
Written by London Swaminathan
Post No. 15,627
Date uploaded in London –17 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 78
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 78
***
இலங்கையில் பிரம்மா அந்திமான் என்ற வேடனாக பிறந்த கதை

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி …… அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி …… அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி …… வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி …… வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் …… வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம …… முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு …… மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ……… (from kaumaram.com)
அகரமும் ஆகி … எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல
எப்பொருளுக்கும் முதன்மையாகி
அதிபனும் ஆகி … எல்லாவற்றிற்கும் தலைவனாகி
அதிகமும் ஆகி … எல்லோருக்கும் மேம்பட்டவனாகி
அகமாகி … யாவர்க்கும் உள்ள – யான் – என்னும் பொருளாகி
அயனென வாகி … பிரமன் என்னும் படைப்பவன் ஆகி
அரியென வாகி … திருமால் என்னும் காப்பவன் ஆகி
அரனென வாகி … சிவன் என்னும் அழிப்பவனாகி
அவர் மேலாய் … அம்மூவருக்கும்மேலான பொருளாகி
இகரமும் ஆகி … இங்குள்ள பொருட்கள் யாவுமாகி
எவைகளும்ஆகி … எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி
இனிமையும் ஆகி … இனிமை தரும் பொருளாகி
வருவோனே … வருபவனே
இருனில மீதில் … இந்த பெரிய பூமியில்
எளியனும் வாழ … எளியவனாகிய இந்த அடியேனும் வாழ
எனதுமுன் ஓடி வரவேணும் … எனதுமுன் ஓடி வரவேணும்
மகபதி ஆகி … யாகங்களுக்குத் தலைவனாக
மருவும் வலாரி … விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)
மகிழ் களி கூரும் … மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும்
வடிவோனே … அழகிய வடிவம் கொண்டவனே
வனமுறை வேடன் … காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*)
அருளிய பூஜை மகிழ் … செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற
கதிர்காமம் உடையோனே … கதிர்காமம் (உன் பதியாக)
உடையவனே
ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி … (அதே ஒலி)
என ஆடு மயிலோனே … என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே
திருமலிவான … லக்ஷ்மிகரம் நிறைந்த
பழமுதிர்ச்சோலை மலை மிசை … பழமுதிர்ச்சோலை மலையின்மீது
மேவு பெருமாளே. … வீற்றிருக்கும் பெருமாளே.
* முருகனது வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட பிரமனை முருகன் சபிக்க, பிரமன் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில் பிறந்தான். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம் பெற்று கதிர்காம வேலனை கிருத்திகை விரதம் இருந்து வணங்கி, அருள் பெற்ற வரலாறு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
****
வாகனங்களின் கதை
முடுகு வீர சூர பத்மர் … வேகமாக எதிர்த்துவந்த வீரர்களான
சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன்* ஆகியோரின்
தலையின் மூளை நீறு பட்டு முடிவதாக … தலைகளில் உள்ள
மூளைகள் சிதறித் தூளாகி முடிவுபெற,
ஆடு நிர்த்த மயில்வீரா … (துடிக் கூத்து) நடனம் ஆடிய
மயிலின் மீதமர்ந்த வீரனே,
முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் …
முநிவர்களும், தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தமான சோலை
மாமலைக்குள் (பழமுதிர்ச்சோலைக்குள்**) வீற்றிருக்கும்
முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே. … வேல் முருகனே,
தியாகமூர்த்தியாம் சிவபிரான் ஈன்ற பெருமாளே.
* சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய பூதகணங்கள் கருடன் முதலிய வாகனங்களுக்குப் பெருந் தொல்லை தந்தமையால் முருகனால் அசுரர்களாக ஆகுமாறு சபிக்கப்பட்டனர். சாபம் நீங்கும்போது அவரவர்கள் விரும்பியபடியே சிங்கமுகன் துர்க்கைக்கு சிம்மவாகனமாகவும், தாரகன் ஐயனாருக்கு யானைவாகனமாகவும், சூரன் கந்தனுக்கு மயில் வாகனமாகவும், பத்மன் முருகனுக்குச் சேவற்கொடியாகவும் ஆனார்கள் – கந்த புராணம்.
** பழமுதிர்ச்சோலை மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள கள்ளழகர் கோயில் என்ற தலமாகும்.
***
ஆறுமுகம் என்பதன் பொருள்
ஆதியொடு மந்த மாகிய நலங்கள் … முதலில் தொடங்கி இறுதி
வரை உள்ள சகல நலன்களும்
ஆறுமுக மென்று தெரியேனே … ஆறுமுகம்* என்ற உண்மையை
நான் தெரிந்து கொள்ளவில்லையே.
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது … ஒப்பற்ற ஓங்கார மந்திர
ரூபநிலை கொண்டது
ஆடுமயி லென்பது அறியேனே … ஆடுகின்ற நிலையிலுள்ள
மயில்தான் என்று அறியவில்லையே.
