
Post No. 9337
Date uploaded in London – – 4 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மௌனம் சர்வார்த்த சாதனம்!
ச.நாகராஜன்
சிருங்கேரி ஆசார்யாள் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் தனது அருளுரைகளிலும் பக்தர்களிடம் பேசும் போதும் அரிய பெரிய விஷயத்தை சிறிய குட்டிக் கதைகள் மூலமாக விளக்குவது வழக்கம்.
அவற்றில் சில இதோ:-
மௌனத்தின் மஹிமை
ஒரு சமயம் மூன்று பேர்கள் சொர்க்க ரதத்தில் ஏறி சொர்க்கத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் மூவரும் பாம்பு ஒன்று தவளை ஒன்றை விழுங்கப் பார்ப்பதைக் கண்டனர்.
மூவரில் ஒருவன், “ ஓ! பாம்பே! இந்தத் தவளையின் மீது உனக்கு இரக்கமே கிடையாதா? தயவுசெய்து இதை விட்டு விடு” என்றான்.
இதைக் கேட்டு கோபம் கொண்ட நாகமானது, “ எனது இரையை விடச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது? நீ நரகத்திற்குப் போகக் கடவது” என்று சாபமிட்டது.
அவன் ரதத்திலிருந்து விழுந்து, சொர்க்கத்திற்குப் பதிலாக நரகத்திற்குப் போனான்.
அடுத்தவன், இதைக் கண்டு திடுக்கிட்டான். பாம்பு சொன்னதே சரி என்று நினைத்தான். அவன், பாம்பைப் பார்த்து “நீ சொல்வது தான் சரி, தவளை உனக்கு இயல்பான உணவு தான். அதை நீ நிச்சயமாகப் பிடித்து உண்ணலாம்” என்றான்.
இதைக் கேட்ட தவளை கோபம் கொண்டது. அவனைப் பார்த்து அது, “உனக்கு எவ்வளவு தைரியம், பாம்பு என்னைப் பிடித்து உண்ணலாம் என்கிறாய்! உனக்கு இரக்கமே கிடையாதா? நீ நரகத்திற்குச் சென்று சித்திரவதைப் படுவாய்” என்றது.
அவன் உடனே சொர்க்க ரதத்திலிருந்து விழுந்து, நரகத்திற்கு அனுப்பப்பட்டான்.
மூன்றாவது ஆள் பேசாமல் இருந்தான். அவன் சொர்க்கத்தை அடைந்தான்.
இந்தக் கதை சொல்லும் நீதி என்ன? சில சமயங்களில் மௌனமாக இருப்பது, உண்மையைச் சொல்வதைக் காட்டிலும் சிறந்தது என்பதையே!
*
ஹார்மோனியம் வாசிக்கும் ஒரு இசைக் கலைஞர் அற்புதமாக ஹார்மோனியத்தை வாசித்துக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்தார் இன்னொருவர். “அடடா, என்ன அற்புதமான இசை இதிலிருந்து வருகிறது” என்று நினைத்தார் அவர். ஒருவேளை இந்த இசையானது ஹார்மோனியத்தின் உள்ளேயே இருக்குமோ என்று அவர் எண்ணினார்.
ஆர்வம் தலைக்கு ஏற, உடனே அந்த ஹார்மோனியத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்தார். இனிய ஓசை எந்த இடத்திலிருந்து வருகிறது என்று மூலை முடுக்கெல்லாம் தேடினார். எவ்வளவு முயன்று தேடிய போதிலும் அவர் கேட்ட இனிய இசை அந்த ஹார்மோனியத்தில் எங்கும் இல்லை.
“அடடா! என்ன ஆச்சரியம்! அந்த ஹார்மோனியம் அதற்குள் எங்குமே இல்லாத இனிய இசையை எழுப்புகிறதே” என்று முடிவு கட்டினார்.
சில சமயங்களில் ஒரு மனிதன் ஒரு விஷயத்தை அக்கு வேறு, ஆணி வெறாக அலசிப் பார்க்கத் தான் வேண்டியிருக்கிறது. இன்னும் பல விஷயங்களில் இந்த உத்தி உபயோகப்படாது. ஆத்மாவை ஆராய்வது என்பது இந்த இரண்டாவது முறையை ஒத்தது. உடலில் குடி கொண்டிருக்கும் ஆத்மாவை உய்த்துணர வேண்டும்.
*

தாராள மனமுள்ள ஒரு பெரிய மனிதர் நான்கு வேதங்களையும் அறிந்தவருக்கு ஐம்பதினாயிரம் பரிசு தருவதாக அறிவித்தார். இரண்டு நாட்கள் கழித்து ஒரு இளைஞன் அவரிடம் வந்து பரிசுத் தொகையைக் கேட்டான்.
“நீ நான்கு வேதங்களையும் நன்கு அறிந்திருக்கிறாயா?” என்று கேட்டார் அவர்.
“வேதங்கள் நான்கு என்பது எனக்குத் தெரியும்” என்று பதில் சொன்னான் அவன். “அது போதாதா, என்ன?” என்றான் அவன்.
பெரியவர் நொந்து போனார். அவனைத் திருப்பி அனுப்பினா.
ஒரு பரிசைப் பெற சும்மா மேம்போக்கான அறிவு போதாது. மேலோட்டமான அல்லது குறுகிய அறிவு முக்திக்கான உண்மையைக் கொண்டு வராது. இரண்டில்லாத ஏகமான உயரிய ஒன்றை நேரடியாக உணர்வது என்பது அறியாமையை அகற்றி ,தோன்றி மறையும் இருப்பிலிருந்து முக்தி பெறுவதாகும்
*
இப்படி ஏராளமான உவமைகளையும், குட்டிக் கதைகளையும் அவர் அருளியுள்ளார்.
Edifying Parables என்ற நூலில் இப்படிப்பட்ட 98 அரிய கதைகளைக் காணலாம்.
சிருங்கேரி ஆசார்யாளின் இந்த உரைகளை வெளியிட்டிருப்பது:
Sri Vidyatheertha Foundation, Chennai, 21 Venkatanrayanada Road, T.Nagar, Chennai 60017
***
tags – குட்டிக் கதைகள் , மௌனம் ,
You must be logged in to post a comment.