WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.058
Date uploaded in London – — 3 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
யாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?
ச.நாகராஜன்
யாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?
அன்றாட வாழ்க்கையில் பல பலன்களை அடைவதற்காக நாம் இறைவனைத் துதிக்கிறோம்.
யாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை சூத சம்ஹிதை ஞான யோக காண்டம் எட்டாம் அத்தியாயம் விரிவாக உரைக்கிறது.
அதில் முக்கியமான விஷயங்கள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகிறது.
1) முக்திக்கு விருப்பமுள்ளவர்கள் ஆத்ம ஞானிகளை வணங்க வேண்டும்.
2) பிரம்ம தேஜஸை அடைய விரும்புபவர்கள் சிவபக்தியுள்ள வேதியரை வணங்க வேண்டும்.
3) வியாதி இல்லாமல் இருப்பதற்கு சூரியனை வணங்க வேண்டும்.
4) பலத்தை அடைய விரும்புபவர்கள் வாயு தேவனை வணங்க வேண்டும்.
5) கீர்த்தியை (புகழை) அடைய அடைய விரும்புபவர்கள் அக்னி தேவனை வணங்க வேண்டும்.
6) நல்ல அறிவைப் பெறுவதற்கு விரும்புபவர்கள் சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.
7) ஞானத்தை அடைவதற்கு உமா தேவியை வணங்க வேண்டும்.
8) கர்மசித்தி அடைவதற்கு விநாயகரை வணங்க வேண்டும்.
9) போகத்தை அடைய விரும்புபவர்கள் சந்திரனை வணங்க வேண்டும்.
10) பொறுமையை அடைய விரும்புபவர்கள் சிவபிரானை வணங்க வேண்டும்.
11) வைராக்கியம் அடைய விரும்புபவர்கள் இந்திரனைத் துதிக்க வேண்டும்.
சிவ பூஜையை விதிப்படி செய்பவர்களுக்கு எல்லாம் கிடைக்கும்.
சோதிஷ்டோமம் உள்ளிட்ட யாகங்களைச் செய்பவர்கள் தேவர்களே ஆவர்.
சதருத்திரம், சமகம், புருஷ சூக்தம், பஞ்சாட்சரம் ஆகிய இவற்றை ஜபிக்கின்றனவர்கள் சகல பாவங்களையும் ஒழிப்பர்.
21 தலைமுறைகளுடன் சிவ லோகம் அடைந்து விரும்பிய போகங்களை நுகர்ந்து அங்கேயே அநேக கற்பகாலம் வசித்து, பிறகு பூமியில் பிறந்து மெய்ஞானத்தைப் பெற்று சாயுஜ்ய முக்தியைப் பெறுவார்.
இன்பமல்லாதவற்றை இன்பம் என்று கருதி அவற்றைப் பெற முயன்று வருந்துகின்றவர்கள் கனி இருக்கக் காய்களைப் பெறுபவர்களுக்குச் சமமாவர்.
அழியாத முக்தி இன்பம் இருக்க அதை விட்டு விட்டு உலக இன்பங்களை அடைய விரும்புவது ஆச்சரியமே அல்லவா!
இவ்வாறு விரித்து உரைக்கிறது சூத சம்ஹிதை.
ஞானம் ஏன் உண்டாவதில்லை?
சூத சம்ஹிதையில் முக்தி காண்டம் ஆறாம் அத்தியாயம் ஞானம் ஏன் உண்டாவதில்லை என்பதற்கு முக்கியமான காரணங்களைக் கூறுகிறது.
இந்தக் காரணங்களை திருமாலுக்கு சிவன் உபதேசித்து அருள்கிறார்.