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு … நாதமும் விந்துவும்
சேர்ந்து உருவாக்கிய இவ்வுடலால்
நானிலம் அலைந்து திரிவேனே … உலகமெல்லாம் அலைந்து
திரிகின்றேனே.
நாகம் அணிகின்ற நாதநிலை கண்டு … குண்டலினியாக ஓடும்
பிராணவாயு அடைகின்ற ஆறாவது நிலையை (ஆக்ஞாசக்ரமாகிய ஒளி வீசும் ஞான சதாசிவ நிலையைக்) கண்டு தரிசித்து**
நாடியதில் நின்று தொழுகேனே … விருப்புற்று அந்த நிலையிலே
நின்று நான் தொழவில்லையே.
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற … அந்த ஞான ஒளியை
உணர்கின்ற வாழ்வே சிவ வாழ்வு என்ற
சோகமது தந்து எனையாள்வாய் … ( +அகம்) அதுவே நான்
என்ற நிலை தந்து, என்னை ஆள்வாய்.
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று … சூரர் குலத்தை
வென்று வெற்றியோடு போய்
சோலைமலை நின்ற பெருமாளே. … பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* ஆறுமுகம் என்ற தத்துவம்:
1. அ, உ, ம், நாதம், விந்து, சக்தி.
2. சிவனது ஐந்து முகங்களும் தேவியின் ஒரு முகமும்.
3. ஆதி, இச்சா, கிரியா, பரா, ஞான, குடிலா சக்திகள் என்ற ஆறு சக்திகள்.
4. ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறு குணங்கள்.
***
சீதை ஆபரணங்களை எறிந்த கதை சங்க இலக்கியத்தில் உள்ளது !

அரிமைந்தன்புகழ் மாருதி என்றுள கவியின் சங்கம் …
சூரியனின் மைந்தனான சுக்ரீவன் புகழ் மிக்க வானர மந்திரியாகிய மாருதியினிடத்தில்
இராகவ புங்கவன் அறிவுங் கண்டு அருள்வாயென
அன்பொடு தர … இராகவனாகிய மரவுறி தரித்தவனது அறிவின்
திறத்தைக் கண்டு அருள்வாய் என்று அன்போடு அனுப்ப,
வேறுன் அருளுங் கண்டத ராபதி வன்புறு விஜயங்
கொண்டெழு போது … அநுமன் இராமனின் அருளைக் கண்டு,
மேலும் கூறினான் “அந்த அண்டத்து அதிபதி (இராவணன்)
வலுக்கட்டாயமாக (சீதையை அபகரித்து) வானில் புஷ்பக விமானத்தில் கொண்டு செல்லும்போது,
புலம்பிய அகமும் பைந்தொடி சீதை மறைந்திட வழிதோறும் …
மனம் வருந்தி வாயாரப் புலம்பிய பசுங்கொடி போன்ற சீதையும்
மறைவாக, சென்ற வழியில் எல்லாம்,
மருவுங் குண்டலம் ஆழி சிலம்புகள் கடகந் தண்டைபொன்
நூபுர மஞ்சரி … தான் அணிந்திருந்த நகைகளாகிய குண்டலம்,
வளைகள், சிலம்புகள், கொலுசு, பொன் சதங்கை, மாலைகள்,
மணியின் பந்தெறி வாயிது பந்தென … மணிகள் ஆகியவற்றைப்
பந்து போல் வீசி எறிந்தாள், அந்த நகை மூட்டை இதுதான்” என்று
தந்திட,
முதலான மலையுஞ் சங்கிலி போலம ருங்குவிண் முழுதுங்
கண்ட நராயணன் … மேரு மலை அளவுக்கு உயர்ந்து பக்கத்தில்
தொடராக உள்ள வானம் அனைத்தையும் (திரிவிக்ரமாவதாரத்தில்)
பாதத்தால் அளந்த நாராயணனாம் திருமால்
அன்புறு மருகன் தென்புன வாயில் அமர்ந்தருள்
பெருமாளே. … மிகவும் அன்பு கொண்ட மருகனாம், தென் திசையில் உள்ள புனவாயில்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* ‘புனவாயில்’ என்ற ஊர் இப்பொழுது ‘திருப்புனவாசல்’ என்று விளங்குகின்றது.
***
My Old Article is given below

குரங்கு அணிந்த நகைகள் – கம்பனும் புறநானூற்றுப் புலவனும் (Post.9072)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9072
Date uploaded in London – –24 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் சீதையை இராவணன் கடத்திச் சென்றபோது சீதை கீழே எறிந்த நகைகளை குரங்குகள் எவ்வாறு அணிந்தன என்ற அரிய செய்தி புறநானூற்றில் உள்ளது. இதை அனந்தராம தீக்ஷிதர் போன்ற உபன்யாசகர்கள் நகைச் சுவை ததும்பச் சொல்லும்போது அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஆரவாரித்து மகிழ்வர் . புறநானூற்றுப் புலவர் ஊண் பொதிப் பசுங்குடையார்தான் இதை முதல் முதலில் பாடியுள்ளார். பாடல் எண் 378. இது தவிர அக நானூற்றுப் பாடல் ஒன்றிலும் ஒரு ராமாயணக் காட்சி வருகிறது . அதுவும் வேறு எங்கிலும் காணக்கிடக்கில . நிற்க.
