ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 2
ச.நாகராஜன்
மூன்று மூன்றாகக் கூறப்படும் ஏழு முக்கிய விஷயங்கள்
“ப்ராணைஷணா,தனைஷணா,பரலோகைஷணேதி” என்று மனிதர்களின் மூன்று ஆசைகளை நிர்ணயிக்கும் சரகர் ஏழு விஷயங்களை மூன்று மூன்றாக அழகாகத் தொகுத்துக் கூறுகிறார்.
வாழ்வின் மூன்று ஆதாரங்கள்:- உணவை உட்கொள்ளல், தூக்கம், பிரம்மசர்யத்தை அனுஷ்டித்தல்
மூன்று பலங்கள் :- உடலமைப்பு ரீதியிலான பலம், (பிறப்பிலிருந்தே இருக்கும் உடல் அமைப்பு மன அமைப்பு) தற்காலிகமான பலம். (ஆறு பருவங்களை ஒட்டியும் வயதுக்கேற்பவும் அமைவது), முயன்று ஏற்படுத்திக் கொள்ளும் பலம் (உணவு மற்றும் இதர அம்சங்களான ஓய்வு,உடல் பயிற்சி ஆகியவற்றால் பெறப்படுவது)
வியாதிக்கான மூன்று காரணங்கள்:- இந்திரியங்களை அதிகமாகப் பயன்படுத்தல் (உதாரணமாக கண் என்ற் இந்திரியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்போம் – ஒளியை அதிக நேரம் உற்றுப் பார்த்தல் போன்றவை), பயன்படுத்தாமலேயே இருத்தல் (எதையும் பார்க்காமலேயே இருந்தால் கண் படைத்த பயனை அடையாமல் இருத்தல் போன்றவை), தவறாகப் பயன்படுத்தல் (பயமுறுத்தும், ஆச்சரியமூட்டும், வெறுப்பைத் தரும், உருக்குலைக்கப்பட்டிருக்கும், எச்சரிக்கையைத் தரும் ஒன்றை மிக அருகிலோ அல்லது தூரத்திலிருந்தோ பார்த்தல் போன்றவை)
வியாதி வரும் மூன்று பாதைகள் :- ஷாகா ( வெளி அமைப்பினால் வருவது – தோல், இரத்தம் போன்றவற்றின் மூலம் வருவது) மர்மஸ்திசந்தயஹ ( பிரதான உறுப்புகள், மூட்டுகள், எலும்புகள் மூலம் வருவது – சிறு நீரகம், இதயம், தலை போன்றவை பிரதான உறுப்புகள்), கோஷ்தா (மைய மண்டலம் மூலம் வருவது – மஹாஸ்ரோதா எனப்படும் பெரும் வழி, சரீர மத்யா எனப்படும் உடலின் மையப் பகுதி, ஆமபக்வாஸய எனப்படும் வயிறு மற்றும் குடல் பகுதி)
மூன்று விதமான வைத்தியர்கள் : – போலி வைத்தியர்கள் (வைத்திய பெட்டி, மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் வைத்தியம் பற்றிய அறிவே இல்லாதவர்கள்), வைத்தியர் அல்லாதவர்கள் ((செல்வந்தர்கள், புகழ் பெற்றவர்களின் தோழமையைக் கொண்டு வைத்தியர் போல நடிப்பவர்கள்), உண்மையான வைத்தியர்கள் ( நல்ல ஆழ்ந்த வைத்திய ஞானம் பெற்றவர்கள்)
மூன்று விதமான நிர்வாகங்கள் :- ஆன்மீக ரீதியிலான சிகிச்சை, (மந்திரங்களை ஜபிப்பது, ரத்தினக் கற்களை அணிவது, யந்திரங்கள் தாயத்துக்களைப் பயன்படுத்துவது, விரதங்களை அனுஷ்டிப்பது, தானம் செய்வது, உபவாசம், சாஸ்திரங்கள் கூறியவற்றின் படி நடப்பது போன்றவை ) உடலியலை ஆராய்ந்து தர்க்க ரீதியிலான சிகிச்சை (மருந்துகளை உட்கொள்வது போன்றவை), உளவியல் ரீதியிலான சிகிச்சை(மனதை பாதிக்கும் எதிலிருந்தும் மனதை விலக்கி ஆரோக்கியமாக இருப்பது)
மூன்று விதமான சிகிச்சை முறைகள் :- உடல் ரீதியிலான தோஷங்களுக்கு உள்ளுக்குள் மருந்து சாப்பிடுவது, உடலின் வெளிப் பாகங்களில் மருந்தைப் பயன்படுத்துவது, அறுவை சிகிச்சை
ஆக இப்படி சரகரின் விளக்கத்தைப் பார்த்தால் அவர் தொடாத துறைகளே ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் இல்லை என்று ஆகிறது!
