Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கவிஞர் கண்ணதாசன் கேட்கும் கேள்விக்கு யாராலாவது மறுத்துப்
பேச முடியுமா?
ஆம், கல்லெல்லாம் மாணிக்கக் கல் ஆகாது.
மாணிக்கத்தின் குணாதிசயங்களும் பலன்களும்!
ரூபி (Ruby)
என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மாணிக்கம் நவரத்தினங்களுள்
அற்புதமான ஒரு ரத்தினம்.
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுடன்
தொடர்பு கொண்ட ரத்தினம் இது. எண் கணிதத்தில் ஒன்று என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டதும்
இதுவே தான்!
சூரிய காந்த மணி,கெம்பு, சீயம்
என்று அழைக்கப்படும் இந்தக் கல் சூரியன் தரும் பிரகாசம், புகழ், மேன்மை, வெற்றி ஆகியவற்றை
தரும்!
சூரியன் ஒரு ஜாதகத்தில் ஐந்து
மற்றும் ஒன்பது ஸ்தானங்களில் இருக்கும் போது மாணிக்கம் அணிவது சிறந்த மேன்மையை ஜாதகருக்குத்
தரும்.
மாணிக்கத்தில் எந்த மாணிக்கத்தை
அணிவது என்ற கேள்விக்கு பல காலமாகச் சொல்லும் பதிலைத் தான் இன்றும் சொல்ல முடியும்!
பர்மாவிலிருந்து கிடைக்கும் சிவப்பு வண்ண மாணிக்கம் மிகவும் சிறந்தது.
மாணிக்கம் வைரத்திற்கு அடுத்தபடி
மிகவும் கடினமானது.
பிரடரிச் மோ என்ற ஜெர்மானிய
அறிஞர் ஒவ்வொரு கல்லுக்கும் உள்ள கடினத்தன்மையை வரையறுத்தார். அவர் கூறும் அளவு அவரது
பெயாராலே மோ அலகு எனக் கூறப்படுகிறது.
இதன் படி மிகவும் கடினமான வைரம்
10 என்ற அலகைப் பெறுகிறது. அதற்கு அடுத்தபடியாக 9 என்ற மோ அலகைப் பெறுவது மாணிக்கம்.
மாணிக்கத்தின் ஒப்படர்த்தி
3.99லிருந்து 4.05 வரை இருக்கும். இதன் ஒளி விலகல் எண் 1.756 ஆகும்.
பலவித நிற வேறுபாடுகள் கொண்ட
மாணிக்கம் கிடைக்கப்பெறுகின்றன.
புறா ரத்த வண்ணம் எனப்படும்
(Piegeon Blood Red) மாணிக்கமே மதிப்பு மிக்கது, அணிவதற்கு ஏற்றது.
கண்களில் நோய் உள்ளவர்கள் மாணிக்கம்
அணிந்தால் அந்த நோய்கள் விலகும்.
உடலின் வலிமை கூடும்.வீரிய விருத்தி
உண்டாகும்.
ஆயுளைக் கூட்டும்.
மனதிற்கு சாந்தியைத் தரும்.
அதிகாரத்தைக் குறிக்கும் கல் என்பதால் பழைய காலத்தில் மன்னர்கள் இதை அணிவது வழக்கம். இன்றைய நாட்களில் தலைமை அதிகாரி (CEO) க்கு உரிய கல் இது.
ARGENTINA’S PRESIDENT WITH HER RUBY NECKLACE
தலைமை பீடத்தில் இல்லாதவர் இதை
அணிந்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். அரசியலிலும் ஏற்றம் தரும் கல் இது.
வைத்திய சாஸ்திரங்களில் மாணிக்கத்தின்
பெருமை பலவாறாகப் புகழப்படுகிறது.
பதார்த்த குணசிந்தாமணி என்ற
புகழ்பெற்ற பண்டைய வைத்திய நூல் இதைப் பற்றிக் கூறும் போது,
‘சுர ரோகம் சன்னிகளின் தோஷம்
அதிதாகம்
உரமான மேகம் ஒழியும் – திரமாக
ஊணிக்கொள் நேத்திரநோய் ஓடும்
அரவீன்ற
மாணிக்கத்தால் வசியமாம்’ என்று கூறுகிறது.
இதன் பொருள் ; சுர நோய் தீரும். அதி தாகம், மேக நோய் ஒழியும். கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் போகும். வசியம் உண்டாகும்.
பண்டைய நாகரிகங்களில் மாணிக்கம்!