அவற்றில் முக்கிய சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்:
1) சிவனடியார்க்கு தீங்கு செய்வது
2) ஞான நூல்களை வெறுப்பது
3) விபூதி, ருத்திராட்சம் தரியாமல் இருப்பது
4) பிறர் பொருள்களைத் திருடுவது
5) வேதத்தை இகழ்வது
6) வேதத்தை ஓதாமல் இருப்பது
7) வேதம் ஓதுபவர்களை அவமதிப்பது
8) வேத நிந்தையைக் கேட்க விரும்புவது
9) வேதம் ஓதியவர்களுக்கு இடையூறு விளைவிப்பது
10) ஆகமம், ஸ்மிருதி, புராணம் இவற்றில் அன்பில்லாமலிருப்பது
11) பெரியாரோடு கூடாமை
12) சிவபக்தர்களைப் பெரியோர் என்று எண்ணாமல் இருப்பது
13) இழிந்தவருடன் கூடுவது
14) காமம், குரோதம்,மோகம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம் முதலிய குணங்களைத் தழுவுவது
15) பாவ, புண்ணியங்கள், தெய்வம் உண்டோ என்று சந்தேகப்படுவது
16) தாய் தந்தையருக்குத் தீங்கு விளைவிப்பது
17) மழை, வெயில், காற்று ஆகிய இவற்றால் நொந்து வந்தவர்களை உபசரியாமல் இருப்பது
18) திருடர்களாலும் பலவந்தர்களாலும் வருந்துகின்றவர்களுக்கு உதவி செய்யாமல் இருப்பது
19) சாதுக்களுக்குத் துன்பம் இழைப்பது
20) துஷ்டர்களுடன் சிநேகம் செய்து கொள்வது
21) பசுக்களுக்குத் துன்பம் விளைவிப்பது
22) வழிநடைப் பாதைகளைக் கெடுப்பது
23) ஆகர்ஷனம், வசியம், மோகனம், ஸ்தம்பனம், வித் த்வேஷணம், மாரணம் ஆகிய ஆறு கர்மங்களை செய்வது,
24) சூதாடுவது
25) பெண்கள் ஆடும் நடனத்தில் பிரியம் வைத்துப் பார்ப்பது
26) நல்லொழுக்கத்தை விடுவது
27) பொறுமையுள்ள பெரியோர்களுக்குச் சேவை செய்யாமலிருப்பது
28) மனைவி மக்களிடத்தில் அதீத பற்று கொள்வது
29) அதே அளவு அன்பு ஆசிரியரிடம் இல்லாமல் இருப்பது
30) குருவை வணங்க வெட்கப்படுவது
31) குருவுக்குத் தீமை செய்வது
32) குருவுக்குப் பிரியம் இல்லாததைச் செய்வது
33) குரு இப்படிப்பட்ட தன்மையை உடையவராய் இருக்கிறார் என்று மனதில் சிந்திப்பது
34) குரு நல்லொழுக்கம் இல்லாதவராக இருக்கிறார் என்று கருதுவது
35) குரு நிந்தையைக் கேட்பது
36) குரு அடையும் துன்பத்தைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருப்பது
37) குருவுக்கு எதிரில் அடக்கம் இல்லாமல் இருப்பது
38) குருவுக்கு எதிரில் சிரித்து பரிகாசமாக பேசுவது
39) குருவினிடத்தில் வீண் பேச்சு பேசுவது
40) குரு மொழியை மறப்பது
41) குற்றமற்ற மனைவியை வெறுத்து நீக்குவது
42) அந்நிய மாதரை விரும்புவது
43) அந்நிய மாதரிடம் பாலியல் உறவு கொள்வது
44) அவரது அழகு முதலியவற்றைக் கேட்டு மகிழ்வது
45) ஏழைக்கு இரங்காமல் இருப்பது
46) பிறருடைய கல்வி, செல்வம் ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொள்வது
47) தன்னையே பெரியவனாக நினைப்பது
48) தீர்த்த யாத்திரை முதலியவற்றை வெறுப்பது
49) சிவாலய தரிசனம் செய்யாமல் இருப்பது
50) பஞ்சாட்சரத்தை ஜபிக்காமல் இருப்பது
ஆகிய இவை ஞான உற்பத்தி ஆகாமைக்குக் காரணம் என்று சிவபெருமான் கூறி அருள்கிறார்.
ஸ்கந்த புராணத்தில் இல்லாதது எங்கு இல்லை. ஆகவே தான் எந்தப் பொருளும் கந்த புராணத்தில் என்று பெரியோர்கள் கூறுவது வழக்கம்!
***