சங்க காலத்தில் விலைமாதர்களும் விபச்சாரமும் (Post No.15,666)

Written by London Swaminathan

Post No. 15,666

Date uploaded in London –28 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ENGLISH VERSION OF Prostitution in Ancient Tamil Nadu; Parattaiyar or public women in Narrinai (Post No.15,663) WAS POSTED YESTERDAY)

உலகில் விபச்சாரமும் விலை மகள்களும் இல்லாத எந்த சமுதாயமும் இல்லை; கலாசாரமும் இல்லை ; எல்லா மத நூல்களிலும் இது குறித்த எச்சரிக்கைகள் உள்ளன . எனினும் சங்கத் தமிழ் பாடல்களிலும் அருணகிரிநாதர் யாத்த திருப்புகழ் பாடல்களிலும் இது சற்று தூக்கலாகக் காணப்படுகிறது . இதனால் இது குறித்து தமிழ் அறிஞர்கள் கதைக்கவே பயப்படுகிறார்கள் ; கே கே பிள்ளை எழுதிய ஆங்கில நூலில் நற்றிணையில் உள்ள விலைமாதர்கள் பாடல்களை எழுதி இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்கிறார் . எங்கள் குடும்ப நண்பரும் மதுரை வடக்கு மாசிவீதியில் எங்கள் வீட்டுக்கு அடுத்து வசித்தவரும் கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் பெற்றவருமான டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் (எஸ் ஆர் கே ) இது குறித்து மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் :

“அகத்தினை இலக்கியம் உலக இயல் வாழ்வின் படப்பிடிப்பு இல்லை என்பதை இன்னும் ஒரு வகையிலும் ஊகிக்கலாம். சங்க காலத்தில் பரத்தையர் இருந்தனர் என்பதும் , மேல்வருக்க இளைஞர் பலர் பரத்தையர்களை நாடி இழிவுற்றனர் என்பதும் மதுரைக் காஞ்சிசிலப்பதிகாரம் முதலியவற்றால்  விளங்குவது மெய்யே . ஆனால் பரத்தைமை என்பது சிறுபான்மையோரைப் பிடித்த நோயே. மக்கட் தொகையுடன் ஒப்பிடும்போது விலைமகளிர் சிலரே . அவர்களும் பெரும்பாலும் புகார், மதுரை முதலிய பெரு நகரங்களிலே வாழ்ந்தனர் . ஆனால் அகத்திணை இலக்கியத் தலைவர்கள் மனைவியரை நீங்கி பரத்தையரை நாடிச் செல்வோராகக் காட்சி தருகின்றனர் . 966 கற்பியர் பாக்களில் 279 பரத்தையர் பிரிவுக்குரியனவாக உள்ளன. இது உண்மை வாழ்வின் வெளியீடு எனில் , குல மகளிர் பாதி, விலை மகளிர் பாதியாகப் பெண்குலம் அமைந்திருந்தது என்று தோன்றும். அத்தகைய இழிநிலை சமுதாயத்துக்கு ஒருபோதும் வாய்க்கவில்லை என்பது வெளிப்படை . எனவே அகத்திணை கற்பனையை சமுதாய வாழ்வின் சித்திரமாகக் கொள்வது பிழையே “.

— இந்தியப்  பண்பாடும் தமிழரும் – எஸ் இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை , 1971

தொல்காப்பியரும் திருவள்ளுவரும் கூட இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழர்களை எச்சரிக்கின்றனர் .

***

இனி நற்றிணையில் வரும் பாடல்களில் விலைமகளிர் பற்றி வரும் இடங்களைக் காண்போம்.

எல்லாப் பாடல்களும் மருதத் திணையில் உள்ளவை  ;  அந்த திணையில் இப்படிப்படுவது ஒரு மரபு; ஒரு பாணி ; அதிலும் குறிப்பாக பரணர் பாடல்கள் மிகுந்திருப்பதையும் கவனிக்க வேண்டும் . இவை தவிர ஒரே ஆணுக்குப் பல விலைமாதர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவனை இழுத்த விஷயமும் , விபச்சகாரிகளிடையே ஆட்களை பிடிக்க நடந்த சண்டைகளும் ஒரு விலைமாதர் சேரி க்குள்  வேறு ஒருவள் வாடிக்கையாளரைப் பிடிக்க வந்த போது விரட்டிய செய்திகளும் ஏனைய அகப்பாடல்களில் கிடைக்கின்றன

***

நற்றிணை 30 ஒரே ஆண்மகனைச் சுற்றி பல விலைமாதர்கள் இழுபறி

கடலில் செல்லும் பாய்மரக் கப்பல் கவிழ்ந்ததால் மனம் கலங்கி, அதிலிருந்த ஒரே ஒரு மிதக்கும் பலகையைப் பலர் அவரவர் பக்கம் இழுப்பது போல உன்னை பரத்தையர் பலர் அவரவர் அணைப்புக்கு இழுத்துத் துன்புறுவதைப் பார்த்தேன்.

