Written by London Swaminathan
Date: 5 August 2017
Time uploaded in London- 13-14
Post No. 4131
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
சங்கரன் கோவில் கொடுங்கலூர் பகவதி கோவில், மதுரை மாரியம்மன் கோவில் முதலிய நூற்றுக் கணக்கான கோவில்களில் பக்தர்கள் ஒரு விநோத காணிக்கை செலுத்துவதுண்டு. உடல் உறுப்புகளில் ஏதாவது நோய் வந்தால் அது குணமாக அல்லது குணம் அடைந்ததற்கு நன்றி தெரிவிக்க அந்த உறுப்பின் உருவத்தை வாங்கி கடவுளுக்குப் படைப்பர். பொதுவாக வெள்ளியிலோ பித்தளையிலோ கண், காது, கால், கை உருவங்கள் இருக்கும். இதே போல குழந்தை பிறக்காதவர்கள் ஒரு குழந்தை உருவத்துடன் தொட்டில் வாங்கி மரத்தில் கட்டும் வழக்கமும் உண்டு. இந்த வழக்கம் சுமேரிய நாகரீகத்திலும் இருந்தது பற்றி எனது ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தேன்.
ஜூலை மாதக் கடைசியில் (2017) குடும்பத்துடன் ஏதென்ஸ் நகரத்துக்குச் சென்று இருந்தேன். உலகப் புகழ்பெற்ற பார்த்தினான் (Parthenon) கட்டிடம் (அதீனா தேவியின் கோவில்) இருக்கும் குன்றுக்கு கீழே புகழ்பெற்ற ஆக்ரோபோலிஸ் மியூசியம் (Acropolis Museum) உள்ளது. அங்கு அரிய கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முதல் மாடிவரையுள்ள முக்கியப் பொருட்களைப் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று தடுத்துவிட்டனர். ஆகையால் மியூசியம் கடைக்குச் சென்று பட அட்டைகளையும் (Picture Cards) பிரிட்ஜில் (Fridge) ஒட்டுவதற்கான மாக்னெட்/ காந்தங்களையும் வாங்கினேன். எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டின் நினைவாக அந்த நாட்டின் சின்னம் உள்ள பிரிட்ஜ் காந்தம் (Fridge Magnet) வாங்குவது என் வழக்கம். போட்டோ எடுக்கக் கூடாது என்று தடுத்ததால் பட அட்டைகளையும் வாங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதுவும் நல்லதாகப் போயிற்று.
‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல’ நான் தேடிய ஆராய்ச்சி விஷயங்கள் கிடைத்தன. இந்துக்களைப் போலவே அவர்களும் ஒரு தேவதைக்கு செலுத்திய காணிக்கையின் படம் கிடைத்தது. அதில் கல்யாணம் ஆவதற்காக கன்னிப் பெண்கள் (கன்யா ஸ்த்ரீகள்) செலுத்திய நூற்கும் (Spinning Whorls) சுழல்கள் இருந்தன. நிம்ப் (Nymphe) என்னும் தேவிக்கு செலுத்தப்பட்ட காணிக்கை அவை.
தமிழர்கள் அணங்கு என்றும் சம்ஸ்கிருதத்தில் நங்கை (அங்கண், சுராங்கனி) என்றும் இளம் தேவதைகளை அழைப்பர். இந்தச் சொல் கிரேக்க மொழியில் நைம்ப், நிம்ப் (Nymphe, Nymph) என்று திரிந்துள்ளது. நீர் நிலைகள், மலைகள், காடுகள், மரங்களில் அணங்கு இருப்பதாக சங்க இலக்கியங்களும் சம்ஸ்கிருத இலக்கியங்களும் செப்புகின்றன. கிரேக்கர்களும் இப்படி நம்பினர். கல்யாணம் ஆகாத பெண்கள் நம்மூரில் திருமணஞ்சேரி போன்ற தலங்களுக்குச் சென்று காணிக்கை, வேண்டுதல் செய்வது போல கிரேக்கத்திலும் (Greece) நடந்தது தெரிகிறது.
புதிய ஐடியாக்கள் (New Ideas)
ஒவ்வொரு நாட்டிற்குச் சென்று வந்த பின்னரும் நான் சில பிஸினஸ் ஐடியாக்(Business Ideas) களை எழுதி வருகிறேன். இப்போது மனதில் தோன்றும் விஷயங்களை எழுதுகிறேன்:
1.ஏதென்ஸில் ஒரு கடையில் கிரேக்க தத்துவ அறிஞர் படங்களுடன் சீட்டுக் கட்டு ( Greek Philosophers Playing Cards) வைத்திருந்தனர். பிரித்துக் காட்டுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன் என்றேன். சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில், பிதகோரஸ், ஹோமர் என்று பல அறிஞர் படங்களையும் பல பொன் மொழிகளையும் பார்த்தவுடன் அதை இரண்டரை யூரோ கொடுத்து வாங்கினேன். ஆனால் சாக்ரடீஸ் படத்தை ஜோக்கர் (Joker Card) கார்டில் போட்டது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. கிரேக்கர்களுக்கு சாக்ரடீஸ் மீது அவ்வளவு மதிப்பு!!
