Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டன் கவிஞர் ஏ .நாராயணன், ஆகஸ்ட் 2021ல் எழுதிய 4 கவிதைகள் :
(ரசாயன பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அத்திபள்ளி நாராயணன் சமீபகாலமாக கவிதை மழை பொழிந்து வருகிறார்.அவருடைய கவிதைகள் இந்த ‘பிளாக்’கில் முன்னரே வெளியாகியுள்ளன- SWAMINATHAN.)
xxx
தாமரையோ மறையோ
குவித்த கரமொத்த தாமரை மொட்டு
குட்டை நீரில் நெட்டாய் நிற்கத் தொட்
டதோ காலை இளங்கதிரோன் விரிந்ததோ
இதழ்கள் முத்துப் பனித்துளிகள் ஒத்தணம்
கொடுக்க அடுக்கடுக்காய் இதழ்கள்
நடுவே மகரந்தமே மந்தகாசமாக
நறுமணம் வீசிய நல் வரவேற்பில்
தேனீக்களிதழ் இதழாய்த் தாவித்தாவிய
ரீங்காரமோ! தாமரையிலமர்ந்த பிரம்மன்
ஓதிய வேதம் பதிந்த இதழ்கள் துடிப்பு?
இதழ் பதிந்த வேதத்தை மொட்டு நிலை
யிலிரவெலா மோதிப் பயின்றுக் காலை
யிலே கதிரோன் தட்டி எழுப்ப விரித்த
இதழ்களில் மொய்த்த வண்டுகள் வேதம்
பயில வேதமே இனிய நாதமாய் ஒலித்த
வாணியின் வீணை இசையோ! இவ்வண்டு
களின் ரீங்காரமாயின் வேதமும் நாதமும்
கமலக்கண்ணனிடம் சங்கமமான சாம
வேதமாய் வேய் குழலொலித்த கானம்
தாமரை தன்னுள்ளடக்கிய மறையே
— நாராயணன்
xxxx
எது வழி?
உருவமும் அருவமும் அவரவர் அறி வழி
தருவதும் பெருவதும் அவரவர் தவ நெறி
நிற்பதும் நடப்பது மவன் விதித்த வழி
நிர்க்குணமும் சகுணமும் நிழலும்
நிசமும் போன்ற மொழி
சமத்துவமும் தத்துவமும்
சம நிலை மனமொழி
அரியும் அயனும் அவரவர் அறியும் வழி
— நாராயணன்
xxxx
மாலனோ மாயனோ
ஒன்றோ பலவோ
ஒன்றினின்று பலவோ
பலகூடி ஒன்றோ
படைப்பில் பலவும்
ஒன்றுமாய் நின்று
மாயையில் மக்களை
மேய்ப்பவன் மாலனே
–நாராயணன்
xxx
அறுபடும்அறம்
அவரவர் அறம் அவரவர் நிலைக்கேற்ப
அதனினு மினிதோ இருப்பதைப் பகிர்வது
வழிந்தோடும் ஏரி வாய்க்காலாய்ப் பாய்வது போலோ
வரம்புக்கு விஞ்சிய செல்வன் வாரிக் கொடுப்பது
வறுமையிலு மிருந்ததைப் பகிர்ந்தின்புறுவோனையோ
வானவரும் வையகத்தோருமென்றும் வாழ்த்துவர்
நாராயணன்
–subham—
tags- நாராயணன், கவிதைகள், எது வழி , தாமரை, அறுபடும் அறம் ,மாலனோ ,மாயனோ
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இது எங்கள் தந்தை மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெ .சந்தானம், மதுரைக் கல்லூரி பேராசிரியர் தி. சேஷாத்ரி எழுதிய துளசி இராமாயண நூலுக்கு எழுதிய முன்னுரை. ஆகஸ்ட் 15ம் தேதி அவருடைய நினைவு தினம். அன்று வெளியான கட்டுரையின் தொடர்ச்சி இது
BOOK DATED 2 OCTOBER 1954
AUTHOR – T SESHADRI, HINDI LECTURER, MADURA COLLEGE, MADURAI, MADRAS STATE (TAMIL NADU).
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
முதல் உலக யுத்தம் முடிந்த காலத்தில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக உருவானவர் ஆல்டஸ் ஹக்ஸ்லி. ALDOUS HUXLEY அவருடைய கட்டுரைகள் மிகவும் சிந்தனையைத் தூண்டுவன.
பிரேவ் நியூ ஒர்ல்ட் BRAVE NEW WORLD என்ற அவருடைய புதினம் மிகவும் வரவேற்பைப் பெற்றது.
ஹக்ஸ்லி மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அவருடைய குடும்பத்தை நாடே அறியும். ஏனெனில் ஹக்ஸ்லியின் தாத்தா தாமஸ் ஹக்ஸ்லி ஒரு உயிரியல் விஞ்ஞானி. டார்வினின் பரிணாமக் கொள்கை THEORY OF EVOLUTION உருவாக அவரும் உதவி செய்தார். ஆகையால் அவருக்கும் ஈடன் கல்லூரியிலும் ETON COLLEGE ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்க வாய்ப்பு கிடைத்தது. ஆயினும் அவருக்கு 16 வயதில் ஏற்பட்ட ஒரு கண் நோய் அவரை ஏறத்தாழ குருடராக (nearly blind) ஆக்கிவிட்டது.