30. மருதம்

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், ”யாரையும் அறியேன்” என்றாற்குத் தோழி சொல்லியது.கொற்றனார் பாடல்

கண்டனென் மகிழ்ந! கண்டு எவன்செய்கோ?

பாணன் கையது பண்புடைச் சீறியாழ்

யாணர் வண்டின் இம்மென இமிரும்,

ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்

மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்  5

கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி

கால் ஏமுற்ற பைதரு காலை,

கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு,

பலர் கொள் பலகை போல

வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே.      

***

நற்றிணை Natrinai 100

பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச் சொல்லியது. பரணர் பாடல்.

பரத்தை சொல்கிறாள்: அவன் என் கூந்தலையும் கையையும் பிடித்து இழுத்தான். உன் மனைவியிடம் சொல்லிவிடுவேன் என்றேன். அவன் நடுங்கிப் போனான். அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது.

பாடல் 100. மருதம்

உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்உகிர்

மாரிக் கொக்கின் கூரல் அன்ன

குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்

தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்

வான் கோல் எல் வளை வௌவிய பூசல்   5

சினவிய முகத்து, ”சினவாது சென்று, நின்

மனையோட்கு உரைப்பல்” என்றலின், முனை ஊர்ப்

பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்

தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்

புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்    10

மண் ஆர் கண்ணின் அதிரும்,

நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.

***

நற்றிணை 20 பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன், ”யாரையும் அறியேன்” என்றாற்குத் தலைவி சொல்லியதுஓரம்போகியார் பாடல்.

மனைவி சொல்கிறாள் ,“ஐய, நீயா ஒன்றும் தெரியாதவர்?

அவளா ஒன்றும் தெரியாத மடந்தை? அவளை நான் என் கண்ணால் பார்த்தேனே.உன்னுடைய மார்பிலே அவள் படுத்துக்கிடந்தாள். அதனால் உன்னுடைய பூ மாலையின் மணம் அவள் கூந்தலில் கமழ்ந்தது.

அந்தக் கூந்தலை அவள் உலர்த்திக்கொண்டு ஆடையையும் ஆட்டிக்கொண்டு ,.வளையல் ஓசை கேட்கும்படி கையை வீசிக்கொண்டு தெருவில் நடந்துவந்தாள். கண்களை விரித்து அங்குமிங்கும் (உன்னைத்) தேடிக்கொண்டு வந்தாள்.

ஆமாம். அவள் உன்னைத் தழுவவே இல்லை?  (தழுவியவள் என்னும் ஏளனக் குறிப்பு).

மருதம்

ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,

மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்

தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்

துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,

செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில்,     5

பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,

சென்றனள் வாழிய, மடந்தை! நுண் பல்

சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;

மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,

பழம் பிணி வைகிய தோள் இணைக்    10

குழைந்த கோதை, கொடி முயங்கலளே.

***

நற்றிணை 380 Natrinai 380பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.;கூடலூர்ப் பல்கண்ணனார் பாடல்

பரத்தை வீட்டிலிருந்து மீளும் தலைவன் ,தன் வீட்டிற்குள் நுழைய முனைகிறான். பாணன் அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறான் அப்போது தோழி சொல்கிறாள்  “பயன் இல்லாத சொற்களைப் பேச வேண்டாம். சமையல் செய்த எண்ணெய் (தாளிக்கும்போது சிதறிய) பட்டு என் தலைவியின் ஆடை அழுக்காக உள்ளது. பால்

பருகும் குழந்தையின் வாயும் பட்டு,  நாற்றம் வீசுகிறது. தேரில் சென்று சிறந்த அணிகலன்களுடன் சேரியில் பகட்டும் மகளிருடன் வாழும் உன் தலைவனுக்கு என் தலைவி தகுந்தவள் இல்லை. அவனைக் கூட்டிக்கொண்டு ஒடி விடு” .

திணை மருதம்

நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு

மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,

திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,

புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;

வால் இழை மகளிர் சேரித் தோன்றும்     5

தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்

பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்

எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்;

கொண்டு செல் பாண! நின் தண் துறை ஊரனை,

பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப்  10

புரவியும் பூண் நிலை முனிகுவ;

விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே!

