனக்கு என்ன வேண்டும்’’ என்று கேட்டபோது, ‘’எனக்கு நிறைய செல்வத்தைக் கொடு; உலகத்தில் யாரிடத்திலும் இல்லாத ஐச்வர்யத்தை எனாக்குக் கொடு’’ என்று இவர் கேட்டாராம். மகாலெட்சுமி, ‘’அப்பா, உனக்கு இந்த ஜன்மத்தில் ஐச்வர்யம் கொடுப்பதற்கு இல்லையே; வேண்டுமானால் அடுத்த ஜன்மாவில் நிறைய ஐச்வர்யத்தை கொடுக்கிறேன்; இந்த ஜன்மாவில் கொடுக்க எனக்கு யோக்கியதை இல்லை’’ என்று சொன்னாளாம்.

அடுத்த ஜன்மாவில் தருகிறேன் என்று சொன்னவுடன் எப்படியாவது ஐச்வர்யத்தைப் பெற்றுவிடவேண்டும் என்று உடனே சந்நியாசம் வாங்கிக்கொண்டு, சந்நியாசம் வாங்கிக் கொண்டால் சாஸ்திரப்படி மறு ஜன்மமாகப் போய்விடாதா? ‘’நான் சந்நியாசம் வாங்கிக்கொண்டு விட்டேன். இப்போது ஐச்வர்யத்தை கொடு’’ என்றாராம். உடனே மகாலெட்சுமியும் சொர்ணத்தை வர்ஷித்தாளாம்.

Gold-Bars

நிலம் முழுக்க எங்கே பார்த்தாலும் ஒரே தங்கமாகத் தெரிந்தது; இவற்றைப் பார்த்தவுடன் வித்தியாரயர் அழ ஆரம்பித்துவிடாராம். அடடா! என்ன முட்டாள்தனமாகக் கேட்டோம். ஆசிரமம் வாங்கிகொண்டபின் நமக்கு தங்கம் எதற்காக? சந்நியாச ஆஸ்ரமத்தில் இதைத் தொடவும் கூடாதே. கேட்காமல் இருந்திருந்தால் மகாலெட்சுமி அடுத்த ஜன்மத்திலாவது வேண்டிய ஐச்வர்யத்தைக் கொடுப்பாளே. இனி அடுத்த ஜன்மாவிலும் அவள் கொடுக்கமாட்டாள். சந்நியாச ஆஸ்ரமத்தை வாங்கிக் கொண்டுவிட்ட நாம் இப்போது அவள் கொடுத்ததையும் தொட முடியாது என்று அழுதாராம்.

அப்போதுதான் மாலிக்காபூர் தென்னாட்டுக்குப் படையெடுத்டு வந்து, எல்லா ராஜ்யங்களும், எல்லாக் கோயில்களும் சிதறுண்டு போகும்படியாக எல்லாவற்றையும் ரணகளமாகப் பண்ணிவிட்டுப் போயிருந்தான். சரி, இந்த ஐச்வர்யத்தைக் கொண்டு, இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்வது என்று வித்தியாரண்யர் தீர்மானம் பண்ணிக் கொண்டாராம். ஆடு மேய்க்கிற வனுக்கு குறும்பன் என்று பெயர். அப்போது அங்கே ஹரிஹரன், புக்கன் என்ற இரண்டு பேர் —அண்ணன் தம்பி – ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு குறும்பர்களையும் அழைத்து, அந்த துங்கபத்திரை பிரதேசத்திலேயே, ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்து அதற்கு ராஜாக்களாக அவர்களை ஏற்படுத்தினார். அந்த ராஜ்யந்தான் விஜய நகர சாம்ராஜ்யம்”.

மேற்கண்டது ஆசாரிய ஸ்வாமிகள் சென்னை உபந்நியாசங்கள் 1957-59, பாகம் 3-ல் உள்ளது.

gold1

தமிழர் கண்ட தங்கப் புதையல்

சங்க கலத்தில் வாழ்ந்த பரணர் என்ற பிராமணப் புலவரும் மாமுலனார் என்ற பிராமணப் புலவரும் ஏராளமான வரலாற்றுச் செய்திகளைப் பாடல்களிலேயே தருகின்றனர். மாமுலனார் வட நாட்டு விஷயங்களை அதிகம் சொல்லுவார். நந்த வம்சம் மற்றும் மௌரியர்கள் பற்றி அவர் பாடுவதைப் பார்க்கையில் அவர் மிகப் பழைய புலவர்களின் பட்டியலில் ஒருவர் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. அவரும் பரணரும் கூறும் ‘’தங்க’’ விஷயங்களைக் காண்போம்.

தொன்முது வேளிர் பாழியில் குவித்து வைத்த தங்கம் பற்றி பரணர் ( அகநானூறு 258) பாடுகிறார்:

நன்னன் உதியன் அருங்கடிப் பாழி
தொல்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமைநற்கு அறிந்தும், அன்னோள்
துன்னலம் மாதோ எனினும் அஃதுஒல்லாய் —

பொருள்:- அரிய காவலை உடையது நன்னன் உதியன் என்பவனின் பாழிச் சிலம்பு தொன்மை மிக்க வேளிர்கள் தேடி வைத்த பொன் அங்கே பாதுகாவல் செய்து வைக்கப்பட்ள்ளது. அதனைவிட அரியவள் தலைவி என்பதை நீ நன்றாக அறிவாய். அறிந்திருந்தும் அவளை நாம் நெருங்க மாட்டோம் என்று யான் கூறிய பின்னும் என்கூற்றிற்கு உடன்படாது போனாய்……

raja_raja
Gold Coin of Raja Raja Choza

இதில் தெரிவது என்னவென்றால்
வேளிர்கள் நிறைய தங்கத்தைக் குவித்துவைத்தனர்.
அதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
அதை அடைவதைவிடக் கடினம் என்னுடைய காதலி.

மாமுலனார் தரும் தகவல் இதை விட வியப்பானது.

புகையின் பொங்கி, வியல்விசும்பு உகந்து
பனிஊர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ்வரை மானும் கொல்லோ?
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலி குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ?
எவன்கொல்? வாழி, தோழி !

பொருள்:– தோழி வாழ்க! அகன்ற வானிலே உயர்ந்து எழு புகையினைப் போல் விளங்கிப் பனி தவழும் தீச்சுடரைப் போல் தோன்றும் இமய மலை போன்றதோ! அல்லது பலவகைப் பட்ட புகழும் மிக்க போர் வெல்லும் நந்தர் என்பவரின் சிறந்த பாடலிபுத்திரத்தில் திரண்டிருந்து பின் கங்கையின் நீர் அடியில் மறைந்து போன செல்வமோ! அவ்விரண்டும் இல்லையென்றால் நம்மைவிட்டுப் பிரிந்து போனதற்குக் காரணம் யாதோ!
gupt2
Gold Coins of Guptas

தலைவி பேசுவது போல அமைந்த இந்தப் பாடலில் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் பாடலிபுரத்தை ஆண்ட நந்த வம்ச அரசர் கங்கை ஆற்றின் அடியில் சுரங்கம் அமைத்து பெருஞ் செல்வத்தை மறைத்து வைத்திருந்தனர். பின்னர் அது காணாமற் போனதால் குழீஇக் கரந்த நிதியம்’ என்று சொல்லப்பட்டது.

‘’நிதி’’ என்ற சம்ஸ்கிருதச் சொல்— தங்கம், நவரத்னங்கள் போன்ற எல்லாச் செல்வத்தையும் குறிக்கும்.
பாடலிபுத்திரம் என்பது இப்போது பீஹார் மாநிலத் தலை நகரான பாட்னா நகரம் ஆகும்

இதே புலவர் இன்னொரு பாடலில் (அகம் 251) நந்தனின் செல்வம் பற்றிப் பாடுகிறார். இதற்கு உரை எழுதியவர்கள், மஹாபத்ம நந்தன் (கி,மு. 345-329) என்று மன்னர் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.

tirupati2
Picture of Golden Tower of Tirupati Balaji Temple

நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
தங்கலர் வாழி, தோழி ! வெல்கொடித்
துனைகால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும்பணைப் பொதியில்…………….

பொருள்: தோழி, வாழ்வாயாக! வெற்றிச் சிறப்புமிக்க கொடியினையும் காற்றைப் போன்று வேகமான அலங்கரிக்கப்பட்ட தேரினையும் உடையவர்கள் கோசர்கள். அவர்கள் பகைத்து எழுந்தனர். பழைய ஆலமரத்தின் கிளைகளுக்கு அடியில் போர் முரசங்களைக் குறுந்தடியினால் அடிக்கின்றனர். மகாபத்ம நந்தன் என்னும் பாடலிபுத்திரத்து மன்னனுடைய செல்வத்தையே அவர் பெற்றாரெனினும் அதற்கு மகிழ்ந்து அங்கேயே தங்கிவிடுபவர் அல்லர் ( என் காதலர்).

