திருப்புகழில் தசாவதாரம், பாரிஜாத மலர், ஒரே பாட்டில் 29 முக்கிய தலங்கள்!- Part 77 (Post.15,624)

Written by London Swaminathan

Post No. 15,624

Date uploaded in London –16 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

77திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 77

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 77

***

திருப்புகழில் தசாவதாரம்

ஆதி சரண் எனக் கயம் குலாவு அ(ம்) முதலையைக் கிடங்கில்

ஆர உடல் தனைப் பிளந்த அரி நேமி … ஆதி மூலமே,

அடைக்கலம் என்று (கஜேந்திரன் என்னும்) யானை கொண்டாடிக்

கூப்பிட, (அதைப் பற்றி நின்ற) முதலையை மடுவில் உடலை நன்றாகப்பிளந்த சக்கரத்தை ஏந்திய திருமால்,

ஆமை கயல் எனச் செயம் கொள் கோல குறள் அரித்தடங்கை

யான அரவணை சயந்தன் மருகோனே … ஆமை, கயல் மீன்

என்றும், வெற்றி கொண்ட பன்றி, வாமனர், விசாலமான கைகள் உடைய நரசிங்கம் என்றும் அவதாரங்கள் எடுத்த திருமால், பாம்பு அணையில் பள்ளி கொண்டவன் ஆகிய திருமாலின் மருகனே,

சோதி உரு எனத் திரண்டு கோல அருணையில் கலந்த

சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா … ஜோதி

உருவத்துடன் பிழம்பாக, அழகிய திருவண்ணாமலையில் தோன்றி

நின்றவனும், நிலவை (சடையில்) அணிந்தவனுமான, கயிலை

மலைவாசன் ஆகிய சிவபெருமான் அருளிய குழந்தையே,

தோகை மயில் எனச் சிறந்த ரூபி குற மகட்கு இரங்கி

தோள்கள் இறுகிடப் புணர்ந்த பெருமாளே. … கலாபம் கொண்ட

மயில் போல விளங்கும் உருவத்தினளாகிய குறப் பெண் வள்ளியிடம் பேரன்பு வைத்து, தோள்களை அழுந்த அணைத்து, அவளுடன் சேர்ந்த பெருமாளே.

London Swaminathan pictures from Oppiliappan Koil near Kumbakonam, March 2026.

***

பாரிஜாத மலர் கதை

வாலி மார்பைத் துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போடக்

கருது(ம்) மநு ராமன் … வாலியின் மார்பைப் பிளக்கவும், ஏழு

மராமரங்கள் முறிந்து விழவும், அம்பைச் செலுத்த எண்ணம் கொண்ட மநுவம்சத்தில் வந்த ராமனாகிய திருமால்,

வான் உலோகத்தில் அமரேசன் ஒலிக்க வளை ஊதி

மோகித்து விழ அருள் கூறும் நீல மேனிக்கு மருகா …

விண்ணுலகில் தேவர் தலைவனாகிய இந்திரன் அபயக் கூச்சலிட, சங்கை ஊதி, அந்த நாதத்தால் தேவர்கள் யாவரும் மயங்கி விழச்செய்த, அருள் மிகுந்துள்ள நீல நிறக் கண்ணனாகிய* திருமாலுக்கு மருகனே,

உதாரத்து வரு நீசர் வாழ்வைக் களையும் இளையோனே …

மேம்பாட்டுடன் படாடோபமாக வாழ்ந்து வந்த இழிந்தோர்களாகிய

அசுரர்களுடைய வாழ்வை ஒழித்து எறிந்த இளையவனே,

நேசமாகக் குறவர் தோகை மானைப் புணரும் நீப தோள்

ஒப்பு அரிய பெருமாளே. … அன்பு கூடும்படி, மயில் போன்ற

குறப்பெண்ணாகிய மான் அனைய வள்ளியைத் தழுவும் கடப்ப

மாலை அணிந்த தோளின் வலிமைக்கு இணை இல்லாத பெருமாளே.