பண்டைய நாகரிகங்களில் எகிப்திய
நாகரிகம் உள்ளிட்ட நாகரிகத்தில் இது செய்வினை மற்றும் தீய சக்திகளிடமிருந்து காத்துக்
கொள்ள அணியப்பட்டது. மாணிக்கத்தை நனைத்து விட்டு அந்த நீரை வயிற்று வியாதிகளுக்கு அருந்துமாறு
வைத்தியர்கள் அறிவுறுத்தினர். அத்தோடு இதன் பொடியை ரத்த சம்பந்தமான நோய்கள் தீர்க்கவும்
இதர மருந்துப் பொருள்களுடன் சேர்ந்து பயன்படுத்தினர்.
எப்போது முதல் முறையாக அணிவது?
சுக்ல பக்ஷ ஞாயிற்றுக்கிழமை
அன்று சூரிய ஹோரையில் இதை அணிவது நலம்.
தங்கம் அல்லது தாமிரத்தால் செய்யப்பட்ட
மோதிரத்தில் இதைப் பதித்து அணியலாம்.
முதல் முறை அணியும் போது பாலில் இதை அமிழ்த்திப் பின்னர் நீரால் அலம்பி விட்டு அணிதல் வேண்டும்.
நான்கு வகை நல்ல மாணிக்கக் கற்கள்!
மிகப் பழைய நூலான ரஸ ஜல நிதி
மாணிக்கத்தைப் பற்றிய ஏராளமான விவரங்களைத் தருகிறது:
மாணிக்கம் நான்கு வகைப்படும்
1) பத்மராகம் 2) குருவிந்தஜா 3)சௌகந்திகா 4) நீல காந்தி
இதில் தாமரை வண்ணத்தில் (வெள்ளையுடன்
கூடிய சிவப்பு வண்ணம்) கண்ணுக்கு விருந்தாகும் ஒளி பொருந்திய ஒளி ஊடுருவும் வட்ட வடிவமான மிருதுவான ஆனால் கனமான மாணிக்கமே சிறந்தது.இதுவே
பத்மராகம்.
கோரண்டம் (Corundum) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது
சம்ஸ்கிருதத்தில் குருவிந்தம் என அழைக்கப்படுகிறது.
லலிதாம்பிகையின் தலையில் அணியப்பட்டுள்ள
கிரீடம் குருவிந்தத்தால் ஆனது என்பதிலிருந்தே இதன் சிறப்பை அறியலாம். செக்கச் செவேலென
இருக்கும் அழகிய கல் இது.
சௌகந்திகம் மஞ்சள் கலந்த சிவப்பு
வண்ணத்துடன் இருக்கும்.
நீல கங்கா நதியிலிருந்து கிடைப்பது
நீல காந்தி. சிவப்புடன் நீல வண்ணம் உள்ளிருந்து ஒளிர இரண்டு வண்ணமும் கலந்த கல் இது.
இந்த நான்கு வகைகளும் அதன் தரத்தின் படி மேலே வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
குறைபாடுகள் எவை?
மாணிக்கத்தில் உள்ள குறைகள்
பின் வருமாறு:
துளைகள் உள்ளது, அழகில்லாமல்
இருப்பது, ஒளியில்லாமல் இருப்பது, கரடுமுரடாக இருப்பது, ஓளி புகாத தன்மையுடன் இருப்பது,
தட்டையாக இருப்பது, மிகவும் லேசாக இருப்பது, வடிவமைப்பில் ஒழுங்கற்ற தன்மையுடன் இருப்பது.
இவையிருப்பின் அந்தக் கல்லை
வாங்கக் கூடாது.
ஒரு மாணிக்கத்தில் இரு வேறு
ஒளிகள் அதன் இரு வேறு பக்கங்களிலிருந்து வந்தால் அது அழிவைத் தரும். வாங்கக் கூடாது.
காகத்தின் கால் போல உள்ள தோற்றம்
அளிக்கும் மாணிக்கம் தோல்வியைத் தரும்.
விரிசல் இருப்பின் அதை அணிந்தால்
ஆயுதங்களால் காயம் ஏற்படும்.
மாணிக்கத்தின் உள்ளே சிறு கூழாங்கல்
இருப்பின் நண்பர்கள் அழிவர்; மாடு உள்ளிட்ட கால்நடைகள் அழிந்து படும்.
மாணிக்கத்தின் உள்ளே பால் போன்ற
ஒரு பூச்சு இருப்பின் அதை அணியக் கூடாது. அது துன்பத்தைத் தரும்.