2000 ஆண்டுகளுக்கு முன்னர். கங்கை நதி, பாட்னா நகரம், நந்த வம்சம், மௌரிய மன்னர்கள் ஆகியோர் பற்றி நம் புலவர்கள் பாடியது மிகவும் வியப்பான விஷயம். தமிழர்கள் போரின் பொருட்டும், வணிகத்தின் பொருட்டும் கங்கை நதி, இமயம் வரை சென்றதையும் இதில் அறிகிறோம். நந்தர்களின் செல்வம் குறித்தும் அறிகிறோம். அவர்கள் புகழ் தென்னாடு வரை பரவி இருந்தது.

gupta1

இப்பொழுது கங்கை நதிக்கடியில் சுரங்கத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது ‘’வைக்கற்போரில் ஊசியைத் தேடியது போலாகும்’’. அந்த செல்வமும், தமிழர்கள் பாழியிலும் மறைத்து வைத்த செல்வமும் யார் கையில் போய்ச் சேர்ந்ததோ? மாலிக்காபூர் தென்னகக் கோவில்களில் இருந்து ‘’டன்’’ கணக்கில் தங்கம் கொண்டு சென்றதை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.

contact swami_48@yahoo.com

ஸ்ரீ ராமர் மீது முத்து சுவாமி தீட்சிதரின் க்ருதிகள்

stamps of dikshitar

புத்தகத்தில் இருந்து திரட்டி அளிப்பவர்; லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 963 தேதி–8, ஏப்ரல் 2014.

“ மாஹிரி ராக ‘மா மவ ரகுவீர’ கீர்த்தனையில் ‘த்வாம் ஆஹூ: ஈசாதய: தத்வமிதி’ என்கிற சொற்றொடரால் சிவன் முதற்கொண்டு எல்லோரும் இராமரை தத்வ ஸ்ரூபமாகவே சொல்கிறார்கள் என்கிறார் தீக்ஷிதர்.

‘ராமச்சந்திரேன சம்ரக்ஷிதோஹம்’ என்கிற பாட்டில் பிரம்ம விஷ்ணு ருத்ரஸ்வரூபம் என்று போற்றுகிறார்.

ஸ்ரீ ரஞ்சனி ராக ‘ஸ்ரீ ராமசந்திரோ கீர்த்தனையில் விஸ்வாமித்ரருடைய யாகத்தைக் காப்பாற்றினது, தாடகை வதம், மிதிலா நகரப் பிரவேசம், வில் ஒடித்தல், சீதா கல்யாணம், பரசுராம கர்வ பங்கம் வரை எழுதிவிட்டார்.

அஹல்யைக்கு சாப விமோசனம் செய்தது’ ‘பாத ஜபாம் சுபாலித அஹல்யம் என்று ஓர் இடத்திலும் ‘அஹல்யா தேவி சாப விமோசனம் சுசரித்திரம்’ என்று மற்றோர் இடத்திலும் குறிப்பிடுகிறார்.

சுபாஹு மாரீச கர தூஷணாதி ஹரணாந்தக ரூபிணோ’ என்று சுபாஹு மாரீசன், கரன், தூஷணன் முதலியவர்களைக் கொன்றது தன்யாசிராக ‘இராமசந்திராதன்யம்’ கீர்த்தனையில் இடம் பெறுகிறது.

hindi rama

சபரி மோக்ஷம் ஒரு பாட்டில் சொல்லப்படுகிறது. தர்பசயனம், விபீஷணனை ரக்ஷித்தது, ராவணனைக் கொன்றது, வானரங்களுக்குப் ப்ரீதியாய் இருத்தல், அனுமனுக்கு மதிப்பு இவை ஆங்காங்கே காணப் படுகின்றன.

ஒரு பாட்டில் சாம தான பேதாதி சத்ஷஷ்ட்ய ஸஜ்ஜன பாலயஸ்ய துஷ்ட ஹரஸ்ய’ என்கிற சொற்றொடரில் சாம தான பேத தண்டம் என்கிற நால்வகை யுக்திகளையும் துஷ்டர்களை அடக்கி நல்லோர்களைக் காக்க கையண்டவர் இராமர் என்று வர்ணிக்கிறார்.

முடிவில் சிகரம் வைத்தாற் போல் எல்லோராலும் பாடப்படுகிற மணிரங்கு ராக, ‘மாமவ பட்டாபிராம’வில் அனுமனால் பாடப்பட்டு, பரத லக்ஷ்மண சத்ருக்ன விபீஷண சுக்ரீவ பிரமுகர்களால் சேவிக்கப்பட்டு, நவரத்ன மண்டபத்தில் மணிகள் பூண்ட சிம்ஹாசனத்தில் சீதா சமேதராய் கொலுவிருக்கும் பட்டாபிஷேகக் காட்சியை அற்புதமாக நம்முன் கொண்டு வருகிறார்.”

உதவிய புஸ்தகம்:
“ஷண்மதமும் முத்துஸ்வாமி தீக்ஷதரும்” — எழுதியவர்: என்.பார்த்தசாரதி, மேற்கு மாம்பலம், சென்னை-33. இது ஒரு அருமையான புத்தகம் – 24 பக்கங்களில் ஒரு கலைக் களஞ்சியம் அளவுக்கு தகவல்கள் நிறைந்த நூல். சங்கீதப் ப்ரியர்கள் அனைவரும் படிக்கவேண்டிய நூல்.

contact swami_48@yahoo.com

இராமபிரான் செய்த தந்திரம்

ram painting

ஆனந்தாஸ்ரமம் சுவாமி ராம்தாஸ் சொன்ன கதைகளை
தமிழில் தருபவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:- 961 தேதி:- 7th April 2014

ராம-ராவண யுத்தம் உக்ரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் ராக்ஷசர்களின் தாக்குதல் அதிகமாகவே ராமர் தரப்பில் போராடிய வானரப் படைகள் களைப்பும் சோர்வும் அடைந்தன. உடனே இராம பிரான் ஒரு தந்திரம் செய்தார். தனது தெய்வீக சக்தியால் வானரங்கள் அனைத்தையும் இராமன் போலவே தோன்றும்படி செய்தார். அதே போல ராக்ஷசர் அனைவரையும் இராமன் போலவே தோன்றும் படி செய்தார் அதாவது ஒரு வானரம் இன்னொரு வானரத்தைப் பார்க்கையில் அதற்கு இராமபிரான் போலவே தோன்றும். இதனால் ஒன்றை ஒன்று அன்போடு கட்டித் தழுவி உற்சாகம் பெற்றன. களைப்பும் சோர்வும் நீங்கியது.

இதற்கு நேர் மாறாக ராக்ஷசர் படையில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உயிர்விட்டனர். ஏனெனில் எதிர்த்தாற்போல இருப்பவன் நிஜ ராமனே என்று அவை ஒவ்வொன்றும் மற்றொன்றை அடிக்கத் துவங்கின.

இதைக் கூறிய சுவாமி ராம்தாஸ், நாமும் எல்லா இடங்களிலும் வானரப் படை கண்டதைப் போல ராமனைக் காண வேண்டும். அப்படி எல்லா இடங்களிலும் இறைவனை காணும் பக்குவம் வந்துவிட்டால் அப்பொழுது அன்பு வெள்ளம் பாயத்துவங்கும் என்கிறார்.

இனி ஆனந்தாஸ்ரமம் சுவாமி சொன்ன இன்னொரு கதையைக் காண்போம்:

hindi rama.jpg2

ஒரு மஹாராணியின் வருத்தம்

ஒரு ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருந்தனர். மஹாராணி மிகப்பெரிய பக்தை. தினமும் இறைவனை வழிபடுவதே அவர் செய்யும் முக்கிய வேலை. ராஜா மிகவும் நல்லவர். ராணிக்கு வேண்டிய எல்லா சவுகரியங்களையும் கொடுத்தார். ஆனால் ஒரே ஒரு குறை. என்னவென்றால் அரசனுக்கு கடவுள் பக்தி கிடையாது. ராணிக்கு இது பெரிய மனக்குறை.

ஒரு நாள் இரவில் ராஜா திடீரென்று கனவில் பேசத் துவங்கினார். “ராம, ராம, ராம” என்று முனகத் துவங்கினார். எதேச்சையாக எழுந்த ராணி இதைக் கேட்டு அதிசயித்துப் போனாள். கனவனுக்கு இறைவன் மீது பக்தி வந்துவிட்டது என்று ஆனந்தித்தாள். மறு நாள் பெரிய விழாவுக்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்தாள். அரசனுக்கு இந்த தடபுடல்களைப் பார்த்து ஒன்றுமே புரியவில்லை. ராணியிடம் போய் என்ன இது கூத்து? ஏதோ விருந்துக்கு ஏற்பாடு செய்கிறாயாமே! என்ன இது? என்றார்.