***

உன்னைத் தொட்டால் எச்சில்கலையைத் தொட்டதற்குச் சமம்இங்கிருந்து ஒடு

நற்றிணை 350 Natrinai 350தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.பரணர் பாடல்

நீ என்னை அணைக்காமையால் என் நலம் தொலையும்.

அப்படித் தொலைந்தாலும் தொலைந்துவிட்டுப் போகட்டும்.

நீ என்னை நெருங்க விடமாட்டேன். அப்படி உன்னை என்னிடம் நெருங்க விட்டால்,  என் கை என்னை அறியாமல் உன்னைத் தழுவிவிடும். அதனைத் தடுக்கும் வலிமை எனக்கு இல்லை.

உன் மார்போ, பரத்தை முலையைத் தழுவிய சந்தனத்தையும்,

தழுவியதால் வாடிய மாலையையும் உடையது. அது

பரத்தை உணவு உண்ட எச்சில் வட்டி போன்றது. என்னிடம் வராதே.

அவளைத் தழுவிய தோளுடன் என்னிடம் வராதே.

திணை மருதம்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,

பழனப் பல் புள் இரிய, கழனி

வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்

தொல் கவின் தொலையினும் தொலைக! சார   5

விடேஎன்: விடுக்குவென் ஆயின், கடைஇக்

கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை

சாடிய சாந்தினை; வாடிய கோதையை;

ஆசு இல் கலம் தழீஇயற்று;

வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே!              

***

பக்கத்தில் வராதேபோபோ !

நற்றிணை Natrinai 260 ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.பரணர் பாடல்

என்னை விரும்புபவன் போல நடித்துக்கொண்டு என்னை அணைத்துக்கொண்டு உறங்கும் பகைவன் நீ.

நான் உன் பழைய செயலை மறக்கமாட்டேன்;

அரசன் வயவன், பகைவர்களைப் போர்முனையில் அழித்தவன்.

அவன் தலைநகரம் இரும்பை. அது நீர்வளம் மிக்க ஊர்.

அந்த ஊர் போலத் தழைத்த என் கூந்தலில் சூடிய பூக்களை வாடச்செய்த பகைவன் நீ. அதனை நான் மறக்கமாட்டேன்.

இவ்வாறு பரத்தையிடம் சென்று வந்த தலைவனிடம் தலைவி கூறுகிறாள்.     

திணை மருதம்

கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை

பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,

தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது

குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!

வெய்யை போல முயங்குதி: முனை எழத் 5

தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்

மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்

ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த

முகை அவிழ் கோதை வாட்டிய

பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே!                               

***

நற்றிணை Natrinai 225 பரத்தை தலைமகள் கேட்கும்படி சொல்லியது;  கபிலர் பாடல்

முருகக் கடவுள் போன்ற வலிமையோடு தன் சினத்தால் போரிட்ட யானையின் வெள்ளைக் கொம்பு கரை படிந்து சிவப்பாக காணப்படுவது போலவும், வாழைப்பூ மொட்டு போலவும், மகளிரின் ஓதிக் கொண்டை போலவும், தோன்றும் முலை உடையவர் யாரேனும் ஆசைதீரத் தழுவியவர் உண்டோ,  தோழி! என்னிடம் அன்பு இல்லாதவனாக அவன் இருக்கிறானே, என்று காமக்கிழத்தி தன் தோழியிடம் கலங்கிக் கூறுகிறாள்.

திணை குறிஞ்சி

முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்

பொருத யானை வெண் கோடு கடுப்ப,

வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,

மெல் இயல் மகளிர் ஓதி அன்ன

பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை     5

இரந்தோர் உளர்கொல் தோழி! திருந்து இழைத்

தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்

பயந்து எழு பருவரல் தீர,

நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?

வன்புறை எதிர் அழிந்தது;

***

நற்றிணை 320 Natrinai 320 தெருவில் பொது மகளிர் நடமாட்டம்;  குடும்ப்பப்பெண்கள் அச்சம்

பரத்தையின் காதில் விழும்படி  சொல்லியது. கபிலர் பாடல்

துணங்கை விழா முற்றுப்பெற்றது. விழாவில் முழக்கிய முழவு மாட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. என்ன நோக்கத்தோடு இவள் தன்னை அழகு படுத்திக்கொள்கிறாள், என்று கேட்கிறாயா?  (தலைவனுக்குத் தோழி சொல்கிறாள்)

தழை அணிந்த அல்குலை உடைய ஒருத்தி (பரத்தை)

தெருவில் நடந்து சென்றாள். அதற்காக, ஊரில் உள்ள மகளிர் அனைவரும் தன் கணவனுக்கு வைத்திருக்கும் காவலை

அதிகப்படுத்தினர். அவர்கள் நல்ல அழகிகள் தான் என்றாலும் தம் கணவன்மாரின் கவனம் தம்மிடம் திரும்புமாறு தம்மை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.