தேனின் நிறத்தைப் போல இருக்கும்
மாணிக்கமும் அணிவதற்குத் தக்கதல்ல. இதை அணிந்தால் ஆயுள் குறையும். துரதிர்ஷ்டம் வரும்.
புகழ் குறையும்.
ஒளி இல்லாத மாணிக்கம் பண இழப்பை உண்டாக்கும்.
புகை போன்ற வண்ணம் உடைய கல் மின்னலினால் விபத்தை ஏற்படுத்தும்.
இவை எல்லாம் ரஸ ஜல நிதி தரும் அறிவுரை!
PICTURE OF RUBY EAR RINGS
நல்ல
மாணிக்கம் எது?
அருமையான மாணிக்கக் கல்லை எப்படி அறிவது?
சூரிய ஒளி அதன் மேல் படப்பட சுற்றுப்புறம் எல்லாம் பிரகாசிக்கும்.
இளங்காலை நேரத்தில் உதய சூரியனின் கிரணங்கள் பட்டவுடன் சிவப்பு ஜூவாலை
போன்ற ஒளியை எந்தக் கல் கக்குகிறதோ அது சிறந்தது.
தூரத்திலிருந்து பார்க்கும் போது சிவப்புத் தீ போல ஜொலிப்பது வம்ச காந்தி
என்று அழைக்கப்படுகிறது. அது உடனடியாக செல்வத்தைத் தரும்.
இருளில் ஒரு மாணிக்கத்தை வைத்தால் அது தன் ஒளியால் சுற்றுப்புறத்தில்
ஒளியைத் தருமாயின் அது நல்ல கல்லாகும்.
கடவுளுக்குக் கூடக் கிடைக்காத மாணிக்கம் அல்லது கடவுளரே ஆவலுடன் விரும்பி
ஏற்கும் மாணிக்கம் எது எனில். அதை ஒரு தாமரை மலரின் உள்ளே வைத்தவுடன் அது விகசித்து
உடனே இதழ் விரித்து மலரும். அதுவே அற்புதமான மாணிக்கக் கல்!
மாணிக்கத்தின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?
இரண்டு கேரட் சாதாரணமாக அணியப்படுகிறது.
RUBY STAMP FROM VIETNAM
பிரபலமான மாணிக்கக் கற்கள்!
இது வரை உலகம்
கண்ட புகழ் பெற்ற மாணிக்கக் கற்கள் வருமாறு:
ப்ளாக் ப்ரின்ஸின்
ரூபி (Black Prince’s Ruby)
தைமூர் ரூபி (Timur Ruby)
ரோஸர் ரீவ்ஸ் ஸ்டார் ரூபி (Rosser Reeves Star Ruby)
எட்வர்ட்ஸ் ரூபி
(Edwardes Ruby)
உலகின் பிரபலமான நடிகையும் பேரழகியுமான
எலிஸபத் டெய்லர் 1968 ஆம் ஆண்டு ஒரு மாணிக்கம் பதித்த மோதிரத்தை அணிந்தார். அது உலகினரின்
கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
அதன் எடை 8.24 கேரட். அது 2011இல்
42 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
(ஒரு டாலரின் இன்றைய ரூபாய் மதிப்பு 70) அதாவது ஒரு கேரட்டின் விலை சுமார் ஐந்து லட்சம்
டாலர்!
உலகின் அதிக எடையுள்ள ரூபி ஹோப் ரூபியாகும். இதன் எடை 32.08 கேரட்.
RUBY FROM THAILAND
மாணிக்கம் கிடைக்கும் இடங்கள்!
பர்மாவைத் தவிர அமெரிக்கா மற்றும்
ஆஸ்திரேலியாவிலும் மாணிக்கம் கிடைக்கிறது.
ஒரு முக்கியமான விஷயம், நமது
தமிழ்நாட்டில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மாணிக்கம் உள்ளிட்ட பல கற்கள் உள்ளன.
ரத்தினக் கலையில் நிபுணர்களாக
உள்ள வல்லார் இந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினால் தமிழகம் மாணிக்க நாடாக ஆகி விடும்.
சிலம்பில் மாணிக்கம்!
தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம்
மாணிக்கத்தையும் முத்தையும் மையமாகக் கொண்டு முடிகிறது.