ராணி சொன்னாள், “நேற்று தூக்கத்தில் நீங்கள் இறைவனைப் பார்த்து விட்டீர்கள். ராம ராம ராம் அஎன்று கனவில் முனங்கினீர்” என்றாள். ராஜா உடனே தன் குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று வருத்தப்பட்டார். அதாவது, அவர் இத்தனை காலமும் ரகசியமாக சாமி கும்பிட்டு வந்தார். அது கனவில்
வெளியாகிவிட்டது!

இந்த கதையை ஆனதாஸ்ரமம் சுவாமி ராம்தாஸ் கூறினார்.

கதையின் நீதி என்ன? சிலர் படாடோபமாக வெளியே தெரியும்படி சுவாமி கும்பிடுகின்றனர். சிலர் ஆத்மார்த்தமாக கடவுளை வழிபடுகின்றனர். வெளித் தோர்றத்தை வைத்து ஏமாறக் கூடாது. இரண்டாவது நீதி என்ன? காதல் வயப்பட்ட ஒரு பெண்ணோ ஆணோ கனவிலாவது காதலன், காதலி பெயரை சொல்லி விடுவார்கள்; மறக்கமுடியாது—மறைக்கவும் முடியாது. அதே போல கடவுள் மீது காதல் கொண்டோரையும் அவர்களின் நடை, உடை, பாவனை மூலம் கண்டுபிடித்து விடலாம்.

Contact swami_48@yahoo.com

Please read the articles posted already
ராமாயண வழிகாட்டி 20 பகுதிகள்
ராமனும் தவளையும்
பழமொழிகளில் இந்துமதம்
பூதம் கொடுத்த தொல்லை
Lord Sri Rama- The World’s Best P R Man
Rama Vs Kama
Aladdin’s Magic in Valmiki Ramayana
Who can read all 300 Ramayanas?
Maruti Miracle: 660 kilometres per hour!
How did Rama fly his Pushpaka Vimana?
Indus Valley Cities in Ramayana
How many miles did Rama Walk?
Where is Ramasetu (Rama’s Bridge)?
Rama – Embodiment of Dharma
Rama’s Trick! Three Stories!!
“Rama” and Sanskrit G”ramma”r

contact swami_48@yahoo.com

பூதம் கொடுத்த தொல்லை!

rama thai

Rama in Thailand.

ஆனந்தாஸ்ரமம் சுவாமி ராம்தாஸ் சொன்ன கதைகளை

தமிழில் தருபவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:- 960 தேதி:- 7 April 2014

ஒரு மனிதன் துஷ்ட தேவதைகளை வழிபட்டான். எதற்காக? தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் முடித்துக் கொடுக்க ஒரு பூதம் தேவை என்பதற்காக. அவன் செய்த தவம் பலித்தது. பூதமும் அவன் முன்னால் தோன்றியது.

பூதம் சொன்னது, “தலைவனே கட்டளை இடு. கண் மூடித் திறப்பதற்குள் காரியத்தை முடித்து விடுவேன். ஆனால்………… ஒரே ஒரு நிபந்தனை………………. என்னால் சும்மா மட்டும் இருக்க முடியாது. நீ வேலை எதுவும் கொடுக்காவிடில் உன்னையே விழுங்கி விடுவேன்”. இதைக் கேட்ட அந்த மனிதனுக்கு ஒரே சந்தோஷம். வேலை கொடுப்பதா கஷ்டம்? நிறைய வேலைகளைக் கொடுப்போம் என்று எண்ணினான்.

எனக்கு ஒரு மாளிகையைக் கட்டிக் கொடு என்றான். அடுத்த பத்து நிமிடத்தில் பிரம்மாண்டமான அரண்மனை அங்கே வந்துவிட்டது! இதைச் சுற்றி ஒரு சாலை போடு என்றான். அதையும் பூதம் நொடிப் பொழுதில் நிறை வேற்றி விட்டது! இதற்கு என்ன வேலை கொடுப்பது என்று அந்த மனிதன் திகைக்கத் துவங்கினான். உடனே பெரிய நகரத்தை உருவாக்கு என்றான். அதையும் பத்து நிமிடத்தில் முடித்துவிட்டு அடுத்த வேலை என்ன என்று கேட்டது.

அந்த மனிதனுக்கு பயம் வந்துவிட்டது. வேலை கொடுக்காவிடில் பூதம் விழுங்கி விடுமே என்று மரண பயம் தொற்றிக் கொண்டது. அருகில் ஒரு சந்யாசி இருந்தார். ஓடிப் போய் அவர் காலில் விழுந்தான். ஏதேனும் ஒரு வழி சொல்லி என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினான்.

அவர் ஒரு நல்ல யோசனை கொடுத்தார். அதோ இருக்கிறது பார்! ஒரு பெரிய மூங்கில் கம்பு. அதை பூமியில் நடச் சொல் மேலும் கீழும் ஏறி இறங்கி வரச் சொல் நான் ‘நிறுத்து’ என்று சொல்லும் வரை இப்படிச் செய்து கொண்டே இரு என்று பூதத்துக்கு உத்தரவிடு என்றார் அந்த சந்யாசி.

அந்த மனிதனும் பூதத்துக்கு அவ்வாறே உத்தரவிட்டான். அது கம்பத்தை நட்டு மேலும் கீழும் ஏறி இறங்கி வந்து அலுத்துச் சலித்து விட்டது. நாளடைவில் ஒரு நாள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணிக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய்விட்டது!

உங்களுக்கு ராம நாமம் தான் அந்த மூங்கில் கம்பம். உங்களை வாட்டி வதைக்கும் அஹம்காரம்தான்—- ( யான் எனது என்னும் செருக்கு=வள்ளுவன் குறள்) ——அந்த பூதம். அதை ராம நாமம் என்னும் கம்பத்தின் மீது ஏறி இறங்க உத்தரவிடுங்கள். உங்கள் அஹம்காரத்தை அழிக்க வந்த மகத்தான சக்தி ராம நாமம் தான். அதை உச்சரித்தால் யான் எனது என்னும் செருக்கு தானாக ஓடிப் போய்விடும்.
மேலேயுள்ள கதை சுவாமி ராம்தாஸ் ஆங்கிலத்தில் சொன்னது.

வள்ளுவனும் இதை அழகாகக் கூறுகிறான். வள்ளுவன் ஒரு பெரிய சம்ஸ்கிருத அறிஞன். வடமொழியில் உள்ள பகவத் கீதையிலும், மனு தர்ம சாஸ்திரத்திலும், மஹா பாரதத்திலும், தர்ம சாஸ்திரங்களிலும் உள்ள விஷயங்களை பல குறள்களில் சொல் பிசகாமல், வரி பிறழாமல் மொழி பெயர்க்கிறான்!

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (குறள் 346, அதிகாரம் துறவு) — என்பது வள்ளுவன் வாய்மொழி.
பொருள்: அஹம்காரம், மமகாரம் இரண்டையும் அழிப்பவர்களுக்கு – அகந்தையைக் கைவிட்டவர்களுக்கு — தேவலோகத்துக்கும் மேலான மோக்ஷம் கிடைக்கும். அதாவது வீடு பேறு அடைய சுருக்குவழிப் பாதை!
நாமும் ராமன் புகழ் பாடுவோம்.

ஏப்ரல் 8-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை இராம நவமி. இராம பிரானின் பிறந்த நாள் விழா!!

Read my earlier posts on Rama:
Lord Sri Rama- The World’s Best P R Man
Rama Vs Kama
Aladdin’s Magic in Valmiki Ramayana
Who can read all 300 Ramayanas?
Maruti Miracle: 660 kilometres per hour!
How did Rama fly his Pushpaka Vimana?
Indus Valley Cities in Ramayana
How many miles did Rama Walk?
Where is Ramasetu (Rama’s Bridge)?
Rama – Embodiment of Dharma
Rama’s Trick! Three Stories!!
“Rama” and Sanskrit G”ramma”r

இராம பிரானும் தவளையும்

26fr_Prabhu_Kudanthai

Sri Ramaswami Temple, Kumbakonam ( photo from a news paper)

By London Swaminathan
Post No. 958 Dated 6th April 2014.

“ஸ்ரீ ராமசந்திரர் வனவாசம் பண்ணுகையில், ஒரு நாள் தனது வில்லையும் அம்பையும் தரையில் நிறுத்திவிட்டு, தாக சாந்தி செய்து கொள்வதற்காகப் பம்பா சரஸ் என்ற தடாகத்தில் இறங்கினார். மேலே ஏறி வந்து பார்க்கையில் தமது வில் ஒரு தவளையை ஊடுருவிச் சென்றதன் காரணமாக அந்தத் தவளை இரத்ததில் தோய்ந்திருப்பதைக் கண்டார்.

ஸ்ரீ ராமன் இதற்கு மிகவும் வருந்தி, ஏ, தவளையே நீ ஏதாவது சத்தம் போட்டிருக்கலாமே; அப்போது நீ இருப்பதை நான் தெரிந்து கொண்டிருப்பேனே. உனக்கு இந்தக் கதியும் நேர்ந்திராதே” என்றார்.