இந்திராணி பாரிஜாதப் பூவை மானிடப் பெண்ணாகிய சத்யபாமைக்கு (கண்ணனின் தேவிக்குக்) கொடுக்கத் தகாது என்று சொன்னார்; ஆயினும் விஷ்ணுவின் வாகனமான கருடன், சத்யபாமையின் வேண்டுகோளுக்கு இரங்கி அச்செடியைப் பறித்து சத்யபாமையின் வீட்டில் நட்டார் கருடன்.

இந்திரன் முதலான தேவர்கள் சினந்து கண்ணனோடு போர் செய்ய, கண்ணன் சங்க நாதம் ஊதித் தேவர்களை மயங்கி விழச் செய்தார்.

***

புலி கரடி  காட்டெருமை

குருபர சரவணபவ சண்முக குக … குருபரனே, சரவணபவனே,

ஷண்முகனே, குகப் பெருமானே,

ஒருபர வயமியல் எயினர் மகள்சுக மண்டத் தனங்கள்புணர்

சண்டத் திரண்டபுஜ … ஒப்பற்ற மேலான வெற்றி பொருந்தியுள்ள

வேடர்மகள் வள்ளியின் இன்பம் நிறைந்துள்ள மார்பகங்களை

அணைந்துள்ள, வலிமை பொருந்தியதும், திரண்டுள்ளதுமான

திருப்புயங்களை உடையவனே,

உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை

நெறுநெறு நெறென உலவு விலங்கற் குறிஞ்சியுறை தொங்கற்

கடம்ப அருள் தருவாயே … புலிகள், கரடிகள், காட்டெருமைகள்,

காட்டானைகள் இவைகளெல்லாம் காவற்காடுகள் நெறுநெறுவென்று

களைந்து அழியும்படி உலாவுகின்ற மலைகள் உள்ள குறிஞ்சி நிலத்தில் வாழ்பவனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அருள் புரிவாயாக.

(??? .. ) அடிபடு முரசு தவில்பட கந்தக் கைதுந்துமி

தடந்தப்புடன்சலிகை கரடிகை யறைபறை திமிலை அபிநவ

சங்கு ஒற்றை கொம்பு குழல் … அடிக்கப் படுகின்ற முரசு வாத்தியம், தவில் மேளம் இவை சப்திக்க, அடிக்கும் தொழிற்குரிய தக்கை என்ற பறை, பேரிகை, பெரிய தப்பு என்ற பறை, இவையுடன் சல்லிகை என்ற பெரும் பறை வகை, கரடி கத்தினாற்போல் ஓசையுள்ள பறை, ஒலிக்கப்படும் திமிலை என்ற பறை, அதிசயிக்கத்தக்க புதுவகையான சங்கு, ஒரு தொளைக் கருவி, ஊதுகொம்பு, புல்லாங்குழல் இவையெல்லாம்vஎழுப்பும் ஓசை,

வங்கக் கருங்கடல் கொள் பிரளயம் இதுவென அதிர

உலகர்கள் அரகர சிவசிவ அபயம் அபயமெனுஞ் சத்தம்

எங்கும் எழ … மரக்கலங்கள் உலாவும் கரிய கடலில் ஏற்படும் பிரளய கால வெள்ளமோ இது என்னும் அதிர்ச்சியை உண்டாக்க, ஹரஹர, சிவசிவ, அடைக்கலம், அடைக்கலம், என்று கூச்சலிடும் சப்தமே உலகெங்கும் உண்டாக,

வெஞ் சத்தி கொண்டுபடை புக வானோர் (??? .. இங்கு முற்றுப்

பெறவில்லை) … கொடிய வேலாயுதம் கொண்டு, பூதப்படை உடன் வர,

தேவர்கள் (??? .. ) வனச மலர் நிகர், செம்பொற் சதங்கையடி

அன்பர்க்கு வந்துதவு பெருமாளே. … தாமரைமலர் போன்றதும்

சிவந்த பொன்னாலான சதங்கையை அணிந்ததுமான உன் திருவடியை அன்பர்களுக்கு எழுந்தருளி வந்து உதவுகின்ற பெருமாளே.

அரிய பெரிய பாடலில் இருந்த, கிடைத்த, ஒரு பகுதி மட்டுமே இங்கு அச்சில் தரப்பட்டுள்ளது.

****

ஒரே பாட்டில் 29 முக்கிய தலங்கள் !