முதல் உலகப் போரில் சண்டை போட வேண்டும் அல்லது விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற அவருடைய ஆசை பொய்யாய் பழங் கனவாய்ப் போயிற்று. அதிலும் ஒரு நன்மை விளைந்தது. அவர் கவிதை எழுதுவதிலும் கதை எழுதுவதிலும் கவனத்தைச் செலுத்தினார். 27 வயதிலேயே அவருடைய முதல் நாவல் க்ரோம் யெல்லோ CHROME YELLOW வெளியானது ; சமுதாயத்தின் குறைபாடுகளை எடுத்துக் காட்டும் நக்கலும் நகைச் சுவையும் மிகுந்த நாவல் அது. அடுத்து வந்த 4 நாவல்களில் ஒன்றுதான் பிரேவ் நியூ வோர்ல்ட் . இது அவருக்கு இலக்கிய உலகிலும் சமூகத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது.
எதிர்காலத்தில் உருவாகும் கட்டுப்பாடு மிக்க, தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஒரு சமுதாயத்தை வருணிக்கும் நாவல் அது. அதில் ரிக் வேத தாக்கத்தையும் காணலாம்.மக்களை எப்போதும் மகிழ்சசியில் திளைக்கச் செய்ய ‘சோமா’ SOMA என்னும் ஒரு அபூர்வ குளிகை உருவாக்கப்படுவது குறித்து அந்த நாவல் பேசுகிறது. ரிக் வேதத்தின் 10 மண்டலங்களிலும் உள்ள பல்லாயிரம் மந்திரங்களில் அற்புதமான சோமரசம் பற்றி ரிஷிகள் பாடியுள்ளனர். (ஆனால் அந்தக் குளிகை இப்போது அழிந்து போயிற்று) ‘சோமா’ வுடன் ஹக்ஸ்லி நிறுத்தவில்லை. எந்த வேலை பார்க்க என்ன மாதிரி குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டு குழந்தை பெறும் அறிவியல் முன்னேற்றம் குறித்தும் எழுதியிருக்கிறார். ஆயினும் மக்கள் ஆன்மா ( SOULLESS, EMOTIONLESS) இல்லாதவர்களாக உணர்ச்சி இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்று சொல்லி மேலை நாட்டு நாகரீகத்தின் மீது கேள்விக்குறிகளைப் போடுகிறார் . அதாவது தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்து நிற்கும் அதே நேரத்தில் மக்கள் அடிப்படை பண்புகளை இழப்பத்தைச் சித்தரிக்கும் நாவலே BRAVE NEW WORLD பிரேவ் நியூ வோர்ல்ட் / துணிச்சல் மிக்க புதிய உலகம்.
தீவு என்ற அவருடைய கடைசி நாவலில் நிறைய இந்துமத குறிப்புகள் வருகின்றன . சிவ பெருமானுடைய ஆனந்த நடனம், மோக்ஷம், முருகன் மைலேந்திர என்ற தமிழ் கதாபாத்திரம், ராஜா, ராணி, மற்றும் நிறைய சம்ஸ்க்ருத சொற்கள் இடம்பெறுகின்றன . இது மத தாக்கத்தை இதில் அதிகம் காணலாம்.
பிரான்ஸ், இதாலி ஆகிய நாடுகளில் வசித்துவிட்டு ஹக்ஸ்லி, அமெரிக்காவுக்குச் சென்று ஹாலிவுட்டில் சினிமா கதை வசனம் எழுதினார். வாழ்நாளின் இறுதிவரை கலிபோர்னியாவில் இருந்து நாவல்கள், கவிதைகள், தத்துவம் பற்றிய கட்டுரைகள் , அரசியல் விஷயங்கள் ஆகியவற்றை எழுதி வந்தார் . ரிக் வேத சோமா குளிகை பற்றிய அவருடைய சிந்தனை மனதை மாற்றக்கூடிய மருந்துகளை (MIND ALTERIG DRUGS) உருவாக்கும் விஷயம் பற்றியும் எழுதத் தூண்டியது. இந்தத் துறையில் தன்னுடைய ஆராய்ச்சிகள் பற்றியும் இரண்டு புஸ்தகங்களை எழுதினார்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 16-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)
மந்த்ராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். மந்த்ராலயத்தில் இன்றும் ஜீவ சமாதியில் இருந்து கொண்டு அனைவருக்கும் அருள் பாலிக்கும் பெரும் மஹானான ஸ்ரீ ராகவேந்திரரைப் பற்றி இன்று காணப் போகிறோம். லக்ஷக்கணக்கான மக்களை இன்று வரை மந்த்ராலயத்திற்கு ஈர்த்து அருள் பாலித்து வரும் இவரது சரிதம் அற்புதமான ஒன்று.
கி.பி.1595ஆம் ஆண்டு பால்குண மாதம், சுக்லபக்ஷ, சப்தமி திதியில் தமிழகத்தில் சிதம்பரத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவனகிரியில் மத்வ சம்ப்ரதாய பிராமண குலத்தில் கௌதம கோத்திரத்தில் திம்மண்ண பட்டர் – கோபிகாம்பாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக அவதரித்தார் ஸ்ரீ ராகவேந்திரர். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன். உரிய வயதில் குருகுலத்தில் சேர்ந்து அனைத்துக் கலைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றார். குடும்பமோ வறுமை சூழ்நிலையில் இருந்தது. செய்வதறியாது திகைத்த பட்டர் கும்பகோணத்திற்கு குடும்பத்துடன் சென்றார். அங்கே வித்யாமடத்தின் பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சுதீந்திரர் அந்தக் குடும்பத்தை அன்போடு வரவேற்றார். வேங்கடநாதனைப் பார்த்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போயிற்று. நமது மடத்தின் அடுத்த பீடாதிபதி வேங்கடநாதனே என்று அவர் மனதில் தீர்மானம் உருவாயிற்று. ஸ்ரீ மடத்தில் மூலராமருக்கு தினமும் சுதீந்திரர் செய்யும் பூஜையை லயிப்புடன் கவனித்து வந்தார் வேங்கடநாதன். உரிய வயதிலே சரஸ்வதி என்ற மங்கையை அவருக்கு மணம் முடித்து வைத்தனர் பெற்றோர். வறுமை நீங்காத நிலையில் தன் மனைவியுடன் ஸ்ரீ மடத்தில் அடைக்கலம் புகுந்தார் வேங்கடநாதன்.