ராமா ! எனக்கு ஆபத்து நேரும்போது, “ராமா என்னைக் காப்பாற்று” என்று சொல்வேன். ஆனால் நீயே என்னைக் கொல்லும்போது, நான் யாரிடம் என் குறையைச் சொல்லி முறையிட்டுப் பிரார்த்திப்பது? என்று தவளை பதில் சொல்லிற்று”.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை இது; உதவிய புத்தகம்:- ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்புர், சென்னை 600 004.

(இந்த நூலில் 1121 உபதேசங்கள் இருக்கின்றன. இது ஒரு அற்புத மான தொகுப்பு. இந்து மதம் எனக்குப் புரியவில்லையே! ஜீவாத்மா, பரமாத்மா, க்ஷேத்ரக்ஞன் இந்த சொற்கள் எல்லாம் புரியவில்லையே!! என்பவருக்கு இந்த நூல்தான் அருமருந்து. எளிய உபதேசம் மூலம் அரிய பெரிய தத்துவங்களை விளக்கும் அற்புத நூல் இது.)

26fr_Prabhu_Kudantharama

Kumbakonam Sri Ramaswami Temple picture from a newspaper.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?

எறும்பு முதல் யானை வரை எல்லா ஜீவன்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வல்லமையும் வள்ளன்மையும் படைத்தவன் இராமன்.
முறையாக அரசு செய்யும் மன்னவனை மக்கள் கடவுளாகக் கும்பிடுவார்கள் என்று வள்ளுவன் சொல்கிறான்:

முறை செய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு
இறை என்று வைக்கப் படும் (குறள் 388)
– என்பது வள்ளுவன் வாக்கு.

எப்படி திருஞான சம்பந்தர் தனது திருமணம் முடிந்த அடுத்த நிமிடத்தில் அத்தனை பேரையும் கூண்டோடு கைலாசத்துக்கு அழைத்துச் சென்றாரோ– திருமணப் பந்தலில் தோன்றிய ஜோதியில் மறைந்தனரோ — அதே போல ராமனும் அயோத்திவாசிகள் அத்தனை பேரையும் மோட்சத்திற்கு அழைத்துச் சென்றான். அவனது காந்த சக்தி மக்கள் அனைவரையும் இழுத்தது. அவர்கள் அனைவரும் ராமனுடன் சரயு நதியில் இறங்கி மோட்சத்தை அடைந்தனர். இதை நம்மாழ்வார் பாடி இருக்கிறார்:–

கற்பார் இராம – பிரானை அல்லால், மற்றும் கற்பரோ
புல், பா முதலா, புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் – பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல் – பாலுக்கு உய்த்தனன் – நான்முகனார் பெற்ற நாட்டுளே?

பொருள்: நான்முகன் படைத்த உலகில் வாழும் அசையும், அசையாப் பொருள்கள் ஆகிய பல உயிர்களையும், புல் பூண்டு முதலாக எறும்பு போன்ற அனைத்து உயிர்களையும், தன் அருளால் இராமன் சுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனன். இத்தகைய இராமனின் புகழைக் கற்காமல் மற்று எதையும் கற்பார்களோ!

sitarama_5kumbalpnam

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்

— என்ற வள்ளுவன் குறளைப் பார்க்கையில், இராம பிரானைக் கடவுள் நிலைக்கு உயர்த்தத்தான் அந்தக் குறளை எழுதினானோ என்று நாம் வியப்புறுவோம்!!.

2014 ஏப்ரல் 8 செவ்வாய்க் கிழமை இராம நவமி. இராமனின் புகழ் பாடி நாமும் நற்கதி அடைவோம்.

Contact swami_48@yahoo.com

Pictures are used from various sites; thanks.

ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க!

bengali blow

By London swaminathan
Post No.954 Dated 4th April 2014

நம் எல்லோருக்கும் பட்டினத்தார் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். அதிக நேரம் உங்கள் கையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கையில் இருக்கும் நேரம் எல்லாம் மூன்று ஒலிகளுக்குள் அடங்கிவிடும் என்கிறார். மூன்று முறை சங்குகள் ஒலிக்குமாம்; பிறகு நாம் இருக்க மாட்டோமாம். புரியவில்லையா?

நான்கே வரிகளில் அவர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் என்று கேளுங்கள்:

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி. என். ராமச்சந்திரனின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படியுங்கள். இன்னும் நன்றாகப் புரியும்:

womanconch

The first of the chanks feeds with milk
The second shackles us with women of dense locks;
The third is sounded to announce our death.
How much, Oh, how much is the weal of worldly life?

முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள். நாம் குழந்தையாக இருந்தபோது “நான் பால் குடிக்க மாட்டேன், போ” என்று அடம் பிடிப்போம். நம் தாய் நமக்கு வேடிக்கை காட்டி நமக்கு அமுதூட்ட அந்த சங்கை வாயில் வைத்து ஊதி ஒலி எழுப்பி இருப்பாள். இது நமக்கு இறைவன் விட்ட முதல் எச்சரிக்கை. ஆங்கிலத்தில் வினா விடை போட்டி நடத்துவோர் ஒவ்வொரு குழுவுக்கும் குறித்தநேரம் கொடுப்பர். விளையாட்டு துவங்கும் போது YOUR TIME STARTS NOW ‘யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்’ எனபர். கடிகாரம் ஒவ்வொரு வினடி ‘டிக்,டிக்’ என்று அடிக்கும்போது நம் இருதயம்— நேரம் முடிந்துவிடுமே– என்று ‘டக், டக்’ என்று அடிக்கும். அதுபோல உன் வாழ்நாள் கடிகாரம் இதோ துவங்கிவிட்டது (Your Clock is Ticking) என்று கடவுள் எச்சரிக்கிறார் முதல் சங்கில்!

woman conch
இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர். அதாவது அது ஒரு மங்கல வாத்தியம். ஆண்டாள் கூட வாரணம் ஆயிரத்தில் தாம் திருமாலைத் திருமணம் செய்யும் கனவுக் காட்சியை வருணிக்கையில் சங்கு ஊதுவதைக் குறிப்பிடுகிறார்.:—

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டே, தோழீ! நான்.
–ஆண்டாள் நாச்சியார் திருமொழி

பட்டினத்தார் என்ன சொல்கிறார்? திருமணத்தன்று நமக்கு விலங்கு பூட்டப்படுகிறது என்பார். பேச்சுத் தமிழிலும் கூட அவன் திமிர் பிடித்த காளை போலத் திரிகிறான். எல்லாம் ‘கால் கட்டு’ போட்டால் சரியாகி விடும் என்று தானே பெரியோர் அங்கலாய்க்கிறார்கள்! சம்ஸ்கிருதத்திலும் இதற்கு சம்சார ‘பந்தம்’ (கட்டு) என்றே பெயர். ஆண்டவன் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இது!

sadhu shank
மூன்றாவது சங்கு? கடவுளே சொல்லக் கூடாது! அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.

ஆகையால், மெய்யன்பர்களே!

ஒன்றே செய்க!
அதுவும் நன்றே செய்க!!
அதுவும் இன்றே செய்க!!!

என்பது இறைவன் விடுத்த செய்தி ஆகும்.

lot women conch

நாளை நாளை எண்ணாதே
நாளை வீணில் போக்காதே
நாளை செய்யும் காரியத்தை
இன்றே நலமாய் முடித்திடலாம்.
நாளை நம்முடைய முறையோ?
நமனுடைய முறையோ? என்று ஒரு தமிழ் கவிஞர் பாடியது நினைவுக்கு வருகிறது.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!!

Contact swami_48@yahoo.com
Hindu_priest conch_

நார்வேயில் ‘சம்பாஷணை முழுவதும் ஸம்ஸ்கிருதத்தில்’

konow_sten
Picture of Norwegian Sanskrit scholar Sten Konow.

