Written by London Swaminathan
Date: 20 September 2017
Time uploaded in London- 21-19
Post No. 4229
Pictures are taken from various sources; thanks.
ரிக்வேதத்தில் “க” என்னும் கடவுள் வெளி நாட்டு “அறிஞர்களின்” கண்களில் விரலை விட்டு ஆட்டிவிட்டது. வேத கால மக்கள் நாடோடிகள், கைபர் கணவாய் வழியாக வந்த நாடோடிகள் என்றெல்லாம் பிதற்றிய அறிவிலிகளுக்கு, அரை வேக்காடுகளுக்கு ரிக் வேத “க” பெரிய புதிர் போட்டது. மாக்ஸ் முல்லர் முதலியோரெல்லாம் சிரித்தனர். இப்போது அதுகளை ப் பார்த்தால் நமக்கு சிரிப்பாக வருகிறது!
க என்றால் பிரம்மா; க என்றால் பிரஜாபதி; இது தமிழ் அகராதியிலும் உள்ளது. மேலும் சில விஷயங்கள் மாக்ஸ் முல்லர் வகையறாக்களுக்குத் தெரியாது ‘க’ என்றால் கடவுள். தமிழ் ‘க’ பிராமி என்னும் வடக்கத்திய லிபியிலிருந்து வந்ததை உலகமே அறியும். அது கிட்டத்தட்ட கிறிஸ்தவ சிலுவையைப் போல வெறும் கோடுகளால் மட்டும் ஆனது. ஆதி கால எகிப்தில் இது கடவுளைக் குறிக்கும் சின்னம்! ஆனால் வெறும் சிலுவை மாதிரி கோடுகள் மட்டுமில்லாமல் இரண்டு புறமும் இரு கோடுகள் மேல் நோக்கிச் செல்லும் அதைப் பார்த்தால் ஒரு மனிதன் இரு கைகளையும் உயர்த்தி இருப்பதைப் போலத் தோன்றும். இந்தியாவில் இருந்து சென்ற க (பிரஜாபதி) மூலம் இந்த எழுத்து வந்திருக்கலாம். அதிலிருந்து சிலுவையும் தோன்றி இருக்கலாம்.
இனி ரிக் வேத கவிதை “க” (10-121) பற்றிக் காண்போம்.
‘க’ என்றால் சம்ஸ்கிருதத்தில் யார் என்றும் ஒரு பொருள் உண்டு. வேத கால மக்கள் மிக மிக நாகரீக முன்னேற்றம் கண்டவர்கள். ஆகையால் ‘க’ என்ற எழுத்தை வைத்துச் சொற் சிலம்பம் விளையாடினர். வேத கால மக்களை ‘மண்டுகள்’ என்று சித்தரித்த மாக்ஸ் முல்லர் வகையறாக்களால் இந்த சிலேடைக் கவிதையை ஜீரணிக்க முடியவில்லை. மேலும் அவர்களுக்கு எகிப்திய நாகரீகம் பற்றிய விரிவான அறிவும் கிடையாது. தமிழ் ‘க’ பற்றியும் தெரியாது. ஆகையால் இது என்ன வெறும் உளறலாக இருக்கிறதே என்று குறை கூறத் துவங்கினர்.
தெரியாத கடவுள்(Altar for Unknown God) என்று ஏதென்ஸ் நகர மக்கள் ஒரு பலி பீடம் அமைத்திருந்தனர் . அந்த பெயர் தெரியாத கடவுளுடன் ரிக் வேத க -வையும் ஒப்பிடத்துவங்கினர்.
‘க’ என்பது பிரஜாபதியைக் குறிக்கும், உயிரினங்களுக்கு எல்லாம் கடவுள் அவர்; அவைகளை எல்லாம் படைத்தவர் அவர் என்று வேதமே சொல்லியும் அவர்களுக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை.
க-வை வைத்து யாருடைய என்ற எழுத்தும் பல உரிச் சொற்களும் உருவாயின. இவை எல்லாம் மொழி வளர்ச்சி பற்றிய விஷயங்கள்.
‘க’ என்பது பிரஜாபதி என்பதால் யாகத்திலும் அவருக்கு ஆகுதி அளிக்கப்பட்டது. இது எல்லாம் வெளிநாட்டினரை திகைக்க வைத்தது. வேத கால ரிஷிகளுக்கு முட்டாள் பட்டம் கட்டியே வழக்கம் என்பதால் சிலேடை அர்த்தம் புரியாமல், இது சிறுபிள்ளைத்தனமான ஒரு கண்டுபிடிப்பு என்றெல்லாம் கட்டுரை எழுதினர்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமால் ‘க’ என்பதன் சிலேடை அர்த்தம் புரியாமல் – அதை குறை கூறினர்.
எகிப்தில் இறந்த மன்னன், கழுகு வடிவில் வான மண்டலத்துக்குச் செல்லுவதாக எகிப்திய பிரமிடு இலக்கியம் சொல்லும். ‘க’ என்பது மனிதனின் ஆத்மா என்றும் சொல்லும். இந்தியாவிலும் மனர் பறவை வடிவத்தில் மேலுலகம் செல்லுவதாக சம்ஸ்கிருத ஸ்லோகம் உள்ளது. ஆக ‘க’ என்பது கடவுள், ‘க’ என்பது ஆன்மா; க’’ என்பது படைப்புக் கடவுளான பிரஜாபதி/பிரம்மா. ‘க’ என்பது பறவை வடிவில் காட்டப்படும்.
