
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8962
Date uploaded in London – – –24 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
22-11-2020 அன்று லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பான தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை.
FOR VOICE RECORDING OF THIS TALK, PLEASE GO TO Facebook.com./gnanamayam
எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.இன்று நம் முன் இருக்கும் கேள்வி 108 என்ற எண்ணுக்கு ஏன் முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது தான். பதில் இதோ:

பாரத நாட்டில் 108 என்ற எண்ணுக்கு தனிப் பெருமை இருக்கிறது. இறைத் துதிகள் எல்லாமே பொதுவாக அஷ்டோத்திரங்களாக அதாவது 108 துதிகளாக அமைந்திருக்கின்றன. உபநிடதங்களுள் முக்கியமானவையாக 108 உபநிடதங்களே குறிப்பிடப்படுகின்றன.
வைணவ திவ்ய தேசங்கள் – திருப்பதிகள் – 108 தான்! சக்தி பீடங்களாக இமயம் முதல் குமரி வரை 108 தலங்கள் உள்ளன. கிருஷ்ணனின் தூய அன்புக்குப் பாத்திரமான கோபியர் 108 பேர்களே!
நேபாளத்தில் முக்திநாத்தில் உள்ள புனித தீர்த்தங்களின் எண்ணிக்கையும் 108 தான்! காஷ்மீர் சைவத்தின் படி தத்துவங்கள் 108.
நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகள் 108. சிவ தாண்டவத்தின் சிவனின் தாண்டவ பேதங்கள், கரணங்கள் 108 தான்! நந்திகேஸ்வரர் அமைத்த ‘பரதார்ணவ’ என்ற தாள சாஸ்திரம் 112 தாளங்களைத் தருகிறது என்றாலும் இதை 108 தாள சாஸ்திரம் என்றே குறிப்பிடுகின்றனர். ‘வஸ்து ரத்ன கோஸத்தின்’ படி மங்கலப் பொருள்கள் 108 தான்!
புத்த மதத்திலும் 108 என்ற எண்ணுக்கு அதிக மதிப்பும் மகிமையும் தரப்படுகிறது. ஜப்பானில் உள்ள ஜென் ஆலயங்களில் புத்தாண்டின் வரவை 108 முறை மணியை ஒலித்து வரவேற்கின்றனர்.
புத்த ஆலயங்களை அடைய 108 படிக்கட்டுகள் உள்ளன. இவை மூன்று முப்பத்தாறு படிக்கட்டுகள் கொண்டவையாக அமைக்கப்படுகின்றன! புத்தரின் இடது பாதத்தில் 108 புனிதக் குறிகள் அல்லது லக்ஷணங்கள் இருப்பதாக புத்த நூல்கள் குறிப்பிடுகின்றன.
புத்தரின் உபதேசங்கள் அடங்கிய நூல்களின் தொகுப்பு திபெத்திய புத்த பிரிவினரால் 108 பாகங்களாகத் தொகுத்து KANJUR என அழைக்கப்படுகிறது.

சீக்கிய மதத்தில் 108 மணிகள் அடங்கிய மாலையே உபயோகப்படுத்தப்படுகிறது.
பௌத்தர்களும் ஹிந்துக்களும் 108 மணிகள் அல்லது ருத்ராக்ஷங்கள் கோர்க்கப்பட்ட மாலைகளையே ஜபத்திற்குப் பயன்படுத்துகின்றனர். டாவோ புத்தமதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த மாலையை – சு சு (Su-Chu) என்று குறிப்பிடுவதோடு அதை மூன்று முப்பத்தாறு மணிகளாகக் கோர்த்து உபயோகிக்கின்றனர்.
ஜைன மதத்தில் ஐந்து விதமான புனித குணநலன்கள் முறையே 12,8,36,25,27 என்று குறிப்பிடப்படுகிறது. இதைக் கூட்டினால் மொத்தம் 108 குணநலன்கள் ஆகிறது!
இப்படி 108இன் உபயோகத்தை உரைக்கப்போனால் பெரும் பேருரையாக\ ஆகி விடும். அப்படி இந்த எண்ணுக்கு என்ன மகிமை? ஏன் நூறாகவோ அல்லது வேறு ஒரு எண்ணாகவோ இவை அனைத்தும் இருக்கக் கூடாது?
நம் முன்னோர்கள் காரணத்தோடு தான் 108 என்ற இந்த அபூர்வ எண்ணை புனிதமான அனைத்துடனும் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள்!
சூரியனுடைய குறுக்களவு பூமியின் குறுக்களவு போல 108 மடங்கு அதிகம் உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளினூடே சஞ்சரிக்கிறது. பன்னிரெண்டை ஒன்பதால் பெருக்கினால் வருவது 108. ஆகவே இவற்றால் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு 108 என்ற எண்ணால் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே பூரணத்துவத்தைக் குறிக்கும் எண்ணிக்கையாக இந்து மதம் 108ஐக் குறிப்பிடுகிறது.
ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. பகலில் 10800 இரவில் 10800. இதுவும் 108இன் மடங்கு தான்!