Compiled by London Swaminathan
Post No 953 Dated 4th April 2014

Part 4 அரியநாயகிபுரம் ஐயரின் வடதுருவ யாத்திரை………………………….
இந்த நாலாவது பகுதியுடன் இந்தத் தொடர் நிறைவுபெறுகிறது.
தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்

“இங்கிலாந்தில் புகழ்பெற்ற சிறந்த வித்தியாசாலையுள்ள ஆக்ஸ்போர்ட் என்ற நகரத்தைப் பார்க்கப் போயிருந்தேன். அவ்விடமுள ஸம்ஸ்கிருத புஸ்தகசாலை அதிகப் பிரஸித்திபெற்றது ஸமீபத்தில் கூட நேபால் மகாராஜா அவர்கள் சுமார் 6000 ஏட்டுப் பிரதிகளை அப் புஸ்தகசாலைக்குக் கொடுத்திருக்கிறார். இங்குள்ள உயர்தரக் கல்லூரியில்தான் மியாக்ஸ் முலர் என்ற (இப்பொழுது ஸ்வர்கலோகத்தில் வாஸம் செய்கிற) புகழ்பெற்ற ஸம்ஸ்கிருத வித்வான் சுமார் 80 வருஷங்களுக்கு முன் ருக்வேத பாஷ்யம் முதலானவைகளை ஆராய்ந்து வெளியிட்டார். இப்பொழுது அவரது சீடர்கள் பலர் அநேக கலாசாலைகளில் உபாத்யாயர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

நார்வேயின் பிரதான நகரமான ஓஸ்லோ போய்ச்சேர்ந்தேன். அவ்விடத்து வித்தியாலய ஸம்ஸ்கிருத பண்டிதர் பிரஸித்தி பெற்றவர். அவர் பெயர் ஸ்டென் கோநோ என வழங்கும். இந்தப் பண்டிதர் மூலமாக மகா மேரு யாத்திரா ஸௌகரியங்கள் கிடைத்தன. அங்கிருந்து புறப்பட ஒரு வாரமாயிற்று. நாள்தோறும் ஸ்டென் கோநோவுடன் வேதாந்த விசாரணை செய்வது வழக்கம். இந்த வித்வானுடைய ஆசாரத்தையும் ஞானத்தையும் நோக்கினால் நம் ரிஷிகளுள் இவரை ஒருவராகக் கொள்ளலாம். என்னை மேருப் பிரதேசத்துக்கு வழியனுப்ப மேற்படி பண்டிதர் தம் சீடர்களுடன், ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்; சம்பாஷணை முழுவதும் ஸம்ஸ்கிருதத்திலேயே நடந்தது. எங்கள் சம்பாஷணை முடிகிற வரை ரயில்வே கார்ட் தூரத்திலிருந்து பெருந்தன்மையுடன் கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு அவர் நம் பண்டிதர் ஸமீபம் வந்து ரயில் வண்டியை விடலாமா வென்று கேட்டார். உடனே பண்டிதர் கடியாரத்தைப் பார்த்து, ஓ! பத்து நிமிஷம் அதிகமாகிவிட்டதே என்றார். அதற்கு கார்ட் துரை, “அதனால் குற்றம் ஒன்றுமில்லை. கீழ்நாட்டு வித்வானை ரயில் வண்டியில் உடகாரவைத்து அவர்கள் அனுமதியைப் பெற்று வாருங்கள். பிறகு நான் வண்டியை ஓடவிடுகிறேன்” என்றார்.

oxford bodleian libraries
Picture of Oxford Bodleian Library

இதை இவ்விடத்தில் தெரிவிக்கும் காரணம் மேல்த் தேசத்தில் ஸம்ஸ்கிருத வித்வான்களுக்குப் பொதுஜன ஆதரவு எவ்வளவு என்பதை விளக்குவதற்காகவே. பிறகு மாணவர் வழியனுப்புப் பாட்டை நார்வே பாஷையிற் பாடி எனக்குத் தம் குருவுடன் வணக்கம் கூறினர். கார்டு துரைக்கு ரயிலை விட அனுமதி கொடுத்தார்கள். நண்பர்களே இவ்விஷயம் இந்தியாவில் நடக்கக்கூடுமாவென்று யோசியுங்கள்.

(இதற்குப் பின் ஐயர் நார்வேஎ நாட்டு நள்ளிரவு சூர்ய தரிசனத்தை வருணிக்கிறார். மகாமேரு யாத்திரை என்ற இரண்டு கட்டுரைகளில் சுருக்கம் ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஆகையால் புத்தகத்தின் இறுதிப் பகுதியிலிருந்து சில விஷயங்களைக் காண்போம்)

ஐரோப்பா கண்டம் நம் இந்தியாவை விடச் சிறியது; ஆதலால் அடிக்கடி ஒரு நாடு விட்டு அடுத்த நாடு வரும்பொழுது சுங்கச் சாவடியாட்களின் சோதனை நடக்கும். ஏதாவது தவறுதல் நேர்ந்தால் உடனே அந்த யார்த்திரைக்காரனை கீழே இறக்கிவிடுவார்க.ள். சோதனையும் மிகக் கடுமையக இருக்கும். இந்தச் சோதனைத் துன்பம் எனக்குக் கொஞ்சம் கூடவில்லை. ஒரு யோக்கியதா பத்ரம் என்னிடத்தில் உண்டு. அதில் நான் “இந்தியாவில் ஒரு வைதீகப் பிராமணன்; ஆகார நியமம் உள்ளவன்; புகையிலை முதலானவைகளை நிந்திக்கிறவன்’ ஒரு ஆரியன்; வித்வான்; எல்லோராலும் உபசரிக்கத்தக்கவன்” என்று எழுதி இருந்தது; ஒவ்வொரு கஸ்டம்ஸ் ஆபீஸரும் என்னையும் என் தலைப்பாகை சால்வை முதலானவற்றை பார்த்தது,ம், யோக்கியதா பத்ரத்தைப் பார்த்தது,ம், எழுந்திருந்து வந்தனம் சொல்லி வினயத்துடன் போய்விடுவார்கள்.

ஜரூஸலத்தில் ஸ்வாமி புறப்பாடு

பக்கம் 73ல் ஜரூஸலம் பற்றி ஐயர் எழுதுவது:

இந்நகரம் ஐந்து மலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் மலை கிறிஸ்துவை விசாரணை செய்து சிலுவையில் அறைந்த இடமாகும்; இரண்டாவது மலையில் இப்பொழுது யூதர்கள் வித்தியாசாலை ஸ்தாபித்திருகிறார்கள். மூன்றவதில் ஜர்மன் சக்கரவர்த்தி தாம் வந்து இறங்குவதற்காகக் கட்டின அரண்மனையுள்ளது. ஐந்தாவதில் கிறிஸ்துமாதா ஸமாதி இருக்கிறது. இந்துக்கள் ஸ்ரீகாசியிருப்பது போல இந்த இடங்களில் மரணத்தை எதிர்பார்க்கும் கிறிஸ்தவர் பலர் நெடுந்தூரத்திலிருந்து வந்து காத்திருகிறார்கள். ஸ்ரீ கிறிஸ்துவின் ஸமாதி இந்த ஐந்து மலைகளுக்கும் நடிவில் உள்ளது. ஸமாதியின் மேல் ஒரு கண்ணாடிக் கூண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சுற்றிலும் பெரிய மண்டப முண்டு. ஸமாதிக்கு மின்சார விளக்குகள் போடப்பட்ட்டு அணையா விளக்கொடு பூஜை நடக்கிறது.

greek mary idol
Picture of Mary idol in Jerusalem

கிறிஸ்தவ மத உட்பிரிவுகளில் உள்ள ஏழு மடாதிபதிகள் நாள்தோறும் ஒவ்வொருவராக அவரவர்க்கு நியமிக்கப்பட்ட காலங்களில் வந்து நேரே பூஜை செய்கிறார்கள். ஸ்ரீ சிதம்பரம் முதலான கோவில்களில் எப்படி உத்ஸவ காலங்களில் பூஜைகளும் பாராயணங்களும் அலங்கார முதலானவைகளும் நடக்கின்றனவோ அப்படியே இந்த ஸமாதிக்கு பெருஞ் செலவில் பூஜை நடத்தப்படுகிறது.

நான் அவ்விடம் போனபொழுது ஸமாதியில் சிறந்ததொரு உத்ஸவம் நடந்தது. மாலையில் ஸ்வாமி வீதி புறப்பாடும் உண்டு. சிறந்த தங்கச் சப்பிரத்தில் கிறிஸ்து விக்கிரகமும் மற்றொரு வாகனத்தில் மாதா மேரியின் விக்கிரகமுமிருந்தன. புத்தமத உத்ஸவங்களே இப்படி கிறிஸ்தவ மத உத்ஸவங்களாகப் பரிணமித்தன.

jerusalem-panorama-500
Panoramic View of Jerusalem.

இவ்வளவு ஸம்பத்துக்களை நம் க்ஷேத்திரங்களில் நான் பார்த்தது இல்லை. அளவிற்படாத ஸொத்து……………………………………

நாம் இப்பொழுது உலகில் காணும் ஸொத்தை ஒரு தராசிலும் ரோமாபுரி போப்பின் ஸொத்தை ஒரு தராசிலும் வைத்தால் அநேகமாகப் போப்பின் ஸம்பத்தே அதிகமாக இருக்கலாம்.

(இவை எல்லாம் 1935-ல் எழுதப்பட்டது. ஐயரின் புத்தகம் 1936 ஜனவரியில் விற்பனைக்கு வந்துவிட்டது. 110 பக்கம் உடைய புத்தகம் என்னிடம் உள்ளது. பிற்காலத்தில் ஆராய்ச்சியாளருக்குப் பயன்படலாம்).
முற்றும்.

contact swami_48@yahoo.com
Pictures are used from various sites;they are NOT from aiyer’s book. Thanks.

