
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,665
Date uploaded in London – 28 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வாழ்வை வளமாக்க உதவும் கிண்ட்சூகி – தங்க இணைப்பு!
ச. நாகராஜன்
ஜப்பானிய வார்த்தையான கிண்ட்சூகி (Kintsugi) என்பதற்கான நேரான அர்த்தம் தங்க இணைப்பு என்பதாகும். இதையே கிண்ட்சூகுரோய் (Kintsukuroi) என்றும் சொல்வார்கள். இதற்குப் பொருள் தங்க ரிப்பேர் என்பதாகும்.

உடைந்து போன ஜாடிகள், கோப்பைகள், பானைகள் ஆகியவற்றைச் சாதாரணமாக உலகெங்கும் உள்ள மக்கள் தூக்கி எறிந்து விடுவர்.
ஆனால் ஜப்பானிலோ இந்த உடைந்த துண்டுகளை மிக அழகாக ஒட்டி விடுவார்கள். இது தான் கிண்ட்சூகி!
அரக்குடன் வெள்ளி, தங்கம், பிளாட்டினம் ஆகியவற்றின் பொடியைச் சேர்த்து உடைந்து போனதை ஒட்டி விட்டால் அது மின்னும்; பளபளக்கும்.
15ம் நூற்றாண்டில் இந்தப் பழக்கம் ஆரம்பித்தது. ஜப்பானியர்களுக்கு டீ சடங்கு என்பது மிக மிக முக்கியம். பீங்கான் கோப்பைகளில் டீயை ஊற்றி பெரிய சடங்காக அன்புடன் வருவோருக்குத் தருவது ஜப்பானியப் பண்பாகும்.
இந்த பீங்கான் கோப்பைகள் உடைந்து போனால் அவற்றை அழகுற ஒட்டி அலங்கரித்து அதை வீட்டின் முன்னறையில் வைத்து விடுவார்கள் ஜப்பானிய மக்கள்.
இதில் அவர்களுக்கு எந்த அளவு மோகம் என்றால் சிலர் நல்ல புதிய கோப்பை மற்றும் ஜாடிகளைக் கூட வேண்டுமென்றே உடைத்து கிண்ட்சுகி செய்து விடுவார்கள்.
ஆனால் இந்த வார்த்தைக்கு இது மட்டும் அர்த்தம் அல்ல. இன்னும் ஆழ்ந்த அர்த்தம் உண்டு. வாழ்வில் எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் கிடைக்காது. எல்லோரும் எல்லாவற்றிலும் பரிபூரணமாக இருக்க மாட்டார்கள்; அது முடியாத ஒன்று;. சில குறைகள் நிச்சயமாகவே இருக்கும்.
அந்தக் குறைகளைப் பொருட்படுத்தாதே; உன்போக்கில் நீ வாழ்க்கையை உற்சாகமாக நடத்து என்கிறது கிண்ட்சூகி. வாபி-சாபி என்ற ஜப்பானிய கொள்கையை ஒத்திருப்பது இது. குறைகளைப் பார்க்காதே; குறைகளில் உள்ள அழகைப் பார் என்பது ஒரு பெரிய வாழ்க்கைத் தத்துவம்.
அதிகமாக ஓடி ஓடி வாழ்க்கை ஓட்டத்தில் களைத்து, செய்வதறியாது திகைப்பவர்கள், அதிகமதிகம் எதையாவது எண்ணி எண்ணி மன உளைச்சலுக்கு தங்களை ஆளாக்கிக் கொள்பவர்கள் இந்த கிண்ட்சூகியைக் கடைப்பிடித்தால் அவர்களது களைப்பும் மன உளைச்சலும் போய்விடும்.
ஒருவருடைய குறைகளை அவர் மனமார ஒத்துக் கொண்டு முன்னேறும் வழியைப் பார்ப்பது தான் கிண்ட்சூகி!
உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் அந்தக் குறைகள் ஒரு பங்கு என்பதை உணர்ந்து அதை தங்க ஜரிகைகளை ஒட்டி துணியையும் அல்லது தங்கப்பொடி தூவி ஜாடிகளையும் அழகு படுத்துவது போல உங்களை நீங்களே அழகு படுத்திக் கொள்ளலாம்.
பிரிட்டிஷ் கலைஞரான சார்லட் பெய்லி என்ற பெண்மணி தனது நூற்பு வேலைகளில் ரிப்பேர் செய்யும் போது தங்க ஜரிகைகளை ஒட்டி துணியை பளபளக்க வைப்பார். அமெரிக்க கலைஞரான கரேன் லாமாண்டி மற்று நியூயார்க் நகரில் உள்ள ஜார்ஜ் ருஃப் உள்ளிட்டோரும் இந்த கிண்ட்சூகியில் வல்லவர்கள்.
இதே போல உலகெங்கும் சில குறைகளைக் கொண்டுள்ள பலரும் கிண்ட்சூகியைக் கடைப்பிடித்து தங்கள் எண்ணங்களைச் சீராக்கி ஒப்பற்ற இந்த வாழ்க்கைப் பயணத்தை சுவை நிறைந்த ஒன்றாக ஆக்கிக் கொண்டு வருகின்றனர்.
எதையும் வீணாக்காதே; எதையும் அதிகமதிகம் விரும்பாதே என்ற மந்திரமே கிண்ட்சூகி கூறும் அற்புதமான தத்துவமாகும்.
அட, நம்மிடம் குறை இருக்கிறதா! இருந்து விட்டுப் போகட்டுமே இருக்கவே இருக்கிறது கிண்ட்சூகி!
**