பாண்டிமாதேவி என் பொற்சிலம்பில்
முத்துப் பரல்கள் உள்ளது என்று கூற கண்ணகி தன் காற்சிலம்பை உடைத்துக் காண்பிக்க அதிலிருந்து
மாணிக்கப் பரல்கள் தெறித்து விழுந்தன.
“கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு
உடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே” என அழகுற அந்தக் காட்சியை அமைக்கிறார் இளங்கோவடிகள்.
கண்ணகியின் மாணிக்கக் கற்கள்
மன்னனின் வாயில் தெறிக்க, மதுரை பற்றி எரிந்ததையும் பின்னர் நடந்ததையும் அனைவரும் அறிவர்.
மாணிக்கம் இல்லாத இலக்கியம்
ஒளி இல்லாத இலக்கியம்.
ஆங்கில இலக்கியத்தில் ரால்ஃப்
வால்டோ எமர்ஸன் உள்ளிட்ட கவிஞர்கள் மாணிக்கத்தைத் தங்கள் கவிதையில் இழைத்துள்ளனர்.
தமிழில் மாணிக்கத்தின் பெருமையைச் சுட்டிக் காட்டும் நூற்றுக் கணக்கான பாடல்கள் உள்ளன.
பெரியாழ்வார்,
“மாணிக்கம் கட்டி வயிரம் இடை
கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச்
சிறு தொட்டில்”
என்று வர்ணிப்பதிலிருந்து ஆரம்பித்தால்
மாணிக்கப் பட்டியல் நீளும்.
அருளாளர்கள் அனைவரும் மாணிக்கமே
என இறைவனை அறைகூவி அழைக்கும் போது மாணிக்கத்தின் உண்மையான மதிப்பு தெரிய வருகிறது,
இல்லையா?
Research Article No.1647; Dated 13th February 2015.
கடந்த சில நாட்களில் முத்து, வைரம், ரத்தினக் கற்களின் எடை, விலை ஆகிய தலைப்புகளில் வராஹமிகிரர் கருத்து என்ன என்பதை அவரது சம்ஸ்கிருதக் கலைக் களஞ்சிய நூலான பிருஹத் சம்ஹிதையில் இருந்து கண்டோம். இன்று மரகதம், மாணிக்கம், நாகரத்தினம் பற்றி அவர் செப்புவதைக் காண்போம்.
வராகமிகிரர் 66 ஸ்லோகங்களில் ரத்தினக் கற்கள் பற்றிப் பாடினார். அவற்றில் முத்து பற்றி மட்டும் 36 பாடல்கள் பாடிவிட்டு, மரகதம் பற்றி ”ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு” — என்று ஒரே ஒரு பாடலோடு முடித்துவிட்டார்! இதோ அது:–
மரகத மகிமை
சுக வம்சபத்ர கதலி சீரிஷ குசுமப்ரபம் குணோபேதம்
சுர பித்ரு கார்ய மரகதம் அதீத சுபதாம் ம்ருனாம் விஹிதம்
இதன் பொருள்:– கிளியின் சிறகு, மூங்கில் இலை வாழைத் தண்டு (சாம்பல்/மஞ்சள்), சீரிச மலரின் நிறம் (வெள்ளை/மஞ்சள்) ஆகிய வர்ணங்களில் உள்ள மரகதக் கற்கள் நல்ல ஜாதிக் கற்கள். இதை தெய்வங்களைக் கும்பிடும்போதும், முன்னோருக்கான கிரியைகளைச் செய்யும் போதும் அணிந்தால் மிகவும் நன்மை பயக்கும்.
தெய்வ வழிபாடு, இறந்தோர் வழிபாடு ஆகிய காலங்களில் ரத்தினம் அணிவது அற்றி இந்த ஒரு ஸ்லோகம் மட்டுமே உள்ளது.
நாகரத்தினக் கல் உண்மையா?
மாணிக்கக் கல் (சிவப்புக் கல்), முத்து பற்றிய பாடல்களில் நாகரத்தினம் பற்றிய விவரங்களைத் தருகிறார்:
நாகரத்தினக் கல் உண்மை என்றே வராஹமிகிரர் நம்புகிறார். ஆனால் விஞ்ஞான முறைப்படி இது வரை யாரும் கண்டதில்லை. நாகரத்தினக் கல் தருவதாகச் சொல்லி பலர் மோசடி செய்து வருவதால் இதைப் படிக்கும் எமது வாசகர்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.
இதோ வராகமிகிரரின் கூற்று:
ப்ரமர சிகி கண்ட வர்ண: தீபசிகாசப்ரப: புஜங்கானாம்
பவதிமணி கில மூர்த்தனியோஅனர்கய சஹ விக்னபா:
——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82
இதன் பொருள் என்ன?