அபாய நோயிலிருந்து பிரபஞ்ச ஆற்றலால் மீண்டவர்!

jill bolte

By S Nagarajan
Post No 951 Date 3rd April 2014

ச.நாகராஜன்

புத்தர் தரும் போதம்

புத்தரின் அருமையான போதனைகளைப் போதிக்கும் தம்ம பதத்தின் முதல் ஸ்லோகமே பெரும் உண்மையை விளக்கும் ஒன்று: “நமது எண்ணங்களின் அடிப்படையிலேயே அவற்றின் மொத்த விளைவாக நாம் வார்க்கப்பட்டு உருவாக்கப்படுகிறோம். யாருடைய மனத்தில் சுயநல எண்ணங்கள் உருவாகின்றனவோ அவர்கள் பேசும் போதும் செயலாற்றும் போதும் துன்பத்தையே விளைவிக்கிறார்கள்.எருதுகள் இழுத்துச் செல்லும் வண்டிகளின் சக்கரங்கள் அந்த எருதையே பின்பற்றுவது போல துன்பங்கள் அவர்களைப் பின் தொடர்கின்றன.”

யோக வாசிஷ்டம் தனது ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களில் இதையே விரிவாகக் கதைகள் மற்றும் உவமான உவமேயங்கள் மூலம் அழகுற விளக்குகிறது.இதை நவீன காலத்தில் விளக்கும் ஒரு அதிசய விஞ்ஞானி Jill Bolte Taylor ஜில் போல்ட் டெய்லர்!

மூளையியல் விஞ்ஞானி ஜில் போல்ட் டெய்லர்

உலகையே பரபரப்புள்ளாக்கி விற்பனையில் சாதனையைப் படைத்து வரும் ‘மை ஸ்ட்ரோக் ஆஃப் இன்சைட்’ My Stroke of Insight என்ற புத்தகம் ஜில் போல்ட் டெய்லர் (Jill Bolte Taylor) என்ற பெண்மணியின் அற்புத அனுபவத்தால் எழுதப்பட்ட ஒன்று.

1996ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று படுக்கையில் எழுந்திருந்த டெய்லர் தான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து திகைத்தார். அப்போது அவருக்கு வயது 37 தான். இடது பக்க மூளையில் ஒரு ரத்த நாளம் வெடித்ததால் வந்த நோய் அது. அவரோ பிரபலமான மூளையியல் விஞ்ஞானி. ஹார்வர்டில் படித்தவர். அவரால் தனக்கு வந்த நோயை நம்பவே முடியவில்லை. மூன்று வாரங்கள் கழித்து டிசம்பர் 27ஆம் தேதி அவருக்கு மூளையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. கோல்ப் பந்து அளவு இருந்த ஒரு கட்டி அவரது இடது பக்க மூளையை அழுத்தவே அவரால் பேச முடியவில்லை. அந்தக் கட்டியை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள்.

அவரால் படிக்க முடியவில்லை. எழுத முடியவில்லை. பேச முடியவில்லை. எதையும் நினைவில் கொண்டு வர முடியவில்லை. ஆனால் மூளை இயக்கத்தை நன்கு அறிந்த விஞ்ஞானியான அவர் தனது நோயுடன் வெற்றிகரமாகப் போராடி வெல்ல நிச்சயித்தார். இடது பக்க மூளை தர்க்க ரீதியாக சிந்தித்து அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வகைப்படுத்தி விளக்கி நன்கு மதிப்பிட்டு செயலாற்றுகையில் வலது பக்கமோ உள்ளுணர்வின் அடிப்படையில் நம்மை செயலாக்க வைக்கிறது. டெய்லர் இரண்டு பக்கங்களையும் சரியான விதத்தில் செயலாற்ற தனது உடல் மனம் ஆன்மா இந்த மூன்றையும் பயிற்றுவித்தார். வலது பக்க மூளையின் மூலம் உள்ளுணர்வு ஆற்றலை வளர்த்தார்.

My Stroke of Insight

பிரபஞ்ச ஆற்றலுடன் ஒருங்கிணைவதே வெற்றிக்கு வழி

“நானே ஆற்றல் மயம். என்னைச் சுற்றியுள்ள பெரும் ஆற்றலுடன் என்னை பிரக்ஞை மூலமாகவும் வலது பக்க மூளையினால் இணைத்துக் கொள்ள ஆரம்பித்தேன்” என்று பின்னால் அவர் விளக்கினார். இந்த பகுதியின் மூலம் உள்ளுக்குள் அமைதியைக் கொண்டு வர முடியும் என்பதை தேர்ந்த மூளை விஞ்ஞானியான அவர் எளிதில் உணர்ந்து கொண்டார். பிரபஞ்சத்தின் ஒரு கூறான நாம் அதனுடன் ஒன்றும் போது எல்லையற்ற ஆற்றல் நம்மை வந்தடைவதை அவர் அனுபவத்தால் உணர்ந்து கொண்டார்.

எட்டு வருட காலம் போராட்டம் தொடர்ந்தது. டெய்லர் விடவில்லை.இறுதியில் முழு ஆற்றலுடன் அவர் நோயிலிருந்து மீண்டார். தனது அனுபவங்களின் அடிப்படையில் அருமையான தனது ‘மை ஸ்ட்ரோக் ஆஃப் இன்சைட்’ என்ற புத்தகத்தை எழுதினார். அத்தோடு பக்கவாதம் மற்றும் இதர மன நோய்களினால் பாதிக்கப்பட்டோரிடம் எப்படி நடந்து கொண்டால் அவர்கள் எளிதில் மீள முடியும் என்பதை அறிவியல் அடிப்படையில் விளக்க ஆரம்பித்தார்.அவரது புத்தகம் 2008ஆம் ஆண்டின் நியூயார்க் பெஸ்ட் செல்லராக ஆனது.

ஓப்ரா வின்ஃப்ரே அவரைத் தனது பிரபலமான ஷோ நிகழ்ச்சிக்கு அழைத்தார். அவர் தனது அனுபவங்களை அதில் சொல்ல லட்சக்கணக்கானோர் பார்த்தனர். பலர் உருகி அழுதனர்.

brain

அமைதி சர்க்யூட் உருவாக வழி

யோகம் தியானம் மூலமாக உள்ளத்தில் ஒரு அமைதி சர்க்யூட்டை உருவாக்க முடியும் என்பது தான் அவர் தரும் சாரமான யோசனை!

இதையே தான் ஸ்வர யோகம் என்று நமது யோகிகள் கூறி வலது பக்க நாசியின் மூலமாகவும் இடது பக்க நாசியின் மூலமாகவும் இடது மற்றும் வலது பக்க மூளை பாகங்களைச் செம்மைப் படுத்த முடியும் என்பதை விளக்கினர். பிராணாயாமம் இதற்காகவே அமைக்கப்பட்டது. வலது பக்க மூளை சர்க்யூட் அமைதியை ஏற்படுத்தும் போது அது பிரபஞ்ச மனத்துடன் இணைந்து அனைத்தையும் அறிய வைக்கிறது. எண்வகை சித்திகளைத் தருகிறது.உலகில் சாந்தியை உருவாக்குகிறது.

நல்ல எண்ணங்களை வளர்க்கும் போது நல்லவராக வளர்கிறோம். அதன் உச்ச கட்டத்தில் ஞானியாக ஆகிறோம்.

இதை யோகிகள் சொல்வது ஒரு புறம் இருந்தாலும் ஒரு மூளையியல் விஞ்ஞானி பெரும் நோயால் எட்டு வருடங்கள் அவதிப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து அறிவியல் அடிப்படையில் சொல்லும் போது நமது யோகத்தின் வலிமையை உணர்ந்து அதிசயிக்கிறோம்!

சில நிமிட யோகப் பயிற்சி நம்மையும் மேம்படுத்தும்; உலகையும் வளமாக்கும் என்பது பொய்யல்ல; மெய்! விஞ்ஞானி தனது அனுபவத்தில் விளக்கும் மெய்யோ மெய்!!

(ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் ஜுன் 2013 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.)

This article was written by my brother S Nagarajan of Bangalore for Tamil magazine Jnana Alyam. Contact swami_48@yahoo.com
********************

வேதத்தில் வெள்ளரிக்காய் !

fruit cucumber

By London Swaminathan
Post No. 949 Date 2nd April 2014.

வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே !
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே !!
நெற்றி ஒற்றைக் கண்ணனோடு நிர்த்தனம் செய்தாள்!
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே !!
–மஹா கவி பாரதி.

இந்துக்கள் இயற்கையை நேசிக்கும் அன்பர்கள். இயற்கையில் கடவுளைக் கண்டுபிடித்தவர்கள். இயற்கை மூலம் கடவுளைக் காட்டியவர்கள். இன்று எல்லோரும் புறச் சூழல் பாதுகாப்பு என்று பெரிய கூக்குரல் எழுப்புவதற்கு முன் ‘எறும்பு முதல் யானை வரை’ எல்லாவற்றுக்கும் இறை அந்தஸ்து வழங்கினவர்கள், ஒரு ஊருக்கு ‘திரு ஆனைக் கா’ என்று பெயரிட்டு பக்தி இலக்கியத்தில் யானைக்கு அழியாத இடம் கொடுத்தனர். அதன் பக்கத்திலேயே ‘திரு எறும்பூர்’ என்று மற்றொரு ஊரில் எறும்புக்கு மதிப்பு கொடுத்தனர். வேதத்தில்—உபநிஷதத்தில்– ஆலமரவிதை, பசுமாட்டின் வாலில் உள்ள முடி, உப்பு முதலியவற்றின் மூலம் கடவுள் பற்றி பாடம் நடத்தியதைப் படிக்கிறோம். இதே போல வெள்ளரிப் பழம் மூலம் ஒரு பெரிய உண்மையைக் கற்பிக்கிறது யஜூர்வேதம்.

