WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,626
Date uploaded in London – 17 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (51) சிவபிரான் சுகேசனுக்கு அனுக்ரஹம் அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தில் நான்காவது ஸர்க்கமாக அமைவது ‘ஸுகேசன் என்ற அரக்கனின் உற்பத்தி’ என்ற ஸர்க்கமாகும்.
அகஸ்திய மஹரிஷியிடம் ஶ்ரீ ராமர் அரக்கர்களுக்கு மூல புருஷன் யார்?” என்று கேட்க அகஸ்தியர் அரக்கர்களின் வரலாற்றை விரிவாகக் கூறுகிறார்.
அந்த அரக்கர்களின் வரலாற்றில் அவர் கூறியதாவது:
ஹேதி என்ற அரக்கன் வித்யுத்கேசன் என்ற புத்திரனைப் பெற்றான். வித்யுத்கேசனுக்கும் சந்த்யா என்பவளின் புத்திரியான ஸாலகடங்கடை என்பவளுக்கும் திருமணம் நடந்தது. அவள் ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். பெற்ற குழந்தையை அப்படியே விட்டு விட்டு தன் கணவனுடன் அவள் காமத்தில் மூழ்கி விட்டாள்.
குழந்தை தானாகவே வாயில் விரலை வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தது.
அவ்வழியே சிவபிரானுடன் சென்று கொண்டிருந்த பார்வதி தேவி அழும் குழந்தையைப் பார்த்து இரக்கம் கொண்டாள்.
தம் ராக்ஷஸாத்மஜம் சக்ரே மாதுரேவ வய:சமம் | அமரம் சைவ தம் க்ருத்வா மஹாதேவோக்ஷரோவ்யய: ||
உத்தரகாண்டம் நான்காவது ஸர்க்கம், ஸ்லோக எண் 21
அக்ஷர: – நித்தியமானவரும்
அவ்யய: – பலன்களை அளிக்க வல்லவருமான
மஹாதேவ: ஏவ – ஶ்ரீ மஹாதேவரே
தம் – அந்த’
ராக்ஷஸாத்மஜம் – ராக்ஷஸி பெற்ற குழந்தையை
அமரம் க்ருத்வா – மரணமில்லாததாய்ச் செய்து
ச – அத்துடன்
தம் – அவனை
மாது: – தாயாருக்கு
வய: சமம் ஏவ – ஸமமான வயதுள்ளவனாகவும்
சக்ரே – அனுக்ரஹித்து அருளினார்
இது மட்டுமல்ல, பார்வதி தேவியின் பிரியத்திற்கு அந்தக் குழந்தை ஆளானதால் தேவிக்குப் பிரியமானதைச் செய்து முடிக்கவேண்டும் என்று எண்ணிய சிவபிரான் ஆகாயத்தில் எழுந்து செல்லவல்ல ஒரு நகரத்தைத் தந்தருளினார். உமாதேவியாராலும் அரக்கர்களுக்குக் கருவின் உடனே தரித்தலும், உடனே பிரசவித்தலும், அதே சமயத்தில் தாயின் சமமான வயதையும் பெறுதலும் ஆக்கினையாக விதித்து அருளப்பட்டது.
இப்படியாக அகஸ்திய மஹரிஷி சுகேசனின் வரலாற்றை ராமருக்கு எடுத்துரைத்தார்.
இப்படி சிவபிரான் மற்றும் உமாதேவியாரின் அனுக்ரஹம் சுகேசனுக்கு அருளப்பட்டது. இதை வரமாகக் கொள்ள முடியாது. அனுக்ரஹமாகக் கொள்ளலாம்.
** தொடரும்