இந்தப்பாட்டின் முக்கியக்கருத்து :– விஷ்ணு தலங்கள், சிவ பெருமான் கோவில்கள், தேவியரின் கோவில்கள் ஆகிய எல்லா வற்றிலும் உள்ள இறைவன் ஒருவனே; அவனைத்தான் நாம் பல்வேறு வடிவங்களில் வழிபடுகிறோம்

கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்

     உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு

          கொன்றை வேணியர் மாயூர மம்பெறு …… சிவகாசி

கொந்து லாவிய ராமே சுரந்தனி

     வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்

          கும்பு கூடிய வேளூர் பரங்கிரி …… தனில்வாழ்வே

செம்பு கேசுர மாடானை யின்புறு

     செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி

          தென்றன் மாகிரி நாடாள வந்தவ …… செகநாதஞ்

செஞ்சொ லேரக மாவா வினன்குடி

     குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்

          செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் …… வருதேவே

கம்பை மாவடி மீதேய சுந்தர

     கம்பு லாவிய காவேரி சங்கமு

          கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர …… வயலூரா

கந்த மேவிய போரூர் நடம்புரி

     தென்சி வாயமு மேயா யகம்படு

          கண்டி யூர்வரு சாமீக டம்பணி …… மணிமார்பா

எம்பி ரானொடு வாதாடு மங்கையர்

     உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி

          எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு …… துதியோதும்

இந்தி ராணிதன் மாதோடு நன்குற

     மங்கை மானையு மாலாய்ம ணந்துல

          கெங்கு மேவிய தேவால யந்தொறு …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் … (1) கும்பகோணம்,

அதனுடன் (2) திருவாரூர், (3) சிதம்பரம்,

உம்பர் வாழ்வுறு சீகாழி … தேவர்கள் விரும்பி வாழ்க்கை கொள்ளும்

(4) சீகாழி,

நின்றிடு கொன்றை வேணியர் மாயூரம் … நிலையான கொன்றை

மலர்ச்சடையர் சிவனுடைய (5) மாயூரம்,

அம்பெறு சிவகாசி … அழகு வாய்ந்த (6) சிவகாசி,

கொந்து உலாவிய ராமேசுரம் … திரளான பக்த ஜனங்கள்

கூட்டமாக உலாவும் (7) ராமேஸ்வரம்,

தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் … ஒப்பற்ற நிலையில்

வந்து பூஜை செய்கின்ற, நான்கு வேதங்களும் வல்ல மறையவர்கள்

கும்பு கூடிய வேளூர் … கூட்டமாகக் கூடும் (8) புள்ளிருக்கும்

வேளூர் – வைத்தீஸ்வரன் கோயில்,

பரங்கிரி தனில்வாழ்வே … (9) திருப்பரங்குன்றம் எனப்படும்

தலங்களில் வீற்றிருக்கும் செல்வமே,

செம்பு கேசுரம் ஆடானை … (10) ஜம்புகேஸ்வரம் – திருவானைக்கா,

(11) திருவாடானை,

இன்புறு செந்தில் ஏடகம் … நீ மகிழ்ந்து வாழும் (12) திருச்செந்தூர்,

(13) திருவேடகம்,

வாழ்சோலை யங்கிரி … நீ வாழ்கின்ற சோலைமலையாம் (14)

பழமுதிர்ச்சோலை,

தென்றன் மாகிரி … தென்றல் காற்றுக்குப் பிறப்பிடமான பெருமலை

(15) பொதியமலை,

நாடாள வந்தவ … என்னும் தலங்களில் எல்லாம் வீற்றிருக்க வந்தவனே,

செகநாதம் … (வடக்கே) பூரித்தலத்தில் (16) ஜெகந்நாதன் உருவில்

காட்சி தந்தவனே,

செஞ்சொல் ஏரக … செம்மையான உபதேசச் சொல்லை நீ உன்

தந்தைக்குச் சொன்ன (17) திருவேரகம்,

மாவாவினன்குடி … சிறந்த (18) திருவாவினன்குடி – பழநி,

குன்று தோறுடன் … (19) குன்று தோறாடல், இவையுடன்

மூதூர் விரிஞ்சை … பழம்பதி எனப்படும் (20) திருப்புனவாயில்,

விரிஞ்சிபுரம் எனப்படும் (21) திருவிரிஞ்சை,

நல் செம்பொன் மேனிய … ஆகிய தலங்களில் அமரும் சிறந்த

செம்பொன் நிறம் கொண்ட திருமேனியனே,

சோணாடு வஞ்சியில் வருதேவே … சோழநாட்டின் தலைநகராகிய

வஞ்சி என்னும் (22) கருவூரில் எழுந்தருளியுள்ள தெய்வமே,

கம்பை மாவடி மீதேய சுந்தர … கம்பாநதி தீரத்தில் உள்ள (23)