CUCUMBERFRUIT

வேதங்கள் நான்கு : ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்று. இவைகளில் சைவர்களின் தாரக மந்திரமான நமசிவாய என்னும் மந்திரம் யஜூர்வேதத்தில் வருகிறது. யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் ருத்ரத்தின் நடுவில் அமைந்துள்ளது நமசிவாய மந்திரம். அதற்குச் சற்றுப் பின்னால் சிவனின் பெருமையைக் கூறுகையில் ‘ம்ருத்யுஞ் ஜய மந்திரம்’ என்று போற்றப் படும் ஒரு சிறிய மந்திரம் வருகிறது. ரிக் வேதத்திலும் இந்த மந்திரம் இருக்கிறது (7-59-12). இதை நமக்குக் கொடையாக வழங்கியவர் மார்க்கண்டேய மகரிஷி.. ‘ம்ருத்யு’ என்றால் மரணம் (இறப்பு)—.அதை ஜயிக்கக்கூடிய மந்திரம் என்பதால்—-மரணத்தை வெல்லும் இம் மந்திரத்துக்கு ‘‘மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம்’’ என்று பெயர். இதில்தான் வெள்ளரிப் பழம் வருகிறது. இதோ அந்த மந்திரம்:–

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

ஸுகந்திம் = இயற்கையான நறுமணம் உடையவரும்
புஷ்டிவர்த்தனம் = கருணையால் அடியார்களை ஊட்டி வளர்ப்பவரும் ஆகிய
த்ரயம்பகம் = முக்கண்ணனை
யஜாமஹே = பூஜித்து வழிபடுகிறோம்.
உர்வாருகம் இவ = வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல
ம்ருத்யோ: = சாவினுடைய
பந்தனாத் = பிடியிலிருந்து
முக்ஷீய = உமது அருளால் விடு படுவோமாக!
மா அம்ருதாத் = முக்தி வழியில் இருந்து விலகாமல் இருப்போமாக!

golden cucumber

ஸ்ரீ ருத்ரம் (நமகம்-சமகம்) மந்திரத்தை– கவிதாமணி, உபய பாஷா ப்ரவீண, செந்தமிழ் கவிதைச் செம்மல் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் அழகிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அதில் இந்த மந்திரப் பகுதியின் தமிழ் வடிவத்தை மட்டும் பார்ப்போம்:-

இயற்கை நறுமணம் உடைய தேவரே
ஈடில்லாக் கருணையால் அடியாரை வாழ்விக்கும்
வியத்தகு முக்கண் உடைய எம்பெரும
வினயமாய்ப் போற்றி அஞ்சலி செய்தோம்
வெள்ளரிப் பழம் காம்பினின்று விடுவதொப்ப
மேவிய உமதருளால் மரணத்திலிருந்து விடுபடவும்
தெள்ளிய சன்மார்க்க நெறியில் இருந்து யாம்
திசை மாறாதென்றும் வாழ்ந்திடுவோமாக

வேதம் படித்த சைவர்கள், விபூதி பூசும் போது இந்த மந்திரத்தைச் சொல்லிகொண்டே விபூதி இட்டுக் கொள்வார்கள். யாருக்காவது, ஆயுள் அதிகரிக்கவோ, மரண பயம் நீங்கவோ, நோய்கள் நீங்கவோ வேண்டுமானால் மிருத்யுஞ் ஜய ஹோமமும் நடத்துவது வழக்கம். இந்தச் சிறிய மந்திரத்தை அனைவரும் சொல்லலாம். முதலில் வெள்ளரிப் பழத்தை ஏன் இதில் சொன்னார்கள் என்று காண்போம்.

child cucumber

மற்ற பழங்கள் பழுத்தவுடன் அது கீழே விழும். பழம் விழுந்தால் அது தரும் அதிர்ச்சியை நாம் அறிவோம். கீழே விழுந்தாலும் சரி ஒருவரின் தலையில் விழுந்தாலும் சரி, அதில் பக்க விளைவுகள் உண்டு. ஆனால் வெள்ளரிப்பழம் மட்டும் பழுத்தவுடன் பழம் இருந்த இடத்திலேயே இருக்கும். ஒரு அங்குலம் கூட நகராது, அதன் காம்பு மட்டும் தனது தொடர்பை அழகாகத் துண்டித்துக் கொள்ளும். பழுத்த பழத்துக்கு அவ்வளவு மரியாதை. காம்பே ஒரு ‘கும்பிடு போட்டு விட்டு’ சற்றே விலகிவிடும்.

இன்று டிஸ்கவரி (Discovery Channel) சேன்னலில் இயற்கை பற்றிய டாகுமெண்டரிகளை பார்க்கையில் பூ மலர்வதையும் ,காய் வெடிப்பதையும் ‘ஸ்லோ மோஷனில்’ (Slow Motion) பார்த்து வியக்கிறோம். அந்தக் காலத்தில் பெரிய சக்திவாய்ந்த கேமராக்களும் இல்லை. அதை ‘’ஸ்லோ மோஷ’’னில் போட்டுப்பார்க்கும் வசதிகளும் இல்லை. ஆனால் நமது ரிஷிகள் தன் ஞானக் கண்களால் அதை கண்டார்களா அல்லது ஊனக் கண்களை வைத்து உன்னிப்பாகப் பார்த்தார்களா என்று சொல்லமுடியாது. நல்ல ஒரு கவிதை உவமையை நமக்குத் தந்துவிட்டார்கள்.

வெள்ளரிப் பழ உவமையின் பொருத்தத்தையும் காண்போம். வீட்டில் 80, 90 வயதுப் பாட்டி, பாட்டனார் இறந்தால் அதைக் ‘கல்யாணச் சாவு’ என்று சொல்லுவர். பெரிய வருத்தம் இருக்காது. ஏனெனில் பிறந்தவர் எல்லாம் இறப்பதை எல்லோரும் அறிவர். அது இயற்கை நியதி. ஏன் நமக்கு வருத்தம் வரவில்லை? அவர்கள் நிறைந்த வாழ்வு வாழ்ந்து பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன்களைப் பார்த்தாகிவிட்டது. அதாவது முழு வெள்ளரிப்பழம் போல ஆகிவிட்டனர். இனியும் அது இருந்தால் பழமே தன்னால் பிளவுபட்டு வெடித்துவிடும். காம்பே விலகியது போல அதிர்ச்சி இல்லாத, மிருதுவான, அழகான முறையில் மரணம் சம்பவித்தால் இறந்தவருக்கும் கஷ்டம் இல்லை, அவர்களுடைய உறவினர்களுக்கும் வருத்தம் இல்லை. அதாவது பந்தங்களை அதிரடிப் போகில் தூக்கி எறியாமல், நம்மைப் பிடித்த பந்தங்கள்—கட்டுகள்—தளைகள் — விலங்குகள் – தானாக, ‘ஸ்மூத்’தாக, விலகுவதையே வெள்ளைப்பழ உவமை காட்டுகிறது.

blonde_cucumber

ஆகையாலதான் இந்த உவமை; வெள்ளரிப் பழம் காம்பில் இருந்து விடுபடுவதுபோல சாவில் இருந்து விடுபடுவோமாக. ஞானம், பழுத்த நிலையில் மரணம் சம்பவித்தால் நேரடி மோட்சம் தானே. மற்ற மரணங்களைப் போல பல ‘’மண்டகப் படிகள்’’(Stop overs) கிடையாது. இது நேரடி விமான சர்வீஸ். நடுவில் ஸ்டாப் ஓவர் (stop over) கிடையாது.– டைரக்ட் Fலைட் Direct Flight— ஆகையால் வெள்ளரி போல பழுத்த நிலையில் இறப்போம்—அது போல பந்தங்கள் கஷ்டமின்றி பிரியட்டும்—பிரிந்த பின்பு மீண்டும் பிறப்பின்றி மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வோம்– என்பதே இந்த மந்திரத்தின் பொருள் என்று ஆன்றோர் விளக்குவர்.

(காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 1957-59 ஆம் ஆண்டுகளில் சென்னையில் நடத்திய உபந்யாசம் ஒன்றில் வெள்ளரிப் பழ விஷயத்தை சுருக்கமாகத் தொட்டுக் காட்டினார். அதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது இக்கட்டுரை).

Contact swami_48@yahoo.com

கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!!