வேங்கடநாதனின் பக்தியையும் இறைத்தன்மையையும், அவர் பாடங்களை கிரகித்து உள்வாங்கிக் கொண்ட பான்மையையும் அவரது மேதைத் தன்மையையும் கவனித்து வந்த சுதீந்திரர் அவரின் மீது தனிப்பட்ட அன்பு கொண்டார். இதனால் சுதீந்திரரரிடம் அவருடன் பயின்று வந்த மற்ற சிஷ்யர்கள் அவர் மீது பொறாமை கொண்டனர். ஒரு நாள் மத்வாசாரியரின் பிரம்ம சூத்ரத்தின் பாஷ்யத்தைப் பற்றி சுதீந்திரர் விளக்க ஆரம்பித்தார். இந்த பாஷ்யத்தின் விளக்க உரையாக ஸ்ரீ ஜயதீர்த்தர் என்பவர் நியாயசுதா என்ற நூலை இயற்றினார். ஸ்ரீ ஜயதீர்த்தரின் நியாயசுதாவின் பெருமையை விளக்க ஆரம்பித்த சுதீந்திரர் திடீரென்று தனது உரையை நிறுத்தினார். அவரால் மேலே தொடரமுடியவில்லை. ‘இன்றைய பாடத்தை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்’ என்று கூறி அருளினார் சுதீந்திரர். அன்றிரவு சுதீந்திரர் தன்னால் எளிய விதத்தில் விளக்கவுரையை ஆற்ற முடியவில்லையே என்று எண்ணி வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். சிந்தனையில் ஆழ்ந்தவாறே வெளியில் சற்று சென்று வரலாம் என்று எண்ணிய அவர் சிஷ்யர்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார். அங்கு அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க வேங்கடநாதனை மட்டும் காணோம். அவர் தன் பார்வையை எல்லா திசைகளிலும் செலுத்த அங்கு தூரத்தில் வேங்கடநாதன் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததையும் அவர் அருகில் ஓலைச்சுவடிகள் பல இருந்ததையும் அவர் கண்டார். மெதுவாக அந்த ஓலைச் சுவடிகளை எடுத்துப் பார்த்தவர்,. திகைத்துப் போனார். அன்று அவரால் விளக்க உரை செய்ய முடியாமல் இருந்த நியாய சுதா ஸ்லோகங்களுக்கான விளக்கத்தை மிக அருமையாக எளிமையாக எழுதி இருந்தார் வேங்கடநாதர். அந்த சுவடிகளை எடுத்துக் கொண்டு தன் இருப்பிடம் மீண்டார் சுதீந்திரர்.மறுநாள் காலையில் வகுப்பு ஆரம்பமானது. அனைவரும் குழுமிய போது சுதீந்திரர் வேங்கடநாதன் எழுதிய ஓலைச் சுவடிகளைக் காண்பித்து தன்னால் விளக்க முடியாமல் இருந்த ஸ்லோகங்களுக்கு வேங்கடநாதன் எழுதிய உரையை விவரித்தார். அனைத்து சக மாணவர்களும் அதிசயித்துப் போயினர். இப்படிப்பட்ட பரிமள சுகந்தம் வீசும் இந்த உரைக்கு ‘ஸுதா பரிமளம்’ என்ற பெயரைச் சூட்டுகிறேன். இதை இயற்றிய வேங்கடநாதனுக்கு ‘பரிமளாச்சாரியார்’ என்ற பட்டத்தையும் வழங்குகிறேன் என்றார். அனைவருக்கும் வேங்கடநாதனின் பெருமை புரிய வந்தது.
ஒரு முறை கும்பகோணத்தில் நடந்த ஒரு விருந்திற்கு வேங்கடநாதர் அழைக்கப்பட்டார். விருந்தை அளித்தவருக்கு அவரது பெருமை தெரியாது. அவரை சந்தனம் அரைத்துத் தருமாறு கூறினார். சந்தனம் அரைக்கப்பட்ட பின் அனைவருக்கும் அது தரப்பட்டது. ஆனால் அதை பூசிக் கொண்ட விருந்தினர்கள் குளிர்ச்சியை அனுபவிப்பதற்கு பதில் ‘ஆ, எரிகிறதே எரிகிறதே’ என்று உடல் எரிச்சலால் அலறினர். இதனால் ஆச்சரியப்பட்ட விருந்தை அளித்தவர், வேங்கடநாதரை அழைத்துக் காரணம் கேட்க தான் சந்தனத்தை அரைத்த போது அக்னி சூத்ரத்தை ஜபித்ததாகவும் அதன் பயனாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார். உடனே வருண மந்திரத்தைக் கூறியவாறே சந்தனத்தை அரைத்து அதைத் தந்து அனைவரையும் பூசிக் கொள்ளச் சொன்னார். இப்போது அது மிக்க குளிர்ச்சியைத் தந்தது. விருந்தினர்கள் மகிழ்ந்தனர். அத்துடன் வேங்கடநாதரின் புகழ் எங்கும் பரவியது.
வேங்கடநாதரை மடத்தின் பொறுப்பை ஏற்குமாறு சுதீந்திரர் கூறியருளினார். ஆனால் அவரோ குடும்பப் பற்றால் அதை ஏற்க மறுத்தார். இதனால் சுதீந்திரர் ஸ்ரீ யாதவேந்திரர் என்பவரை பூஜை செய்ய நியமித்து தனது இளவலாக நியமித்தார். காலம் சென்றது. ஒருநாள் சுதீந்திரருக்கு உடல் நலம் குன்றியது. ஸ்ரீ யாதவேந்திரரும் அருகில் இல்லை.