காஞ்சியில் மாமரத்தின் அடியில், மேலே லிங்க ரூபத்தில் பொருந்தி

விளங்கும் அழகனே,

கம்பு உலாவிய காவேரி சங்கமுகம் … சங்குகள் உலவும் காவேரி

ஆறு கடலில் சங்கமம் ஆகும் (24) காவிரிப் பூம்பட்டினத்திலும்,

சிராமலை வாழ்தேவ தந்திர … (25) திருச்சிராப்பள்ளி மலையில்

வாழ்கின்ற தேவ சேனாபதியே,

வயலூரா … (26) வயலூர்ப் பெருமானே,

கந்த மேவிய போரூர் … நறுமணங்கள் நிரம்பிய (27) திருப்போரூர்,

நடம்புரி தென்சிவாயமு மேயாய் … நீ நடனம் புரிந்த தலமாம்

அழகிய சிவாயம் என்ற (28) திருவாட்போக்கி எனப்படும் தலங்களில் விளங்குபவனே,

அகம்படு கண்டி யூர்வரு சாமீ … பாவத்தைத் தொலைக்கும் (29)

திருக்கண்டியூரில் எழுந்தருளும் ஸ்வாமியே,

க டம்பணி மணிமார்பா … கடப்ப மாலையை அணிந்துள்ள அழகிய

மார்பனே,

எம்பிரானொடு வாதாடு மங்கையர் … எங்கள் சிவபிரானுடன்

நடனப் போட்டி செய்த காளியும், அவளைச் சேர்ந்த தோழியரும்,

உம்பர் வாணி பொன் நீள்மால் சவுந்தரி … தேவலோகத்து

சரஸ்வதியும், லக்ஷ்மி எனப்படும் நெடுமாலுக்கு உரிய அழகியும், ஆகியஇவர்கள் யாவரும்

எந்த நாள்தொறும் ஏர்பாக நின்று … தினந்தோறும் உள்ளத்தில்

எழுச்சியுடன் நின்று,

உறு துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு … பொருந்திய

துதியுடன் போற்றுகின்ற தேவயானையாம், இந்திரன் மனைவி சசியின் மகளோடு,

நன்குற மங்கை மானையு … குறக்குலத்தில் தோன்றிய பெண் மான்

வள்ளியையும்

மாலாய்மணந்து … ஆசையுடன் திருமணம் செய்து கொண்டு

உலகெங்கு மேவிய தேவாலயந்தொறு பெருமாளே. …

உலகத்தில் எங்குமுள்ள தேவாலயங்கள்* தோறும் வீற்றிருக்கும்

பெருமாளே.

குறிப்பு: முருகனுக்கு மிகவும் உகந்த 29 க்ஷேத்திரங்களைத் தொகுத்தளிக்கும் சிறப்பான பாடல் இது.

(1) கும்பகோணம் – காசி விஸ்வநாதர், கும்பேசர், நாகேஸ்வரர் கோயில்கள் உள்ள மகாமகத் தலம்,

(2) திருவாரூர் – சப்த விடங்கத் தலங்களுள் முதன்மையான தலம்,

(3) சிதம்பரம் – பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம் – நடராஜப் பெருமான் நடனமாடிய கனகசபை,

(4) சீகாழி – சம்பந்தர் அவதரித்த தலம், சூரனுக்கு அஞ்சி இந்திரன் மூங்கிலாக மாறி ஒளிந்த இடம்,