Sri_Ramakrishna

சம்ஸ்கிருத, தமிழ் மொழி உப்பு பொம்மை கதைகள்

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:947 தேதி ஏப்ரல் 1, 2014.

கல்லூரியில் ‘கெமிஸ்ட்ரீ’ படிக்கும் மாணவர்களுக்கு இரசாயன (வேதியியல்) பரிசோதனைக் கூடத்தில் உப்பு பரிசோதனைகள் நிறைய வரும். இந்தப் பரிசோதனை களைத் துவக்கிவத்தவர்கள் உபநிஷத ரிஷிகள். பெரிய கருத்துக்களை சின்னக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது போல உபநிஷதங்கள் கற்பிக்கின்றன. ஒரு மாணவனை ஒரு கைப்பிடி உப்பைக் கொண்டுவரச் சொன்னார் ஒரு ரிஷி. அவனையே விட்டு ஒரு கோப்பை நீரில் போடச் சொன்னார். அது கரைந்த பின்னர் உப்பு எங்கே போனது என்று கேள்வி கேட்டு, உப்பு நீரை சுவைக்கச் சொல்லி இன்னும் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு பிரம்மம் பற்றிப் பாடம் நடத்துகிறார். பிற்காலத்தில் எல்லோரும் இந்த உவமைகளைப் பயன்படுத்தத் துவங்கினர்.

இதே கருத்தைச் சொல்லும் ஒரு சித்தர் பாடல்:

நாழி உப்பும் நாழி அப்பும்/ என்ற பாடலை “சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி” என்ற தலைப்பில் ஏற்கனவே கொடுத்துள்ளேன்:

நாழி அப்பும் நாழி உப்பும் நாழியான வாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்த இடம்
ஏறில் ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறு கூறு பேசுவோர் வீழ்வர் வீண் நரகிலே.

அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு என்னும் கிராமியப் பழமொழியை விளக்க உப்பு- நீர் உவமையைப் பயன்படுத்துகிறார் சிவவாக்கியர் என்னும் சித்தர். உப்பு – எல்லோருக்கும் தெரிந்த சொல். அப்பு என்றால் தண்ணீர் என்று பொருள்.

கடவுளைப் பார்த்த எவரும் அவரை வருணிக்க முடியாது. அவ்வளவு மகிமை நிறைந்தவர். வருணனைகளுக்கு அப்பாற்பட்டவர். கண்டவர் விண்டிலர்.

யாராவது ஒருவன் கடவுளின் ரூப லாவண்யங்களை வருணித்து கடவுள் இப்படித்தான் இருப்பான் என்று சொன்னால் அவன் கடவுளைப் பார்த்ததே இல்லை என்று பொருள். அதவது விண்டவர் கண்டிலர். இதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் சில கதைகளைச் சொல்கிறார். அதே விஷயங்களை சித்தர்களும் தமிழ் அடியார்களும் சொல்லுகின்றனர். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இந்த உவமை இருக்கிறது!!

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ—என்று மாணிக்கவாசகர் பாடினார்.

best ice use it

நான்கு சுவையான கதைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் மிகவும் பிரபலமானவை; எல்லோரும் கேட்டிருப்பார்கள் ஆகவே சுருக்கமாகப் பார்த்துவிட்டுத் தமிழ் அடியார்களின் பாடல்களைக் காண்போம்.

கதை 1:– ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மன் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.

கதை 2: புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி ‘இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே ‘அவன் இல்லை’, ‘அவன் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் ‘இல்லை’ என்ற பதிலோ ‘ஆமாம்’ என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மமனைக் கண்டவர் நிலையும் இதே. அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.

ice-sculpture-350

கதை 3:- ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். அவன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.

கதை 4: நான்கு நண்பர்கள் ஒரு பெரிய சுவரால் சூழப்பட்ட ஒரு உயரமான கட்டிடத்தைப் பார்த்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய நால்வருக்கும் ஒரே ஆசை. முதல் ஆள் உயர ஏறிப் போய் எட்டிப் பார்த்தான். ஆ! ஆ! ஆ! என்று குரல் மட்டுமே வந்தது. உள்ளே குதித்து விட்டான். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது ஆள் ஒவ்வொருவனாகப் போனார்கள். அவர்களுக்கும் இதே கதிதான். பிரம்மத்தை அறிந்தவர்கள் வெளியே வரவும் மாட்டார்கள், பிரம்மத்தினது குண இயல்புகளை வருணிக்கவும் மாட்டார்கள். வருணிக்கவும் முடியாது. ஆனந்தக் கடலில் நீந்தத் துவங்கிவிடுவார்கள்.

scaling wall

இந்த நாலு எடுத்துக் காட்டுகள் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர் பிரம்மஞானிகளின் இயல்பை விளக்குகிறார். ஆனால் ஒரு சில ஞானியர் மட்டும், மனித குல நன்மைக்காக மிகவும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நம்மிடையே திரும்பி ஓடிவருகிறார்கள்.

“கண்டேன், கண்டேன் கண்டேன்!! கண்ணுக்கினியன கண்டேன், தொண்டீர் எல்லோரும் வாரீர்”– என்று ஆனந்தக் கூத்தாடி நம்மை எல்லாம் உய்விக்க முயற்சி செய்கிறார்கள். “சேரவாரும் ஜெகத்தீரே”– என்று நம்மிடம் கெஞ்சுகின்றனர். அப்படியும் நாம் போகாவிட்டால் “கடைவிரித்தேன் கொள்வரில்லையே”— என்று வருத்தப் படுகிறார்கள்.

திருமூலரின் திருமந்திரம் காட்டும் உண்மை:

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (2915)

பொருள்; கடவுளை வருணிக்க முடியாது. கரை காண முடியாத கடல் போல அவன் எங்கும் நிறந்தவன். அவனைச் சொல்லுக்குள் அடக்க முயன்றவர்கள் எல்லாம் திணறிப் போய் ஊமையர் போல நிற்கின்றனர். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். ஆனால் தெளிந்த மனது உடையோருக்கு அவன் எளிதில் புரிபடுவான்.

.பகவத் கீதையில் பெருங் கடலை, சமுத்திரத்தை ‘’ஆபூர்யமாணம், அசலப் ப்ரதிஷ்டம்’’= எங்கும் நிறைந்தது, நிலைகுலையாதது என்று கிருஷ்ணன் கூறுவான் (2-70). ஆர்பரித்துத் துள்ளி ஓடும் பெரிய, பெரிய நதிகள் எல்லாம் கடலுக்குள் இறங்கியவுடன் சப்தம் ஒடுங்கி தன் நாமம் இழந்துவிடும். இது போல ஆசைகள் எல்லாம் ஒருவனுக்குள் ஒடுங்கவேண்டும். பின்னர் இறைவனைக் காண முடியும்.என்று விளக்க வந்த உவமை இது.

ocean

அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரஞ் சேர்பரமும் விட்டுக்
கப்புறு சொற்பத மாளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே (திருமந்திரம்,2905)

பொருள்: தண்ணீரில் உப்பைப் போட்டால் எப்படி இரண்டறக் கலக்கிறதோ அது போல இறைவன் பக்தனுள் இணைந்துவிடுவான் அல்லது பக்தன், இறைவனுக்குள் ஒடுங்கிவிடுவான். பராபரம்= இறைவன், பரம்=பக்தன். பேருயிர் என்னும் இறைவனில் நம் ஆருயிர் இணைந்துவிடும் அத்வைத நிலை. அத்வைதம்= இரண்டில்லை, ஒன்றே.

longexposurewaves-7

கலித்தொகையில் உப்பு பொம்மை

சங்கத் தமிழ் நூல்களில் ஒன்று கலித்தொகை. அதில் கடற்கரையில் உப்பினால் செய்யப்படும் பாவை உறைந்து நெகிழ்ந்து விடுவதுபோலத் தன் உயிர் உகுந்துவிடும் என்று தலைவன் கூறுகிறான்:

நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற
உப்பியல் பாவை உறையுற்றது போல
உக்குவிடும் என் உயிர் —(கலி 138/16-17)

பொருள்: காம நோய் என்னும் கடலில் நீந்தும் உப்பு பொம்மை கரைவது போல நான் கரைந்து மறைந்து விடுவேன். இந்தப் பாடல் நல்லந்துவனார் பாடிய நெய்தற்கலியில் வருகிறது. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன அதே கதைதான். ஆனால் பிரம்ம ஞானக் கடலுக்குப் பதில் காமக்கடல் பற்றி நல்லந்துவனார் பாடுகிறார்.

சின்ன உவமை, பெரிய உண்மைகளைப் புகட்டுகின்றன. உபநிடதங்களில் ஆலமர விதை, மனிதனின் கேசம் (முடி) ஆகியவற்றை மேலும் மேலும் சின்னதாகப் பிரித்துக் கொண்டே போகும் உவமைகள் மூலம் நமக்கு விளங்க வைக்கின்றனர். படித்து இன்புறுக.

Contact swami_48@yahoo.com