ஒரு நாள் என்பது 60 கதிகளைக் கொண்டது. ஒரு கதி என்பது 60 பலங்களைக் கொண்டது. ஒரு பலம் என்பது 60 விபலங்களைக் கொண்டது. ஆகவே ஒரு நாள் 21600 பகுதிகளைக் கொண்டதாக ஆகிறது. பகல் 10800, இரவு 10800 மொத்தம் 21600 பகுதிகள். இந்த 108 எண்ணிக்கையானது காலம் மற்றும் வெளியை அதாவது Time and Space ஐ – இயற்கையோடு இயைந்த லயத்தின் அடிப்படையில் இயங்க வழி வகுக்கிறது.
ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி ப்ரேமயானந்தர் இன்னொரு அற்புதத் தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறார்.
108 என்பது மந்திரங்களை உச்சரிக்க சரியான தெய்வீக எண்ணிக்கை என்பதை வராஹ உபநிடதத்தை மேற்கொள் காட்டி அவர் விளக்குகிறார்.
ஒவ்வொருவரது உடலும் அவரவர் விரலின் பருமனால் , கிடைமட்டமாக வைத்துப் பார்க்கும் போது, சரியாக 96 மடங்கு இருக்கிறது.
பரம்பொருள் என்னும் பரமாத்மன் ஒருவனின் நாபியிலிருந்து 12 விரல் அளவு மேலே இருக்கிறான். ஆக இந்த 96 மற்றும் 12 எண்களின் கூட்டுத் தொகையான 108 ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவ்தைக் குறிக்கிறது!
அதாவது 96 விரல் அளவு உள்ள மனிதன் 12 பாகங்கள் உள்ள பரமாத்மாவுடன் சேர்வதை 108 முறைப்படுத்துகிறது!
ஆகவே ஆன்மீகப் பெரியோர்கள் இறைவனின் நாமத்தை 108 முறை சொல்லும் போது அது படிப்படியாக உயர்நிலை பெற்று பரமாத்மனுடன் ஒன்றுபடுகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்தனர்!
இதை இன்னொரு முறையாலும் பார்க்க முடியும்! சூரிய மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. அதாவது 12 பகுதிகளாக வான மண்டலம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரபஞ்சம் என்னும் பரமாத்மனுடன் ஜீவாத்மா ஒன்று படுவதை 108 குறிப்பிடுகிறது.
ஸ்ரீசத்யசாயிபாபா 108 என்ற எண்ணிக்கை காரணம் இல்லாமல் அமைக்கப்படவில்லை என்று கூறி விட்டு அதற்கான காரணத்தை விளக்குகிறார்.
மனிதன் ஒரு மணிக்கு 900 முறை சுவாசிக்கிறான். அதாவது பகலில் 10800 முறை சுவாசிக்கிறான். ஒவ்வொரு சுவாசத்தின் போதும் சோஹம் – நான் அவனே – என்று சொல்ல வேண்டும். ஆகவே 216 என்ற எண்ணும் அதில் பாதியான 108 என்ற எண்ணும் மிக முக்கியத்துவம் உடையதாக ஆகிறது. மேலும் அது பனிரெண்டின் ஒன்பது மடங்கு! பனிரெண்டு சூரியனைக் குறிக்கிறது! ஒன்பது பிரம்மத்தைக் குறிக்கிறது!

