ரமண மஹரிஷி அருளுரை: மகாத்மாவின் தரிசன மஹிமை! (Post No.15,623)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,623

Date uploaded in London – 16 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

14-4-26 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

ரமண மஹரிஷி அருளுரை : மகாத்மாவின் தரிசன மஹிமை! 

ச. நாகராஜன்     

1

பகவான் ரமணரின் அவதார தினம் : 30-12-1879

மஹா சமாதி தினம்              :  14-4-1950

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஶ்ரீ பகவான் அவதரித்த புண்ணியப் பெருநாளாம் புனர்வசு நட்சத்திரத்தன்று பகவானின் ஜயந்தி கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பகவான் மஹாநிர்வாணம் அடைந்த நாளன்று பகவானின் ஆராதனை சிறப்பாக நடத்தப்படுகிறது.

திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் அன்றாடம் பக்தர்கள் பகவானின் முன்னிலையில் கூடுவது வழக்கம். பல்வேறு விதமான கேள்விகளுக்கு அற்புதமாக பகவான் விடையளிப்பது வழக்கம். அங்கு நடக்கும் அற்புதங்களும் நிகழ்வுகளும் முறையாகப் பல பக்தர்களால் தொகுக்கப்பட்டுள்ளன.

மகானின் தரிசனம் பற்றிய ஒரு நிகழ்வு இது: 

1-10-1936 Talks with Sri Ramana Maharshi Volume 2

டாக்டர் சையத் என்ற முஸ்லீம் பேராசிரியர் ரமணாஸ்ரமத்திற்கு வந்திருந்தார். “அட, மஹரிஷி புரியும் அற்புதம் தான் என்ன? இங்கு வந்தோருக்கு உள்ளம் அமைதி அடைகிறதே” என்று வியந்தார்.

பேச்சு மஹான்களின் தரிசனத்தால் ஏற்படும் நல்விளைவுகளைப் பற்றித் தொடர்ந்தது.

அப்போது பகவான் கூறலானார்:

மாத்வ சம்பிரதாய மகானான தத்வராயர் தனது குருவான ஸ்வரூபானந்தர் பற்றி ஒரு பரணியை இயற்றினார். இதற்கு பண்டிதர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர். “ஒரு பெரிய போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரருக்கு மட்டுமே பரணி பாடப்படவேண்டும் என்றும் ஸ்வரூபானந்தர் மக்களுக்குத் தெரியாதவர் என்பதோடு தனியான இடத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தவர், அவர் மீது பரணி பாடுதல் கூடாது. அதற்கு அவர் தகுதியற்றவர்” என்றும் அந்த பண்டிதர்கள் வாதிட்டனர்.

தத்வராயர் அந்தப் பண்டிதர்கள் அனைவரையும் தன் குருநாதர் முன் வருமாறு கூறினார். அவரது குருநாதர் ஆயிரம் யானைகளைக் கொல்லக் கூடியவர் தானா என்பதை அவர்களே பார்க்கலாம் என்றார் அவர்.

அனைத்து பண்டிதர்களும் இதற்குச் சம்மதித்து ஸ்வரூபானந்தர் முன் கூடினர்.

அவர் முன் வந்தவுடன் அனைவரும் பேச்சற்று ஊமைகளாயினர். ஒரு அசைவுமின்றி ஆழ்ந்த அமைதியை அவர்கள் அனுபவித்தனர்.  சில நாட்கள் இப்படியே ஓடின. தங்கள் உணர்வு திரும்பியவுடன் அனைத்துப் பண்டிதர்களும் ஸ்வரூபானந்தரையும் தத்வராயரையும் நமஸ்கரித்தனர்.

தாங்கள் மிகவும் திருப்தி அடைந்துவிட்டதாக ஒருமித்து அவர்கள் கூறினர்.

ஆயிரம் யானைகளைக் கொல்வதை விட அதை விட கஷ்டமான காரியமான பலரது அகங்காரத்தை அவர் கொன்று விட்டார் என்பது அனைவருக்கும் புரிந்தது.

இதைக் கூறி முடித்த ரமண மஹரிஷி, “இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. மஹாத்மாவை தரிசிக்கும் போது உள்ளார்ந்த அமைதி கிட்டும் என்பது தான் அது” என்றார்.

12-6-1937

அலகாபாத் பல்கலை கழகத்திலிருந்து திரு தாஸ் என்பவர் ரமணாஸ்ரமம் வந்து பகவானைத் தரிசித்து பல கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றார்.

அவர், “ஒரு பெரும் ஞானியைக் கண்டுபிடிப்பதற்கான அடிப்படை சோதனைகள் யாவை என்று கேட்டார்.உடனே பகவான்  பதிலிறுத்தார்.

“ஒரு ஞானியை இன்னொரு ஞானியால் மட்டுமே அறிய முடியும். ஒரு ஞானியின் சூழ்நிலையில் பெரும் மன அமைதி ஒருவருக்குக் கிட்டினாலேயே அவர் மகான் தான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்” என்றார் பகவான். 

இந்த மன அமைதியை ரமணாஸ்ரமம் வந்த ஒவ்வொருவரும் அனுபவித்தனர்.

அவரை பகவான் என்று கொண்டாடினர்.

**

Leave a comment

Leave a comment