அடடா, காலம் காலமாகச் செய்து வரும் மூலராமரின் பூஜைக்குத் தடை வந்து விடுமோ என்று கவலைப்பட்டார் சுதீந்திரர். அன்று இரவில் அவர் கனவில் மூலராமர் தோன்றி, “உனக்குப் பின் அர்ச்சனை செய்ய தகுதியானவர் வேங்கடநாதனே” என்று கூறியருளினார். இதனால் மகிழ்ந்த சுதீந்திரர் மறுநாள் வேங்கடநாதனிடம் தன் கனவில் மூலநாதர் அருளிச் செய்த உரையைக் கூறி பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
வேங்கடநாதர் சற்றுத் தயங்கினார். அன்றே சரஸ்வதி தேவி அவரது கனவில் தோன்றி அவர் யார் என்பதை விளக்கியருளினாள். பிரம்ம லோகத்தில் பாகவத சேவையில் ஈடுபட்டிருந்த சங்குகர்ணனே உலக நன்மையைக் கருதி ஒரு சாபத்தினால் கிருதயுகத்தில் பிரகலாதனாகப் பிறந்து பக்தியின் பெருமையை நிலை நாட்டினார். அடுத்து துவாபர யுகத்தில் பாஹலீக மன்னனாகப் பிறந்து விஷ்ணு பக்தனாக இருந்து பக்தியின் பெருமையை உலகறியச் செய்தார். அடுத்து கலியுகத்தில் ஸ்ரீ வியாசராஜராக அவதரித்து கிருஷ்ணதேவராயரின் அரச சபையை அலங்கரித்தார். இப்போது மக்களின் துயரம் நீங்க வேங்கடநாதனாகப் பக்தியின் பெருமையை அவர் நிலை நாட்டப் பிறந்துள்ளார்.
தான் யார் என்பதை அறிந்த வேங்கடநாதர் தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்காக சுதீந்திரர் கூறியதற்கு உடனே ஒப்புக் கொண்டார். தன் மகனான லக்ஷ்மிநாராயணனுக்குச் செய்ய வேண்டிய உபநயனத்தை முடித்து விட்டு வருவதாக கூறி தனது கடமையை முடித்தார். மீண்டும் மடத்திற்கு வந்த அவருக்கு தஞ்சாவூரில் 1621ஆம் ஆண்டு பால்குன மாதம் சுக்கில பக்ஷம் துவிதியை திதி அன்று சுதீந்திரர் சந்யாசம் அளித்து ராகவேந்திர தீர்த்தர் என்ற திருநாமத்தையும் சூட்டினார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நோபல் பரிசு வென்றவர். பிரெஞ்ச் மொழி எழுத்தாளர். நாவல்களையும், நாடகங்களையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர். காந்திஜியின் நண்பர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சரைப் போற்றி புஸ்தகம் எழுதியவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோமைன் ரோலண்ட் ROMAIN ROLLAND (பிரெஞ்ச் மொழியில் இதை உச்சரிக்கும் போது ரொமான் ரோலான் என்ற ஒலியே வரும்); பிரான்ஸ் நாட்டின் அறிஞர்; ரஷ்யாவின் நண்பர் .
1915ம் ஆண்டில் ரொமான் லோனாவுக்கு / ரோமைன் ரோலண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இவர் பலருடைய வாழ்க்கைச் சரிதங்களையும் இயற்றினார். அவருடைய நாவல்களின் தனிச் சிறப்பு என்னவென்றால் கதாநாயகனை பிறப்பு முதல் இறப்பு வரை — தொட்டில் முதல் சுடுகாடு வரை – காட்டுவதாகும்
பிரான்சில், க்ளமெசி CLAMECY என்ற ஊரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். பாரிசிலும் ரோம் நகரிலும் பயின்ற அவருக்கு 1895ல் டாக்டர் பட்டம் Ph.D. கிடைத்தது. பாரிஸ் நகரில் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் ECOLE NORMALE 29 வயதிலேயே கலைகளின் வரலாறு கற்பிக்கும் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் புகழ்பெற்ற சார்போன் SORBONNE பல்கலைக் கழகத்தில் வேலை கிடைத்தது.
வேலையில் இருக்கும்போதே நாடகங்களை எழுதத் துவங்கினார் . பிரெஞ்சுப் புரட்சி பற்றி அவரெழுதிய நாடகங்கள் 1930ம் ஆண்டுகளில் புகழ்க் கொடி நாட்டின.
ரோமைன் ரோலண்ட் எழுதிய புகழ்பெற்ற புஸ்தகம் பல தொகுதிகளாக வெளிவந்த ஷான் கிறிஸ்டோப் JEAN CHRISTOPHE ஆகும். அவர் ஷான் JEAN என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கினார். அந்த கதாபாத்திரம் ஒரு இசை மேதை மட்டும் அல்ல; அறநெறி வாழ்க்கை வாழும் ஒரு புனிதரும் கூட. அந்த நாவலுக்கு வரவேற்பும் எதிர்தரப்பு விமர்சனங்களும் வந்தன . அதே நேரத்தில் அவர் புகழ்பெற்ற இசை உலக மேதை பீதோவன் BEETHOVEN போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதி பதிப்பித்ததார்.
‘புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்’ என்ற கருத்துப்பட ABOVE THE BATTLE ‘அபவ் தி பேட்டில்’ என்ற நூலை எழுதினார். இதற்கு முதல் உலகப் போர் காலத்தில் நல்ல ஆதரவு கிடைத்தது. ரோமைன் ரோலண்டை சமாதான தூதுவராக அனைவரும் கண்டனர். ஆனால் சொந்த நாடான பிரான்சில் அது எதிர்ப்புப் புயலையும் தோற்றுவித்தது.