அத்தோடு மட்டுமல்ல, ஒன்பதை எதனுடன் பெருக்கினாலும் வரும் எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கிறது.
9×8 =72; 7+2=9 இதில் ஏழும் இரண்டும் சேர்ந்தால் வருவது 9.
9 x 7 = 63; 6+3 = 9 .இதில் ஆறையும் மூன்றையும் கூட்டினால் வருவது 9
இதே போல அனைத்தும் ஒன்பதாக ஆகிறது. கடவுளை எதனுடன் பெருக்கினாலும் அதாவது இணைத்தாலும் அது கடவுளாகவே ஆகிறது.
ஆனால் மாயையின் எண் 8. இதோடு எதைப் பெருக்கினாலும் அது குறைகிறது!
2 x 8 = 16 ; 1+6 = 7 . இதில் ஆறையும் ஒன்றையும் கூட்டினால் வருவது 7.எட்டிலிருந்து ஒன்று குறைந்து ஏழாகிறது!
3×8 = 24 2+4 = 6 இதில் இரண்டையும் நான்கையும் கூட்டினால் வருவது 6.
4×8 = 32 3+2=5
இது போல மதிப்பில் குறைந்து கொண்டே போவது தான் மாயையின் சின்னம்!
தேவர்கள் அமிர்தம் கடைய எடுக்க பாற்கடலைக் கடைந்த காலமும் ஏறக்குறைய 10800 நாட்கள் தாம்! சரியாகச் சொல்லப் போனால் 10748 நாட்கள், 12 மணி, 18 நிமிடங்கள்!
ஸ்ரீயந்திரத்தில் உள்ள மூன்று கோடுகள் வெட்டுவதால் ஏற்படும் புள்ளிகளின் எண்ணிக்கை 54, ஒவ்வொன்றும் ஆண், பெண் – அல்லது சிவம் மற்றும் சக்தியைக் குறிப்பிடும் போது இரண்டு 54 (2×54) 108 – ஆகிறது. எல்லையற்ற சக்தியை, அருளை அது தருகிறது! உடலில் உள்ள சக்கரங்கள் 108. உடலிலே உள்ள வர்மப் புள்ளிகள் 108. இவற்றால் இறைவன் உணரப்படுகிறான்!
27 நட்சத்திரங்கள் நான்கு திசைகளினால் பெருக்கப்பட்டால் வருவது 108 என்றும், ஆகாயத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்படுத்த வருவது 108 என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்
.
இது பூரணத்துவத்தைக் குறிப்பிடுகிறது.
கணித இயலில் 108 ஒரு அபூர்வமான எண்!
ஒன்றின் ஒரு மடங்கும், இரண்டின் இரு மடங்கும் மூன்றின் மும்மடங்கும் சேர்ந்தால் வருவது 108 (அதாவது 1 பவர் 1 x 2 பவர் 2x 3 பவர் 3 = 1x4x27 =108.
இதில் ஒன்று என்பது ஒரு பரிமான உண்மையையும், இரண்டின் மடங்கு இரு பரிமாண உண்மைகளையும், மூன்றின் மடங்கு முப்பரிமாண உண்மைகளையும் காட்டுகிறது. அனைத்தும் இணையும் போது வருவதே எல்லாமாகிய மெய்ப்பொருள் ஆகும்! இப்படி 108இன் மகிமையை உபநிடதங்களும், வானவியல் உண்மைகளும், கணித இயலும் வியந்து போற்றுகின்றன!
கரையில் இருந்து ஆராய்ச்சி செய்தால் கடலின் ஆழம் தெரியுமா என்ன என்று கேட்டு ஸ்ரீசத்யசாயிபாபா ‘ஆழ்ந்து மூழ்கத் தயங்கினால் உங்களால் முத்துக்களைப் பெறவே முடியாது’ என்கிறார்.
ஆகவே 108இன் பெருமையை உணர்ந்தால் மட்டும் போதாது, 108 முறையிலான ஜபமாலை உபயோகம், 108 திவ்ய தேச தரிசனம், 108 சக்தி பீட யாத்திரை உள்ளிட்ட அனைத்தையும் அவரவருக்கு உகந்த முறையில் இயன்ற வரையில் கடைப்பிடித்து மெய்ப்பொருளை அவரவரே உணர்வது தான் ஏற்றம் பெற்று உய்வதற்கான இனிய வழி ஆகும்!
நன்றி, வணக்கம்!
XXXX
OLD ARTICLES ON THE SAME THEME IN THIS BLOG—

Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and Vedas
tamilandvedas.com › 2011/11/26 › hindus-magic-num…
26 Nov 2011 — They used 72,000 nails to fix them. Sathya Sai Baba’s interpretation. Sri Sathya Sai Baba went one step ahead of others in explaining the …
tamilandvedas.com › category › science
2 Feb 2020 — 23 May 2017 – எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்? (Post No.3933) … Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and …
XXXXXX