பாம்புகளின் தலையில் ஒரு ரத்தினம் இருப்பதாச் சொல்லுவர். அது வண்டு, மயிலின் கழுத்து நிறம் போல பளபளக்கும்; ஒரு விளக்கின் தீ ஜ்வாலை போல ஒளியை உமிழும்; அது விலை மதிக்க ஒண்ணாதது.
இதற்கு அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்:
நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது நாட்டில் இந்திரன் மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் (வேர் அறுப்பான்) செய்வான்.
நாகரத்தினக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட ‘’ஆஸ் யூ லைக் இட்’’ — நாடகத்தில் குறிப்பிடுகிறார். நாகரத்தினம் உண்மையா என்று நான் எழுதிய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் விவரம் காண்க:
Please read my research paper, “How did Shakespeare know about the Indian Cobra Jewel-Nagaratna?”– Posted on 1 October 2011.
வராகமிகிரர் மேலும் கூறுவதாவது: தக்ஷக, வாசுகி வம்சத்தில் வந்த பாம்புகளின் தலையில் ஒளிவீசும் நீல நிற முத்துக்கள் இருக்கும். இந்திரன் பெய்யும் மழை, இந்த பூமியில் அதிர்ஷ்டம் மிக்க இடத்தில் வெள்ளிப் பாத்திரத்தில் முத்தாகப் பொழிவதுண்டு. அவைகளும் பாம்பிடம் இருந்து வந்த முத்துகளே என்று அறிக!
இத்தகைய பாம்பு முத்துக்களை மன்னர்கள் அணிந்தால் எதிரிகள் அழிவர். மன்னரின் புகழும் வெற்றியும் ஓங்கும்.வெற்றி கிட்டும்.
ஆக, முத்து என்ற அத்தியாயத்தில் பாடுகையில் பாம்பின் தலை முத்து பற்றியும், மாணிக்கம் என்னும் அதிகாரத்தின் கீழ் பாடுகையில் நாகரத்தினம் என்றும் இரண்டு வகைக் கற்கள் பற்றிப் பகரும் பிருஹத் சம்ஹிதை!
எனது விளக்கம்:
நாகரத்தினம் என்பது பாம்புகளின் அகச்சிவப்பு உணரும் உறுப்பைக் குறித்துச் சொல்லி இருக்கலாம்; பிற்காலத்தில் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு நாகரத்தினக் கல் என்று சொல்லிவிட்டனர். பாம்புகளுக்கு காதுகள் கிடையாது; கண்களே காதுகள் என்பதால் தமிழில் கட்செவி (கண்+செவி) என்றும் சம்ஸ்கிருதத்தில் சூன்ய கர்ண என்றும் சொல்லுவர். இருட்டில் இரை தேட அகச்சிவப்பு கதிர்கள் உதவும் .இப்பொழுது இரவு நேரத்தில் எதிரிகள் நடமாட்டத்தைக் காண அகச் சிவப்பு (இன்ப்ரா ரெட் பைனாகுலர்ஸ்) பைனாகுலர்களை ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர். இது பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரையை “தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்”– (நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை, ஆண்டு 2009) புத்தகத்தில் காணுங்கள். இந்தப் புத்தகம் 1990-ம் ஆண்டுகளில் நான் லண்டனில் இருந்து வெளியான மேகம் பத்திரிக்கையில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு.
மாணிக்கக் கல்=குருந்தம்=குருவிந்தம்=கெம்பு
மாணிக்கம் என்னும் சிவப்புக் கல் — குருவிந்தம், ஸ்படிகம், சௌகந்திகம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கிறது (சௌகந்திகம் என்பது கந்தகக் கல்)
மாணிக்கக் கற்களின் விலை (1500 ஆண்டுகளுக்கு முன்)
ஒரு பலம் ( 4 கார்ஷா) எடையுள்ள கல்= 26,000 கார்ஷாபணம்
அரைப் பல கல்= 20,000 கார்ஷாபணம்
ஒரு கார்ஷா எடை= 6000 கார்ஷாபணம்
எட்டில் ஒரு குந்துமணி எடை= 3000 கார்ஷாபணம்
நாலில் ஒரு மாசா எடை கல் = 1000 கார்ஷாபணம்
(இதைப் புரிந்து கொள்ள நேற்று கொடுத்த எடைக் கல் வாய்ப்பாட்டைப் பார்க்கவும்)
குறைகள் உள்ள, ஒளி குன்றிய, மட்டான பிரகாசம் உடைய கற்களுக்கு விலை என்ன விகிதாசாரத்தில் குறையும் என்றும் வராகமிகிரர் விளக்கி இருக்கிறார்.