பின்னர் மீண்டும் பல தொகுதிகளாக வெளிவரும் THE ENCHANTED SOUL ‘தி என்சான்டட் சோல்’ என்ற நாவலை எழுதினார். இது கம்யூனிச சித்ததந்தத்தின் மீது அதிக ஆர்வம்/ கவர்ச்சி ஏற்படுவது பற்றிய நாவல். கதையில் ஒரு கதாநாயகி சுதந்திர சிந்தனை படைத்த பெண்மணி. அவருக்கு சொத்து உடைமைகளை வைத்துக் கொள்வதன் மீது வெறுப்பு வருகிறது.
இதற்குப் பின்னர் அவர் ஹிட்லர் தலைமையில் உருவான பாசிஸ கொள்கைகளை எதிர்த்தார். இரண்டாவது யுத்த காலத்தில் பாசிசத்தை எதிர்த்து எழுதினார். இவ்வாறு சமாதான ஆதரவு, பாசிஸ எதிர்ப்பு, ஆன்மீகத்துக்கு ஆதரவு என்ற பலவகை முகங்கள் அவருக்கு இருந்தன. இந்து மதத்தின் பேரில் பெரு மதிப்பு கொண்டிருந்த அவர் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் , அவருடைய சீடரான சுவாமி விவேகானந்தர் மற்றும் மஹாத்மா காந்தி பற்றி நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார். இதனால் அவருடைய பெயரும் புகழும் இந்தியாவிலும் பரவியது .
பிறந்த தேதி – ஜனவரி 29, 1866
இறந்த தேதி–டிசம்பர் 30, 1944
வாழ்ந்த ஆண்டுகள் – 78
எழுதிய நூல்கள் (நாவல் , நாடகம், வாழ்க்கை வரலாறு)
1900- DANTON
1902 – THE FORTEENTH OF JULY
1902 – LIFE OF BEETHOVEN
1904 – LIFE OF MICHELANGELO
1904- 1912 – JEAN CHRISTOPHE ; 10 VOLS
1910- HANDEL
1911 – LIFE OF TOLSTOY
1914-1919 – JOURNAL OF THE WAR YEARS
1915- ABOVE THE BATTLE
1922- 1933 – THE ENCHANTED SOUL; 6 VOLS
1924 – MAHATMA GANDHI
1929 – LIFE OF RAMAKRISHNA; ESSAYS
1930- LIFE OF VIVEKANANDA; ESSAYS
–SUBHAM–
tags -இந்து, பிரெஞ்சு, நாவல் ஆசிரியர் , ரோமைன் ரோலண்ட் , Romain Rolland,
விஷ்ணுவைப் போல சங்க, சக்ர, கதைகளைத் தரிப்பதாலும், அவருக்கு ஜனனியாக இருப்பதாலும், அவரைப் போலவே எதிரிகளை சம்ஹாரம் செய்வதாலும் வைஷ்ணவீ – விஷ்ணுவைச் சேர்ந்தவள் – என்ற பெயர் அம்பிகைக்கு ஏற்பட்டிருக்கிறது!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சக்தி தலங்களுள் தலையாய ஒன்றான வைஷ்ணவ தேவி திருத்தலமாகும். இந்தத் தலமானது திரிகூட மலையில் 5200 அடி உயரத்தில் கட்ரா நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஜம்மு நகரிலிருந்து 42 கிலோமீட்டரில் உள்ளது இது. சுமார் 14 கிலோமீட்டர் மலையில் நடைப்பயணமாக இயற்கைச் சூழலில் சென்று ஆலயத்தை அடையலாம். மலை மீது நடக்க முடியாதவர்கள் குதிரையை அமர்த்திக் கொண்டு செல்லலாம்.திரிகூட மலையைப் பற்றி ரிக்வேதம் கூறுவதால் இது மிகப் பழங்காலத்திலிருந்தே இருந்து வந்த தலம் என்பதை அறியலாம்.
மலையின் உச்சியில் உள்ள குகைக் கோவிலில் முப்பெரும் தேவிகளான லக்ஷ்மி, சரஸ்வதி, காளி ஆகியோர் குடி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர். குகை 30 மீட்டர் நீளத்தையும் ஒன்றரை மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது. குகையின் முடிவில் மூன்று பாறைகள் ஸ்வயம்புவாகத் தோன்றி சூலத்தின் மூன்று முனைகள் போல அமைந்துள்ளன. இப்பாறைகளே தேவியரின் அருவ வடிவம்; இவையே மாதா ராணியாக வழிபடப்பட்டு வருகிறது.
வைஷ்ணவி கோவிலைப் பற்றிய புராதன வரலாறு உண்டு. திரேதா யுகத்தில் பேய்களின் கொடுங்கோன்மை உச்சகட்டத்தை அடைந்த சமயம் லக்ஷ்மி, சரஸ்வதி, காளி ஆகிய முப்பெரும் தேவியரும் ஒளிப்பிழம்பான வைஷ்ணவி தேவியை திரிகூட உச்சி மலையில் உருவாக்கினர். பூமியை வாட்டிய அனைத்துப் பேய்களையும் வைஷ்ணவி தேவி மாய்த்தார். பின்னர் அவர் பூமியில் இருக்கத் திருவுளம் கொண்டு பாரதத்தின் தென்பாகத்தில் வாழ்ந்த ரத்னாகர் சாகர் – சம்ரிதி தேவி ஆகிய தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். ரத்னாகர் அவருக்கு வைஷ்ணவி என்ற திருநாமத்தைச் சூட்டினார். ஒன்பது வயதில் அவர் ராமரை வழிபடலானார். அவர் முன் தோன்றிய ராமர் இந்த அவதாரத்தில் ஏக பத்தினி விரதனாக இருக்கும் தான், அடுத்து வரும் கல்கி அவதாரத்தில் அவரை மணப்பதாகக் கூறி அருளினார்.
