அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் அதிசயமும் (Post 5061)

Written by London Swaminathan 

 

Date: 30 May 2018

 

Time uploaded in London – 22-18

 

Post No. 5061

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கடந்த சில கட்டுரைகளில் ரிக் வேத, பாகவத, புத்தமத, சமண மத நூல்களில் உள்ள ‘தண்ணீர் மேல் நடக்கும்’ அதிசயங்களைப் பார்த்தோம். இதே போல பார்ஸி மதத்திலும் ஒரு கதை உண்டு. அதைவிட அதிசயம் என்ன வென்றால் மாமன்னன் அலெக்ஸாண்டரையும் அதிசய புருஷர் ஆக்கிவிட்டனர் கிரேக்க எழுத்தாளர்கள். அலெக்ஸாண்டரும் இப்படிச் சில அதிசயங்கள் செய்ததாக கதை எழுதி (கட்டி) விட்டனர்.

முதலில் பாரஸீக நாட்டில் தோன்றிய பார்ஸி மதத் தலைவர் ஜொராஸ்டர் (ஜராதுஷ்ட்ரா) பற்றிக் காண்போம்.

ஜொராஸ்டர், தனது குடும்பத்துடன் அராக்ஸஸ் நதிக்கரைக்கு வந்தார். வெள்ளத்தில் இறங்கி துணிமணிகள் நனைந்து போனால் எல்லோரும் பார்த்து சிரிப்பாளர்களே என்று தயங்கினார். பின்னர் நீர் மீது நடந்து சென்று அக்கரைக்குப் போய்விட்டார். ஆனால் இக்கதை பன்னிரெண்டாம்  நூற்றாண்டில்தான எழுதப்பட்டது.

 

இதற்கு முன்னுள்ள கீழே குறிப்பிடப்படும் எல்லா கிரேக்க எழுத்தாளர்களும் முதல் இரண்டு நூற்றாண்டுகளை சேர்ந்தவர்களே.

அர்ரியன் என்பவர் எழுதிய வாழ்க்கைச் சரிதத்தில் வாடைக் காற்று வீசும்போது மட்டுமே நீர்வழியைக் கடக்க இயலும் ஆனால் அலெக்ஸாண்டருக்காக திடீரென தென்றல் காற்று  வீசி வழிவிட்டது. இதற்கு தெய்வத் தலையீடே காரணம் என்பார்.

 

ப்ளூடார்ச் என்பாரும் இந்த  வரலாற்றை மீனேந்த்திரன் (மெனாண்டர்) சொல்வதாக எழுதியுள்ளார்

 

சீஸரின் யவனக் கடல் சாகசத்தை விளக்கும்போது அப்பியன் என்ற எழுத்தாளரும் இதைக் குறிப்பிடுவார்.

 

அலெக்ஸாண்டரின் படைகள் நாள் முழுதும் நதிகளைக் கடந்த போதிலும் தண்ணீர் இடுப்பளவே இருந்ததாக ஸ்ட்றாபோ கூறுகிறார்.

 

காலிஸ்தெனிஸ் என்பவர் இவர்கள் எல்லோருக்கும் ஒரு அடி மேல் சென்றுவிட்டார். அலெக்ஸாண்டருக்காக் கடல் திறந்து வழி ஏற்பட்டதாவும், அத்தோடு நில்லாமல் கடல் அலைகள் மேலும் கீழும் எழுந்து அலெக்ஸாண்டருக்கு வணக்கம் செலுத்தியதாகவும்  கூறுகிறார். இது தமிழ் இலக்கியத்தில் காணப்படுவது போலத் தற்குறிப்பு ஏற்ற அணியாகும்; இயற்கையில் நாள்தோறும்  நடக்கும் நிகச்சிகளை புலவர்கள் இப்படிப் பயன்படுத்துவர். நாம் தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொள்ள  வேண்டும்.