ஆர்வம் உடையோர் 66 பாடல்களையும் அதற்கு உரைகாரர்கள் எழுதிய வியாக்கியானங்களையும் படித்துப் பயன் அடைக!
முடிவுரை:
யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே அன்றி உண்மை அல்ல!! அல்ல!!
எனது பழைய கட்டுரை நிலாசாரல்.காம் – இல் வெளியானது:–
தமிழ் இலக்கியம் கூறுவது என்ன?
பாம்புகளிடத்தில் நாகரத்தினம் என்னும் சிவப்புக் கல் இருக்கும் என்றும் இரவுநேரத்தில் இரை தேடுவதற்கு பாம்பு இதைப் பயன்படுத்தும் என்றும் கூறுவர். சங்கத் தமிழ் நூல்களிலும், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, பதினென்கீழ்கணக்கு நூல்களிலும் நாகரத்தினம் பற்றிய குறிப்புகள் உண்டு. வடமொழி நூல்களிலும் ஏராளமான குறிப்புகள் உண்டு. இது இங்கிலாந்து வரை பரவி சேக்ஷ்பியர்(Shakespeare) கூட ஒரு நாடகத்தில் குறிப்பிட்டுள்ளார். அகநானூறு 72,92,138,192, புறநானூறு 172, 294 மற்றும் பல நூல்களில் பல இடங்களில் இதைக் காணலாம். காளிதாசர் முதல் சேக்ஷ்பியர் வரை நாகரத்தினத்தின் புகழைப் பாடினர். இதுவரை நாகரத்தினம் கிடைக்கவில்லை. நாகரத்தினம் என்பது என்ன என்பதை ஊகித்தறியலாம்.
“நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்”
பாம்புகள் தனது இரையைப் பார்க்கும் போது அவைகளின் கண்ணுக்கு அவை சிவப்பாகவே தெரியும்! அதுதான் நாகரத்தினம்! இது எப்படி என்பதைக் கீழே காணலாம் :-
பாம்புகளுக்கு தமிழில் நிறைய பெயர்கள் உண்டு. இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஆழமான பொருளும் உண்மையும் அடங்கியுள்ளது. இன்று அதிநவீன கருவிகளைக் கொண்டு உயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்ததை தமிழர்கள் நுட்பமான பார்வையால் கண்டுபிடித்துள்ளனர்.
பாம்புக்கு ‘கட்செவி’ என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. கட்செவி என்றால் கண்ட செவி என்று பொருள். பாம்புக்கு கண்கள்தான் செவி (காது) என்றும் காதுகள்தான் கண் என்றும் இரண்டுவிதமாக இதற்குப் பொருள் கூறலாம் .நவீன அறிவியல் இதை உண்மை என்றே கூறுகிறது.
குருவிந்தம் (குருந்தம்)
இரவில் இரைதேடுவதற்கு பாம்புகள் அகச் சிவப்பு கதிர்களை (Infra red rays) பயன்படுத்துகின்றன. இருட்டு நேரத்தில் எலி, தவளை போன்ற பிராணிகளை நாம் பார்க்கமுடியாது. ஆனால் பாம்புகள் அவைகளை நாகரத்தினம் போல சிவப்பாக காணும். இது எப்படி என்றால் எலி,தவளை ஆகியவற்றின் உடல்வெப்பத்தைக் கொண்டு அவை இருக்குமிடத்தை பாம்புகள் அறிந்துகொள்ளும். இந்த அகச்சிவப்பு கதிர்களை பகுத்தறியும் உறுப்பு பாம்பின் கண்களுக்கு அருகில் உள்ளது. இது கண்ணுக்குப் பக்கத்தில் ஒரு குழி போன்ற உறுப்பில் உள்ளது. இதைக் கண்டுபிடித்த தமிழன் அதற்கு ‘கட்செவி’ எண்று பெயரிட்டான்!