வைஷ்ணவி தேவி ராமரின் வெற்றிக்காக திரிகூட மலையில் உள்ள குகையில் நவராத்திரி ஒன்பது நாட்களும் தவம் மேற்கொண்டார். ராமர் வெற்றி பெற்றார். அதை நினைவு கூரும் வண்ணம் இந்த நாட்களில் ராமாயணம் படிக்கும் வழக்கம் இன்றும் நீடிக்கிறது. அவர் திரிகுடா என அழைக்கப் படலானார்.
இன்னொரு வரலாறும் உண்டு. கட்ராவிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹன்சாலி என்ற கிராமத்தில் ஸ்ரீதரர் என்றொரு பக்தர் வசித்து வந்தார். அவர் முன் வைஷ்ணவி தேவி மிக்க அழகு வாய்ந்த பெண்ணாகத் தோன்றினார். அவர் ஸ்ரீதரிடம் பக்தர்களுக்கு விருந்து படைக்கும் பண்டாரா என்ற ஒரு விருந்தை அளிக்குமாறு வேண்டிக் கொண்டார். அதற்கு இணங்கிய ஸ்ரீதர் அனைவரையும் விருந்துக்கு அழைத்தார். அருகிலுள்ள இடங்களில் வசிக்கும் மக்களையும் விருந்துக்கு அழைக்கப் புறப்பட்டார். ‘பைரவ் நாத்’ என்ற பெயர் கொண்ட சுயநலம் வாய்ந்த அரக்கனையும் அவர் விருந்திற்கு அழைத்தார். பைரவ்நாத் ஸ்ரீதரிடம் விருந்து நன்றாக நடக்குமா என்று கேட்க ஸ்ரீதர் மிகுந்த கவலையுற்றார். ஆனால் அந்தப் பெண் மீண்டும் தோன்றி விருந்து அழகுற நடக்கும் என்றாள். அப்படியே பண்டாரா சிறப்பாக நடந்தது. வியப்புற்ற பைரவ்நாத் இதற்குக் காரணமாக அமைந்த அந்தப் பெண்ணைத் தேடி திரிகூட மலைகளில் ஒன்பது மாதம் அலைந்தார். ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தப் பெண் அங்கிருந்து செல்லும் முன்பாக ஒரு அம்பை பூமியில் நோக்கிச் செலுத்தினாள். அங்கு பூமியிலிருந்து ஒரு நீரூற்று பீறிட்டுப் பொங்கியது. அது ஆறாகப் பெருகியது. அதுவே பாணகங்கை ஆறாகும். அதில் குளிப்போர் பாவங்கள் அனைத்தும் போகும்; தேவியின் திருவருளும் கூடும்.
பாணகங்கை ஆற்றின் கரையோரம் தேவியின் திருவடித் தடங்களை இன்றும் யாரும் காணலாம். ஆகவே இந்த ஆற்றின் கரைகளை சரண் பாதுகா என மக்கள் அழைக்கின்றனர்.
பின்னர் வைஷ்ணவி தேவி அத்கவரி என்ற இடத்தில் கர்ப்ஜூன் என்ற குகையில் இருந்து பல மாதங்கள் தவம் புரிந்தார். பைரவர் ஒருவாறாக தேவியைக் கண்டுபிடித்து அவரைக் கொலை செய்ய முயன்ற போது தேவியானவள் உக்கிரமான காளி ரூபம் எடுத்து பைரவரது தலையைத் துண்டித்தார். தேவி இப்படி காளியாக உருமாறியது தர்பார் என்ற இடத்திலுள்ள குகையின் வாயிலின் அருகே நடந்தது. தேவி பைரவரின் தலையைத் துண்டிக்கவே அந்த தலை விழுந்த இடம் பைரவ் காடி என்று அழைக்கப்படுகிறது. இது புனிதமான அந்தக் குகையிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தனது மரணத் தறுவாயில் பைரவர், தேவியிடம் தன்னை மன்னித்து அருள் பாலிக்குமாறு கூறவே, அன்னையும் அவருக்கு முக்தி அளித்தார்.
தன்னை தரிசிக்க அங்கு வரும் அனைவரும் தனது தரிசினத்திற்குப் பின்னர் பைரவரின் கோவிலுக்கும் சென்று தரிசித்தாலேயே யாத்திரை பூரணமாகும் என்னும் வரத்தையும் அளித்தார். தேவி தன்னை மூன்று சூல வடிவு கொண்ட பாறைகளாக மாற்றிக் கொண்டு அங்கேயே நீண்ட தவத்தில் ஆழ்ந்தார். தேவியைத் தேடி வந்த ஸ்ரீதர் இறுதியில் குகையை அடைந்தார். தேவியின் திரிசூலத்தைக் கண்டு அதை பல்வேறு வழிகளில் வழிபட ஆரம்பித்தார். மனம் குளிர்ந்த தேவி அவருக்குத் தரிசனம் தந்தார். அவரை ஆசீர்வதித்ததோடு தன்னை தரிசிக்க வரும் லக்ஷக்கணக்கான பக்தர்களையும் இன்றும் அவர் அருள் பாலித்துக் காத்து வருகிறார்.