நாமும் இதே போல பல நல்ல விசயங்களுடன் சீட்டுக்கட்டுகள் தயாரிக்கலாமே. கோவில்கள், தலங்கள், அறிஞர்கள், பொன் மொழிகளுடன் சீட்டுக் கட்டுகள் (ஆங்கலத்தில்) தயாரித்தால் வெளி நாட்டினரும் வாங்குவர்.
ஐடியா 2
இன்னொரு கடை வாசலில் பொன்மொழிகள் அடங்கிய புக் மார்க்குகள் (Book Marks) இருந்தன. இத் போல ராமகிருஷ்ண மடத்தில் விவேகாநந்தர் முதலியோரின் புக் மார்க் வாங்கி இருக்கிறேன். ஆனால் ஏதென்ஸில் நல்ல தரமான, வலுவான பிளாஸ்டிக் அட்டையில் 12 கிரேக்க அறிஞர்களின் படங்களுடன் அவர்களுடைய பொன்மொழிகள் கிடைத்தன. அதைப் பல மொழிகளில் மொழி பெயர்த்தும் தந்திருப்பதால் பல நாட்டினரும் வாங்குவர். நாமும் இப்படி பொன் மொழி அட்டைகளை ‘புக் மார்க்’ ஆக விற்கலாமே!
தரம் மிகவும் முக்கியம் இல்லாவிடில் வெளிநாட்டினர் வாங்க மாட்டார்கள். மூன்று புக் மார்க் ஒரு யூரோ வீதம் வாங்கினேன்.
ஐடியா 3
நான் எந்த நாட்டிற்குப் போனாலும் அந்த ஊரின் முக்கியப் படமுள்ள பிரிட்ஜ் மாக்னெட் (Fridge Magnets) வாங்கி, வீட்டில் பிரிட்ஜில் ஒட்டி வைப்பேன். இது போல பார்த்தினான் படமுள்ள மாக்னெட்டுகளை வாங்கினேன். இது நல்ல பிஸினஸ். வெளி நாட்டு மியூசியங்களில் காபிக் கடைக்கு அருகில் இப்படி கடை வைத்து அதில் பட அட்டைகள், பேனாக்கள், கீ செயின்கள், குழந்தைகளுக்கான டிராயிங் புத்தகங்கள், அறிவூட்டும் நூல்கள் என விற்கிறார்கள். நல்ல வியாபாரம் நடக்கிறது. நாமும் ஒவ்வொரு கோவிலிலும் நல்ல தரமான பொருட்களை விற்றால் நல்ல பணம் கிடைக்கும்.
முன்னொரு காலத்தில் நானும் இந்தியாவில் தொல்பொருட் துறை அலுவலத்துக்குச் சென்று கருப்பு வெள்ளைப் (Black And white) படங்களை வாங்கி இருக்கிறேன். அவைகளை எல்லாம் இப்போது பார்த்தால் அழுகையும் சிரிப்பும் வருகிறது. வெளிநாடுகளைவிட மிகவும் நல்ல கலைப் பொக்கிஷங்களை வைத்துக்கொண்டு அவைகளை விற்பனை செய்யும் திறன் இல்லையே என்று அழுகை. இப்படித் தரக் குறைவான படங்களை அவர்கள் விற்றதையும் அதை நான் வாங்கி பொக்கிஷம் போல வைத்திருந்ததையும் நினைத்து ஒரே சிரிப்பு.
ஏதென்ஸ் அக்ரோபொலிஸ் (Acropolis Museum in Athens) மியூசியத்தில் ஒரு யூரோவுக்கு இரண்டு (Picture Cards) அட்டைகள் வாங்கினாலும் அவைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்; அப்படி நல்ல தரம்.
சுருக்கமாகச் சொல்லப் போனால், எல்லா சுற்றுலாத் தலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளும் காப்பிக் கடைகளும் இருக்க வேண்டும் அங்கே அந்தந்த ஊருக்கு ஏற்ற படங்களுடன் நூற்றுக்கணக்கான கலைப் பொருட்கள், படங்கள், பிரிட்ஜ் மாக்னெட், ஸ்டிக்கர்களை விற்க வேண்டும்.
–subham–
You must be logged in to post a comment.