Written by London Swaminathan
Date: 9 September 2018
Time uploaded in London – 16-28 (British Summer Time)
Post No. 5407
பாரதியார் பிறந்த நாள்: டிசம்பர் 11, 1882
இறந்த நாள் செபடம்பர் 11, 1921
பறவைகளையும் மிருகங்களையும் பயன்படுத்தி மனிதர்களுக்கு பாடம் கற்பிப்பது வேத காலம் முதல் இருந்து வருகிறது. இயற்கையிலிருந்து தத்தாத்ரேயர் கற்ற விஷயங்களை முன்னரே பாகவத புராணத்தில் கண்டோம்.
பாரதிக்குக் குருவியும் காகங்களும் போதித்த விஷயங்கள் ஏராளம். இதனால்தான் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடினார் போலும். குருவியின் விடுதலை உணர்வைக் கண்டவுடன் நாட்டு விடுதலை கூட அவருக்கு மற ந்து விட்டது. ஆன்ம விடுதலை பற்றிப் பாடத் துவங்கினார். அதையும் முன்னரே ‘விட்டு விடுதலையாகி’ என்ற பாடலில் கண்டோம். ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாப்பா பாட்டில் எல்லா மிருகங்கள் மூலம் கற்க வேண்டிய விஷயங்களை எடுத்துரைத்து அவைகளிடத்தில் இரக்கம் கொள்ள வேண்டும் பாப்பா என்கிறார்.
இது தவிர குயில் பாட்டு, கிளிப் பாட்டு என்று பறவைகளை வைத்து பல பாடல்கள் வேறு.
ஆயினும் நிறைய பேரை கவந் து ததி ஈர்க்காத பாடல் ஒன்றில் பெரிய பட்டியலே குருவியின் வாய் மூலமாக கேட்கிறார்.
பாரதியார் குருவியிடம் கேட்ட கேள்வி:
ஏ குருவியே நீ என்ன வேலை செய்கிறாய்?
எப்படி வாழ்க்கை நடத்துகிறாய்?
உடனே குருவி சொன்ன பதிலைப் பாருங்கள்:
எங்களிடம், கீழ் ஜாதி , மேல் ஜாதி இல்லை;
அடிமைகளில்லை; எல்லோரும் மன்னர்!
மேலும் எங்களிடம் காசு பணம் கிடையாது.
ஆனால் எப்போதும், எங்கும் எங்களுக்கு உணவு கிடைக்கும்
சின்ன வயிற்றுக்காக ஆட்டுக் குட்டிகள் போல பிறரிடம் கட்டுப்பட்டிருக்க மாட்டோம்.
வீடு வாசல் தேவை இல்லை; ஆகாயமே கூரை!
உணவோ உயர்ந்த பொருள்கள்தான்.
எங்களிடம் ஏழை பணக்காரர் இல்லை.
ஏற்ற தாழ்வு இல்லை.
கள்ளம் கபடம் கிடையாது.
கொலை, களவு கிடையாது;
இளையோரை வலியோர் ஏறி மிதிப்பதும் இல்லை.
நீங்கள் சின்னஞ்சிறிய வீடுகளில் வசித்தாலும் துன்பத்தில் உழல்கிறீர்கள்; நாங்கள் அப்படித் துன்பப் படுவதில்லை.
மரம், செடி, மலர்கள், ஏரி, குளங்கள், மலை, குன்று, வீடுகள் ஆகியவற்றில் சுற்றிச் சுற்றி விளையாடுவோம்.
குடும்பக் கவலைகள் இல்லை.பந்தங்கள் கிடையா.
தீட்டு முதலியன இல்லை.
இன்பம்; எப்போதும் இன்பம்.
காலையில் எழுந்து கடவுளைத் தொழுவோம்.
மாலையிலும் கடவுளைத் தொழுவோம்.
துன்பத்தில் உழலும் உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்வேன்.
மெய்ஞ் ஞானத்தைப் பெறுங்கள்;சிறுமைத் தனங்களை உதறி விடுங்கள். இதனால் தேவர் நிலை கிடைக்கும். கடவுள் உங்களுக்குத் துணை இருப்பான். இன்பம் கிட்டும்.
அன்பையும் சத்தியத்தையும் கடைப்பிடியுங்கள்;
பொய் வேஷம் போடாதீர்கள்;
தர்மத்தைக் கைக்கொள்ளுங்கள்.
பயத்தை விட்டு துணிச்சலாக நில்லுங்கள்.
இப்படி வாழ்ந்தால் என்றும் இன்பம் என்று குருவி நல்ல யோசனை கூறுகிறது.
நல்ல யோசனைதான்; ஆனால் பின்பற்றுவதோ எளிதல்ல.
குருவிகளைக் கவனித்தோருக்கு அவை எப்போதும் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் திரிந்து விளையாடுவது வியப்பை ஏற்படுத்தும். அவற்றின் ரஹஸியம் இப்போது நமக்கும் தெரிந்துவிட்டது. ஏற்ற தாழ்வில்லாத சமுதாயம்; அடிமை வேலை இல்லாத சமுதாயம்; காசு பணம் என்று திரியாத சமுதாயம் ; ஏழை பணக்காரர் இல்லாத எப்போதும் உணவு கிடைக்கும் வளமை! பெரிய பங்களாக்கள், மாட மாளிகைகள் இல்லாத எளிமையான வாழ்வு.
வாழ்க சிட்டுக் குருவிகள்!
பாரதி நாமம் வாழ்க
–சுபம்—
You must be logged in to post a comment.