மக்கள் லக்ஷக்கணக்கில் தரிசனத்திற்காக வருவதால் முன் அனுமதிச் சீட்டு பெற்றுக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 50000 பக்தர்களே செல்லலாம் என்ற கட்டுப்பாடு இப்போது விதிக்கப்பட்டிருக்கிறது. வைஷ்ணவி தேவி பற்றி தொலைக்காட்சித் தொடர்களும் பல திரைப்படங்களும் வெளி வந்துள்ளன. காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வைஷ்ணவி தேவிஅனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். லலிதா சஹஸ்ரநாமத்தில் 892வது நாமமாக அமைவது இது: ஓம் வைஷ்ணவீ நமஹா, ஓம்!
நன்றி வணக்கம்!
**
Tags — ஆலயம் அறிவோம், வைஷ்ணவ தேவி, திருத்தலம், கோவில்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யோக வாசிஷ்ட கதைகள்
சித்த ஜெயம் ஒன்றே மாயையிலிருந்து விடுபட வழி : காதியின் கதை!
ச.நாகராஜன்
யோகவாசிஷ்டத்தில் உபாஸன ப்ரகரணத்தில் வரும் கதை இது.
மஹரிஷி வசிஷ்டர் அன்புடன் ராமரை நோக்கி, “சித்த ஜெயமே அதாவது மனதை ஜெயிப்பதே மாயையிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்” என்று கூறி விட்டு அதை விளக்குவதற்காக காதியின் கதையைக் கூற ஆரம்பித்தார்.
காதி பல கலைகளும் அறிந்த நன்கு படித்த ஒரு மனிதன். இளம் வயதிலிருந்தே காதிக்கு வாழ்வின் இன்பங்கள் எல்லாம் பிடிக்கவில்லை. வளர்ந்த நிலையில் தவம் புரிய ஆசைப்பட்ட அவன் விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற விரும்பினான். ஆகவே தன் மனைவியையும் மக்களையும் துறந்து தவம் புரிய கானகம் நோக்கிச் சென்றான். கடுமையான தவம் புரியவே அவன் முன் விஷ்ணு தோன்றினார். விஷ்ணுவிடம் காதி, மாயை எப்படி உதிக்கிறது என்றும் மாயை என்றால் என்ன என்று அறிய ஆசைப்படுவதாகவும் கூறினான். அப்படியே ஆகட்டும் என்று அவன் ஆசை நிறைவேற விஷ்ணு ஆசீர்வதித்தார்.
ஒரு நாள் காதி ஏரி ஒன்றில் குளிக்கச் சென்றான். குளிக்கும் போது தான் இறந்து விட்டதாகவும் தன் உடலை எரித்து விட்டதாகவும் அவன் உணர்ந்தான். சண்டாள குலத்தில் ஒரு குடும்பத்தில் அவன் பிறந்ததாகவும் அதே குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவன் மணந்து கொண்டதாகவும் அவனுக்குத் தோன்றியது.
பின்னர் ஒரு நாள் பயங்கரமான மழை ஒன்று பெய்ய அதில் அவனது குடும்பம் முற்றும் அழிந்தது. மிகுந்த துக்கத்துடன் அவன் காட்டில் அலையலானான்.அலைந்தவாறே அவன் ஒரு நகரத்தை அடைந்தான். அங்கு ஒரு பெரிய ஊர்வலம் யானை ஒன்று முன்னே செல்ல வந்து கொண்டிருந்தது. அந்த யானை அவன் முன்னே வந்து நின்றது. அவனைத் தும்பிக்கையால் தூக்கி தன் முதுகின் மீது அமர்த்தியது. அந்த ஊர்வலத்தில் வந்தவர்கள் அந்த நகரத்தைச் சேர்ந்த மக்கள். யானையோ பட்டத்து யானை. அது அந்த ராஜ்யத்திற்கான அரசனைத் தேர்வு செய்ய வந்தது. அவன் நேராக அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு முடி சூட்டப்பட்டது. அந்த ராஜ்யத்தை அவன் திறம்பட ஆட்சி புரியலானான்.
ஒரு நாள் தனியாக அவன் அருகில் இருந்த ஒரு காட்டிற்குச் சென்றான். அங்கு பழங்குடியினர் வசிக்கும் ஒரு கிராமத்தை அவன் கண்டான். அந்த பழங்குடி மக்கள் அவனை அன்புடன் வரவேற்றனர். தங்களில் ஒருவன் அரசனாக்கப்பட்டதால் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நகரத்து மக்களுக்கு தங்களது அரசன் ஒரு தாழ்ந்த குலத்திலிருந்து வந்தவன் என்பது சில நாட்களில் தெரிய வந்தது. அவனைத் தங்கள் அரசனாக ஏற்றுக் கொண்ட தங்கள் முட்டாள்தனத்தை நினைத்து அவர்கள் வேதனைப் பட ஆரம்பித்தனர். அவர்கள் அவனை ஒரு தாழ்ந்த குலத்தவனைப் போலவே எண்ணலாயினர்; நடத்த ஆரம்பித்தனர். அவனால் தங்களுக்கு தீட்டு ஏற்பட்டு விட்டதாக அவர்கள் கருத ஆரம்பித்தனர். ஆகவே தமக்குத் தாமே தீயிட்டுக்கொண்டு தீக்குளிக்க அவர்கள் தீர்மானித்தனர். இதையெல்லாம் கண்ட காதி மிகுந்த துக்கம் அடைந்தான். அந்தத் தீயில் தானே விழுந்து உயிரை விடத் தீர்மானித்தான். அவன் உடல் எரிந்து கொண்டிருக்கும் போது திடீரென்று தனது கனவு நிலையிலிருந்து விழித்த காதி தான் ஏரியில் குளித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.
