
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9532
Date uploaded in London – –25 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று APRIL 25 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
திருமலையில் பிறந்தார் அனுமன்: ‘திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.
திருப்பதி :’திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்’ என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் நேற்று அறிவித்தது.
ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், ‘திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் நேற்று வெளியிடப்பட்டது.ராமநவமி தினமான April 21 திருமலை திருக்கோவிலில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது முன்னிலையில், இந்த அறிவிப்பை தேஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர்.
இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் ஹம்பி என்ற இடம் தான், ஹனுமனின் பிறப்பிடம் என, இதுநாள் வரை கருதப்படுகிறது.மேலும், ஜார்க்கண்டில் உள்ள அஞ்சன் மலைப்பகுதி; குஜராத்தில் உள்ள நவ்சாரி; ஹரியானாவின் கைத்தல்; மஹாராஷ்டிராவின் திரியம்பகேஸ்வர் அருகில் உள்ள அஞ்சனேரி உள்ளிட்ட இடங்களும், அனுமனின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ‘திருமலையின் அஞ்சனாத்ரியில் பிறந்த அனுமன், அங்கிருந்து, 363 கி.மீ., தொலைவில் உள்ள ஹம்பிக்கு சென்றிருக்கலாம்’ என கூறப்படுகிறது. திருமலை தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு, புராண, இதிகாச ஆய்வாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
Xxx
திருப்பதியில் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 90 நாட்கள் வரை தரிசிக்கலாம்
கொரோனா 2-ம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்தது.
ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்துள்ளது.
ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் 90 நாட்களுக்குள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் வாடகை அறை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு அறை பெறுவதை தேவஸ்தானம் எளிதாக்கி உள்ளது.
திருப்பதியில் உள்ள அலிபிரி பாதாள மண்டபம், சோதனை சாவடி, ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட இடங்களில் வாடகை அறை ரிசிப்ட் ஸ்கேன் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு பக்தர்கள் ஸ்கேன் செய்து கொண்டால், திருமலைக்கு செல்லும் முன் அவர்கள் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு துணை விசாரணை அலுவலக எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின்னர் பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்திற்கு செல்லாமல் நேராக துணை விசாரணை அலுவலகத்திற்கு சென்று தங்களின் அறையை பெற்றுக் கொள்ளலாம்.
திருப்பதியில் ஒரே நாளில் 25,695 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,253 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.21 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
xxxxx

அமர்நாத் பயணம் முன்பதிவு நிறுத்தம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.
:கொரோனா தொற்று பரவல் காரணமாக, அமர்நாத் பனிலிங்க கோவில் புனிதப் பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள இமய மலையில், 12 ஆயிரத்து, 730 அடி உயரத்தில், அமர்நாத் பனிலிங்க குகைக் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கு இணையதளம் வாயிலாக, ‘ஆன்லைன்‘ முன்பதிவுகள் செய்யப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் பயணம், வரும், ஜூன், 28ல் துவங்கி, ஆகஸ்ட், 22 வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது.
இதற்கான முன்பதிவுகள், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு – காஷ்மீர் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றின் கிளைகள் மற்றும், ‘ஆன்லைன்‘ வாயிலாக, சமீபத்தில் துவங்கியது.கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அமர்நாத் பனிலிங்க புனித பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக, ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியம் அறிவித்தது.‘நிலைமை கட்டுக்குள் வந்த பின், முன்பதிவு மீண்டும் துவங்கப்படும்‘ என, அறிவிக்கப்பட்டுள்ளது.
XXX
இந்திய பக்தர்கள் கைலாசா நாட்டுக்கு வர தடை: நித்தியானந்தா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், இந்திய பக்தர்கள் தனது கைலாசா தீவிற்கு வர அனுமதி இல்லை என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழக்குகளில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளானவர் சாமியார் நித்தியானந்தா. இவர், இந்துக்களுக்காக கைலாசா என்னும் தனித் தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல், தன்னுடைய நாட்டுக்கு தனி ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டு அதிர்ச்சியளித்தார். கைலாசா வர விரும்புபவர்களுக்கு இலவச விமான சேவை வழங்கி கூட்டி செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், இன்று வரை அந்த கைலாசா தீவு நாடு எங்கு இருக்கிறது என்பதற்கான விடை மட்டும் கிடைத்தபாடில்லை.