ரோமானிய வரலாற்று எழுத்தாளர் ஜோஸபஸ்,  அலெக்ஸாண்டரின் அற்புதத்தை விவரித்து விட்டு அது மோஸஸ் தெய்வீக சக்தியால் செங்கடலைக் கடந்தது போல என்று எழுதியுள்ளார்

 

இறுதியாக அலெக்ஸாண்டர் பற்றி இன்னும் ஒரு சுவையான செய்தியும் உண்டு.

அலெக்ஸாண்டர் படை எடுப்புக்கு முன்னர் , மாறு வேஷத்தில் பாபிலோனில், டேரியஸ் நடத்திய ராஜ விருந்துக்குச் சென்றாராம். அங்கிருந்த ஒரு படைத் தளபதி அவரை அடையாளம் கண்டு மன்னர் டேரியஸிடம் சொன்னவுடன் அலெக்ஸாண்டர்  தப்பித்தோம் பிழைத்தோம்  என்று சிட்டாகப் பறந்து வெளியேறினார். அவரது அதிர்ஷ்டம், அப்போது வாசலில் ஒரு குதிரை நின்று கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர் ஒருவருடைய தீவட்டியைப் பிடுங்கிக் கொண்டு வெளிச்சம் போட்டுக்கொண்டே சென்றாராம்.

அலெக்ஸாண்டரின் குதிரை ஒரு ஆற்றைக் கடந்து சென்று எதிர்க் கரையில் முன்காலை வைக்கவும், நதி உருகத் துவங்கியதாகவும் இதனால் குதிரையின் பின்கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதாகவும் அலெக்ஸாண்டர் ஒரே தாவாகத் தாவி தரையில் குதித்துத் தப்பிவிட்டதாகவும் கதைகள் சொல்லும்.

 

-சுபம்–

 

 

பட்டப்பகலில் விளக்குடன் போன தத்துவ ஞானி

பட்டப்பகலில் விளக்குடன் போன தத்துவ ஞானி

கிரேக்க நாட்டில் டயோஜெனிஸ் என்ற ஒரு ஞானி இருந்தார். அவர் அலெக்ஸாண்டர் காலத்தில், 2350 ஆண்டுகளுக்கு முன், வாழ்ந்தவர். இப்பொது துருக்கியில் இருக்கும் சினோப் நகர் ஒரு காலத்தில் கிரேக்க காலனியாக இருந்தது. அங்கே பிறந்த டயோஜெனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரான ஏதென்ஸ் நகருக்குக் குடியேறினார். ஆண்டிஸ்தெனிஸ் என்ற குருவுடன் சேர்ந்து ‘’ஸினிக்’’ இயக்கத்தைத் துவக்கினார். ‘சினிக்’= எதிலும் குற்றம் காண்பவன், நன்மையில் நம்பிக்கையற்றவன்= என்ற ஆங்கிலச் சொல் இவர்கள் மூலம்தான் வந்தது.

 

இந்த ‘சினிக்’ இயக்கத்தினர் இந்திய யோகிகள், சித்தர்கள், ஆண்டிப் பண்டாரங்கள் போல வாழ்க்கை நடத்துபவர்கள். டயோஜெனிஸ் ஒரு பெரிய உடைந்த ஜாடியில், தெருவோரமாக வாழ்ந்தார். மாமன்னன் அலெக்ஸாண்டர் அவரைப் பார்க்க வந்தான். “ஐயா, பெரியவரே, உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்?” என்று பணிவோடு கூறினான். டயோஜெனிஸோ, ‘சினிக்கல்’ ஆக பதில் தந்தார்.

 

“ஐயா, மாமன்னரே, சற்றே விலகும், சூரிய வெளிச்சத்தை மறைக்காமல் விலகிப் போங்கள்” என்றார் டயோஜெனிஸ்.

அவர் பகல் நேரத்தில் தெருக்களில் போகும் போது கையில் லாந்தர் விளக்கை எடுத்துச் செல்வாராம். ‘’ஐயா ,உங்களுக்கு என்ன பைத்தியமா? பகலில் விளக்கு எடுத்துச் செல்கிறீர்களே?’’, என்று நகைப்போரிடம், ‘’நான் நேர்மையான ஒரு மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்’’ என்பார்.