கம்பனும் இந்த குரங்கு நகை அணியும் காட்சியை பால காண்டத்தில் ‘வரைக் காட்சிப் படலத்தில்’ பயன்படுத்துகிறான். ஒருவேளை கம்பன் புறநானூற்றைக் கரைத்து குடித்திருக்கலாம் அல்லது அந்தக் காலத்தில் வால்மீகி விட்டு விட் ட செவி வழிச் செய்திகளை பிறர் பாடியிருக்கலாம்.
புறநானூற்றுப் புலவன் ஊண் பதிப் பசுங்குடையார் (378) சோழன் செருப்பாழி எறிந்த இளஞ் சேட் சென்னியைப் பாடுகையில் சொல்கிறார் –
தென் பரதவர் மிடல் சாய ….………..
கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாங்கு
அறா அ அறு நகை இனிது பெற்றிகுமே —
இருங்கிளைத் தலைமை எய்தி
அரும்படர் எவ்வம் உழந்தன் தலையே – 378
பொருள் :–
என்னைப் போன்ற பரிசிலர்க்கு சோழ மன்னன் நகைகளை வாரி வழங்கினான் . வறுமையால் வருந்திய என் சுற்றத்தார் அவற்றைக்கொண்டு விரல்களில் அணியத் தக்கவற்றை காதில் அணிபவரும்
காதில் பூணத் தக்கவற்றை விரலில் அணிபவரும்
இடுப்புக்குரியவற்றை கழுத்தில் அணிபவரும்
கழுத்துக்குரியவற்றை இடையில் அணிந்து கொள்பவருமாகி இருந்த காட்சி எப்படி இருந்தது தெரியுமா ?
இராமனுடன் வந்த சீதையை, மிக்க வலிமையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின்
, சிவந்த முகமுடைய மந்திகள் அந்த நகைகளை தாறுமாறாக அணிந்ததைப் பார்த்து கண்டவர் எல்லாம் நகைத்து மகிழ்ந்தது போல இருந்தது
அது போல பெரிய சுற்றத்துக்குத் தலைமை பூண்ட நாங்கள் மகிழ்ந்தோம். இதுவரை எங்களை வறுமை வாட்டி வந்தது
XXXX

கம்பன் இதை எப்படிப் பயன்படுத்துகிறான் என்றும் காண்போம் —
சரம் பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மின் ஆடா
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர்மணிக் கோவை ஆரம்
மரம்பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும் மாதோ
–வரைக் காட்சிப் படலம், கம்ப ராமாயணம்
பொருள் :–
தசரதன் படைகளும் அயோத்தி மக்களும் சீதா – ராமன் கல்யாணத்துக்காக மிதிலை நகரை நோக்கிச் செல்கின்றனர் .அப்போது மலையைக் கடந்து செல்லும்போது நடக்கும் ஒரு நிகழ்ச்சி இது. தேவ மகளிர்க்கு அம்பு பொருந்திய வில் போன்ற புருவங்கள் உள . அவர்கள் வீணை , யாழ் முதலிய நரம்பு வாத்தியங்களுடன் பாடுகின்றனர் . அவர்கள் மயில்களைப் போல நடனம் ஆடுகின்றனர் அத்தேவமகளிர் கணவனுடன் ஊடல் கொண்டதால் , வெறுத்து , முத்து மாலைகளையும் இரத்தின மாலைகளையும் கழற்றி எறிகின்றனர் . அவற்றை மரத்தில் வாழும் ஆண் குரங்குகள் எடுத்து பெண் குரங்குகளுக்குப் போடுகின்றன. அப்போது அவற்றை அணிந்த்துக்கொண்ட பெண் குரங்குகளும் அதைக் கண்டு மகிழும் .
இப்படி கம்பன் திடீரென குரங்குகளுக்கு நகை போட்டு மகிழ்வது புறநானுற்றில் கண்ட ராமாயணக் காட்சி நினைவுக்கு வந்ததால்தான் என்பதை சொல்லத் தேவையில்லை .
–Subham—
TAGS: திருப்புகழில், அருணகிரிநாதர் , அரிய செய்திகள், Part 78, சீதை ஆபரணங்களை எறிந்த கதை, வாகனங்களின் கதை , ஆறுமுகம் என்பதன் பொருள் , PART 78, குரங்கு, நகை, கம்பன், ஊண்பொதிப் பசுங்குடையார், புறநானூறு 378