கைலாசா எங்கு உள்ளது என்பது நித்தியானந்தாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக இருப்பதால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தியா செல்ல பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதேபாணியில் நித்தியானந்தாவும், இந்திய பக்தர்களுக்கு கைலாசா நாட்டிற்கு வர தடை விதித்துள்ளார். கடந்த 19ம் தேதியிட்டு, நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பாணையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Xxxx
உடுப்பி சிரூர் மடத்தின் மடாதிபதியாக 16 வயது சிறுவன் நியமனம்
உடுப்பி மாவட்டத்தில் உள்ள, அஷ்ட மடங்களில் ஒன்றான சிரூர் மடத்தின் மடாதிபதியாக 16 வயது சிறுவன் அனிருத் நியமிக்கப்பட்டு இருக்கிறான். அவனுக்கு அடுத்த மாதம் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

கர்நாடக மக்களால் வேதாந்தி, தத்துவவாதி என்று போற்றப்படும் மத்வாச்சாரியாரால் உடுப்பி மாவட்டத்தில் 8 மடங்கள் அமைக்கப்பட்டன. அவை பெஜாவர், பலிமாறு, அடமாறு, புத்திகே சோதே, கனியூறு, சிரூரு, கிருஷ்ணபுரா ஆகிய 8 மடங்கள் ஆகும். இந்த 8 மடங்களையும் சேர்த்து ஒன்றாக அஷ்ட மடங்கள் என்று மக்கள் அழைக்கின்றனர். இந்த அஷ்ட மடங்களில் பெஜாவர் மடம் தான் தலையாய மடம் என்று கூறப்படுகிறது.
இந்த அஷ்ட மடங்களில் ஒன்றான சிரூரு மடத்தின் மடாதிபதியாக லட்சுமிவரதீர்த்த சுவாமி இருந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து இந்த மடத்தின் பொறுப்பை சோதே மடத்தின் மடாதிபதி நிர்வகித்து வந்தார்.
16 வயது சிறுவன்
இந்த நிலையில் சிரூர் மடத்தின் மடாதிபதியாக வித்யோதயா பள்ளி மாணவனான 16 வயதே நிரம்பிய அனிருத் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் துளு மொழி பேசும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரூர் மடத்தின் மடாதிபதியாக அனிருத் நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து உடுப்பியில் சோதே மடத்தின் மடாதிபதி விஸ்வவல்லப தீர்த்த ஸ்ரீபாதரு சுவாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனிருத், தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலா பகுதியைச் சேர்ந்தவர். இவர் சிரூர் மடாதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கான பட்டாபிஷேக விழா அடுத்த மாதம்(மே) 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை உத்தர கன்னடா மாவட்டம் சோதே மடத்தில் நடக்கிறது.
அதற்கு முன்பாக இவர் அஷ்ட மடங்களிலும் சன்னியாசம் பெறும் நிகழ்ச்சி நடைபெறும். இது அஷ்ட மடங்களின் சம்பிரதாய முறைப்படி நடக்கிறது. அஷ்ட மடங்களின் யாகம விதிகளின்படி சன்னியாசம் பெற்ற பிறகு அனிருத்துக்கு மடம் சார்பில் பெயர் சூட்டப்பட்டு, அவர் சிரூர் மடத்தின் மடாதிபதியாக பதவி ஏற்பார்.
மடாதிபதியாக நியமிக்கப்படுபவருக்கு வயது ஒரு பிரச்சினை இல்லை. ஒருவரின் அறிவுக்கூர்மை, மனிதாபிமான தன்மை, ஒழுக்கம் உள்ளிட்டவற்றை கவனித்துதான் அந்த பதிவி அவருக்கு வழங்கப்படுகிறது– இவ்வாறு அவர் கூறினார்.
Xxxxx
ராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
ராமேசுவரம் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமா ஸ்கந்தர் சன்னதிக்கு முன்பாக பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் ஏப்ரல் 14ம் தேதி கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதி முன்பாக பஞ்சாங்கம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சாங்கத்தை கோவிலின் சர்வ சாதகம் சிவமணி வாசித்தார். அப்போது வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:-
இந்தியாவுக்கு வடகிழக்கில் உள்ள நாடுகளான தென் கொரியா, ஜப்பான், சீனா, மங்கோலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் காய்ச்சல் நோய் அதிகமாக பரவும். விளையாட்டு வீரர்களுக்கு விபத்து நடைபெறும். தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விலை ஏற்றம், இறக்கமாக சரிவை சந்திக்கும்.
புதிய வைரஸ் நோய் தொற்று நோயாக பரவி வர நேரும். இதனால் உலகத்தை ஆட்டிப்படைக்கும். உலகமே ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும். மூலிகை மருத்துவம் மூலம் தான் புதிய வைரஸ் நோயை அழிக்க முடியும்.
விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். காபி, ஏலக்காய், மிளகு போன்ற மலைப்பகுதியில் விளையும் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவற்றின் விளைச்சல் அதிகமாக இருக்கும். நல்ல வியாபாரமும் இருக்கும். தேனீ, வண்டு, வவ்வால், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளால் பயிர் விளைச்சலுக்கு சேதம் ஏற்படக்கூடும்.
