கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்/–1114; தேதி— 18 June 2014.
சங்கத் தமிழ் நூல்களிலும் அதர்வ வேதத்திலும், இந்துக்கள் தாயத்துக்களைப் பயன்படுத்திய செய்திகள் உள்ளன. இது அந்தக் கால மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்றும் கூட மந்திரிக்கப்பட்ட தாயத்துக்களைக் கருப்புக் (காசிக்) கயிற்றிலோ குழந்தைகளின் அரைஞாண் கயிறுகளிலோ அணிவதைப் பார்க்கிறோம். இது சங்க காலத்தில் இருந்து வந்துள்ளது. அதற்கு நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னால், அதர்வ வேதத்தில் தாயத்துக்களைப் பற்றி ஏராளமான குறிப்புகள் உள்ளன. சிலவற்றை இங்கே காண்போம்:-
ரக்ஷை என்றும் பந்தனம் என்றும் காப்பு என்றும் அழைக்கப்படும் தாயத்து, ஒரு காலத்தில் தாலி என்று அழைக்கப்பட்டது. சிறுவர்களுக்கும் மணமானவர்களுக்கும் தாலி கொடுக்கப்பட்டது. சிறுவர்கள் ஐம்படைதாலி என்று விஷ்ணுவின் ஐந்து சின்னங்கள் பொறிக்கப்பட்ட தாயத்தை அணிந்தனர். சங்கு, சக்ரம், வாள், வில்,கதை ஆகிய சின்னங்கள் பொறிக்கப்பட்டதால் குழந்தைகளை தீய சக்திகள் அண்டாது என்று தமிழர்கள் நம்பினர்.
(Tali designs: Mangala Sutra=Tali)
குறிஞ்சி நிலக் குறவர்கள் மற்றும் காடுகளில் வாழ்வோர் புலிப் பல், புலி நகம் ஆகியவற்றால் ஆன தாலிகளை அணிந்தனர்.
பெண்கள் மங்களச் சின்னங்கள் அல்லது கடவுளரின் திருவுருவங்கள் பொறித்த தாலிகளை அணிந்தனர். பழைய காலத்தில் அணிந்த தாயத்துக்களே இப்படி தாலி போன்ற வடிவங்களில் இன்று பயன்படுத்தப்படுகின்றன.
ஐம்படைத் தாலி பொன்னுடைத் தாலி என் மகன் — அகம்.54;
தாலி களைந்தன்றும் இலனே — புறம்.77
ஆதாரம்:- இந்தியப் பண்பாடும் தமிழரும், பக்கம் 297/298 ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் (மதுரை எஸ். ஆர்.கே), 1971ம் ஆண்டு வெளியீடு.
பி.டிசீனிவாச ஐயங்கார் எழுதிய தமிழர் வரலாறு (1930) என்னும் நூலில் புலிப்பல் தாலியே பிற்காலத் தங்கத் தாலிக்கு வழி செய்தது என்று வாதாடுகிறார். குறுஞ்சி நிலப் பெண்களும் இதை அணிந்தனர் என்பார்.
Picture of Aimpatai Thali
பிற்கால இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை (3-135, 7-56), பெரியபுராணம் ஆகியவற்றில் சிறுவர்கள் தாலி புலிப் பல் தாலி முதலியன பற்றி கூடுதல் விவரங்கள் கிடைக்கின்றன.
தாயத்துக்களை ஏன் அணிந்தனர்?
அவைகள் பாதுகாப்பு தருவதோடு, அதிர்ஷ்டத்தை தரும் என்றும் நம்பினர். தீய சக்திகள், பேய், பிசாசுகளை அண்ட விடாது என்றும், பயத்தைப் போக்கவும் எதிரிகளை வெல்லவும் அவை உதவும் என்றும் நம்பினர். அதர்வ வேத மந்திரங்களில் இதைத் தெளிவாகக் காண முடிகிறது.
ஒரு காலத்தில் பனை மர ஓலைச் சுருளில் மந்திர தந்திர எந்திரங்களை வரைந்து அணிந்தனர். பனை மரத்துக்கு வடமொழியில் ‘’தால’’ என்று பெயர். இதில் இருந்தே தாலி, டாலிஸ்மேன் (ஆங்கிலச் சொல்) ஆகியன வந்திருக்க வேண்டும்.
ஆதிசங்கரர் காலம் முதல் இன்றுவரை காஞ்சி காமாக்ஷி, திருச்சி அகிலாண்டேஸ்வரி கோவில்களில் தாடங்கப் பிரதிஷ்டை என்ற பெயரில் அம்மனுக்கு ((தாள்+அங்கம்= தாடங்கம் என்னும்)) காதணி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தால (பனை ஓலை) என்பதே அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்து பின்னர் தங்க அணியாக மாறியதற்கு இது ஒரு உதாரணம். சந்திர சூரிய கிரஹண காலங்களில் எந்த நட்சத்திரங்கள், ராசிகள் பாதிக்கபடுகின்றனவோ அந்த ராசிக் காரர்களுக்கு பனை ஓலையில் எழுதப்பட்ட மந்திர ஓலையை பட்டம் கட்டும் வழக்கமும் பிராமணர் வீடுகளில் உண்டு. பனை ஒலை மந்திரச் சுருள் புழக்கத்தில் இருந்ததைக் காட்ட இதுவும் ஒரு உதாரணம்.
Swastika Stamps of Hitler’s Germany.