ஆக இப்படி காதி ஒரு சில கணங்களிலேயே இறப்பு, பிறப்பு, திருமணம், குடும்பம் சர்வநாசம் அடைந்தது, அரசனாக முடி சூடியது, திருப்பி வெறுத்து ஒதுக்கப்பட்டது, மறுபடி மரணம் அடைந்தது ஆகிய அனைத்தையும் அனுபவங்களாக அனுபவித்தான்.
தான் யார் என்றும் எப்படி இப்படிப் பல்வேறு அனுபவங்களைக் குளித்துக் கொண்டிருக்கும் ஒரு சில கணங்களிலேயே தான் அடைய முடிந்தது என்றும் காதி எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டான்.
ஒரு நாள் காதியின் ஆசிரமத்திற்கு ஒருவர் விஜயம் செய்தார். அவர், தாழ்ந்த குலத்தவன் ஆட்சி புரியும் ஒரு ராஜ்யத்திற்குத் தான் சென்றதாகவும், அந்த ராஜ்யத்தின் அரசன் தான் தாழ்ந்த குலத்தவன் என்று அறியப்பட்டதால், தன்னைத் தானே எரியும் நெருப்பில் விழுந்து உயிரை விட்டு விட்டதாகவும் கூறினார். அத்தோடு அவர் அப்படிப்பட்ட ஒரு தேசத்தில் தான் சிறிது காலம் வசித்ததற்கு பிராயசித்தம் செய்ய பிரயாகைக்குச் சென்றதாகவும் கூறினார்.
தனது வாழ்க்கை சம்பவங்களோடு ஒத்திருக்கும் அவரது இப்படிப்பட்ட தகவலைக் கேட்ட காதி மிகுந்த ஆச்சரியத்திற்குள்ளானான். அவர் கூறியது உண்மைதானா என்பதை அறிய அவனுக்கு ஆசை வந்தது. அவன் அந்த ராஜ்யத்திற்குச் சென்று அந்த மக்கள் கூறியதைக் கேட்டான். தான் கேட்ட விவரங்கள் அப்படியே தனது அனுபவங்களுடன் ஒத்திருந்ததைக் கேட்ட காதி பிரமித்துப் போனான்.
அவன் விஷ்ணு தனக்குக் கொடுத்த வரத்தை இப்போது எண்ணிப் பார்த்தான்.இது தான் மாயை, மனதின் சக்தி என்று இப்போது அவன் புரிந்து கொண்டான். இருந்த போதிலும் ஒரு அற்ப கனவானது எப்படி நிஜமாக இருக்க முடியும் என்ற ஆச்சரியம் அவ்னை விட்டு அகலவில்லை. மறுபடியும் அவன் தவம் புரிய ஆரம்பித்தான்.
விஷ்ணு அவன் முன் தோன்றினார். அவன் கனவில் கண்ட அனைத்தும் மற்றும் நிஜமாகப் பார்த்த அனைத்தும் ஆக இந்த இரண்டுமே உண்மை இல்லை என்றார். அவை இரண்டுமே அவன் மனதில் உதித்தவையே என்றார் விஷ்ணு.
காதிக்கு விஷ்ணு கூறிய விளக்கத்தால் திருப்தி ஏற்படவில்லை. அவன் உடனே பழங்குடியினர் வசிக்கும் அந்த கிராமத்திற்குச் சென்றான். அவர்கள் கூறியது அனைத்தும் தான் அனுபவித்ததை ஒத்திருந்ததை மீண்டும் ஒரு முறை அவன் கண்டான்.
மறுபடியும் தவம் புரிய ஆரம்பித்தான். விஷ்ணு அவன் முன் தோன்றினார். காதி மீண்டும் ஒரு முறை அந்தக் கதையை சரி பார்த்ததாக அவர் கூறினார். ஒரு விஷயத்தைப் பலரும் கூறி விட்டதால் அது உண்மை என்றில்லை என்று கூறிய விஷ்ணு, தன்னை ஒரு தாழ்ந்த குலத்தவன் என்று அவன் எண்ணி வருகின்ற வரையில் அவனால் அந்த மாயையிலிருந்து விடுபடமுடியாது என்றார். தனது வாஸனையால் அவன் வெல்லப்பட்டான் என்றார் விஷ்ணு. பிறகு அவர் மனத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளைச் செய்யுமாறு அவனுக்கு அறிவுறுத்தினார். காதியும் தனது மனதை அடக்கும் பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தான். நாளடைவில் தாழ்ந்த குலம் என்ற மாயை உணர்வு அவனை விட்டு நீங்கியது. இறுதியில் அவன் ஜீவன் முக்தனானான்.
இந்தக் கதை எவ்வளவு தவம் செய்து மனதின் சக்தியை ஒருவன் பெற்றாலும் கூட மாயையிலிருந்து எப்படி அவனால் விடுபட முடியவில்லை என்பதை உணர்த்துகிறது. மனதைப் பற்றியும் ஆத்மனைப் பற்றியும் விசாரம் செய்வது என்றே ஒரே வழி மட்டுமே உதவும் என்பதையும் காதியின் கதை நமக்கு உணர்த்துகிறது. ஆத்மஞானத்தை அடைய வேண்டும் என்று ஒருவன் தீர்மானித்து விட்டான் என்றால், உடனேயே அதற்கான தீவிரமான முயற்சியை அவன் மேற்கொண்டால் மட்டுமே அவன் அதை அடைவான்.
வசிஷ்டரின் இந்தக் கதையால் ராமர் பேருண்மையை அறிந்து கொண்டார்; நாமும் தான்!
***
INDEX
யோக வாஷிடம், உபாஸன ப்ரகரணம்
சித்த ஜெயமே மாயையிலிருந்து விடுபட வழி
வசிஷ்டர் ராமனுக்குக் கூறும் காதியின் கதை
காதியின் தவம், விஷ்ணு அவன் முன் தோன்றி மாயை பற்றி விளக்குதல்