அதிசய புத்த துறவி ஸு யுன்! – 10 (Post No.3022)

nps2000buddha_colored

Article Written S NAGARAJAN

Date: 31 July 2016

Post No. 3022

Time uploaded in London :– 5-38 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 10

ச.நாகராஜன்

 

coin buddha

ஆலயத்தை புனருத்தாரணம் செய்வதற்காக பல காத தூரம் நடந்து ஹேமு மரம் என்ற இடத்தை ஸு யுன் அடைந்தார்.

அங்கு செல்லும் சாலை மிகவும் கரடு  முரடாக இருந்தது. ஒரே வளைவுகள். பல வருடங்களாக அது கேட்பாரற்று கவனிப்பாரற்று இருந்திருக்கிறது போலும்!

அங்கிருந்த உள்ளூர்வாசிகள் அங்கு ஒரு துறவி இருக்கிறார் என்றும் தனியாக தான் ஒருவராகவே அந்த சாலையை அவர் சீர் படுத்தி வருகிறார் என்றும் ஸு யுன்னிடம் கூறினர்.

அவர் எந்த ஒரு நன்கொடையையும் கேட்பதில்லை என்றும் தான் உயிர் வாழத் தேவையான குறைந்த ப்ட்ச உணவை  மட்டும் அவர்களிடமிருந்து பெற்று வருகிறார் என்பதையும் ஸு யுன் அறிந்தார். பல பத்து ஆண்டுகளாக அந்த நீண்ட நெடுஞ்சாலையை அவர் சீர் படுத்தி வருகிறாராம்!

இப்போது 90 சதவிகிதம் அந்தப் பணி முடிந்து விட்டதாம்!

அங்குள்ள ஆலயத்தை உள்ளூர்வாசிகள் புனருத்தாரணம் செய்வதாகச் சொன்ன போதும் அவர் தன் வேலையான சாலைப் பணியில் ம்ட்டுமே ஈடுபட்டு வந்தாராம்.

அவரைப் பார்க்க ஸு யுன் விரைந்தார்.

ஒரு மண்வெட்டி கூடையுடன் அந்தத் துறவி சாலையில் தன் பணியில் ஈடுபட்டிருந்த போது கூப்பிய கரங்களுடன் ஸு யுன் அவரிடம் விரைந்து சென்றார். நமஸ்கரித்தார்.

அவர் ஸு யுன்னைக் கண்டு கொள்ளவே இல்லை.. ஸு யுன்னைப் பார்த்த அவர், எதுவும் பேசாமல் தனது தங்குமிடமான ஆலயம் நோக்கி விரைந்து கொண்டிருந்தார்.

ஆலயத்தில் தன் கருவிகளை வைத்த அவர் அமர்ந்தார். ஒன்றுமே பேசவில்லை. அவர் எதிரேயே ஸு யுன்னும் அமர்ந்தார்.

அடுத்த நாள் காலையில் அரிசியைக் களைந்து உலையில் போட்ட போது ஸு யுன் அடுப்பை மூட்டினார்.

சாப்பிடும் போது அவர் ஸு யுன்னை அழைக்கவில்லை. ஸு யுன்னோ தனக்கு வேண்டிய உணவைத் தானே எடுத்துக் கொண்டு உண்டார்.

மண்வெட்டியை  எடுத்துக் கொண்டு அவர் சாலையை நோக்கி விரைய ஸு யுன்னும் கூடையை எடுத்துக் கொண்டு அவர் பின்னால் போனார்.

சாலையில் பள்ளங்கள் சீராக்கப்பட்டன. வேலை தொடர்ந்தது.

 

இப்படியாக 10 நாட்கள் கழிந்தன. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

ஒரு நாள் மாலை ஆலயத்திற்கு வெளியே இருந்த பாறை ஒன்றில் அமர்ந்த ஸு யுன் தியானம் செய்ய அமர்ந்தார்.நேரம் கழிந்தது.

ஆனால் ஸு யுன் உள்ளே செல்லவில்லை. வயதான அந்த துறவி பின்னால் வந்து கூப்பிட்டார்: “அங்கே நீங்கள் என்ன செய்து  கொண்டிருக்கிறீர்கள்?”

கண்ணை மெதுவாகத் திறந்து பார்த்த ஸு யுன் பதில் கூறினார் இப்படி:-“ நான் சந்திரனைப் பார்க்க விரும்பி இங்கு அமர்ந்திருக்கிறேன்.”

 

“சந்திரன் எங்கே இருக்கிறது?”

“அற்புதமான ரோஜா வண்ண ஒளியாக இருக்கிறது!”

அவர் கூறினார்: “பொய்மைக்கு இடையில் மெய்யை அரிதாகவே தான் காண முடியும்!  வானவில்லைப் பார்த்து பிரகாசமான ஒளி என்று தவறாக நினைத்து விடக் கூடாது!”

ஸு யுன் பதில் கூறினார்:” என்னைத் தழுவும் ஒளி இறந்த காலமும் அல்ல; நிகழ்காலமும் அல்ல, இடையறாமல் வரும் அது எதிர்மறையானதும் அல்ல; உடன்மறையானதும் அல்ல!”

 

அதைக் கேட்ட அவர் கலகலவென்று சிரித்தார்.

ஸு யுன்னின் கரங்களைப் பற்றினார். “மிகுந்த நேரம் ஆகி விட்டது. ஆலயத்தினுள் செல்ல்லாம்” என்றார் அவர்.

மறு நாள் உற்சாகமாக அவர் பேசத் தொடங்கினார்.

அவர் பெயர் சான் ஸியூ.24 வயதிலேயே அவர் உலகைத் துறந்து விட்டார்.  ஜின் சான் மடாலயத்தில் சேர்ந்த அவர் தன் அலை பாயும் மனதை ஒரு நிலைப்படுத்தினார்.

பின்னர் சீனாவில் உள்ள புனித மலைத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார்.

திபெத்திற்குச் சென்ற அவர் பர்மா வழியே மீண்டும் சீனா திரும்பினார்.

 

இங்குள்ள சாலை மிக மோசமாக இருந்ததைப் பார்த்த அவர் அங்குள்ள மக்கள் மீது மிகுந்த இரக்கம் கொண்டார். தரணிம்தார போதிசத்துவரால் நிர்மாணிக்கப்பட்ட அந்த சாலையை சீர்திருத்த கங்கணம் பூண்டார்.

பல பத்து வருடங்கள் ஓடி விட்டன. சாலை சீரடையும் பணி முடியும் தருவாய் வந்து விட்டது. இப்போது அவருக்கு வயது 83!

 

எந்த ஒரு நல்ல நண்பரையும் அவர் இதுவரை காணவில்லை.

நல்ல கர்ம பலன்களைக் கொண்ட ஸு யுன்னை இப்போது அவர் கண்டு விட்டார்.

ஆகவே மனம் திறந்து தன்னைப் பற்றி இது வரை யாரிடமும் கூறாத விஷயங்களை ஸு யுன்னிடம் அவர் கூறினார்.

ஸு யுன்னும் மகிழ்ந்து தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறினார்.

மறு நாள் காலை. பொழுது புலர்ந்தது. காலை உணவை அருந்தி விட்டு ஸு யுன் விடை பெற்றார். இருவரும் கலகலவெனச் சிரித்தனர். சிரித்தவாறே ஸு யுன் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

-தொடரும்