புகழ் பெற்ற பழைய கட்சியே ஆட்சியை பிடிக்க நேரிடும். பழைய கட்சிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது.
இந்த ஆண்டு வரலாறு காணாத மழை பொழியும். இந்த ஆண்டு சென்னையை புயல் பலமாக தாக்கும்.
அயல் நாடான பாகிஸ்தான் 3 நாடுகளாக பிரிய நேரும். நேபாளத்தை இந்தியாவுடன் இணைக்க நேரும். சீனா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும். அண்டை நாடான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் மீது சண்டை போட நேரம் பார்த்துக் கொண்டே இருக்கும். விவசாய உபகரணங்களின் விலை கடுமையாக உயரும். ராக்கெட் ஏவுகணையை தயாரித்து இந்தியா வெற்றி அடையும்.
மருத்துவத்தில் பெரும் முயற்சி செய்து ெதாற்று நோய்க்கான மருந்தை இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பார்.
இவ்வாறு பஞ்சாங்கத்தில் தகவல்கள் இடம்பெற்று இருந்தது.
Xxxxx
கேரளாவில் எளிமையாக நடந்தது ‘திருச்சூர் பூரம்’ விழா

கேரளாவின் பாரம்பரிய பெருமை மிக்க, ‘திருச்சூர் பூரம்‘ திருவிழா திருச்சூறில் ஏப்ரல் 23ம் தேதி எளிமையாக நடந்தது.
கேரளா மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், எல்லா ஆண்டும் சித்திரை மாதம் பூரம் நட்சத்திர நாளில், ‘திருச்சூர் பூரம்’ திருவிழா நடக்கிறது.
ஏப்ரல் 23ம் தேதி கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல்படி, மக்கள் கூட்டமின்றி விழா நடந்தது. அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை 7:00 மணியளவில், கன்னிமங்கலம் சாஸ்தா, யானை மீது எழுந்தருளி தெற்கு கோபுர நடை வழியாக நுழைந்து, வடக்குநாதரை வணங்கினார்.
தொடர்ந்து, திருவம்பாடி கிருஷ்ணர், பாறமேக்காவு பகவதி அம்மன், செண்டை மேளம் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எழுந்தருளினர். இதன்பின், வடக்குநாதர் கோவில் வளாகத்தில், ‘இலஞ்சித்தறை மேளம்’ என அழைக்கப்படும், செண்டை மேளம் இசைக்கப் பட்டது.திருவம்பாடி மற்றும் பாறமேக்காவு கோவில் விழா குழுவினர் நடத்தும், ‘குடை மாற்றம்’ நிகழ்ச்சி, இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக நடந்தது.
திருவம்பாடி கோவில் சார்பில் ஒரு யானையும், பாறமேக்காவு பகவதி அம்மன் கோவிலின், 15 யானைகளும் அணிவகுத்தன. யானைகளின் மீது அமர்ந்தவர்கள் முத்துமணி மாலையுடன் கூடிய, வண்ண குடை மாற்றினர்.இரவில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.
Xxxxx
இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ராஜாமணி நியமனம்
கோவை மாவட்ட முன்னாள் கலெக்டராக இருந்த ராஜாமணி ஐஏஸ்., தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, தமிழக தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்தார்.
சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கலெக்டர் ராஜாமணி மற்றும் போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோர் மீது எதிர்கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தன. இதனையொட்டி, இருவரையும் இட மாற்றம் செய்வதுடன், தேர்தல் அல்லாத பணியில் நியமிக்கும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவை பிறப்பித்தது. புதிய கலெக்டர் மற்றும் கமிஷனரை நியமிக்கவும், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டது.
தற்போது ராஜாமணிக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
XXXX
ராமேசுவரம் கடல், தீர்த்த கிணறுகளில் புனித நீராடலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் தடுப்பு தொடர்பாக அரசின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா தலமான தனுஷ்கோடிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று அரியமான், காரங்காடு, ஏர்வாடி கடற்கரை பகுதிகளுக்கும் ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகள் சுற்றுலாத்துைற கட்டுப்பாட்டிற்குள் வராது என்பதால் சமூக இடைவெளியுடன் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள்.
XXX
எல்லோருக்கும் மஹாவீரர் ஜயந்தி வாழ்த்துக்கள்
24 ஆவது தீர்த்தங்கரர் ஆன சமண முனிவர் மஹாவீரர் ஜெயந்தி இன்று நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது . இன்று.சத்யம், அஹிம்சை ஆகியவற்றைப் போதித்த மஹாவீரர் பிறந்த தினம் ஆகும்.
அனைத்து மக்களுக்கும் மஹாவீரர் பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகுக
XXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்…………………………

நன்றி, வணக்கம்
tags–Tamil Hindu, News roundup, 25421