காரி அரசன் ஓரி அரசனைக் கொன்றுவிட்டு

தன் பகையாளி ஓரி நகரில் நடந்துசென்றபோது

ஊரே ‘கல்’ என்று ஆள் நடமாட்டம் இல்லாமல் கிடந்தது போல்

இந்த ஊரின் நிலைமை ஆயிற்று.

திணை மருதம்

”விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;

எவன் குறித்தனள்கொல்?” என்றி ஆயின்

தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,

இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்

ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்,                5

காரி புக்க நேரார் புலம்போல்,

கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,

காவல் செறிய மாட்டி, ஆய்தொடி

எழில் மா மேனி மகளிர்

விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.   

***

நற்றிணை 340 Natrinai 340 பரத்தை வீட்டிலிருந்து திரும்பிய  தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.நக்கீரர் பாடல்

மகிழ்ந! நீ உன் உடலுறவுக்காரி வீட்டிலிருந்து வந்துள்ளாய்.

அதனால் உன்னை நான் தழுவமாட்டேன். அதற்காக உன்னை நான் சினந்துகொள்ளவும் மாட்டேன். செழியன் ஊர் போல் வளமுடன் திகழ்பவள் நான். என் வளையல்களைக் கழலச் செய்தவன் நீ  .என்னைப் பிரிந்து உன் பரத்தையோடு வாழுங்காலத்து என் வளையல்கள் உன்னை நினைந்து கழன்றன.அப்படிப்பட்ட உன்மீது சினம் கொள்வேனா? மனைவி தன் கணவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.

திணை மருதம்

புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்

கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்

படை மாண் பெருங்குள மடை நீர் விட்டென,

கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை

அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி,        5

பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,

செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,

பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்

வாணன் சிறுகுடி அன்ன, என்

கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே!     

***

போ போ நீ யார்கிட்ட வேணுமானாலும் போ !

நற்றிணை 360 Natrinai 360

விழாவில்,  விறலிப் பெண்பாவை ஆடுவாள். அவள் போன்ற ஒருத்தியை, நேற்று இழுத்துப் புணர்ந்து  அவளது புத்தழகைத் துய்த்தாய். இன்று  இன்பம் தரும் மெல்லிய தோள் கொண்ட மகளிரைப் பெறுவதற்காகச் சென்றுகொண்டிருக்கிறாய். பெருமானே!

உன் பரத்தைமை சிறக்கட்டும்.

அங்குசத்தால் குத்தி யானைக் குருதியைப் பலக்குவோர் சோறு கொடுத்தால் அது அதைத் திண்ணாமல் வாரி இறைக்கும்; அந்தச் சோற்றுக் கவளம் பயனற்றுப் போவது கண்டு பாகர் வருந்துவது போல, நீ சில பெண்களுக்கு கொடுத்த  செல்வம் பயன் இல்லாமல் போவது கண்டு நீ வருந்துகிறாய். அது எனக்கு மகிழ்வாக இருக்கிறது.இந்த இல்லத்தில் இன்பத்தை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.இப்போது நீ விரும்பியவளிடம் செல். உன் பரத்தமை வாழ்க.

(தலைவி சொல்வது போலத்

தோழி தலைவனிடம் சொல்கிறாள்.)

திணை மருதம்

முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய

விழவு ஒழி களத்த பாவை போல,

நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வௌவி,

இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்,

சென்றீ பெரும! சிறக்க, நின் பரத்தை!               5

பல்லோர் பழித்தல் நாணி, வல்லே

காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப,

கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும்

முனியுடைக் கவளம் போல, நனி பெரிது

உற்ற நின் விழுமம் உவப்பென்;               10

மற்றும் கூடும், மனை மடி துயிலே.

பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; ஓரம்போகியார் பாடல்

***

பொது மகளிர் பற்றித் திருக்குறள்

வரைவின் மகளிர்

அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.1

கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனியசொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.2

பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.3

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்தமாட்டார்.4

இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.5

அழகு முதலியவற்றால் செருக்குக்கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.6

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறு பொருள்களை விரும்பிக் கூடும் பொதுமகளிரின் தோளைப் பொருந்துவர்.7

வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர்.8

ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.9

இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் சூதுமாகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.10

–subham—

Tags-

சங்க காலத்தில், விலைமாதர்களும் விபச்சாரமும் , பொது மகளிர் , நற்றிணைப் பாடல்கள் , உண்மை நிலை என்ன? பொது மகளிர் பற்றித் திருக்குறள்

Leave a comment

Leave a comment