ரிக்வேதத்தில் (10-121) வரும் ‘க’ கவிதை!
1.முதல் முதலில் தங்க முட்டை (ஹிரண்யகர்ப்பம்) எழுந்தது. அவர் பிறந்தவுடன் படைப்புகளுக்கு எல்லாம் கடவுள் ஆனார். அவர் வானத்தையும் பூமியையும் வைத்திருந்தார் யார் இந்தக் கடவுள்? யாருக்கு பிரசாதத்தைப் படைப்போம்?
(இதில் யாருக்கு என்ற இடத்தில் பிரஜாபதிக்கு என்று சிலேடை அர்த்தத்தில் படிக்க வேண்டும். ஏனெனில் க என்றால் யார்; க என்றால் பிரஜாபதி; இந்த சிலேடை பொருள் தெரியாமல் வெள்ளைத் தோல்கள் முழித்தன!)
2.யார் ஒருவர் உயிர் அளிக்கிறாரோ, யார் ஒருவர் பலம் அளிக்கிறாரோ, யாருடைய கட்டளைக்கு எல்லாக் கடவுளரும் கீழ்ப் படிகின்றனரோ அவர்தான் அழியாதவர் யார் இவர்? யாருக்கு படைப்புகளைப் படைப்போம்?
(முன்னர் காட்டியது போல யார்= என்ற இடத்தில் எல்லாம் பிரஜாபதி என்றும் படிக்கலாம்)
3.யார் தனது மகிமையாலுலகின் ஒரே மன்னர் ஆனாரோ யார் இரு கால், நான்கு கால் உயிரினங்களுக்கு தலைவரோ — யார் இவர்? யாரை நாம் வணங்கி காணிக்கைகளைச் செலுத்துவோம்?
4.யார் தனது சக்தியால் பனி மூடிய மலைகளையும் கடலையும் ஒன்றாக வைத்திருக்கிறாரோ- இடையே ரசா என்ற நதியுடன்– யார் கைகளில் வானத்தின் இரண்டு பகுதிகள் இருக்கின்றனவோ அவர் யார்? எவரை வணங்கி நம் காணிக்கைகளைச் செலுத்துவது?
5.யார் வானத்தையும் பூமியையும் திடமாக வைத்திருக்கிறாரோ யார் மூலம் வானம் நிலைத்து நிற்கிறதோ யார் இடைப்பட்ட பகுதியை வைத்து இருக்கிறாரோ யார் அவர்? யாருக்கு படைப்புகளைத் தருவது?
6.யார் மூலம் சூரியன் பிரகாசிக்கிறான்?யார் அவர்? யாருக்கு படைப்புகளைத் தருவது?
7.வெள்ளம்/பிரளயம் வந்தபோது உயிர்க்கருக்களுடனும் தீயுடனும் அதிலிருந்து உருவானவர்— கடவுளரின் உயிர் மூச்சு– யார் அவர்? யாருக்கு படைப்புகளைத் தருவது?
8.யார் தக்ஷாவுடன் (படைப்பு சக்தி) வந்த பிரளயத்தை பார்த்தாரோ – யாக யக்ஞங்களைக் கொண்டு வந்தாரோ– கடவுள்களில் எல்லாம் ஒரே கடவுளரோ– யார் அவர்? யாருக்கு காணிக்கைகளைப் படைப்பது?
9.பூமியையும் வானத்தையும் படைத்த அவர் நமக்கு எந்தத் தீங்கும் இழைக்கக் கூடாது. அவருடைய சட்ட திட்டங்கள் உண்மையானவை. தண்ணீரைப் படைத்தவர் அவரே– யார் அவர்? யாருக்கு காணிக்கைகளைப் படைப்பது?
10.ஓ பிரஜாபதியே! படைப்புக் கடவுளே! உம்மைத் தவிர எல்லா உயிரினங்களையும் காப்பவர் எவர்? உனக்கு நாங்கள் காணிக்கைகளைச் செலுத்துகிறோம். எங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்வாயாக நாங்கள் செல்வத்துக்கு அதிபதியாகட்டும்.
மிக மிகத் தெளிவாக பிரஜாபதியை/ பிரம்மாவைத் துதிக்கும் பாடல் என்பதை கடைசி மந்திரம் தெளிவாவக் காட்டுகிறது.
ஆனால் யார் (க= பிரம்மா=பிரஜாபதி) என்ற சிலேடை புரியாமல் வெளிநாட்டுக் கிராக்கிகள் முழி முழி என்று முழித்தன!
my old article:
tamilandvedas.com/tag/ka
Posts about Ka written by Tamil and Vedas … Picture shows Egyptian Manu= Narmer. Did Indians build Pyramids?-Part 2 ( Please read first part before reading this ..
–சுபம்–
You must be logged in to post a comment.