விளக்குடன் போன குருடர்

இன்னொரு வயதான ஞானி கண் பார்வையற்றவர். அவர் இருட்டு நேரத்தில் போகும் போது ஒரு கையில் கைத்தடியும், மற்றொரு கையில் விளக்கும் கொண்டு செல்வார். எல்லோருக்கும் ஒரே புதிராக இருக்கும். இதைப் பார்த்த ஒரு இளைஞனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘’ஐயா, என்ன உங்களுக்கு பைத்தியமா? கண்ணே தெரியாத உமக்கு விளக்கு ஒரு கேடா? ஒரு வேளை ஏதேனும் கொஞ்சம் தெரிந்துவிடும் என்ற நப்பாசையா?’’ என்றான்.

 

அந்தக் கிழவனார் அமைதியாக பதில் தந்தார், ‘’அன்பரே, எனக்கு கண் தெரியாது என்பது உண்மையே. உம்மைப் போன்ற பார்வையுடையவர்கள் என் மீது தடுக்கி விழக் கூடாது அல்லவா?’’ என்றார். தமிழ் நாட்டு மஹான் ஒருவர் இதே உதாரணத்தைப் பயன்படுத்தி வேறு ஒரு உண்மையை விளக்கினார். வேதங்கள், இந்து மத சடங்குகளுக்கு அர்த்தம் தெரியாவிடிலும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்துவாருங்கள். நீங்கள் பொருள் அறியாத குருடர்களாக இருக்கலாம். எதிர் (காலத்தில்) வருவோருக்கு அது வெளிச்சம் போடும் என்று.

 

பட்ட கட்டையில் பகல் குருடு போகுது பார் !

தமிழ் நாட்டில் பல மறைஞான சம்பந்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் சிதம்பரத்தில் வாழ்ந்தார். திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி போல கண்கட்டி வாழ்ந்தார். அவரது மடத்துக்கு ‘’கண்கட்டி மடம்’’ என்றே பெயர். நிறைய நூல்களை எழுதியவர். மெத்தப் படித்தவர். இருந்தும் மற்றவர்களின் தீய , நன்மையற்ற செயல்களைக் காணக்கூடாது என்று கருதியவர்.

மற்றொரு மறைஞான சம்பந்தரரின் சீடர் உமாபதி சிவாச்சார்யார்.சைவ சமய சந்தான குறவர் நால்வரில் ஒருவர். மாபெரும் அறிஞர். பல ஆதாரபூர்வ நூல்களை எழுதி சைவ சித்தாந்தத்தை நிலை நாட்டியவர். உமாபதி சிவம் , தினமும் கோவிலுக்குப் பல்லக்கில் சென்று வருவது வழக்கம். ஒரு நாள் பூஜையை முடித்துக்கொண்டு வருகையில், பிச்சைக்காரர் வடிவில் வந்த ஒரு ஞானி, உமாபதி சிவத்தின் பல்லக்கைப் பார்த்து, “பட்ட கட்டையில் பகல் குருடு ஏகுது பார்” என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் அவருக்கு ஞானம் உதித்தது. உடனே பல்லக்கில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அன்று முதல் கோவிலுக்கு வந்து போக அவர் பல்லாக்கைப் பயன்படுத்தவே இல்லை.

பட்ட கட்டை என்பது பல்லக்குக் கட்டையைக் குறிக்கும். பகல் குருடு என்பது படித்தும் பக்குவ ஞானம் பெறாத நிலையைக் குறிக்கும்.

ஆக, பகலில் வெளிச்சம் போட்டும், இருட்டில் வெளிச்சம் போட்டும் தத்துவப் பிரகாசத்தை உண்டாகியவர்களை உலகம் இன்றும் மறக்கவில்லை.