(5) மாயூரம் – பார்வதி மயிலாக மாறி சிவனை வழிபட்ட தலம்,

(6) சிவகாசி – பாண்டிய நாட்டில் வட நாட்டுக் காசிக்கு சமமான புண்ணியத் தலம்,

(7) ராமேஸ்வரம் – சிவனை ஸ்ரீராமன் பூஜை செய்து வழிபட்ட க்ஷேத்திரம்,

(8) வைத்தீஸ்வரன்கோயில் – முருகன் முத்துக்குமரனாகக் காட்சி தரும் தலம், செவ்வாய்த் தலம்,

(9) திருப்பரங்குன்றம் – ஆறு படைவீடுகளில் முதலாவது, மதுரைக்கு அருகில் உள்ளது,

(10) ஜம்புகேஸ்வரம் – திருவானைக்கா – பஞ்ச பூதத் தலங்களில் அப்புத்தலம், திருச்சிக்கு வடக்கே 2 மைல்,

(11) திருவாடானை – மானாமதுரைக்கு 40 மைலில் சிவகங்கைக்கு அருகே உள்ள தலம்,

(12) திருச்செந்தூர் – ஆறுபடைவீட்டில் இரண்டாம் படைவீடு, திருநெல்வேலியிலிருந்து 35 மைல்,

(13) திருவேடகம் – சம்பந்தர் மதுரையில் இட்ட ஏடு வைகையில் மேற்கே எதிர்த்துச் சென்று தங்கிய தலம்,

(14) பழமுதிர்ச்சோலை – மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள ஆறாவது படைவீடு,

(15) பொதியமலை – பாபநாசம், அம்பாசமுத்திரத்திலிருந்து 7 மைலில் உள்ளது, அகத்தியர் க்ஷேத்திரம்,

(16) பூரி ஜெகந்நாதம் – ஒரிஸ்ஸா கடற்கரையிலுள்ள விஷ்ணு, ஸ்வாமிகளுக்கு முருகனாகத் தெரிகிறார்,

(17) திருவேரகம் – சுவாமிமலை – தந்தை சிவனுக்கு முருகன் உபதேசித்த நான்காம் படைவீடு,

(18) திருஆவினன்குடி – பழநி மலையிலும் ஆவினன்குடி அடிவாரத்திலும் உள்ள மூன்றாம் படைவீடு,

(19) குன்றுதோறாடல் – பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் ஐந்தாவது படைவீடு,

(20) மூதூர் – திருப்புனவாயில் – வேதங்கள் பூஜித்த தலம், திருவாடானைக்கு 12 மைலில் உள்ளது,

(21) விரிஞ்சை – விரிஞ்சிபுரம், வேலூருக்கு மேற்கே 8 மைலில் உள்ளது,

22) வஞ்சி – சோணாட்டுவஞ்சி கருவூர், திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ளது,

(23) கம்பை மாவடி – காஞ்சீபுரத்தில், ஏகாம்பரநாதர் கோயிலில் மாமரத்தின் கீழ் இருக்கும் முருகன்,

(24) காவேரி சங்கமுகம் – காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) – சீகாழிக்குத் தென்கிழக்கில் 10 மைல், பட்டினத்தார் ஊர்,

   (2 கோயில்கள் – பல்லவனீச்சரம், சாயாவனம் – இவை வைப்புத்தலங்கள்).

(25) சிராமலை – திருச்சிராப்பள்ளி, திரிசிரன் என்ற அரக்கன் பூஜித்த திருப்பதி, தாயுமானவர் தலம்,

(26) வயலூர் – திருச்சிக்கு 6 மைல், ஸ்வாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரம் கிடைத்த தலம்,

(27) திருப்போரூர் – செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைல், சமரமராபுரி, என்று வழங்கும் தலம்,

(28) சிவாயம் – வாட்போக்கி – குழித்தலைக்கு தெற்கே 5 மைலில் உள்ள ரத்னகிரி, என்ற தலம்,

(29) திருக்கண்டியூர் – தஞ்சாவூருக்கு வடக்கே 6 மைலில் உள்ள சப்தஸ்தான க்ஷேத்திரம்.

—subham—

Tags- திருப்புகழ், தசாவதாரம், பாரிஜாத மலர், ஒரே பாட்டில் 29 முக்கிய தலங்கள்,  Part 77

Leave a comment

Leave a comment