சிந்து சமவெளியில் தாயத்து
சிந்து சமவெளியில் நிறைய ‘ஸ்வஸ்திகா’ வில்லைகள் கிடைத்தன. இவைகளை மக்கள் பயன்படுத்திய தாயத்துகள் என்று கருத இடம் உண்டு. உலகம் முழுதும் பழைய கலாசாரங்களில் ‘ஸ்வஸ்திகா’ சின்னம் காணப்பட்டாலும் இந்தியாவில் இருந்தே இது சென்றதை உணரமுடிகிறது. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் கூட ‘ஸ்வஸ்திகா’ என்ற சம்ஸ்க்ருத சொல்தான் இருக்கும். ‘’மங்களம்’’, (சு+ அஸ்தி) ‘’நல்லவை’’ என்னும் பொருள் தரும் இச்சொல் விஷ்ணு சஹஸ்ர நாம மந்திரத்திலும் வரும்.
ஆரிய இனவெறிக் கொள்கையை நம்பிய ஹிட்லர். இதை ஆரியர்கள் சின்னம் என்று கருதி கொடிகளிலும், ஜெர்மானிய தபால் தலைகளிலும் பயன்படுத்தியதால் மேலை நாடுகளில் இதற்கு அவப் பெயர் ஏற்பட்டது. ஆனால் இன்றுவரை இந்துக்கள் திருமண அழைப்பிதழ்களிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் ‘’ஸ்வஸ்திகா’’ சின்னத்தைப் பொறித்து வருகின்றனர்.
பெண்கள் தாலி :–புறம்127, சிலப்பதிகாரம் 1-47, 4-50
தமிழர்களுக்கு தாலி உண்டு:–ம.பொ.சி
தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனரா என்று அவ்வப்போது விவாதங்கள் எழுகின்றன.
தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு முடமோசியாரின் புறநானூற்றுப் பாடலையும் சிலப்பதிகார வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையையும் அவர்கள் எடுத்துக் காட் டுகின்றனர்.
இந்தியப் பண்பாடும் தமிழரும் பக்கம் 297/298 ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் (மதுரை எஸ். ஆர்.கே). தமிழர் நாகரீகமும் பண்பாடும் பக்கம் 51, ஆசிரியர் ஆ.தட்சிணாமூர்த்தி, பூண்டி, தஞ்சாவூர்.
“ஈகை அரிய இழை அணி மகளிர்” —
(ஆய் அண்டிரனின் மனைவியர் அணிந்திருந்த மங்கல சூத்திரம் பற்றி முடமோசியார் புறம் 127ல் பாடிய வரிகள்)
“அகலுள் மங்கல அணி எழுந்தது”- சிலப்பதிகாரம்1-47
(மங்கல சூத்திரத்தை ஊர்வ லமாக கொண்டுவந்தனர்-அடியார்க்கு நல்லாரின் உரை)
“மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் “
(கண்ணகி பற்றி இளங்கோ அடிகள் (இதுவும் தாலி என்பது எஸ். ஆர். கே.யின் வாதம்.
. நல்லாவுர் கிழார் குறிப்பிடும் ” வால் இழை மகளிர்” என்பதும் தாலியே என்று அவர் வாதாடுகிறார்.
கி.பி. 10ஆம் நூற்றாண்டில்தான் தாலி இடம்பெற்றது என்று மா. இராச மாணிக்கனார் கூறுவார்.
ம.பொ.சிவஞான கிராமணியார், பேராசிரியர் வீரபத்திரன் ஆகியோர் சங்க காலத்திலேயே தாலி இருந்ததாக வாதிடுகின்றனர்.
அதர்வணவேதத்தில் தாயத்து
நாலாவது வேதமும், மாய மந்திர தந்திரங்களும் அடங்கிய அதர்வ வேதத்தில் இருபதுக்கும் மேலான தாயத்து வகைகள் உள்ளன (இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவத்தில் மண்டலம் வாரியாக குறிப்புகளைக் கொடுத்துள்ளேன்). பெரும்பாலானவை பேய், பிசாசுகளை ஓட்டும் தாயத்துகள்; சில, அரசர்களை போரில் வெற்றி வாகை சூட வைக்கவும், எதிரிகளை ஒழித்துக் கட்டவும் பயன்படுத்தப்பட்டவை. கேரளத்தில் அதர்வ வேதத்தைப் பின்பற்றிய பலர் இருந்ததால் இந்த (‘ஆபிசார’) வகைப் பிரயோகங்கள் அண்மைக் காலம் வரை பயன்படுத்தப்பட்டு வந்தன.
அதர்வண வேத தாயத்துக்கள் பலாச முதலிய தாவரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதும் நோக்கத் தக்கது.
இப்போது கத்தி கபடாக்கள், ஏ.கே 47 துப்பாக்கிகள், ரிவால்வர்கள் சர்வ சாதாரணமாகக் கிடைப்பதால் அதர்வண வேதக்காரர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. மக்களே புரோகிதர் உதவி இன்றி எதிரிகளை சுட்டும், வெட்டியும் வீழ்த்தி விடுகின்றனர். பேய், பிசாசு என்போருக்கு நரம்புகளை மரக்கச் செய்யும், வாயில் நுரை தள்ள வைக்கும் (‘லிதியம்’ வகை மருந்துகள்) மன நோய்களைக் ‘’குணப்படுத்தும்’’ மருந்துகளைக் கொடுத்து அமுக்கிவிடுகின்றனர்.
–Subham—
You must be logged in to post a comment.