நாகரத்தினம் பற்றிய செய்திக்கு இந்தக் கட்செவிதான் காரணம். ஏனெனில் இரவு நேரத்தில் பாம்புக்கு இரைகள் பெரிய சிவப்புக் கல் போலவே தோன்றும். பாம்புகள் தன்னைச் சுற்றியுள்ள வெப்பநிலை சிறிது மாறினாலும் கண்டுபிடித்துவிடும். மேலும் நாக்கை வெளியே நீட்டி நீட்டி உள்ளே இழுப்பதால் காற்றிலுள்ள வாசனையைப் பிடித்து வாய்க்குள் உள்ள நரம்பு மூலம் பிராணிகள் இருப்பதை அறியும். இதை அறியும் உறுப்புக்கு ஜாகப்சன் உறுப்பு (JACOBSONS ORGAN) என்று பெயர்.
ஒபல் — ஓரளவு மதிப்புடைய ரத்தினக் கற்கள்
பாம்புகளுக்கு கண் பார்வையும் குறைவு! காது கேட்பதும் குறைவு. ஆனால் அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு வெப்ப நிலை மாற்றத்தை அறியும் உறுப்புகள் (HEAT PITS) உண்டு. கண்ணுக்கு அருகிலுள்ள இந்தக்குழிகள் காதுகளின் பணியைச் செய்வதால் இதற்கு கட்செவி (கண் காது) என்ற பெயர் ஏற்பட்டது.
ஆக, ஜாகப்சன் உறுப்பு,ஹீட் பிட்ஸ் (வெப்பக் குழிகள்), அகச் சிவப்புகதிர்கள் (Infra Red Rays) மூலம் பார்ப்பது இவைகளை வைத்துத்தான் நாகரத்தினம் பற்றிய கதைகள் எழுந்துள்ளன! இரவில் இரை தேட இந்த விசேஷ உறுப்புகளே பயன்படுகின்றன. நாகரத்தினம் என்று தனியாக ரத்தினக்கல் எதுவும் இல்லை!
சிவனை வழிபட மூன்று மருத மரங்கள் தேவியை வழிபட மூன்று மாணிக்கங்கள்
எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்— 1000 (ஆயிரம்) தேதி—-25 ஏப்ரல் 2014
சிவன் எங்கே இருக்கிறான்? நம் உள்ளத்தில் இருக்கிறான் என்று ஞானிகள் சொல்லுவர். ஆனால் நாம் எளிதாகக் காண முடிவதில்லை. பாலில் வெண்ணை இருக்கிறது என்று பாட்டி சொன்னாள். குழந்தை போய் பாலை எட்டிப் பார்த்தது. வெண்ணையைக் காணவில்லை. விறகில் தீ இருக்கிறது என்று அம்மா சொன்னாள். குழந்தை போய் விறகைத் தொட்டுப் பார்த்தது. தீயும் இல்லை, சுடவும் இல்லை. பாட்டியும் அம்மாவும் சொன்னதைத்தான் அப்பர் பெருமானும் கூறினார். ஆனால் அந்த வெண்ணையையும் தீயையும் பார்க்க கடைய வேண்டும் என்ற ஒரு வரியையும் சேர்த்துக் கொண்டார். மத்ததைக் கொண்டு பாலைக் கடைந்தால் வெண்ணை மேலே வரும். அரணிக் கட்டையைக் கடைந்தால் தீப்பொறி பறக்கும். நம் உள்ளத்தைக் கடைந்தால் சிவன் வெளிப்படுவான்:
விறகில் தீயினன், பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே. (5-ஆம் திருமுறை, அப்பர்)
உள்ளத்தை எப்படிக் கடைவது. பல வழிகள் உண்டு. புனித யாத்திரை போனாலும் உள்ளம் கடையப்படும். தமிழ் கூறு நல்லுலகில் இதற்கு நமக்கு வழிகாட்டியவர்கள் தேவாரம் பாடிய மூவரும், திருவாசகம் பாடிய ஒருவரும், திவ்யப் பிரபந்தம் பாடிய பன்னிருவரும் ஆவர். அவர்களைத் தொடர்ந்து வந்த பக்தர் பட்டியலை எழுதி மாளாது. 300 தலங்களுக்கு மேல் பாத யாத்திரையாகச் சென்று சிவபெருமானையும், பெரிய பெருமாளையும் தரிசித்தனர்.
Srisailam Mallikarjuna Temple
நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அவருடைய சொற்பொழிவில் மூன்று மருத மரங்களிடையே வாழும் சிவன் பற்றிக் கூறினார். அவருக்கு முன் வாழ்ந்த வள்ளலார் பெருமான் மூன்று மாணிக்கங்கள் இடையே வாழும் சிவ பெருமான் மற்றும் தேவியர் பற்றிக் கூறினார். இந்த ஆறு தலங்களையும் மனதால் தரிசித்து வருவோம்.