(தமிழுக்கு நீங்கள் செய்யும் தொண்டு கட்டுரையைப் பயன்படுத்துகையில் எழுதியோரின் பெயரையும் –லண்டன் சுவாமிநாதன்– பிளாக்–கின் பெயரையும் வெளியிடுவதுதான்)

கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு -பகுதி 2

Oicture shows Asoka’s Greek-Aramaic inscription at Kandahar,Kabul Museum

(Please read the first part of Greek-Tamil Connection before reading this)

கிரேக்க மொழியும் தமிழ், சம்ஸ்கிருத மொழிகள் போல அ-வில் துவங்கி ஒ-வில் முடிகிறது. முதல் எழுத்து ஆல்பா, கடைசி எழுத்து ஒமேகா.

 

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பெரிய புலவர்களுக்கு தெய்வ என்ற அடைமொழியைக் கொடுப்பார்கள். இலக்கண மா மேதை பாணிணியை பகவான் என்ற அடைமொழி போட்டு பதஞ்சலி அழைக்கிறார். நாமும் தெய்வப் புலவன் என்று வள்ளுவனை அழைக்கிறோம். ஹோமரையும் தெய்வ ஹோமர் (Homer Theis) என்று கிரேக்கர் புகழ்வார்கள்.

 

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் வலது பக்கத்தைப் புனிதமாகக் கருதுவார்கள். கடிகாரச் சுற்று முறையைக் கண்டு பிடித்தவர்களே இந்தியர்கள் என்பது எனது ஆய்வில் கண்ட முடிவு. கோவிலை வலமாகச் சுற்றவேண்டும். வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைய வேண்டும் ( மண மகளே மண மகளே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா என்ற சினிமா பாட்டை இப்பொழுதும் எல்லா திருமண அரங்குகளிலும் போடுகின்றனர்).

 

வலப் பக்கம் விழுந்த உணவைத்தான் புலி சாப்பிடும், இடப்பக்கம் விழுந்தால் சாப்பிடாது என்று சங்க இலக்கியத்தில் ஏராளமான இடங்களில் படிக்கிறோம். காளிதாசனும் தீ வலப் பக்கமாகச் சுழித்து எரிந்தது நல்ல சகுனம் என்று பாடுகிறான். ஹோமர் எழுதிய ஆடிசியிலும் வலது பக்கம் புனிதம் என்று (2-172) உள்ளது. லத்தீன் மொழியில் சினிஸ்டர் Sinister (இடது) என்றாலே தீயது என்று பொருள்.

 

பாண்டியோன் என்ற குழந்தையின் தலைமையில் வந்த ஒரு குழு ஏதென்ஸ் நகரில் குடி ஏறியதாக வரலாற்றின் தந்தை எனக் கருதப்படும் ஹெரொடோட்டஸ் (Herodotus) கூறுகிறார். அவர்கள் கிரீட் (Crete) என்னும் தீவிலிருந்து வந்ததாகவும் கூறுகிறார். கிரேக்க நாட்டின் பழங்குடி மக்கள் டெர்மிலை (Termilai) என்றும் அவர் கூறுவார். இது த்ரமிளர்=தமிழர் என்ற சொல்லைப் போல உள்ளது

 

பழந்தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை ஆகிய ஐந்து நிலங்களுக்கும் தனிதனி பண்கள் இருந்தன. இவ் வழக்கம் கிரேக்கரிடையேயும் இருந்தது. அப்பண்களை தமிழ்ப் பண்களோடு ஒப்பிட்டவர்கள் சில ஒற்றுமை இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். வாணிகத் தொடர்பினால் தமிழ்ப் பண்களைத் தழுவி அவர்கள் எட்டுக்கட்டி இருக்கலாம்.

 

இவை எல்லவற்றையும் ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு ஆங்கிலம்- தமிழ் மொழி ஒற்றுமையைப் பார்த்தால் ஆயிரக்கணக்கான சொற்கள் ஒரே மாதிரி இருப்பதை அறியலாம். ஆங்கிலமோ சம்ஸ்கிருதம் தொடர்புடைய இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்த மொழி. தமிழுடன் எப்படி தொடர்பு வர முடியும்?

