ஆலயம் அறிவோம்! திருவாரூர் (Post No.14,265)

 

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14,265

Date uploaded in Sydney, Australia — 3 March 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2-3-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிப்ரப்பான உரை 

திருவாரூர் கமலாலயம்

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். 

சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரலச், சூழ்ந்த

ஆலையின் வெம்புகை போய், முகில் தோயும் ஆரூரில்,

பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும், பரமேட்டி பாதம்,

காலையும் மாலையும் போய்ப் பணிதல், கருமமே

–    திருஞானசம்பந்தர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் உள்ள சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகவும் பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் பிரம்மாண்டமான கோவிலைக் கொண்டுள்ள திருவாரூர் திருத்தலமாகும்.

இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் தலைநகராகத் திகழ்கிறது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து இங்கு செல்ல பஸ் வசதி உள்ளது.

.

ஏராளமான புராண வரலாறுகளையும் மற்ற சிறப்புகளையும் கொண்டிருக்கும் இத்தலத்தின் சிறப்புகளை முழுமையாக யாராலும் உரைக்க முடியாது.

முதலாவது இத்தலம் தோன்றிய காலத்தையும் இங்கு  ஈசன் குடி கொண்ட காலத்தையும் யாராலும் வரையறுக்க முடியவில்லை. அப்பர் பெருமான் தில்லைக்கும் முற்பட்ட காலத்தில் தோன்றிய தலம் இது என்று குறிப்பிடுகிறார்.

இறைவன்; வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்

உற்சவர்: தியாகராஜன், வீதி விடங்கர் உள்ளிட்ட பல திருநாமங்கள்

இறைவி : கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

தல விருட்சம் : பாதிரி. இது ஆடகேஸ்வரத்திற்குத் தென்பாகத்தில் உள்ளது.

தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணிதீர்த்தம்

சிவபிரானுக்கு வன்மீகநாதர் சந்நிதியும் தியாகராஜர் சந்நிதியும் ஆக இரு சந்நிதிகள் உள்ளன.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற திருத்தலம் இது.

மநு நீதிச் சோழன் வாழ்ந்த திருத்தலம் இது.

முக்தி தரும் தலங்கள் மூன்றில், பார்த்தால் சிதம்பரமும், இறந்தால் காசியும், பிறந்தால் திருவாரூரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர் வாக்கு.

பஞ்சபூத தலங்களில் இது பிருதிவி தலமாகும். அதாவது மண்ணுடன் தொடர்பு கொண்ட தலமாகும். இங்கு மூலமூர்த்தி பூமியில் புற்றிலிருந்து எழுந்ததால் புற்றிடங்கொண்டார் என்ற பெயரைக் கொண்டுள்ளார். வடமொழியில் வன்மீகநாதர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

முக்கியமான புராண வரலாறு இங்கு தியாகராஜர் எழுந்தருளிய வரலாற்றை விவரிக்கிறது.

தேவேந்திரனுக்கும் வலாசுரனுக்கும் முன்னொரு காலத்தில் பெரும் போர் நடைபெற்றது. அசுரனின் வலிமையைத் தாங்காமல் பூலோகத்திற்கு வந்து ஒளிந்தான் தேவேந்திரன்.

அக்காலத்தில் சோழ நாட்டை ஆண்டு வந்தவன் பெரும் பராக்கிரமுடைய முசுகுந்த சக்கரவர்த்தி ஆவான். அவன் தேவேந்திரனின் சிறந்த நண்பன். தேவேந்திரன் முசுகுந்தனின் உதவியை நாடவே அவனும் வலாசுரனிடம் போரிட்டு அவனைத் தோற்கடித்தான்.

மகாவிஷ்ணுவால் தேவேந்திரனுக்கு வழங்கப்பட்ட தியாகராஜரை தினமும் வழிபட்டு வந்தான் தேவேந்திரன். தியாகராஜர் முசுகுந்தனிடம் அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக, “என்னைத் திருவாரூக்குக் கொண்டு செல்” என்று கூறினார்.

தேவேந்திரன் முசுகுந்தன் விடை பெறும் போது, “என்ன வேண்டும்” என்று அன்புடன் கேட்,க” எனக்குத் தியாகராஜர் வேண்டும்” என்று பதிலளித்தான் முசுகுந்தன்.

திகைப்படைந்த தேவேந்திரன் ஆறு தியாகராஜர் உருவங்களை ஒரே போல வடிவமைத்து முசுகுந்தனிடம் காட்டினான். ஒரே ஒரு சிலை மட்டும், ‘என்னைத் திருவாரூருக்குக் கொண்டு செல்’ என்று முசுகுந்தனுக்குத் தெரிவிக்க அதை மட்டும் கேட்டான் முசுகுந்தன்.

இந்திரனும் அதைக் கொடுத்தான். வன்மீகர் திருக்கோவிலுக்குத் தெற்கே ஒரு கோவில் அமைத்து அதில் தியாகராஜரை பிரதிஷ்டை செய்தான் முசுகுந்தன்.

முசுகுந்தன் பிறப்பு பற்றியும் ஒரு வரலாறு உண்டு. முன் ஜென்மத்தில் குரங்காய் இருந்த அவன் சிவ பார்வதி மீது வில்வ இலைகளையும் காய்களையும் பிய்த்து எறிந்து கொண்டிருந்தான். வில்வ இலைகளால் பூஜை செய்த புண்ணியத்தால் அவன் இந்த ஜன்மத்தில் முசுகுந்தனாய்ப் பிறந்தான்.

 கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி)

ஐந்து வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான ஆலயத்தில் 9 ராஜ கோபுரங்களும் 80 விமானங்களும்,, உயரமான 12 மதில்களும், ,13 மண்டபங்களும்,,15 தீர்த்தக் கிணறுகளும், ஐந்து பிரகாரங்களும்,, 24 உட்கோவில்களும் எண்ண முடியாத சிவலிங்கங்கங்களும் 86 விநாயகர் சிலைகளும் உள்ளன. கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது;

வேதாரணியம் விளக்கழகு, திருவாரூர் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு என்ற வழக்கு மொழி இந்தத் தேரின் சிறப்பைப் பறைசாற்றுகிறது. இந்தத் திருத்தேரின் உயரம், கனம், கட்டுமானம்,அலங்காரம், ஓட்டம், ,மூலைகளில் திரும்பும் வன்மை ஆகிய எல்லாவற்றிலும் தனிச் சிறப்பைக் கொண்டுள்ளது.

இந்தத் தலத்தில் தான் சுந்தரர் பரவை நாச்சியாரைச் சந்தித்தார். விருத்தாசலத்தில் தான் பெற்ற பொன்னை அங்கு நதியில் போட்டு இதைத் திருவாரூர் கமலாலயத்தில் வருவித்துத் தர வேண்டும் என்று சிவபிரானை சுந்தரர் வேண்ட அவரும் அப்படியே அருளினார். ‘ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுகிற மாதிரி’ என்ற பழமொழி இந்த வரலாற்றின் அடிப்படையிலேயே எழுந்ததாகும்.

சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், ,மூத்துசாமி தீக்ஷிதர் ஆகியோர் அவதரித்த திருத்தலமும் இதுவே,

இங்கு தான் நமிநந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றி எரிய வைத்தார்.

இன்னும் இப்படி ஏராளமான சிறப்புகளைக் கொண்டது திருவாரூர் திருத்தலம்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் தியாகராஜரும் கமலாம்பிகை அம்மனும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

Leave a comment

Leave a comment