மூன்று தலங்களில் மருத (அர்ஜுன) மரம் தல விருட்சமாக இருக்கிறது.
திருவிடை மருதூர் கோவிலில் உள்ள லிங்கம் மஹாலிங்கம். மத்ய அர்ஜுன என்றும் அழைப்பர் ( மத்யார்ஜுனம்= இடை மருது). அர்ஜுன என்பது மருத மரத்தின் சம்ஸ்க்ருதப் பெயர்.
மருத மரத்தின் தாவரவியல் பெயர் டெர்மினாலியா அர்ஜுனா. தமிழ்நாட்டில் திருவிடை மருதூர், திரு இடையாறு ஆகிய இடங்களில் இதுதான் தல மரம். ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீசைலம் என்னும் புண்ய க்ஷேத்திரத்திலும் மருதமரமே. ஸ்ரீசைலத்தில் உள்ள இறைவன் மல்லிகார்ஜுனன். இங்கு மல்லைகை, அர்ஜுன (மருது) இரண்டும் சேர்ந்து உள்ளன. இது சக்தியும் சிவனும் இணை பிரியாதவர்கள் என்பதைக் காட்டும் சின்னம். அருகில் கிருஷ்ணா நதி பெருக்கெடுத்து ஓடுவதையும் காணலாம்.
Tiruppudaimarudur near Amabsamudram, Tirunelveli district.
ஆந்திரத்தின் ஒரு கோடியில் இருக்கும் மல்லிகார்ஜுனரையும் இடையே இருக்கும் (மத்யார்ஜுனம்) மஹாலிங்கத்தையும் தரிசித்தோம்.இன்னும் கொஞ்சம் தெற்கே போனால் தாமிரபரணி நதிக்கரையில் திருப்புடைமருதூர் (புடார்ஜுனம்) என்னும் க்ஷேத்திரத்தில் ஒரு மருதமரமும் ஈஸ்வரனும் உள்ளனர். நாறும்பூநாதர் என்பது இறைவனின் பெயர். கோமதியம்மன் என்பது இறைவியின் பெயர். இங்கு சாய்ந்த நிலயில் ஈஸ்வரன் காட்சிதருவது பற்றி பல கதைகள் உண்டு. திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தலம் உள்ளது.அற்புதமான நாயக்கர் கால ஓவியங்களும், வேலைப்பாடுடைய மரச் சிற்பங்களும் இங்கே இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழமை உடைய கோவில்.
சென்னையில் மூன்று மாணிக்கங்கள் உண்டு. சென்னை அருகில் மேலூர் என்னும் திருத் தலத்தில் திருவுடை மாணிக்கம். திருவொற்றியூர் வடிவுடை மாணிக்கம். திருமுல்லை வாயில் கொடியிடை மாணிக்கம் என்பார்கள். நிறைநிலா நாளில் மூன்று மாணிக்கங்களையும் தரிசித்து மகிழும் வழக்கம் நெடுங்காலமாகத் தாய்மார்களிடையே இருந்து வருகிறது.. அங்கே உறையும் தேவியர் அருள் மழையில் நனைவர்.
திருஒற்றியூரில் பட்டினத்தாருக்கு பேய்க்கரும்பும் இனித்தது. சென்னையில் இருந்தபோது வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்) நாடோறும் வழிபட்ட இடம் இது. வடிவுடை அம்பிகையை வள்ளலார் துதித்து வடிவுடைமாணிக்க மாலை அருளியிருக்கிறார்.
Beautiful Nayak period paintings of Tiruppudaimarudur
அதிலிருந்து ஒரு பாடல்:
திருநாள் நினைத் தொழும் நண்ணாள் தொழாமல் செலுத்திய நாள்
கருநாள் என மறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
ஒருநாளினும் நிந்தனை மறவார் அன்பர் ஒற்றியில் வாழ்
மருநாள் மலர்க்குழல் மானே! வடிவுடைமாணிக்கமே!
உதவிய நூல்:வள்ளலார் வாழ்கின்றார்,கவிஞர் முருக சரணன், கலைவாணி வெளியீடு,சென்னை. ஆண்டு 1995.
திருமுல்லைவாயில் பதிகம்
கூடிய இலயம் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ் சுடரே (7-ஆம் திருமுறை,சுந்தரர்)
You must be logged in to post a comment.