 

தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஒரே மூலம் இருந்தால்தான் இது நடக்க முடியும். அந்த மூலத்தைக் கண்டு பிடித்தால் பழைய மொழிக் கொள்கைகள் தகர்ந்துபோகும்.

(சாத்தூர் சேகரன் என்பவர் இது குறித்து ஆராய்ந்து பல புத்தகங்களில் எழுதியுள்ளார். அவரை 20 ஆண்டுகளுக்கு முன் பி.பி.சி. தமிழோசையில் பேட்டி கண்டேன். அப்போது இது பற்றி எழுப்பிய கேள்விகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விடை கிடைத்து வருகிறது.)

 

உலகில் எல்லோரும் ஒரு கூரையின் கீழ் வாழ்ந்தபோது பேசிய மொழியின் மிச்ச சொச்சங்கள் இப்பொழுதும் ஒவ்வொரு மொழியிலும் இருக்கின்றன. இதனால் எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையே சில சொற்களாவது ஒரே மதிரியாக இருக்கும். ஆனால் எண்கள். உறவு முறைகள், நான், நீ, அவன் அவள் போன்ற சொற்கள், முக்கியமான வினைச் சொற்கள் ஆகியன ஒன்றாக இருந்தாதான் நெருக்கம் அதிகம் என்று கருத முடியும்.

 

ஹிப்பொக்ரடீஸ், பிதகோரஸ் (Hippocrates, Pythagoras)  ஆகியோர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்திய மருத்துவ கணித சாத்திரங்களை அறிந்திருந்தனர். இதற்கான நல்ல ஆதரங்கள் கிடைத்துள்ளன.

பிதகோரஸ் மறு பிறப்பிலும் ஆத்மாவிலும் நம்பிக்கை உடையவர். அவருடைய பெயர் புத குரு என்று ஈ. போகாக் என்னும் அறிஞர் கூறுவார். அவர் எழுதிய ஆங்கிலப் (India in Greece by E Pococke published in 1851) புத்தகத்தில் நிறைய ஒப்புமைகளைக் காட்டுகிறார். அவர் இந்தியாவிலுள்ள பழங்கால இடப் பெயர்களை அதிகமாக ஒப்பிடுகிறார்.

 

ஒலிம்பிக்ஸ் (Olympics) போட்டி 2750 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் துவங்கியது. ஆனால் அதற்கு முன்னரே நாம் ஜல்லிக்கட்டு நடத்தி பரிசு கொடுத்தோம். இந்திரப்பிரஸ்தம், ஹஸ்தினாபுரம் போன்ற இடங்களில் அரசர்கள் மட்டும் கலந்து கொள்ளும் போட்டிகள் நடந்தன. மகாபாரதத்தில் இது பற்றி விரிவான செய்திகள் இருக்கின்றன.

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸின் (Socrates) சீடர் பிளாட்டோ (Plato). அவருடைய சீடர் அரிஸ்டாடில்(Aristotle) . அரிஸ்டாடிலின் சீடர் அலெக்ஸாண்டர் (Alexander) . அவர் இந்தியா மீது படை எடுத்ததற்கு முக்கிய காரணங்கள் இந்தியாவின் செல்வச் செழிப்பும் தத்துவ ஞானச் சிறப்பும் தான் காரணம். இவை இரண்டிலும் அலெக்சாண்டருக்கு ஆர்வம் அதிகம். ஒரு சன்யாசியையாவது தன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தலை கீழாக நின்றார். ஆனால் முடியவில்லை.

போரஸ் என்னும் மன்னனர் புருஷோத்தமனை வெல்லுவதற்குள் அவருக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு அவன் கொடுத்த பதில் அலெக்ஸாண்டாரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. போரஸின் வேண்டுகோளின்படியே அவரை மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தினார். இந்தியாவின் மீது அவருக்கு அவ்வளவு மதிப்பு.

**************