எட்டுப் பகுதிகளைக் கொண்ட சரக சம்ஹிதா
சரகரின் ‘சரக சம்ஹிதா’ எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1) சூத்ர ஸ்தானம்: ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிப்பதோடு வியாதிகள் வராமல் தடுக்கும் வழிமுறைகளும் இந்தப் பகுதியில் 30 அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது/
2) நிதான ஸ்தானம் : வியாதிகளைக் கண்டறியும் விதத்தை விளக்கும் இது எட்டுப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
3) விமான ஸ்தானம் : வியாதிகளை ஏற்படுத்தும் உடல் ரீதியிலான காரணங்களை விளக்கும் இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
4) சரீர ஸ்தானம் : உயிர் வாழும் அனைத்தின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை விளக்கும் இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
5) இந்த்ரிய ஸ்தானம் : நோய் தீர்வதற்கான முன்கணிப்பை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
6) சிகித்ஸா ஸ்தானம் : நோய்களுக்கான சிகிச்சைகளை விளக்கும் இது முப்பது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
7) கல்ப ஸ்தானம் : வாந்தி, பேதி, உள்ளிழுத்தல் சிகிச்சை ஆகியவற்றை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
8) சித்தி ஸ்தானம் : ஒவ்வாமை சிகிச்சைகளை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
இந்த எட்டுப் பகுதிகளும் ஆயுர் வேதம் கூறும் எட்டு கிளைகளை நன்கு விளக்குகின்றன.
சரக சம்ஹிதாவில் சுமார் 8419 செய்யுள்களும் 1111 உரைநடைப் பகுதிகளும் அமைந்துள்ளன.
மணி,மந்திர ஔஷதம்!
மருந்துகள் மூலிகைகள் ஆகியவற்றுடன் சிகிச்சைக்காக மந்திரங்களும் கூட கூறப்படுகின்றன. ஓம் என்ற பிரணவ மந்திரம், விஷ்ணு சஹஸ்ர நாமம் ஆகியவற்றோடு நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுக்க மந்திரம் சுகமான பிரசவத்திற்கு மந்திரம் என மந்திரங்களும் கூட நூலில் இடம் பெறுகின்றன.
சரகர் ஆங்காங்கு பயணப்பட்டுக் கொண்டே இருந்தவர் என்பதை விளக்கும் விதமாக நூலில் யவனம், சாகம், பாஞ்சாலம், அவந்தி,மலாயா ஆகிய நாடுகள் குறிப்பிடப்படுகின்றன.
ஆரோக்கியம் மேம்படுவதற்கான அனைத்தையும் அதன் காரணங்களுடன் மிக விளக்கமாக எடுத்துக்கூறுவது சரகரின் தனிச் சிறப்பு.
உதாரணமாக பசும்பாலைப் பற்றி அவர் விவரிக்கையில் மன வளத்திற்கும் ஆற்றலுக்கும் பசும்பால் அதன் ஓஜஸ் சக்தியினால் மிகவும் பயனைத் தருகிறது என்று கூறுகிறார்.
பழங்கள், வேர்கள், மூலிகைகள் என அவர் தரும் பட்டியலும் காரணங்களோடு கூடிய விளக்கங்களும் அனைவரையும் பிரமிக்க வைப்பவை.
.
சின்ன உண்மை
உலகம் தற்செயலாகத் தோன்றவில்லை என்று அறுதி படக் கூறும் சரகர் மனிதர்களின் மூன்று ஆசைகளில் முக்கியமான ஆசையாக அவன் நீடித்த ஆயுளை அடைய வேண்டியது முக்கியம் (ப்ராணைஷனா) என வலியுறுத்துகிறார். கஸ்மாத்? ஏன் என அவரே கேள்வியை எழுப்பி “உயிர் முடிந்து விட்டால் அனைத்துமே முடிந்து விடுகிறதே, அதனால்!” என்று பதிலும் அளிக்கிறார்!
Contact:- swami_48@yahoo.com -தொடரும்
Part Two of Charaka Article.



















You must be logged in to post a comment.